Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 15 | SudhaRaviNovels

அத்தியாயம் - 15

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் – 15

மீட்டிங் முடிந்து வீடு போய் சேர்ந்த வேதநாயகத்திற்கு ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அருணாவின் வரவை முற்றிலுமாக எதிர்பார்க்கவில்லை. பவன் வந்த போது கூட கவிக்காக வந்திருப்பான் என்று தான் எண்ணினாரே தவிர தனக்கு எதிராக காய் நகர்த்த வந்திருப்பார்கள் என்று எண்ணவில்லை.
அருகே இருந்த நாற்காலியை ஓங்கி குத்தியவர் “விட மாட்டேன்! என் கணக்கு எப்பவும் தப்பாக போக விட மாட்டேன்” என்று உறுமினார்.

அவர் அருகே செல்லவே பயந்து ஒளிந்திருந்தனர் வீட்டின் வேலைக்காரர்கள். முகம் ரௌத்திரத்தில் குளித்திருக்க, அங்குமிங்கும் சீற்றம் கொண்ட புலியென நடந்து கொண்டிருந்தார். அவரின் மனம் பல கணக்குளைப் போட்டுக் கொண்டிருந்தது.

அதே நேரம் பவனும் தனது நண்பர்களின் மூலம் சில வேலைகளை செய்வதற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். அவனது மனம் கவியை எங்கனம் சம்மதிக்க வைப்பது என்பதில் மட்டுமே உழன்று கொண்டிருந்தது.

அதிலும் வேதநாயகத்திற்கு எந்த செய்தியும் சென்று விடாமல் கமுக்கமாக செய்துவிட வேண்டும் என்று நினைத்தான். அதனால் மிகுந்த கவனத்துடன் ஒவ்வொன்றும் செய்யப்பட்டது.

அன்று முழுவதும் யோசனையிலேயே இருந்த வேதநாயகம் இரவு நெருங்கும் வேளையில் தனது காரை எடுத்துக் கொண்டு காட்டுப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தார். அவரது கார் சென்று நின்ற இடம் நீலோற்பலத்திற்கு செல்வதற்கு தடையாக இருந்த காம்பவுண்ட் சுவர் முன்பு. அவரின் காரின் வெளிச்சம் பட்டதும் சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த கேட் திறக்கப்பட்டது. கதவு திறக்கப்பட்டதும் கார் சீறிப் பாய்ந்தது.

மாளிகையின் முன் சென்று நின்ற காரின் கதவுகள் வேகமாக திறக்கப்பட, கீழே இறங்கியவரின் முகம் இறுகிக் கிடந்தது. ஒருவித ஆங்காரத்துடன் படி ஏறி சென்றவரின் பார்வை நீலோற்பலம் என்கிற எழுத்தின் மீது படிய, மனதினுள் எழுந்த ஆத்திரத்துடன் அருகே துருப்பிடித்து போயிருந்த அலங்கார விளக்கொன்றை எடுத்து அதன் மீது எறிந்தார். அது கல்லின் மீது பட்டு லேசாக விரிசல் கண்டது.

இருளடைந்த மாளிகையில் இந்த சப்தம் பூதாகரமாக தெரிய, மனதில் எழுந்துள்ள எரிச்சல் குறையாமல் உள்ளே நுழைந்தவரின் பார்வை யாரையோ தேடியது. அவர் தேடியது அங்கில்லாமல் போக, வேக நடையுடன் படிகளில் ஏற ஆரம்பித்தார். அவரது காலடி சத்தத்தைக் கேட்டு தான் இருந்த அறையில் எங்கே ஒளிவது என்று தெரியாமல் அங்குமிங்கும் ஓடி ஒரு மேசைக்கடியில் அமர்ந்து கொண்டார் அந்த வயதான பெண்மணி.

மேலே சென்று எங்கேயும் தேடாமல் சரியாக அந்தக் கதவை காலால் உதைத்து திறந்தவர் கண்களால் அறையை துழாவிக் கொண்டே உள்ளே சென்றார். அவரின் காலடி ஓசை கேட்க-கேட்க அந்தப் பெண்மணி மேலும் தன்னைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்தார். ஆனால் சரியாக மேஜையின் அருகே சென்று குனிந்து பார்த்த வேதநாயகம் “செண்பா வெளியே வா!” என்றார் மிரட்டலாக.

