Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 13 | SudhaRaviNovels

அத்தியாயம் - 13

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் – 13

பாட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைக் கண்டு பயந்து போனவன் “என்ன பண்ணுது பாட்டி?” என்று பதற ஆரம்பித்தான் .

மெல்ல விழிகளைத் திறந்து பார்த்தவரின் மனம் நிகழ்காலத்திற்கு வந்தது. அவரின் பார்வை ரிஷியின் மீது அழுத்தமாகப் படிந்தது. மனமோ தன்னையும் மீறி அசை போட ஆரம்பித்திருந்தது.

அவனது கைகளைப் பற்றி எழுந்து நின்றவர் “போகலாம் வா” என்று கூறி முன்னே நடக்க ஆரம்பித்தார்.
அவருக்கு என்னவாயிற்று என்று புரியாமல் “உடம்பு சரியில்லையா பாட்டி?” என்றான் பயத்துடன்.

மறுப்பாக தலையசைத்துவிட்டு காரில் ஏறி அமர்ந்து கொண்டார். தானும் ஏறி அமர்ந்தவன் அவரை திரும்பி பார்த்தபடியே காரை எடுத்தான். நன்றாக இருந்தவர் ஏன் இப்படி ஆனார் என்று புரியாமலே காரை ஓட்ட ஆரம்பித்தான்.

அவரும் கண்களை மூடி அமர்ந்திருந்தாரே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை. அவரது மனம் பல கதைகளை பேசிக் கொண்டிருந்தது. பாவாடை தாவணியில் தன் முன்னே வந்து நின்ற செண்பகம் “அத்தை இந்த கலர் எனக்கு நல்லா இருக்கா?” என்று கேட்டது நினைவில் வந்தது.

நடந்த நிகழ்வில் பலரின் மீது கோபம் இருந்தாலும், செண்பகத்தின் மீது மட்டும் பரிதாபம் எழுந்தது. இங்கு பகடையாக ஆக்கப்பட்டது அவளது வாழ்க்கை தானே. ஒருவனின் பேராசைக்கு, கனவிற்காக அவளது வாழ்க்கை சூறையாடப்பட்டது. அந்தப் பாவம் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் தங்களை துரத்தும் என்று எண்ணியவர் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தார்.

அவரையே பார்த்துக் கொண்டிருந்தவன் “என்ன பண்ணுது பாட்டி? ஹாஸ்பிடல் போகவா?” என்றான் பயத்துடன்.

“வேண்டாம் ரிஷி! வீட்டுக்கே போயிடலாம்”.

“ஒன்னுமில்லையே?” என்று மீண்டும் கேட்டுக் கொண்டான்.

அவனை திரும்பி பார்த்தவர் “நீலோற்பலம் பற்றி கேட்ட இல்லையா? அது என்னுடைய நினைவுகளை தூர்வார ஆரம்பித்து விட்டது. அதன் தாக்கம் தாங்காமல் தான் இப்படி இருக்கிறேன்” என்றார்.

“உங்களுக்கு அதைப் பற்றி தெரியுமா பாட்டி?”

அவனை வைத்த கண் வாங்காது பார்த்தவர் “தெரியும்! நீயும் கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. ஆனா அதற்கான நேரம் இப்போ இல்லை. நான் சொல்வதைப் போல சில விஷயங்களை செய். அதன் பின்னர் சரியான நேரத்தில் உனக்கு எல்லாவற்றையும் சொல்றேன்” என்றார்.

“நானே தெரிஞ்சுக்க முயற்சி செய்தேன் பாட்டி. என்ன முயன்றும் கண்டுபிடிக்க முடியல”.

விரக்தியுடன் ஒரு புன்னகை சிந்தி “நீலோற்பலம் உன் குடும்ப ரகசியம் ரிஷி. இதை உன் வீட்டிலேயே தேடினா தான் கிடைக்கும். வெளில தேடினா கிடைக்காது” என்றார்.

“ரகசியமா?”

“ம்ம்...பல மனங்களை காயப்படுத்திய ரகசியம். நிச்சயமா கூடிய விரைவில் உனக்கு தெரிய வரும்.

இப்போ நீ இதை விட்டுட்டு கம்பனி விஷயத்தைப் பார். மற்றவை தானாக நடக்கும்” என்றார்.

