Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 17 | SudhaRaviNovels

அத்தியாயம் - 17

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் – 17

பவனிடமிருந்து அழைப்பு வந்ததும் ஏற்றுப் பேசியவன் அவன் எதற்காக இந்த இரவு நேரத்தில் தன்னை அழைக்கிறான் என்று சிந்தித்துக் கொண்டே அவனைக் காண கிளம்பினான். அந்நேரம் அவனுக்கு மற்றொரு அழைப்பு வர, எடுத்துப் பேசியவன் தன்னை வந்து ஆலுவலகத்தில் பார்க்கும்படி கூறிவிட்டு வைத்தான்.

பவனை காண செல்லும் முன் அலுவலகம் சென்றடைந்தான். வாட்ச்மேன் மட்டும் இருக்க, காரை விட்டு இறங்கி உள்ளே சென்றவன் தனதறையில் அமர்ந்தான். சற்று நேரம் கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்தவனை அழைத்தது அவனது அலைப்பேசி. அதை எடுத்து பேசியவன் தன்னை சந்திக்க வருபவர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவர்களை எதிரே அமரும்படி கூறினான். அவர்கள் இருவரிடமும் தான் ஒப்படைத்திருந்த வேலை என்னவாயிற்று என்று வினவினான்.

“முடிச்சிட்டோம் சார்! நிறைய தகவல்கள் கிடைத்திருக்கு. அதற்கான ஆதாரங்கள் முழுமையாக கிடைக்கலேனாலும் ஓரளவிற்கு கிடைத்திருக்கு”.

“ம்ம்...சொல்லுங்க”.

கவியைப் பற்றி தான் முழுவதுமாக விசாரிக்க கூறி இருந்தான். வேதநாயகம் தன்னிடமிருந்து அவள் விலக என்ன காரணம் என்றும் விசாரிக்க கூறி இருந்தான். அவன் முன்னே சில போட்டோக்கள் போடப்பட்டது. அதில் கவியின் சிறுவயது போட்டோக்களும் இருந்தது. மேலும் பல பழைய படங்கலும் இருந்தது. ஒவ்வொன்றாக எடுத்து அவனுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தனர். அவன் முன்னே இருந்த படங்களில் இருந்தவர்கள் அனைவரும் அவனது முன்னோர்கள். ஒருவருக்கொருவர் என்ன உறவு என்று சொல்லப்பட்டது. அதில் ஒரு படம் அவன் கவனத்தை மிகவும் கவர்ந்தது. அதை எடுத்து பார்த்தவனின் விழிகளில் அதிலேயே நிலைத்தது. அந்தப் படம் அதுவரை சொல்லாத பல கதைகளை சொல்லியது.
அந்த போட்டோவை பார்த்துக் கொண்டிருந்தவனின் காதில் அவர்கள் சொன்ன விஷயம் அவனை அப்படியே ஸ்தம்பிக்க வைத்தது. கவி பற்றிய உண்மையை அவர்கள் உரைத்திருக்க அதிர்ச்சியில் போட்டோவை கீழே விட்டிருந்தான்.

“என்ன சொல்றீங்க?”

“கவி மேடம் செண்பகம் அம்மாவுடைய பெண். உங்கப்பாவுக்கு செண்பகம் மேடத்திற்கும் பிறந்த பெண் தான் கவின்யா”.

அவனது உணர்வு போராட்டத்தை அறிந்து கொள்ளாதவர்கள் அதன்பின்னர் பல கதைகளை கூறினார்கள். அது எதுவும் அவன் காதில் விழவில்லை. அவனது மனம் தடுமாறிக் கொண்டிருந்தது. என்ன நடந்து கொண்டிருக்கிறது தன் வாழ்வில்? உயிராக நினைத்து பழகியவள் தங்கையா? மனம் வெறுத்துப் போனது.

தனது தந்தையின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவனுக்கு அவர் இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து ஒரு மகளையும் பெற்றிருக்கிறார் என்பதை நம்ப முடியாமல் போனது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் அவன் கண்முன்னே கிடந்தது. ஜீரணிக்க இயலாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

“இன்னும் சில விஷயங்களை எங்களால அணுகவே முடியல சார்...யாரோ எங்களின் விசாரணையை பின்னாடியே வந்து தடுத்துக் கொண்டிருந்தார்கள்” என்றனர்.

“ம்ம்..” என்றானே தவிர அவனால் பேச முடியவில்லை.