அவரின் குரல் கேட்டதுமே உடல் தூக்கிப் போட “நான் மாட்டேன்! வர மாட்டேன்! நீ என் குழந்தையை தூக்கிட்டு போயிடுவ” என்று அழ ஆரம்பித்தார்.

“நீ வரப் போறியா இல்லையா?” என்று உறுமினார்.

மேலும் தன்னைக் குறுக்கிக் கொண்டு “மாட்டேன்! மாட்டேன்” என்றார் கண்ணீர் வடிய.

அவ்வளவு நேரம் இருந்த பொறுமை பறந்து போக அவரது முடியை கொத்தாகப் பற்றி “வெளியே வாடி!” என்று இழுத்தார்.

அவரது கையை தட்டிவிட முயற்சி செய்து முடியாமல் போக, அழுகையுடன் “என்னை விடு! என்னை விடு!” என்று கத்திக் கொண்டே வெளியே வந்தார்.

அவரை வெளியே இழுத்து விட்டவர், ஓங்கி அறை ஒன்றை விட, அந்தப் பெண்மணி அப்படியே சுருண்டு கிழே விழுந்தார்.

மீண்டும் அவரது முடியைப் பற்றி தூக்கியவர் “சனியன் நல்லா இருந்தும் கெடுத்த...இப்போ பைத்தியமாகவும் எல்லாத்தையும் கெடுக்கிற”.

“விடு என்னை! என் குழந்தையை கொடு” என்று காட்டுக் கத்தலாக கத்தினார்.

அப்போது அறைக் கதவை திறந்து கொண்டு வந்த லோகநாயகி அவரை வேதநாயகத்திடம் இருந்து பிரித்து “என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? எதுக்கு இந்த பைத்தியைத்தை அலற விட்டுட்டு இருக்கீங்க?” என்று அதட்டினார்.

அவரை உறுத்து விழித்து “எத்தனை வருடக் கனவு. அதற்காக என்னவெல்லாம் செய்திருக்கேன். எல்லாமே பாழாய் போயிடும் போல இருக்கு” என்றார் கோபமாக.

“அதுக்கு பைத்தியத்தை அடிச்சா சரியா போயிடுமா? உங்க பொண்டாட்டியை நாலு அப்பு அப்பி அடங்கி இருக்க சொல்லுங்க. மற்றதெல்லாம் தானாக நடக்கும்”.

“அந்தக் கிழவியை துரத்த நீ எதுவும் செய்யலையா? நீ எதுக்கு அங்கே சும்மா இருக்க? உன்னால எந்த பிரயோஜனமும் இல்லை” என்று அவரை கடித்தார்.

லோகநாயகிக்கு கோபம் எழ “ஏன் சொல்ல மாட்ட? உன்னுடைய கனவுக்காக என் வாழ்க்கையையும் பணயம் வச்சு தான் அங்கே இருக்கேன். நான் என்ன வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு புரிஞ்சு தான் பேசுறியா? என்கிட்டே எந்த அதிகாரமும் இல்லை. எல்லாமே அந்த தெய்வநாயகி கிட்டேயும், அந்தப் பய ரிஷி கிட்டேயும் தான் இருக்கு. இத்தனை வருடமாக அந்த வீட்டில் ஒரு வேலைக்காரி மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்கேன். இதெல்லாம் யாருக்காக?” என்று முறைத்தார்.

அவர் சொன்னதைக் கேட்டு கோபம் சற்று தனிய “அந்தக் கிழவியினால எல்லாமே பாழாய் போயிடுமோன்னு பயந்து போய் தான் உன்னைப் பேசிட்டேன். நாம சுதாரிப்பாக இருக்கணும் லோகா. எப்படியாவது கிழவியையும், பேத்தியையும் இங்கிருந்து கிளப்பி விட்டுடனும்”.

ஒரு கையால் செண்பகத்தை பிடித்துக் கொண்டு மறுகையால் அவரின் கைகளைப் பற்றி “அண்ணா! நீங்க தான் எனக்கு தெய்வம். உங்களுக்காக எதுவும் செய்வேன். என்ன செய்யணும்னு சொல்லுங்க செஞ்சிடுறேன்” என்றார்.

