Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 12 | SudhaRaviNovels

அத்தியாயம் - 12

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் – 12

ரிஷியிடமிருந்து அழைத்து வந்துவிட்டு, அவளை கொடைக்கானலில் விடாமல் மதுரைக்கு அழைத்து வந்தான் பவன். அவனது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு எதுவும் பேசாமல் இருந்தாள் பயணம் முழுவதும். அவளது கண்களில், வெறுமை மட்டுமே நிறைந்திருந்தது. அவளின் மனநிலை உணர்ந்து எதுவும் பேசாமல் அவ்வப்போது அவளை பார்த்தபடியே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான்.

அந்நேரம் அவனது அலைப்பேசி அடிக்க, புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. யோசனையுடன் எடுத்து காதில் வைத்தான்.

“பவா! நான் மதுரை வந்துட்டேன். கவியை கூட்டிட்டு வரதுன்னா நம்ம கல் மண்டபம் வீட்டுக்கு கூட்டிட்டு வா” என்றார்.

அவரது குரல் கேட்டதுமே “மா! எப்போ வந்தீங்க? நானே இங்கே பார்த்துக்குவேன்னு சொன்னேனே?”.

ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு “சில விஷயங்களுக்கு நான் இங்கே இருந்தா சரின்னு தோணுச்சு”.

“உங்களுக்கு கஷ்டமாக இருக்குமே...பழையவற்றை எல்லாம் நினைவு படுத்துமே”.

“நான் பார்த்துக்கிறேன் பவா. நீ எப்படியாவது கவியை அழைச்சிட்டு வந்து என்னிடம் விட்டுடு”.

“என் கூட தான் இருக்கா...கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்”.

அவர்கள் பேசிக் கொண்டது எதுவும் அவளது காதில் விழவில்லை. மனமோ ரிஷியை எண்ணியே வேதனை கொண்டிருந்தது. தான் பேசிய பேச்சில் அவன் நின்ற விதம் கண்ணிலிருந்து மறைய மறுத்தது. அவனது அதிர்ந்த தோற்றம், வேதனை நிறைந்த முகம், கண்ணில் தெரிந்த அந்த வலி எல்லாம் அவளை கொன்று புதைத்து.

அவளது கைகள் மெல்ல நடுங்கத் தொடங்கியது. அதை உணர்ந்த பவன் அவசரமாக காரி ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு “கவி! என்னாச்சும்மா? கவி இங்கே என்னைப் பாரு?” என்று அவள் கன்னம் தொட்டு அவளது நினைவுகளை முயன்றான்.

அவளோ கண்கள் மேலே செருக “என்னை மன்னிச்சிடு ரிஷி...என்னை மன்னிச்சிடு” என்று உளற ஆரம்பித்தாள். உடல் தூக்கிப் போட, அப்படியே அவனது கைகளில் மயங்கி சரிந்தாள். அவளது நிலை கண்டு பயந்து போனவன் அவளை அப்படியே படுக்க வைத்துவிட்டு காரை எடுத்தான். அருகே இருந்த மருத்துவமனை ஒன்றிற்கு சென்றான்.

மருத்துவர்களிடம் அவளை ஒப்படைத்தவன் அன்னையை அழைத்து “மா! கவிக்கு உடம்பு முடியல” என்றவன் மருத்துவமனை பெயரை கூறி அங்கு வருமாறு அழைத்து விட்டு போனை வைத்தான்.

அங்கிருந்த நாற்காலியில் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தவனின் மனம் கவியின் நிலையை எண்ணி வருந்தியது. பட்டாம்பூச்சி போன்று சுற்றிக் கொண்டிருந்தவளை தனது சுயநலத்திற்காக எப்படி மாற்றி இருக்கிறார் மனிதன் என்று வேதநாயகத்தின் மீது அத்தனை கோபம் எழுந்தது.

அலைப்பேசியை எடுத்தவன் அவரை அழைத்தான்.

“நீ எல்லாம் மனுஷனா இருக்கவே தகுதி இல்லாத ஆள். கவியை என்ன சொல்லி பயமுறுத்தி வச்சிருக்க?” என்றான் எடுத்ததுமே.

அவனது பேச்சைக் கேட்டு சிரித்த வேதநாயகம் “என்னடா மகனே இந்த அப்பன் மேல திடீர் பாசம்? அவ என் கைப்பாவை. என்னுடைய லட்சியத்தை நிறைவேற்ற பிறந்தவள். உண்மையை சொல்லனும்னா முதல்ல நீ. அடுத்து அவள். என்னுடைய பயணத்தில் என் கனவுகளை நிறைவேற்ற மட்டுமே பிறந்தவர்க்கள்”.

“சீ! வெட்கமாயில்ல”.

“இங்கே பார் பவன் அனாவசியமா இங்கே வந்து இந்த பிரச்சனைகளில் மாட்டிக்காம ஒழுங்கா கனடா போயிடு. கவியை மரியாதையா என் கிட்ட கொண்டு வந்து விட்டுடு”.