அதன்பின்னர் அவன் முன்னே மீண்டும் இரு படங்கள் போடப்பட்டது.

“சார்! இது இரெண்டும் எங்கே இருக்கிறதுன்னு எங்களால கண்டுபிடிக்க முடியல. ஆனா இதைப் பற்றி தெரிந்த ஒருவர் கொடுத்த தகவல் ஆச்சர்யமாக இருந்தது. அதிலும் உங்கள் குடும்பத்திற்கு சொந்தமான ஒன்று என்று சொல்கிறார்கள். நீங்கள் எங்காவது இவற்றை பார்த்திருக்கீங்களா?”

அந்தப் படங்களை கையில் எடுத்தவனின் விழிகள் அதிலேயே நிலைத்திருக்க “ம்ம்...சமீபத்தில் தான் பார்த்தேன்” என்று நீலோற்பலத்தை சுட்டிக் காட்டினான். மிகப் பழைய படமாக இருந்தபோதிலும் நீலோற்பலத்தை அவனால் அடையாளம் காண முடிந்தது.

“இந்த பங்களா எங்கிருக்கு என்று எங்களால் கண்டுபிடிக்கவே முடியல சார்”.

“ம்ம்...இந்தக் கோவில்?”

“இதுவும் உங்கள் குடும்பத்திற்கு சொந்தமான ஒன்றுன்னு சொல்றாங்க”.

“இந்த புகைப்படங்கள் எல்லாம் யார் கொடுத்தாங்க? நான் அவர்களை பார்க்க முடியுமா?”

“அவங்க உங்க வரவிற்காக பல வருடமா காத்திருப்பதாக சொல்றாங்க சார். ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரல. எப்படியும் கூடிய விரைவில் நீங்க சந்திக்க முடியும்னு சொன்னாங்க”.

“யார் அவங்க?”

“இங்கே பூர்வகுடியை சேர்ந்தவங்க. மிகவும் வயதானவங்க. உங்கள் குடும்பத்தின் மொத்த கதையும் அவர்களுக்கு தெரியும் என்பது போல பேசுறாங்க சார்” என்றனர்.

அதைக் கேட்டதும் அவனது உடலில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்ள “நாளை அவங்களை பார்க்க முடியுமா?” என்றான்.

மறுப்பாக தலையசைத்தவர்கள் “இல்ல சார். அதுக்கு முன்னாடி நீங்க முடிக்க வேண்டிய வேலை எதுவோ இருக்கிறதாம். அதை முடித்த பின்பு தான் அனுமதி கிடைக்குமாம்”.

“வாட் நான்சென்ஸ் இதெல்லாம். நோ நான் நாளைக்கே மீட் பண்ணியாகணும். ஏற்பாடு செய்ங்க” என்று கூறி எரிச்சலுடன் எழுந்து கொண்டான்.

எத்தனை வேதனைகளை தான் அவனும் தாங்குவது? கவியின் பிறப்பை பற்றி அறிந்து கொண்டது அவனது மனதை பலமாக தாக்கி இருந்தது என்றால், அவனது தந்தை மீது வைத்திருந்த மரியாதை சற்றே ஆட்டம் கண்டிருந்தது.

இப்படியொரு நிலை தனக்கு வரும் என்று ஒருநாளும் ரிஷி நினைத்ததில்லை. தன் குடும்பத்தைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் மர்ம வலையை எப்படி அறுப்பது என்று புரியாமல் அமர்ந்திருந்தான். அப்போது அவனுக்கு மீண்டும் அழைப்பு வர, பவன் தான் அழைக்கிறான் என்று தெரிந்ததும் அவர்களை கிளப்பி விட்டு தானும் கிளம்பினான்.

மனம் முழுவதும் வெறுமையை சுமந்து கொண்டு எதிர்காலமே சூனியமாக தெரிய, பவன் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று சேர்ந்தான். இனி என்ன நடந்தாலும் தன்னை அது பாதிக்காது என்பது போல சென்றான்.

அவனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றவன் கவியும், அவனது அன்னையும் இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்லாமல் மற்றொரு அறைக்கு சென்றான். அங்கு சென்றதுமே ரிஷி அமைதியாக அமர, அவனையே பார்த்துக் கொண்டிருந்த பவனுக்கு அவனது அமைதி ஏனோ சங்கடத்தை கொடுத்தது.
“என்னாச்சு ரிஷி? ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“ம்ம்ம்..” என்று திகைத்தவன் தலையை உலுக்கிக் கொண்டு “ஒண்ணுமில்ல...நீ சொல்லு எதுக்கு என்னை இந்த நேரத்தில் வர சொன்ன?”