அப்போது செண்பகம் அவரின் கைகளிலிருந்து விடுபட போராட, பொறுமையை இழந்த லோகா ஓங்கி அறை ஒன்றைக் கொடுக்க, அவர் அப்படியே மயங்கி சரிந்தார்.

கீழே விழுந்ததும் அண்ணனும், தங்கையும் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அவரை வெறித்தபடி நின்றிருந்தனர்.

“இது இப்போ எல்லாம் ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்குது அண்ணா. அதோட அடிக்கடி என் அறைக்கு வேற வருது. அது நல்லதுக்கில்ல” என்றார் லோகா யோசனையாக.

“இவ உயிரோட இருப்பது யாருக்கும் தெரியாமல் இருப்பது நல்லது லோகா. நம்மோட முக்கியமான துருப்புச் சீட்டே இவ தான். அதனால தான் உன்னை பார்த்துக்க சொன்னேன்”.

“எவ்வளவு நேரம் தான் தூக்கத்துல வச்சிருக்கிறது அண்ணா? நானும் அதிக நேரம் இங்கிருக்க முடியாதே? அந்த தெய்வநாயகி உடனே கதவை தட்டிக்கிட்டே நிற்பா. இப்போ கிழவி வேற இருக்கு” என்றார் கவலையாக.

சற்று யோசனையாக நெற்றியை சுருக்கியவர் “சரி நான் குருவம்மாவை இங்கே அனுப்பிடுறேன்” என்றவர் செங்கமலத்தையும் மித்ராவையும் திசை திருப்பும் திட்டத்தை கூறினார்.

“சரிண்ணா! சொல்லிட்டீங்க இல்ல மற்றதை நான் பார்த்துக்கிறேன்” என்றபடி அங்கிருந்து கிளம்பினார்.

மற்றொரு அறையின் கதவை திறந்தவர் உள்ளே சென்று அங்கிருந்த ஒரு பெரிய படத்தை லேசாக நகர்த்த அதன் பின்னே பாதை ஒன்று தெரிந்தது. அதன் வழியே விடுவிடுவென்று செல்ல ஆரம்பித்தார். அந்தப் பாதையின் முடிவு லோகநாயகியின் அறையாக இருந்தது. லோகநாயகியின் கணவரின் பெரிய படத்தின் பின்னே இந்த பாதை இருந்தது. எவராலும் கண்டுபிடிக்க இயலாதவாறு அமைக்கபட்டிருந்தது.

ரகசியப் பாதையின் வழியே உள்ளே வந்த லோகநாயகியின் பார்வையில் அந்த குழந்தை பொம்மை பட, தலையில் அடித்துக் கொண்டவர் “சனியன் இதை இங்கு கொண்டு வந்து போட்டுட்டு உயிரை எடுக்குது. யார் கண்ணிலாவது பட்டா ஆபத்து” என்று சொல்லிக் கொண்டே அதை தூக்கி மறைத்து வைத்தார்.
அது ஏற்கனவே ஒருவனின் கண்ணில் பட்டு சந்தேகம் என்னும் துரும்பு உறுத்தலாயிற்று என்பதை அறியவில்லை.

தன்னறையிலிருந்த ரிஷிக்கு இது எப்படி சாத்தியம் என்று சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. அன்று நீலோற்பலத்தில் தான் பார்த்த அந்த குழந்தை பொம்மை எப்படி சித்தியின் அறையில் இருக்க முடியும்? அப்போ நீலோற்பலதிற்கும் லோகநாயகிக்கும் தொடர்பு இருக்கிறதா?

அவனால் குழப்பத்தை தாங்க முடியவில்லை அதனால் தோட்டத்தில் சற்று நேரம் இளைப்பாறலாம் என்றெண்ணி மாடியிலிருந்து இறங்கி அங்கே செல்ல ஆரம்பித்தான். மித்ரா அவனுக்கு முன்னே அங்கே சென்றிருந்தாள்.

அன்று பாதி தூரத்திலேயே திரும்பியவளுக்கு இன்று முழுவதுமாக சென்று பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் எழ, மெல்ல அந்த அடர்ந்த தோட்டத்துப் பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.