அதன்பின்னர் வீடு போய் சேர்ந்த இருவரும் எதையும் பேசாது தங்களது அறைக்குள் சென்று அடைந்தனர்.

அவர்கள் இருவரும் ஒன்றாக வந்து சேர்ந்ததை ரகசியமாக யாருக்கோ தெரிவித்தார் லோகா. மித்ரா அதையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

அந்த வீட்டில் தெய்வநாயகி மட்டுமே இயல்பாக இருந்தார். அவருக்கு தன்னைச் சுற்றி நடப்பது எதையும் அறிந்து கொள்ளும் திறமை இருக்கவில்லை. மித்ரா லோகாவை ஆராய்ந்து கொண்டிருக்க, லோகாவோ தெய்வனாயகியைத் தவிர மற்ற அனைவரையும் தன் கண்பார்வையிலேயே வைத்திருந்தார். ஒரு சிறு அசைவு கூட யாருக்கோ தெரிவிக்கப்பட்டது.

ரிஷி வழக்கம் போல கம்பனிக்கு செல்ல கிளம்பி வர, மித்ராவும் தயாராகி வந்தாள். இருவரும் அமைதியாக உணவருந்தி விட்டு வெளியேறும் நேரம் ரிஷியின் போன் அலற ஆரம்பித்தது.

மீண்டும் திடீரென்று போர்ட் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. உள்ளுக்குள் புன்னகை எழுந்தாலும், பாட்டியின் பேச்சிலும், மித்ராவின் எச்சரிக்கையிலும் அதை வெளிக்காட்டாது “போர்ட் மீட்டிங் ஏற்பாடாகி இருக்கு” என்றான் மித்ராவிடம் இறுகிய குரலில்.

அவளுமே எதுவுமே அறியாதவள் போல “என்ன திடீர்னு?” என்றாள்.

“தெரியல! ஷேர் ஹோல்டர்ஸ் புதுசா ஏதோ பிரச்னையை ஆரம்பிக்க போறாங்க போல” என்றான் கடுப்புடன்.

லோகா அங்கேயே நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த செங்கமலம் பாட்டியைப் பார்த்த மித்ரா “பாட்டி போர்ட் மீட்டிங் அரேஜ் ஆகி இருக்கு. நீங்களும் கிளம்புங்க போகலாம்” என்றாள்.

அவளிடம் பதில் சொல்லாமல் ரிஷியிடம் திரும்பியவர் “நீங்க ரெண்டு பேரும் போங்க. எனக்கொரு கார் ஏற்பாடு செய்திடு ரிஷி. நான் வந்துடுறேன்” என்றார்.

ஏனோ ரிஷிக்கு அவர் அப்படி சொல்வது பிடித்தம் இல்லை என்றாலும், சரியென்று தலையசைத்துவிட்டு மித்ராவுடன் கிளம்பினான்.

அவர்கள் சென்றதும் பாட்டி ஒரு சில போன் கால்களை செய்து முடித்துவிட்டு தெய்வநாயகியிடம் சென்று பேசிவிட்டு கிளம்பினார். அவர் கிளம்பும் வரை லோகாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. அவரின் கார் கேட்டை தாண்டியதும் அவசரமாக போனை தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார்.

“கிழவி கிளம்பிடுச்சு. அது என்னவோ ப்ளான் பண்ணி இருக்குன்னு நினைக்கிறேன். நீ எதுக்கும் கவனமா இரு. உன்னுடைய இத்தனை வருடக் கனவை விட்டுக் கொடுத்திடாதே” என்று பேசிக் கொண்டிருந்தவர், தன் பின்னே வந்த சப்தத்தை கேட்டு “பைத்தியம் வருது நான் போனை வைக்கிறேன்” என்று கூறி வைத்துவிட்டார்.

அதன்பின்னே அந்த அறையில் ஏதேதோ மெல்லிய சப்தங்கள் தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியேறிவரின் முகத்தில் வியர்வை துளிகள்.