“அப்பன்னு பார்க்க மாட்டேன். எப்படி இருந்தவளை ஒரு மன நோயாளி ரேஞ்சுக்கு மாற்றி வைத்திருக்கீங்க. இனி, கவியை உங்களிடம் விட முடியாது. உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க”.

“எனக்கு அவளை எப்படி என்னிடம் கொண்டு வரணும்னு தெரியும்” என்றவரின் சிரிப்பு அவன் காதில் நாராசமாக விழுந்தது.

அவனிடம் பேசி விட்டு வைத்ததுமே வேதநாயகம் யோசனையில் ஆழ்ந்தார். தன்னைச் சுற்றி திடீரென்று அனைவரும் அணை கட்டுவது போல தோன்றியது. அதிலும் செங்கமலமும், மித்ராவும் கம்பனியில் வந்தமர்ந்திருப்பது அடுத்தடுத்து நடக்கப் போவதை உறுதிபடுத்தியது.

சிறிது நேர யோசனைக்குப் பின் போனை எடுத்தவர் சில பல அழைப்புகளை மேற்கொண்டு தனது திட்டத்தைக் கூறி அவர்களை தயார் செய்துவிட்டு கண்களை மூடி அமர்ந்தார்.

ஸ்வான் லேக் குழுமம் எனது எத்தனை வருடக் கனவு. அதை அத்தனை எளிதாக விட்டுவிடுவேனா? எத்தனை பேர் வந்தாலும் என்னை அசைக்க முடியாது. நான் பனங்காட்டு நரி. ஒருவரையும் விட மாட்டேன்.

அதே நேரம் மித்ராவும், ரிஷியும் செங்கமலத்திடம் நீலோற்பலம் பற்றி அறிந்து கொள்வதற்காக பேச விழைந்தார்கள். அந்நேரம் ரிஷியின் போன் அடிக்க, அந்தப் பக்கம் வந்த செய்தி அவனுக்கு அதிர்ச்சியை அளித்தது.

அவனது கம்பனியின் அனைத்து ஷேர் ஹோல்டர்களும் அவனுக்கு எதிராக போர்க்கொடி எழுப்பி இருப்பதாக தகவல் வந்திருந்தது. அனைவரும் ஒன்று கூடி இருப்பதாகவும், அவனுக்கு எதிரான பேச்சுகள் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அறுபது பெர்சன்ட் பங்குகள் ரிஷியின் குடும்பத்திற்கு இருந்தாலும், மீதமுள்ள நாற்பதில் இருபது பெர்சன்ட் வேதநாயகத்திடமும், மற்றவை வெளியாட்களிடமும் இருந்தது. இப்போது வேதநாயகத்தின் தூண்டுதலின் பேரில் நாற்பது பெர்சன்ட் பங்குகளும் அவரின் பேரில் மாற்றப்பட இருக்கின்றதாக தகவல் வெளியானது. அப்படி மாறினால் அவரின் ஆட்டத்தை அடக்க பெரும்பாடாகி போய் விடும் என்று ரிஷிக்கு நன்றாகவே தெரியும்.

அவசரமாக போனை வைத்துவிட்டு “பாட்டி, மித்ரா நம்ம கம்பனியில் இப்போ ஒரு எமர்ஜென்சி வந்திருக்கு” என்றான் சிந்தனை தோய்ந்த முகத்துடன்.

“என்ன?” என்றார் செங்கமலம்.

“அந்த வேதநாயகம் நம்ம ஷேர் ஹோல்டர்ஸ் எல்லோரையும் அவன் பக்கமா திருப்பி அவங்க கிட்ட இருந்து பவர் வாங்குறான்”.

அதை கேட்டதும் பாட்டி பேத்தி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, ரிஷியோ “நான் போய் அவர்களிடம் பேசுறேன்” என்று கிளம்பினான்.

அவனை தடுத்து நிறுத்திய செங்கமலம் “நான் வரேன் ரிஷி” என்றவர் மித்ராவிடம் திரும்பி “நீ இங்கே லோகாவை திசைதிருப்பு. நானும் ரிஷியும் போவது அவளுக்கு தெரியக் கூடாது” என்றார்.

மெல்லிய புன்னகையுடன் “சரி பாட்டி நான் பார்த்துக்கிறேன்” என்று கூறியவள் அங்கிருந்து வெளியேறினாள்.

அவள் நேரே சென்று நின்ற இடம் லோகநாயகியின் அறை வாசல்.

“அத்தை! சின்ன அத்தை” என்று சத்தமாக அழைத்தாள்.

கதவோரம் அவளின் குரல் கேட்கவும் அவசரமாக திறந்து கொண்டு வெளியே வந்த லோகா “என்ன வேணும் உனக்கு? எதுக்கு என்னை கூப்பிடுற?” என்றார் எரிச்சலாக.

“இங்கே ஒரு கோவில் இருக்காமே? நீங்க எப்பவும் போவீங்கன்னு பெரிய அத்தை சொன்னாங்க. என்னை கூட்டிட்டு போறீங்களா?” என்றாள் பவ்யமாக.

