Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 16 | SudhaRaviNovels

அத்தியாயம் - 16

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் – 16

செங்கமலத்தை எப்படியாவது அங்கிருந்து கிளப்பி விட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவர்கள் அதற்கான முடிவுகளை எடுத்தப் பின்னர் அங்கிருந்து கிளம்பி இருந்தனர். ஆனால் இவர்களின் முடிவுகளை தகர்க்க கூடிய காரியங்கள் மெல்ல-மெல்ல அரேங்கேற தொடங்கி இருந்தது.
மகளைப் பார்த்துவிட்டு வந்த பின் பாட்டி அன்று முழுவதும் யோசனையிலேயே நேரத்தை கடத்தினார். அவரின் மனம் பழையவற்றை அசைப் போட்டுக் கொண்டிருந்தது. அதன் தாக்கமும், கணமும் தாளமால் கண்களை மூடியே அமர்ந்திருந்தார்.

மித்ராவும், ரிஷியும் கூட எதுவும் பேசிக் கொள்ளாமல் அவரவர் அறைக்குள் முடங்கிக் கொண்டனர்.

லோகநாயகிக்கு தான் அவர்கள் இருவரும் கரம் கோர்த்தபடி வந்ததை தாங்க முடியாமல் தெய்வநாயகியிடம் சென்றார்.

“அக்கா! இங்கே என்ன நடக்குது? ரிஷி நம்ம கவியை தானே லவ் பண்ணினான்? இப்போ இந்த மித்ரா கூட கையை கோர்த்துகிட்டு வரான்?”

அவரின் கேள்வியில் அதிர்ந்த தெய்வநாயகி “ஷ்...எதுக்கு இப்படி கத்துற லோகா?” என்று அடக்கியவர் “என்ன பேசிகிட்டு இருக்க நீ? இப்படியெல்ல பேசாதே” என்று முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தவர் ஏதோ நினைவிற்கு வர, லோகாவின் அருகே சென்றார்.

“லோகா! எனக்கொன்னு தோணுது”.

‘க்கும்...நான் சொல்றதை கேட்காதே! தோணுதாம்’ என்று எரிச்சலுடன் எண்ணிக் கொண்டு “என்ன அக்கா?” என்றார்.

“ரெண்டு நாளா என் மனசை ஒரு விஷயம் உறுத்திக்கிட்டு இருக்கு. நம்ம வீட்டில் நிம்மதியே இல்லாம போனதுக்கு காரணம் அதுவா இருக்கலாம்னு தோணுது”.

“எதுவா?”

“நம்ம மூதாதையர்கள் கும்பிட்ட, நம்ம வீட்டு விசேஷங்கள் நடந்த அந்தக் கோவிலை பூட்டி வச்சு அந்த அம்மனோட கோபத்துனால தான் நிம்மதி இழந்து தவிக்கிறோம்னு நினைக்கிறேன்” என்றார் கவலையாக.

இப்போது தெய்வநாயகியின் வாயை அடக்குவது லோகாவின் வேலையாகிப் போனது. சாதரணமாக எதுவோ சொல்ல வருகிறார் என்று அசால்ட்டாக நின்றிருந்தவருக்கு இதைக் கேட்டதும் கலவரமாகிப் போனது.

“அக்கா!” என்று அதட்டியவர் “பேசாதீங்க” என்று கூறி அவர் கையைப் பிடித்து தெய்வநாயகியின் அறைக்கு அழைத்துச் சென்று கதவடைத்தவர் “யார் காதிலாவது விழுந்தா என்னாவாகும் சொல்லுங்க? ரிஷிக்கு இதுவரை அப்படியொரு கோவில் இருப்பதே தெரியாது. இப்போ எதுக்கு அதை நினைவு படுத்துறீங்க?” என்றார் எரிச்சலாக.

அவரை அதிசயமாக பார்த்துவிட்டு “இப்போ என்ன சொல்லிட்டேன்னு நீ இப்படி பேசுற? நம்ம தோட்டத்தில் இருக்கிற அந்தக் கோவிலைப் பற்றி ரிஷி கிட்ட சொல்ல சந்தர்ப்பம் அமையல அவ்வளவு தான். இதுல என்ன ரகசியம் இருக்குன்னு பேசுற?”