ரிஷியோ தனது பியுட்டியை அவிழ்த்து விட்டு அதனுடன் கொஞ்சிக் கொண்டிருந்தான். அவனது மனம் மெல்ல சமாதானம் அடைய ஆரம்பித்தாலும் அந்த பொம்மையை சுற்றியே சுழன்று கொண்டிருந்தது.

அதிக வெளிச்சமில்லாத அந்த தோட்டத்துப் பாதையை ஒருவித பயம் கலந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள். வெளிச்சம் கூட நுழைய தொடங்கிய அடர்ந்த காடாக இருந்தது அந்தப் பாதை. வழி எங்கும் பூச்சிகளின் ரீங்காரமும், பறவைகளின் ஒளியும் ஏதோவொரு மாய உலகத்திற்குள் சென்றுவிட்ட உணர்வை கொடுத்தது.

மாளிகையின் அருகே இருந்து வெகு தூரத்திற்கு சென்று விட்டவள் அதைப் பற்றி கவலைப்படாமல் மேலும் நடந்து கொண்டிருந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் செடி, கொடிகள் எல்லாம் பாதையை மறைத்து வளர்ந்து நின்றது. அவற்றை கைகளால் விளக்கியபடி முன்னே செல்ல ஆரம்பித்தாள்.

சிறிது தூரம் அப்படி நடந்தவளின் விழிகள் ஓரிடத்தில் அதிர்ந்து நின்றது. அவளின் எதிரே பாழடைந்த கோவில் ஒன்று தெரிந்தது. அதைக் கண்டு அதிசயித்து பார்த்துக் கொண்டே முன்னேறினாள். இப்படியொரு கோவில் அங்கிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மெல்ல அடியெடுத்து கோவிலின் வாயிலை நெருங்கினாள். எங்கும் நூலாம்படை தொங்க, பராமரிப்பு இல்லாத காரணத்தினால் சிதிலமடைந்து காணப்பட்டது.

மித்ராவின் மனதில் ஆயிரம் கேள்விகள். ரிஷியின் குடும்பத்தினருக்கு இந்த கோவிலைப் பற்றி தெரிந்திருக்கும். அவர்கள் ஏன் இதை பரமாரிக்கவில்லை? பாதி தோட்டம் வரை சரியாக பரமாரித்துக் கொண்டிருப்பவர்கள், இதை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள். இந்த குடும்பத்தில் நடக்கும் சம்பவத்திற்கும் இந்தக் கோவிலுக்கும் நிச்சயம் ஏதோவொரு சம்மதம் இருக்கிறது என்று அழுத்தமாக தோன்றியது.

கோவிலின் வாயிலில் காலை வைத்தவளுக்கு உள்ளுக்குள் பயம் எழுந்தாலும் மெல்ல நடக்க ஆரம்பித்தாள். கோவிலின் கதவுகள் அழுத்தமாக மூடப்பட்டிருந்தது. எங்கும் சிலந்தி வலைகள் பின்னப்பட்டு பார்க்கவே பயங்கரமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை விலக்கி கதவருகே சென்றாள். கதவை தள்ளி திறக்க முயற்சிக்க, அது லேசாக கூட அசைய மறுத்தது.

தனது முழு பலத்தையும் போட்டு மீண்டும் முயற்சிக்க, அப்போது எங்கிருந்தோ சரசரவென்று சப்தம் எழ, அவளின் முன்னே மிகப் பெரிய ராஜ நாகமொன்று முழு உயரத்திற்கும் படமெடுத்து நின்றது.
அதைக் கண்டு எச்சிலை விழுங்கக் கூட பயந்து விழிகள் தெறித்துவிடும் அபாயத்துடன் அசையக் கூட மறந்து அப்படியே நின்றாள். அதுவும் அவளைப் பார்த்தபடியே படமெடுத்து நின்றது. சற்று நேரம் பயந்து அப்படியே நின்றவள் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதுவும் அவளை பார்த்தபடியே நிற்க, எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்றெண்ணி, என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று யோசித்தவள் சடாரென்று நகர்ந்து கண்மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தாள். அவளின் இந்த செயலை எதிர்பார்க்காத நாகமும், அதிர்ந்து பின் அவளின் பின்னே துரத்த ஆரம்பித்தது.