“ஆமாம் இருக்கு. அதெல்லாம் நான் கூட்டிட்டு போக முடியாது. முடிஞ்சா நீயே போயிக்கோ” என்றார் கடுப்புடன்.

அவளோ விடாது “ப்ளீஸ்! அத்தை! என்னை கூட்டிட்டு போங்களேன்” என்றாள் கெஞ்சலாக.
மனதிற்குள் ஒருவித எரிச்சல் எழுந்தாலும் அதை காண்பித்துக் கொள்ளாது “சரி வரேன் வெயிட் பண்ணு” என்று கதவை சாத்திக் கொண்டார்.

அதில் திருப்தியடைந்தவள் சோபாவில் சென்றமர்ந்து கொள்ள, சற்று நேரம் காத்திருக்க வைத்துவிட்டு வெளியே வந்து அறைக் கதவை பூட்டிவிட்டு வந்தார். அதை யோசனையுடன் கவனித்தபடியே அவரோடு சென்றாள் மித்ரா.

அவர்கள் இருவரும் மாளிகையை விட்டு வெளியேறியதும் செங்கமலமும், ரிஷியும் மற்றொரு காரில் கிளம்பினர். வேதநாயகம் அறியாமல் அனைவரையும் தனது கெஸ்ட் ஹவுசிற்கு கொண்டு வரும்படி கட்டளையிட்டு விட்டு இருவரும் அங்கே சென்றனர்.

அவர்கள் சென்று ஒரு பதினைந்து நிமிடத்திற்குள் அனைவரையும் ரிஷியின் ஆட்கள் அங்கு கொண்டு வந்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் வரை அங்கு அவர்களோடு மீட்டிங் நடந்தது. அனைத்தும் முடிந்து வெளியே வரும் போது ரிஷியின் கண்களில் ஒரு பிரமிப்பு தெரிந்தது செங்கமலம் பாட்டியின் நடவடிக்கையைக் கண்டு.

எல்லோரும் இருவரிடமும் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட, செங்கமலம் சிந்தனையுடனே இருந்தார்.

“என்ன பாட்டி இன்னும் என்ன?”

“இவங்க எல்லோரையும் விட முக்கியமான ஒருத்தர் வந்தா அந்த வேதநாயகத்தின் ஆட்டம் மொத்தத்தையும் ஒண்ணுமில்லாம பண்ணிடலாம்” என்றார்.

“யார் பாட்டி அது?”

“சொல்றேன்” என்றவர் “நாம கிளம்பலாமா?” என்றார்.

“வாங்க” என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு கிளம்பியவன் சட்டென்று நின்று “பாட்டி உங்களுக்கு நீலோற்பலம் பற்றி எதுவும் தெரியுமா?” என்று கேட்டுவிட்டான்.

அடுத்து என்ன என்கிற சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்தவரின் கால்கள் சடாரென்று இழுத்துக் கொள்ள, விழிகள் விரிய “எ..என்ன கேட்ட ரிஷி?” என்றார் கலக்கத்துடன்.

“நீலோற்பலம் பாட்டி”.

அவரோ பீதியுடன் “இந்தப் பெயரை யார் சொன்னா?” என்றார்.

“நானே பார்த்தேன் பாட்டி” என்று அடுத்த குண்டை போட்டான்.

அதுவரை அவரிடம் இருந்த கம்பீரம் மறைந்து ஒருவித கலக்கமும், சோர்வும் வந்தடைய நடக்க முடியாமல் கால்கள் தள்ளாட “ரிஷி! நான் உட்காரனும்” என்றார் அவன் கைகளைப் பற்றியபடி.

“என்னாச்சு பாட்டி” என்று பதறியவன் அவரின் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று அங்கிருந்த சோபாவில் அமர வைத்தான்.

குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து விட்டு அவரின் முகம் பார்த்தபடியே அமர்ந்திருந்தான். தண்ணீர் குடித்து முடித்துவிட்டு கண்களை அழுந்த மூடியபடி சோபாவில் சாய்ந்து விட்டார். மனமோ பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.

“செண்பகம்” செண்பக மலர் போன்று மணம் வீசும் குணம் உடையவள் அந்தச் சின்னப் பெண். கண்களில் ஒரு துருதுருப்பு எந்நேரமும் குடி கொண்டிருக்க, அன்பை மட்டுமே கொடுக்கும் குணம் கொண்டவள்.
அவளை நினைத்ததுமே செங்கமலத்தின் கண்களில் கண்ணீர் பொங்கி வழிய ஆரம்பித்தது. சேற்றிலும் செந்தாமரை மலர முடியுமா?

சேற்றில் மலர்ந்த செந்தாமரையவள்
கள்ளம் கபடமின்றி வாழ்ந்திட நினைக்க
விஷமேறிய நாகத்தின் சதியால்
மன்னவனின் மடி சேர்ந்திட
மங்கையவள் வாழ்வு புயலில்
சிக்கிய தோணியாக அல்லல்பட
விஷத்தின் வீரியத்தால் மொத்தமும்
தொலைத்து தான் யாரென அறியாமல்

போனது விதியின் சதியா?