போர்ட் மீட்டிகிற்காக அனைவரும் குழுமி இருக்க, வேதநாயகம் ஒருவித திமிருடன் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். ரிஷியும், மித்ராவும் அவரைப் பார்த்துவிட்டு அமைதியாக அமர்ந்து கொண்டனர். அந்தக் கம்பனியில் ஆரம்பகாலம் தொட்டே இருப்பதால், அங்கிருந்த அனைவருக்கும் அவர் மீது ஒரு பயம் உண்டு. அதனால் யார் பேச ஆரம்பிப்பது என்று தயங்கிக் கொண்டிருந்தனர்.

“என்ன திடீர்னு மீட்டிங்?” என்று வேதநாயகமே ஆரம்பித்து வைத்தார்.

அதன்பின்னர் ஒவ்வொருவராக வேதநாயகம் சொல்லிக் கொடுத்தது போல, ரிஷிக்கு எதிராக பேச ஆரம்பித்தனர். அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான். வேதநாயகத்திற்கோ தான் நினைத்த பாதையில் மீட்டிங் செல்வதைக் கண்டு உள்ளுக்குள் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் யாரை அவர் தனது முக்கியமான கையாக எண்ணி இருந்தாரோ அவர் பாதை மாற ஆரம்பித்தார். அந்நேரம் சரியாக செங்கமலம் பாட்டியும் உள்ளே நுழைந்தார். அவர் வந்ததும் அதுவரை பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அவரின் தலையசைப்பிற்கு ஏற்ப, வேதநாயகத்திற்கு எதிராக திரும்ப ஆரம்பித்தனர்.

அதைக் கண்டு வெகுண்டெழுந்தவர் “இங்கே இருப்பவர்களை விட எனக்கு அதிகாரம் அதிகமிருக்கிறது” என்றார் தெனாவெட்டாக.

அதுவரை அமைதியாக இருந்த ரிஷி “இந்த கம்பனியின் முதலீடுகள், ஷேர்ஸ் எல்லாவற்றிலும் எங்கள் பங்குகள் தான் அதிகம். முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும் என்றால் நீங்க இங்கே வொர்கிங் பார்ட்னர் மாதிரி தான்” என்று ஒரேடியாக அடித்து விட்டான்.

அதில் கோபம் கொண்டு “ரிஷி! யாரைப் பார்த்து என்ன பேசுற? இங்கே என்னை மீறி எதையும் நீ செய்துவிட முடியாது” என்றார் ஆங்காரமாக.

“உங்களுக்கே இங்கே அதிகாரம் இல்லை என்று தான் சொல்கிறோம்” என்றாள் மித்ரா அவள் பங்கிற்கு.
கோபமும் ஆங்காரமும் உள்ளுக்குள் இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டவர் செங்கமலத்தைப் பார்த்து ஒருவிதமாக சிரித்து “இத்தனை வருடத்தில் உங்களுக்கு என்னைப் பற்றி தெரியல இல்லையா?” என்றார்.
அவரின் அந்தக் கேள்வி செங்கமலதிற்குள் பயத்தை உண்டாக்க இவன் இன்னமும் எதையோ வைத்திருக்கிறான்’ என்று கூறியது.

தனது உள்ளுணர்வை மறைத்துக் கொண்டு “என்னைப் பற்றியும் உனக்கு தெரியும் வேதநாயகம். நான் இந்த நிமிஷம் இங்கே வந்து உட்கார்ந்திருக்கேன்னா சும்மா வருவேன்னு நினைச்சியா?” என்றார் கிண்டலாக.

அவரை எகத்தாளத்துடன் பார்த்து “உங்க பேத்தியை வச்சு என்னை மிரட்டிப் பார்க்கலாம்னு ஆசையா? இந்த வேதநாயகம் ஒரு சின்னப் பெண்ணுக்கு பயப்படுவான்னு நினைசீங்களா?”.

அவர்கள் இருவரும் வார்த்தையாடிக் கொண்டிருப்பதை அனைவரும் என்ன நடக்கிறதென்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ரிஷியோ வேதநாயகத்தை அடக்க வேண்டும் என்கிற வெறியுடன் கவனித்துக் கொண்டிருந்தான்.