தேவையில்லாமல் அந்தக் கோவிலைப் பற்றி இப்போது அவர் பேசுகிறாரே என்கிற பயத்தில் இருந்த லோகா “அந்தக் கோவிலால நாம பட்ட கஷ்டம் எல்லாம் போதும் அக்கா. ரிஷிக்கு அதைப் பற்றி எதுக்கு சொல்லனும்னு தான் கேட்கிறேன்?” என்றார் கலவரத்தை அடக்கிக் கொண்டு.

“இல்ல லோகா! அந்த அம்மாவால தான் நம்ம மனக் கஷ்டத்தை தீர்க்க முடியும்னு தோணுது. அத்தை, மித்ரா, அருணா எல்லாம் வந்திருக்காங்க. எல்லோரும் இருக்கும் போது கோவிலை திறந்து பழையபடி பூஜை பண்ண ஆரம்பிச்சா எல்லாம் சரியாகிடும்னு என் மனசுக்கு தோணுது”.

“வேண்டாம் அக்கா! விட்டுடுங்க. எதையும் மறுபடியும் ஆரம்பிக்காதீங்க. ரிஷி நல்லா இருக்கனுமா வேண்டாமா?” என்றார் மிரட்டும் பாவனையில்.

அதுவரை இருந்த உறுதி மறைய கண்களில் கலவரம் எழ “ம்ம்...அப்போ வேண்டாமா லோகா?” என்றார் சுருதி குறைந்த தொனியில்.

“ரிஷியைப் பற்றி கவலைப்படலேன்னா செய்ங்க”.

“இல்ல வேண்டாம்” என்றவர் லோகாவை திரும்பியும் பார்க்காது அங்கிருந்து சென்றார்.

அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட்டவர் “இதுங்களோட போராடி- போராடியே நம்ம உசுரு போயிடும் போல இருக்கு” என்று புலம்பிக் கொண்டே தனதறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார்.

அதே நேரம் பவன் கவின்யா முன்பு அமர்ந்திருந்தான். அருணாவும் அவர்களுடன் தான் இருந்தார்.

“என்ன விஷயம் பவன்? எதுக்கு எங்க ரெண்டு பேர் கிட்டேயும் பேசணும்னு சொன்ன?”

நெற்றியை நீவி விட்டுக் கொண்டவனின் பார்வை கவி மீது தான் இருந்தது.

“ம்ம்...சொல்றேன் மாம்! நான் சொல்றதைக் கேட்டு ரெண்டு பேரும் உணர்ச்சிவசப்படாமல் இருக்கணும் முதல்ல” என்று பீடிகை போட்டான்.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவனை கேள்வியாகப் பார்த்தனர்.

“நான் சொல்லப் போகிற விஷயம் அப்படிப்பட்டது” என்றவன் அம்மாவிடம் “நான் எதையுமே காரணமில்லாமல் செய்ய மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும்” என்றவனின் பார்வை கவியின் மீது படிந்து விலகியது.

அவன் தனக்காக தான் பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டவள் “சொல்லுங்க பவன் நான் கேட்கிறேன்” என்றாள் மெல்லிய குரலில்.

அவளிடமிருந்து அனுமதி கிடைத்ததும் நாற்காலியிலிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தான். எப்படி ஆரம்பிப்பது எப்படி சொல்வது என்கிற யோசனை ஓட, அவர்களை திரும்பிப் பார்த்து “இங்கே நடந்து கொண்டிருப்பது என்னன்னு உனக்கு தெரியும் கவி. நீ அதில் அதிகமா பாதிக்கப்பட்டிருக்க. அதிலிருந்து எப்படியாவது வெளியே வந்திடனும்னு தவிக்கிற”.

“ம்ம்..”

“இப்போ நான் சொல்லப் போகிற வழி உனக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம். ஆனா உன் வாழ்நாள் முழுவதும் நீ இந்தப் போராட்டத்திலிருந்து விடுபடலாம்” என்றான் பூடகமாக.