அவனை சந்தேகமாக பார்த்துக் கொண்டே “முக்கியமான விஷயங்களை பேசணும்னு நினைக்கிறேன் ரிஷி. ஆனா உன்னுடைய மனநிலையைப் பார்த்தா உன்னால கேட்க முடியுமான்னு தெரியல” என்றான்.
அவன் சொன்னது முற்றிலும் உண்மை. ரிஷிக்கு அப்போது எதையும் தெரிந்து கொள்ளவோ, பேசவோ விருப்பமில்லை. தனது எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கும் காலகட்டத்தில் புதிதாக எதைப் பற்றியும் பேச விருப்பமில்லதவனாக தான் இருந்தான். ஆனால் பவனின் கண்களில் தெரிந்த தீவிரத்தைக் கண்டு , தன்னை சுதாரித்துக் கொண்டவன் அவனிடம் கேட்டு ரெப்ரெஷ் செய்து கொண்டு வந்தமர்ந்தான்,

“இப்போ சொல்லு? என்ன விஷயமா என்னை வர சொன்ன?’

அதுவரை அவனிடம் எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தவனுக்கு, அதை எப்படி சொல்வது என்று புரியவில்லை. ஒருவித தயக்கமும் பரிதாபமும் எழ, சற்று நேரம் அமைதியாக இருந்தவன் பின்னர் தான் அறிந்து கொண்ட அனைத்தையும் அவனிடம் கூறி விட்டான்.
ரிஷிக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. சற்று முன்னர் அவன் அறிந்து கொண்ட விஷயங்கள் தானே.

எதையும் அறியாமல் வந்திருந்தால் அவனுள் ஒரு அதிர்வு வந்திருக்கும். முகத்தில் எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்காது அமர்ந்திருந்தவனை குழப்பத்துடன் பார்த்தான் பவன். அவனிடமிருந்து உணர்வுகள் வெடித்துச் சிதறும், தன்னை அடிக்க கூட வரலாம் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“நான் என்ன சொன்னேன்னு புரியுதா ரிஷி?”

இருக்கை கொண்டு முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன் “உண்மையை சொல்லனும்னா ஒரு ரெண்டு மணி நேரம் முன்னாடி நீ இதை சொல்லி இருந்தா இங்கேயே உன்னை போட்டு பிரட்டி இருப்பேன். ஆனா இங்கே வருவதற்கு முன் நீ சொன்ன எல்லாவற்றிற்கும் ஆதாரங்களோட தெரிஞ்சுகிட்டு தான் வந்திருக்கிறேன்”.

பவனுக்கு அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி. உண்மையை தெரிந்து கொண்டு தான் வந்திருக்கிறானா என்று?

“கவி பற்றி...” என்று இழுத்தவனை முகக் கன்றலுடன் “தெரியும்!” என்றான் இறுகிய குரலில்.

அவனது கரங்களைப் பற்றிக் கொண்ட பவன் “சாரி ரிஷி” என்றான் வேதனையாக.

ரிஷியோ “எல்லாமே கைமீறி போயிட்டு இருக்கு. என் வாழ்க்கையின் பாதை எங்கேயோ என்னை இழுத்துக் கொண்டு போய் கொண்டிருக்கிறது பவன். ஒரு சக்சஸ்புல் பிசினெஸ்மேனாக புகழோடவும், பெருமையாகவும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன். அதோட குடும்ப பாரம்பரியம் வேற என்னை உயரத்தில் வைத்திருந்தது. ஆனா இன்னைக்கு நான் கேட்டவை எல்லாமே சுக்குநூறாக உடைத்து போட்டுவிட்டது. காதலியாக இருந்தவள் என் தங்கை என்று ஆதாரங்கள் சொல்கிறது. எங்களின் உறவைப் பற்றி இந்த ஊருக்கே தெரியும். அப்படி இருக்கும் போது அவள் எனது தங்கைன்னு சொன்னா என்ன மாதிரியான விமர்சனங்கள் வரும்? என்னாலையே தாங்க முடியலையே அவள் எப்படி தாங்குவாள்?”

அவனையே பார்த்துக் கொண்டிருந்த பவன் “அவளுக்கு முன்னாடியே தெரியும் ரிஷி. அந்தாள் அவ கிட்ட இதை சொல்லிட்டார். அதனால தான் அவ உன்னை விட்டு விலகி இருக்கிறாள்”.