இதழில் எழுந்த கிண்டலான புன்னகையுடன் “இங்கே இருக்கிற எல்லோரையும் விட உன்னை எனக்கு நல்லா தெரியும் வேதநாயகம்” என்றவர் போனை எடுத்து “உள்ளே வா” என்று யாரையோ அழைத்தார்.
அவர் யாரை அழைத்தார் என்று அனைவருக்கும் ஆர்வம் எழ, எல்லோரும் கதவை பார்க்க ஆரம்பித்தனர்.
உள்ளே நுழைந்தவரைக் கண்டதும் வேதனயகத்திற்கு அதிர்ச்சி. ரிஷிக்கோ, மித்ராவிற்கோ அவர் யாரென்று தெரியவில்லை. அங்கிருந்த மற்றவர்களில் பழைய ஆட்களுக்கு மட்டும் அவர் யாரென தெரிந்தது.

“நீ எங்கே இங்கே? எதுக்கு வந்த?” என்றார் ஆங்காரமாக.

அனைவரையும் பார்த்து இரு கைகூப்பி வணக்கத்தை தெரிவித்துவிட்டு அவர் முன்னே கம்பீரமாக அமர்ந்தார் அருணா.

அவரின் கேள்விக்கு உடனடியாக பதிலளிக்காமல் மெல்ல அனைவரின் மீதும் பார்வையைப் பதித்தவர் “உங்களில் பாதி பேருக்கு என்னை தெரிந்திருக்காது. முதலில் என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்” என்றவர் வேதநாயகத்தின் பக்கம் திரும்பி “முடிச்சிட்டு உங்க கேள்விகளுக்கு பதில் சொல்றேன்” என்றார்.

“நான் அருணா விஜயராஜா. இந்த ஸ்வான் லேக் குழுமத்தின் பெண் வாரிசான செங்கமலம் அவர்களின் பெண். இந்த குழுமத்தில் எனக்கும் பங்குகள் உண்டு. இனி, நானும் இந்த குழுமத்தின் வளர்ச்சியில் உங்களுடன் இருப்பேன்” என்று முடித்ததும் ரிஷிக்கும், மித்ராவிற்கும் பேரதிர்ச்சி.

செங்கமலம் பாட்டியின் பெண் என்றால் இவர் வேதநாயகத்தின் மனைவியா? செங்கமலம் பாட்டிக்கு வேதநாயகம் மருமகனா? என்று அதிர்ந்தனர். மித்ராவோ இவர் எனக்கு சொந்த அத்தையா? இதுவரை தனது தந்தையோ பாட்டியோ இப்படியொரு அத்தை இருப்பதை சொல்லவே இல்லையே என்று யோசனையாக பார்த்தாள்.

வேதநாயகமோ அருணாவின் மீது கொலைவெறியில் இருந்தார். தனது நாற்காலியை பின் தள்ளி எழுந்தவர் “நீ அருணா வேதநாயகம். அதை மறக்காதே. உனக்கு இங்கே என்ன வேலை?” என்றார் கோபமாக.

மற்றவர்களிடம் திரும்பி “மன்னிச்சிடுங்க! இங்கே என் சொந்த பிரச்சனைகளை பேச வரல. ஒரே ஒரு நிமிடம் இவரின் கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு நாம கம்பனி விஷயத்தை பேசலாம்” என்றார்.

அவரோ கொதிநிலைக்கு சென்று “ஏய்! கம்பனி விஷயத்தைப் பேச நீ யார்?”

அவரை தீர்க்கமாகப் பார்த்து “மிஸ்டர் வேதநாயகம் இங்கே போர்ட் மீட்டிங் நடந்து கொண்டிருக்கு.
உங்களுடைய பெர்சனல் விஷயங்களை பேசுவதற்கு இது இடமில்லை. அப்புறம் என்ன கேட்டீங்க? இங்கே எனக்கு என்ன வேலையா? ஸ்வான் லேக் குழுமத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் என்றுமே என்னுடைய அனுமதி இல்லாமல் நடந்தது இல்லை. முக்கியமாக உங்களை விட அதிக பங்குகள் வைத்திருப்பவள் நான். சோ அனாவசியமாக யாரையும் கேள்வி கேட்காமல் கம்பனி விஷயத்தை பேசலாமா?” என்றார் கம்பீரமாக.

அகமும், முகமும் கருத்துப் போக செங்கமலத்தை முறைத்துவிட்டு உட்கார்ந்தவரின் மனம் தன்னை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று கொதிக்க ஆரம்பித்தது. வெறும் இருபது பெர்சென்ட் பங்குகளை தன்னிடம் காட்டிவிட்டு மீதமுள்ளதை பெண்ணிடம் கொடுத்திருக்கிறாள் இந்தக் கிழவி என்று கொலைவெறியானார்.