அருணாவிற்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்ததும் புருவத்தை உயர்த்தி அவனை கேள்வியாகப் பார்த்தார். அவன் அதை கண்டு கொள்ளாமல் கவியிடம் “நான் சொன்னதும் அவசரப்படாம நல்லா யோசிச்சு பார்த்திட்டு பேசு” என்றான்.

“ம்ம்...என்னன்னு சொல்லுங்க”.

அவளின் முன்னே சென்றமர்ந்தவன் அவளது கரங்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு “அந்தாள் உன்னை பகடைக்காயாக உபயோகித்து தனது திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறார். அவருக்கு உன் மேல அக்கறையோ, பாசமோ அன்போ எதுவுமில்லை. அவரோட திட்டம், கனவு நிறைவேறனும் அது மட்டும் தான் முக்கியம். அதற்காக எந்த எல்லைக்கும் போவார்” என்று அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் பேசப்பேச அவளின் மனம் நடந்தவைகளை எல்லாம் அசைப் போட, தன்னை மீறி கன்னங்களை கண்ணீர் நனைக்க ஆரம்பித்தது.

அவனோ அவளையே பார்த்தவண்ணம் “இதிலிருந்து நீ முழுமையாக விடுபடனும்னா உனக்கொரு பலமான பாதுகாப்பு தேவை” என்று நிறுத்தினான்.

உதட்டை மடித்து அழுகையை அடக்கியவள் ‘அதற்கு நான் எங்கே போவேன்?” என்றாள்.

அருணா சட்டென்று அவளது தோளைப் பற்றி தன்னோடு அணைத்துக் கொண்டார்.

மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டு “அந்த பாதுகாப்பை நான் கொடுப்பேன் கவி...உன்னுடைய கணவனாக” என்று நிறுத்தினான்.

அருணாவின் தோளில் சாய்ந்திருந்தவள் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்து “என்ன சொல்றீங்க? நோ!” என்றாள் மறுப்பாக.

“உன்னுடைய நல்லதுக்கு தான் சொல்கிறேன் கவி” என்றான் அழுத்தமாக.

“என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றாள் அழுகையுடன்.

“ஏன்?”

“உங்களுக்கு தெரியும் தானே! நா...நான் ரிஷியை லவ் பண்ணினேன்”.

“பண்ணின! இப்போ இல்லேல்ல”.

“ப்ளீஸ்! “

“அப்போ ரிஷியை கல்யாணம் செய்துக்கோ. நான் ரிஷி கிட்ட பேசுறேன்” என்றான் பிடிவாதமாக.

“சொன்னா புரிஞ்சுக்கோங்க! என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது” கோபத்துடன்.

அவளின் மறுப்பை கேட்டு அன்னையை பார்க்க, அவரும் “வேண்டாம்னா விட்டுடேன் பவா” என்றார்.

அவனோ போனை எடுத்து “நான் ரிஷி கிட்ட பேசுறேன். அவன் இவளை கல்யாணம் செய்துக்க தயாராக தான் இருக்கிறான். இவ தான் அவனை விட்டு விலகிப் போறா” என்றான் அவளை பார்த்துக் கொண்டே.
அவன் சொன்னதைக் கேட்டு அவசரமாக எழுந்தவள் பாய்ந்து அவனது கரங்களில் இருந்த போனை கைப்பற்ற முயற்ச்சித்து “சொன்னா கேட்க மாட்டீங்களா! கொடுங்க போனை” என்று கத்தினாள்.

அவன் நகர்ந்து கொள்ள அழுகையுடனும், கோபத்துடனும் அவனிடமிருந்து போனை வாங்க முடியாமல் “என்னால ரிஷியை கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஏன்னா எனக்கு அவன் அண்ணனாம்’ என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

மகனும், அவளும் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்த அருணா கடைசியாக அவள் சொல்லியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

“என்ன சொல்றா இவ?”.

“உண்மையை சொல்றா” என்றான் அவளை பரிதாபமாக பார்த்துக் கொண்டே.

“புரியல! என்னடா?” என்றார் பதட்டத்துடன்.

“உங்க மாமா பையனுக்கும், செண்பகம் அம்மாவுக்கும் பிறந்த மகள் தான் இந்தக் கவின்யா” என்றான் இறுகிய குரலுடன்.