கண்களில் வலியும், வேதனையும் எழ “என்ன வாழ்க்கை இது!” என்றான் வெறுப்பாக.

அவனது தோள்களை தட்டிக் கொடுத்து “மனசை விட்டுடாதே ரிஷி. இவை எல்லாவற்றிற்கும் காரணமான அந்தாளை விடக் கூடாது. எத்தனை பேரின் மனதை காயப்படுத்தி, வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறான். சும்மா விடலாமா?”

முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன் “ம்ம்...நிச்சயமா! ஆனா அவன் கவியை எதுவும் செய்யாம இருக்கணும்”.

அந்நேரம் கதவை திறந்து கொண்டு அருணாவும், கவியும் உள்ளே நுழைந்தனர். ரிஷியின் பார்வை கவியை தொட்டு மீள, அவளுக்கு அவனது கண்களை சந்திக்க முடியவில்லை. அதையும் மீறி மெல்லிய கேவல் எழுந்தது. அவளது நிலையை உணர்ந்து கொண்ட அருணா தன் தோளில் சாய்த்துக் கொண்டார்.

அங்கிருந்த அனைவரின் மனமும் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தது. முதலில் தன்னை சமாளித்துக் கொண்ட அருணா “என்ன செய்யப் போற ரிஷி?” என்றார் நேரடியாக.

அவளை பார்க்காமல் திரும்பிக் கொண்டவன் “முதல்ல எங்கப்பா வாழ்வில் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கணும்” என்றான் கரகரப்பான குரலில்.

“அதுக்கு நீ எங்கம்மாவை பார்த்து பேசணும். அவங்க கிட்ட அதற்கான விடைகள் இருக்க வாய்பிருக்கு”.
“இல்ல அத்தை! மலைவாழ் பூர்வகுடியில் யாரோ ஒரு பாட்டி இருக்காங்களாம். அவங்க என்னை பார்த்து பேசணும்னு சொல்லி இருக்காங்களாம்” என்றான்.

அதைக் கேட்டதுமே “வாசமல்லி! இவங்க தான் நம்ம குல தெய்வ கோவிலின் அனைத்து சம்பிரதாயங்களையும் செய்பவர்கள்” என்றார் கண்களை மூடி.


“வாட்! அத்தை உங்களுக்கு தெரியுமா?” என்றான் அதிர்வாக.

“ம்ம்...நல்லா தெரியும். எங்க கல்யாணமும் அவங்க தான் நடத்தி வச்சாங்க” என்றார் வெறுமையான குரலில்.

பவனோ அவசரமாக “நம்ம குல தெய்வம் கோவில் எங்கிருக்கு?” என்றான்.

“நம்ம மாளிகை தோட்டத்தில்”.

“என்ன சொல்றீங்க அத்தை?’

“அந்தக் கோவில் அங்கே தான் இருக்கு. ஒரு துர்மரணத்திற்கு பின் கோவிலின் பக்கம் கூட யாரும் செல்ல முடியாதவாறு தடை போடப்பட்டுவிட்டது” என்றார் இறுகிய குரலில்.

பவனோ இறுகிய முகத்தோடு “என்னுடைய திருமணம் அந்தக் கோவிலில் தான் நடக்கும்” என்றான்.
ரிஷி யோசனையுடன் அவனை பார்த்தான்.

“நாளை எனக்கும் கவிக்கும் திருமணம் நடக்கணும் ரிஷி. கவியை பாதுக்காக நான் அவள் கணவனாக வேண்டும்” என்றான்.

“பவன்! என்ன சொல்ற?”

“ஆமாம் ரிஷி! எக்காரணம் கொண்டும் இனி அவளை தனியாக விடப் போவதில்லை” என்றான்.
கண்களை மூடி அப்படியே நின்று விட்டான். கவியும் அருணாவைக் கட்டிக் கொண்டு அழுதாள். அப்போது கவியைப் பார்த்து “உன்னை அழக் கூடாதுன்னு சொன்னேன் கவி!’ என்றான் அதட்டலாக.

ரிஷிக்கு அவன் சொன்னதைக் கேட்டு வேதனையாக இருந்தது. ஆனால் இதை விட்டால் அவளின் வாழ்க்கை எதிர்காலமின்றி போய் விடும் என்பதை உணர்ந்து கொண்டான்.