தனது சிந்தனையிலேயே உழன்று கொண்டிருந்தவர் மற்றவர்கள் என்ன பேசினார்கள் என்றெல்லாம் கவனிக்கவே இல்லை. சற்று நேரத்தில் அனைத்தும் பேசி முடிக்கப்பட, ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டு கிளம்ப அருணாவை முறைத்துக் கொண்டே அவர் அருகில் செல்லத் தொடங்கினார்.

அருணாவின் அருகே செல்லும் நேரம் செங்கமலம் ரிஷியிடம் கண்ணைக் காட்ட, அவன் இருவருக்கும் குறுக்கே சென்று நின்றான்.

“ரிஷி!” என்று பல்லைக் கடித்து “தள்ளிப் போ! என் மனைவியிடம் நான் பேசணும்” என்றார்.

அவனோ சிறிதும் அசையாமல் “கிளம்புறீங்களா? அவங்களோட பேச உங்களுக்கு அனுமதியில்லை” என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக நின்றான்.

மித்ரா பாட்டியை அழைத்துக் கொண்டு வெளியேற, அவரை பின்தொடர்ந்த அருணாவோ செங்கமலத்தின் முகத்தை பார்த்துக் கொண்டே அவர் அருகே சென்றார்.

ரிஷியை தடுக்க முடியாமல் அருணா செல்வதைப் பார்த்து பல்லைக் கடித்தவர் “தப்பு பண்ற ரிஷி!” என்றார்.

அவனோ லேசாக அவரது நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

யார் மேல கையை வைக்கிறோம்னு தெரியாமலே வச்சிட்டு போறான். ஒருத்தரையும் விட மாட்டேன். என்னை அவ்வளவு ஈசியா ஜெயிச்சிடலாம்னு நினைக்காதீங்க. இனி, ஒவ்வொரு நொடியும் இந்த ஸ்வான் லேக்கில் தொடர்குண்டுகலாக வெடிக்கும். அதில் சிதறி சின்னாபின்னம் ஆகப் போவது உறுதி.

அன்னையின் முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்த அருணாவின் கண்கள் கலங்கி இருந்தது.

“அம்மா என்னை மன்னிக்கவே மாட்டீங்களா?”

செங்கமலம் மகளின் முகம் பார்க்காது திரும்பி பேத்தியிடம் “சீக்கிரம் காரை எடு” என்றார்.

அப்போதும் அவரின் அருகில் சென்று “இத்தனை வருஷத்துக்கு பின்னும் உங்களால என்னை மன்னிக்க முடியலையாம்மா?” என்றார் கெஞ்சலாக.

சட்டென்று திரும்பிய செங்கமலத்தின் முகத்தில் கோபத்தின் சாயல் தெரிய “இத்தனை வருடங்களுக்குப் பிறகும் நீ செய்த தவறின் தாக்கம் எங்கே வந்து நிற்குது பார். இதையெல்லாம் பார்த்த பின்னும் உன்னை மன்னிப்பேனா?” என்று கேட்டவர் மித்ராவின் அருகே சென்றமர்ந்தார்.

மித்ராவுக்கு தான் அருணாவைப் பார்க்க பாவமாக இருந்தது. என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றாலும் அவரின் சோகமான முகமே பரிதாபத்தை எழுப்பியது.

“அவங்களை பார்த்தா பாவமாக இருக்கு” என்றவளை முறைத்து “எதுவும் தெரியாம பேசாதே மித்து” என்றுவிட்டு கண் மூடி அமர்ந்துவிட்டார்.

அருணாவும், வேதநாயகமும் மாலையும் கழுத்துமாக வந்து நின்ற காட்சி தான் முன்னே வந்து நின்றது.

அனைத்திற்கும் முதலாய் நீ செய்தவை நிற்க
வாழ்க்கையின் அடிநாதமாய் இருக்க வேண்டிய அன்பு
பின்தங்க சுயநலமென்னும் பிறப்பாய் அவனிருக்க

அடிபட்டதென்னவோ அவர்கள் அல்லவா?