அதைக் கேட்டதும் மீண்டுமொரு அதிர்ச்சி எழ “என்ன செண்பகத்தோட மகளா?” என்றார்.

“ஆமாம்! உங்க முன்னால் கணவரோட சொந்த தங்கை செண்பகமே தான்” என்றான் அழுத்தமாக.

அப்படியே உடைந்து போய் அமர்ந்து விட்டார். செண்பகத்திற்கும், விஸ்வநாதனுக்கும் பிறந்தவளா இவள். இது எப்படி சாத்தியம்? எவருக்குமே தெரியாமல் அவர்கள் இருவரும் எங்கே வாழ்ந்திருக்க முடியும்? தனது தங்கை யாரையோ காதலித்து ஓடி விட்டதாக தானே கூறினார். இந்தக் குழந்தையைக் கூட தாய், தந்தை இருவரும் இறந்ததால் தான் தானே பராமரிக்கிறேன் என்று கூறினார்.

அனைத்தும் பொய்யா? என்று நொந்து போனார். அதோடு ரிஷியும், அவளும் அண்ணன் தங்கை என்று தெரிந்தே பழக விட்டிருந்த அவரை எண்ணி அருவெறுத்து போனார்.

அன்னை முன்னே குனிந்து அமர்ந்தவன் “என்னம்மா அருவெறுப்பா இருக்கா? எனக்கும் தான். இதோ இருக்காளே இவ அன்னைக்கு மயக்கத்தில் உளறியதை வைத்து தான் என் விசாரணையை ஆரம்பித்தேன். அது இங்கே வந்து நிற்குது. அந்தாளை இந்த நிமிஷமே கொன்னு கூறு போடணும்னு தோணுது. ஒரு பெண்ணாக இவளோட உணர்வுகளை வைத்து விளையாடி அவன் என்ன சாதிக்க நினைச்சான்?” என்றான் கோபமாக.

அருகே அழுது கொண்டிருந்த கவியை தன்னோடு இழுத்தனைத்தவர் “என்னால முடியல பவா...இப்படியொரு மிருகம் இந்தக் குடும்பத்துக்குள்ள நுழைய நானே காரணமாகிட்டேனே. தன்னோட தங்கை குழந்தையை நல்லா பார்த்துக்குவார்ன்னு நினைத்து தானே விட்டுட்டு போனேன். ஹையோ! அவளையே பகடையா வைத்து விளையாடி இருக்கானே” என்று அழ ஆரம்பித்தார்.

அழுபவர்கள் இருவரையும் பார்த்தவனது கண்களும் கலங்கியது.

“அம்மா! அழுகையை நிறுத்துங்க. அவளை தேற்றும் வழியைப் பாருங்க. இதை கேட்ட உங்களுக்கே அதிர்ச்சியாக இருக்கே அனுபவித்த அவளின் நிலையை கொஞ்சம் யோசிங்க. தன் மனசுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மருகி கிட்டே இருந்திருக்கா” என்றவனது பார்வை அவளிடமே நிலைத்தது.

அவளோ அவமானத்தில் தலை குனிந்து அழுது கொண்டிருந்தாள். அருணா அவளை தன் நெஞ்சோடு அணைத்து “அழாதடா! நீ எந்த தவறும் செய்யல. உனக்கு நாங்க இருக்கோம்” என்று சமாதானப்படுத்தினார்.

தனது பிறப்பும், கேலிக்குறியான காதலும் அவளின் உணர்வுகளை அசிங்கப்படுத்த, அவரை மூர்க்கமாக தள்ளிவிட்டு அறையை விட்டு ஓடி தனதறையில் கதவடைத்துக் கொண்டாள். அவளது அழுகையின் தீவிரமே தப்பான முடிவெடுக்கப் போவதை உணர்த்தியது.

அவளின் இந்த செயலை எதிர்பார்க்காதவர்கள் அடித்துபிடித்து பின்னே ஓடிச் சென்று கதவை தட்ட ஆரம்பித்தனர். பவன் ஜன்னலின் வழியே அவளை பார்க்க, அவளோ பேனில் தனது புடவையைப் போட்டு கட்டிக் கொண்டிருந்தாள். அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதை உணர்ந்தவன் அவசரமாக, கதவை உடைக்கும் பணியில் இறங்கினான்.