மின்னல் வேகத்தில் நெஞ்சு படபடக்க வந்த பாதையிலேயே பி.டி உஷா போன்று ஓடினாள். அவளின் ஓட்டத்தை தடுப்பது போல திடீரென்று பாதையின் நடுவே நரியொன்று குறுக்கே வர, வீலென்ற சத்தத்துடன் மரத்தில் மோதி நின்றாள்.

அதுவரை பியுட்டியை கொஞ்சிக் கொண்டிருந்தவனின் காதில் இந்த சப்தம் விழ, சுற்றுமுற்றும் பார்த்தவனின் கண்களில் எதுவும் விழாமல் போக, சட்டென்று பியுட்டியின் மீது அமர்ந்தவன் ‘கமான் பியுட்டி! தோட்டத்துக்குள்ள போ!’ என்று விரட்டினான்.

எஜமானனின் மனதை படித்த பியுட்டி புயல் வேகத்தில் அடர்ந்த தோட்டத்திற்குள் நுழைந்தது. சற்று நேரத்தில் மித்ரா இருந்த திசைப் பக்கம் சென்றுவிட, அங்கு மித்ராவிற்கு இருந்த ஆபத்தைக் கண்டதும் அதிர்ந்து போனான்.

மரத்தின் பின்னே பயந்து நின்றவளின் மீது பாய தயாராகிக் கொண்டிருந்தது அந்த நரி. அதனது செயலை ஊகித்தவன் குதிரையின் வயிற்றில் லேசாக தட்ட, அது சிட்டாகப் பறந்து மித்ராவின் அருகே சென்றது. போகிற போக்கில் குனிந்து அவளது இடையைப் பற்றி அலேக்காக அப்படியே தூக்கி குதிரையின் மீது போட்டுக் கொண்டான். பயத்தில் அவளது உடல் நடுங்க அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

அவளது காதில் “டோன்ட் வொர்ரி மித்து! இனி, ஒண்ணுமில்ல” என்று ஒரு கையால் அணைத்துக் கொண்டு குதிரையை விரட்டினான்.

நரியோ ஏமாந்து விட்ட ஆத்திரத்துடன் அவர்களை துரத்த, மெதுவே திரும்பி பார்த்தவன் தனது கையிலிருந்த சாட்டையால் ஓங்கி அடிக்க, அடித்த வேகத்தில் சுருண்டு தூர விழுந்தது.அதன் பின்னர் குதிரை படுவேகமாக தோட்டத்தின் வாயிலை நோக்கி வந்திருந்தனர். நரி அவர்களை பின்தொடராமல் அப்படியே ஓடி வந்துவிட்டது.

மித்ராவோ உடல் நடுங்க அவனை இறுகப் பிடித்திருந்தாள். ஒரு பக்கம் பாம்பை பார்த்தது, நரியின் கண்களில் தெரிந்த வெறியும் அவளது உடல் தூக்கிவாரி போட்டது. குதிரையை நிறுத்தியவன் அவளது முதுகை வருடிக் கொடுத்து “ஈசி! ஈசி! மித்து! இனி, பயமில்லை” என்று சமாதானப்படுத்தினான்.

அவனிடமிருந்து விலகியவள் “அங்கே தோட்டத்தில் ஒரு கோவில் இருக்கு ரிஷி..அங்கே ஒரு பெரிய பா...பாம்பு இருக்கு” என்றாள் பயத்துடன்.

“வாட்? கோவிலா? அங்கேயா?”

“ஏன் உங்களுக்கு தெரியாதா?” என்றாள் அதிர்ச்சியுடன்.

“தெரியாதே! நான் அந்தப் பக்கம் போனதே இல்லையே?”

ரிஷியின் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டவள் “இங்கே என்னவோ நிறைய மர்மங்கள் இருக்கு ரிஷி. நீங்க உடனடியா கண்டுபிடிக்கலேன்னா நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்” என்றாள் பயத்துடன்.

அவளை தனது அணைப்பிலேயே வைத்திருந்தவன் “நாளைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன். இனி, அந்தப் பக்கம் போகாதே. அதோட நீ பார்த்த எதையும் சித்தி முன்னாடி சொல்லாதே” என்றான்.

சரியென்று தலையசைத்தவளை குதிரையிருந்து இறக்கி விட்டவன், தானும் இறங்கி அவளது கரம் கோர்த்து கொண்டு மாளிகையினுள் நுழைந்தவர்களை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தார் லோகா.
 
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!