“ஓகே பவன்! நான் என்ன செய்யணும்?” என்றான் நிதானப்படுத்திக் கொண்ட குரலில்.

அவனை மெச்சுதலாகப் பார்த்து “அந்தாளை திசை திருப்பனும். நம்ம மேல கவனம் வராம செய்யணும்” என்றான் கூர்ந்து பார்த்தபடி.

சற்று நேரம் யோசித்தவன் “ம்ம்...சரி பண்ணிடலாம். அடுத்து?”

“கோவில் இருக்கும் இடம் தயாராகணும்”.

“செஞ்சிடலாம்”.

அப்போது அருணா “லோகநாயகியை அங்கிருந்து அப்புறபடுத்தியாகனும் ரிஷி. மாளிகையிலிருந்து அவருக்கு தகவல் கொடுப்பது அவங்க தான்” என்றார்.

“என்ன சொல்றீங்க அம்மா?” என்றான் அதிர்ச்சியாக.

“லோகநாயகி அவரின் மூத்த தங்கை. வேதநாயக்திற்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தும் அவரே செய்து கொண்டிருக்கிறார்”.

உடல் இறுகி நின்றிருந்த ரிஷி பவனிடம் “நீ சொன்ன அனைத்தையும் செய்திடலாம். அதற்கான ஏற்பாடுகளை நான் கவனிக்கிறேன்” என்றான்.

அப்போது கவியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ரிஷியை பார்த்தபடி நின்றிருந்தாள்.அவளின் கண்ணீர் அவனது மனதை அழுத்த மெல்ல அவளருகே சென்று நின்றவன் “நம்மோட எதிரிக்கு கூட இந்த நிலை வரக் கூடாது கவி. என் காதால் கேட்டவைகளை என்னாலும் நம்ப முடியவில்லை. இதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்” சொல்லும் போது அவனது கன்னங்களையும் கண்ணீர் நனைத்தது.

அதைக் கண்டு பவன் அவனை அணைத்துக் கொள்ள “இது உண்மையா இல்லையா என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றாலும் நம்மோட காதலை தொடர்வது சாத்தியமில்லாத ஒன்று. அதனால உன்னுடைய எதிர்காலத்திற்காக பவன் சொன்ன முடிவை ஏற்பது நல்லது” என்றான் பெரும்பாடுபட்டு.
அழுகையுடன் நிமிர்ந்தவள் இருவரையும் பார்த்து “என்னுடைய பிறப்பிலிருந்து அடுத்தவர்களின் ஆதாயத்திற்காகவே எல்லாமே நடந்தது. என் வாழ்க்கைக்கான முடிவை கூட அடுத்தவர்களே எடுக்கும் நிலையில் இருக்கிறேன். எனக்கென்று உணர்வுகள் இருக்கு என்று யாருமே யோசிப்பதில்லை” என்றாள்.

பதறி போன பவன் “கவி! நிச்சயமாக இது உன்னை கட்டாயப்படுத்தி எடுக்கிற முடிவு இல்லை. நீ எங்களுக்கு பொக்கிஷம் மாதிரி. உன்னை ஒருதடவை அந்தாள் கிட்ட அநாதரவா விட்டுட்டு போன மாதிரி போக கூடாதுன்னு எடுத்த முடிவு தான். அதோட உன் மேல் பரிதாபத்தினால் எடுத்த முடிவு இல்லை. ஆரம்பத்திலிருந்து என் மனம் உன்னுடைய காதலை எதிர்பார்த்தது. ரிஷியும் நீயும் வைத்திருக்கும் அன்பை உணர்ந்து ஒதுங்கி இருந்தேன். இப்பவும் சொல்றேன் கவி உன்னை உனக்காக தான் விரும்பி திருமணம் பண்ண கேட்கிறேன்” என்றான் தவிப்புடன்.

அருணா அவளது கைகளைப் பற்றி “உன்னுடைய விருப்பம் தான் எல்லாம் கவி. ஆனா உன்னை விட்டுட்டு போக எங்களால முடியாது. அதே சமயம் பவனுக்கு நீ என்றால் உயிர். உன் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று தான் கேட்கிறேன்-டா” என்றார்.

அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ரிஷியின் மனம் உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தது. தன் முன்னேயே உயிராக காதலித்தவளை வேறொருவனுக்கு மணம் முடிக்க பேசப்படுவதை கேட்கும் நிலை மிகக் கொடுமையானது.
 
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!