சரியாக அவள் கழுத்தில் புடவையை மாட்டி தொங்கும் நேரம் கதவு உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்திருந்தான் பவன். எதையும் யோசிக்காமல் அவளது கால்களைப் பற்றி தூக்கியவன், கழுத்திலிருந்த புடவையை விலக்கி அவளை கீழே இறக்கி விட்டான்.

அருணா பாய்ந்து அவளை கட்டிக் கொள்ள, அவனோ கைகளை இறுக கட்டியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் இறுக்கத்துடன்.

அவனை நிமிர்ந்து பார்க்கவும் பயந்து அருணாவுடன் ஒண்டிக் கொண்டு நின்றாள்.

“சோ! நீ செத்துட்டா எல்லாம் சரியாகிடும். அப்போ உன் பிறப்பில் இருக்கும் மர்மம், ரிஷியுடனான உன்னுடைய காதல் எல்லாமே மறைந்து போயிடுமா?” என்றான் இறுகிய குரலில்.

“ஐயோ!” என்று காதில் கையை வைத்து மறைத்தபடி கத்தியவள் “அதை சொல்லாதீங்க! எனக்கு அண்ணன்னு தெரியாதே” என்று அழ ஆரம்பித்தாள்.

“அவன் என்ன உறவுமுறை என்று தெரியாமல் தானே காதலிச்சே? இதில் உன்னுடைய தவறு எங்கே இருக்கு?”

“தெரியாமல் செய்தாலும் தப்பு தானே”

அவளருகே வேகமாக சென்று தோள்களை இறுகப் பற்றி ‘இங்கே பார் கவி! இங்கே நடந்தவைகளில் உன்னுடைய தவறு எங்கேயும் இல்லை. அதனால உன்னை நீயே நோக அடித்துக் கொள்வதை விட்டு விட்டு நான் சொல்வதை கேள்” என்றான் அழுத்தமாக.

“ஆமாம்-டா! இதுவரை அழுதது போதும்” என்றார் அருணா கரகரப்பான குரலில்.

‘மா! அவளுக்கு ஜூஸ் எடுத்திட்டு வாங்க” என்றவன் “நீ போய் முகம் கழுவிட்டு வா...பேசணும்” என்றான் அதட்டலாக.

இருவரும் சென்றதும் அங்குமிங்குமாக அறைக்குள்ளேயே நடந்தவன் சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு போனை எடுத்து ரிஷியை அழைத்தான். அவனிடம் பேசி அங்கே வரும்படி அழைப்பு விடுவித்து விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அருணா ஜூசுடன் வந்துவிட, கவியும் முகம் கழுவி விட்டு வந்தாள். இருவரையும் எதிரே அமர சொன்னவன் அவளை ஜூஸ் குடிக்கும் படி கூறினான்.

அவள் குடித்து முடித்ததும் “உன்னுடைய பிறப்பு பற்றி என்னால ஒரு சில விஷயங்கள் மட்டும் தான் சேகரிக்க முடிஞ்சுது கவி. அது மிகப் பெரிய ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. அந்த வீட்டுப் பெண்ணான எங்க அம்மாவுக்கே இந்த விஷயம் இப்போ தான் தெரிந்திருக்கு. அப்படின்னா ரிஷிக்கோ, அவங்க அம்மாவுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்றான் யோசனையாக.

“லோகநாயகி அவரோட பெரிய தங்கை பவா” என்றார் இறுகிய குரலில்.

அன்னையை திரும்பிப் பார்த்தவன் “அந்தாள் குடும்பம் நமக்கு சொந்தமா?”

நீண்ட பெருமூச்சுடன் “பஞ்சம் பிழைக்க நம்ம எஸ்டேட்டிற்கு வந்தவர்கள். அவர் நம்ம கம்பனியில் வேலை பார்த்தார். எங்க கல்யாணத்தின் மூலமாக நம்ம குடும்பத்திற்குள் நுழைந்தார்.