Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 4 | SudhaRaviNovels

அத்தியாயம் - 4

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் – 4

தன்னறையில் சீற்றம் கொண்ட வேங்கையென அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தவனின் மனம் அடங்க மறுத்தது. கவின்யாவை நன்றாக அறிந்தவன் அவன். இன்று அவளது அலங்காரமும், பேச்சும் நடை, உடை பாவனையும் அவள் இயல்பாக இல்லை என்பதை எடுத்துரைத்தது.

டாம்பீகம் இல்லாத ஆடை, அலட்டல் இல்லாத பேச்சு என்று, என்றும் அமைதியாக இருப்பவளின் அனைத்தும் இன்று மாறி இருக்கிறது. தன் மீது அத்தனை காதலை சுமந்திருந்தவள் நிச்சயமாக இப்படி பேசிவிட மாட்டாள்.

அவள் கண்களில் காதலை விட, தன் மீதான வெறுப்பும், பதவிக்கான ஆசையும் தெரிகின்றது. எந்த புள்ளியில் அவள் மனதில் இதெல்லாம் தோன்றி இருக்கும். தன் மீது அன்பு வைத்திருந்த கவின்யா அப்படிப்பட்டவள் அல்ல. எதற்கும் ஆசைபடாதவள். ரிஷிவர்மனின் காதலை தவிர அவளை எதுவும் அசைத்துப் பார்த்துவிட முடியாது என்று கர்வமாக இருந்தவனை அடித்து சாய்த்து விட்டாள்.

அவளது இன்றைய நடவடிக்கையை எண்ணியபோது கோபம் பொங்கி எழ, அவளை வார்த்தைகளால் காயப்படுத்தி விட வேண்டும் என்று அலைபேசியை எடுத்து அவளது எண்ணிற்கு அழைத்தான்.
தோட்டத்து இருளில் வானத்தை வெறித்தபடி நின்றிருந்தவளின் அலைப்பேசி அடிக்க, மெல்ல எடுத்து பார்த்தவளின் விழிகள் திரையில் தெரிந்த எண்ணை கண்டதும் நிச்சயம் காயப்படுத்த தான் அழைக்கிறான் என்று புரிந்து கொண்டாள்.

சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள் அடித்து ஓயட்டும் என்று தூக்கி தூர போட்டு விட்டாள். அவள் தனது அழைப்பை ஏற்க மறுத்ததும், அவனுள் வெறி ஏற, மீண்டும் மீண்டும் விடாது அழைத்தான்.
அலைபேசியை எடுக்காது விட மாட்டான் என்று புரிந்து போனது. கையில் ஒருவித நடுக்கத்துடன் போனை ஆன் செய்து காதில் வைத்தாள்.

மூச்சுக் காற்றின் வெம்மை அவள் காதை வந்து தாக்க “என்னடி என் போனை எடுக்க கூட கசக்குதோ?” என்று காய்ந்தான்.

அவளோ பதில் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

அது இன்னும் அவனை சீற்றமடைய செய்ய “என் முன்னாடியே ஒரு ஷேர் ஹோல்டரா வந்து உட்காருகிற தைரியம் எப்படி வந்துச்சு? இந்த கம்பனி, சொத்து... இதுக்காகவா என் பின்னாடி சுத்தின?”

“....”

“ என் மனசையே உனக்கு கொடுத்திருந்தேனே. நானே உன் சொந்தமான பிறகு இதெல்லாம் உனக்கு தானேடி வந்திருக்கும். அந்தாள் பேச்சை கேட்டு நடக்கிறேன்னா உன்னை மாதிரி முட்டாளை பார்க்க முடியாது”.

அவன் பேச பேச கண்ணீர் வழிந்தோட உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தாள். எதையும் சொல்லவும் முடியாமல் அவனது கோபத்தை தீர்க்கவும் முடியாமல் நின்றாள்.

“எனக்கு பதில் சொல்லக் கூட உன்னால முடியல இல்ல? அப்படி என்னடி சொத்து மேல ஆசை? நீ கேட்டிருந்தா எல்லாவற்றையும் உன் பேரில் எழுதி வச்சிருந்திருப்பேனே கல்யாணத்துக்குப் பிறகு”.

அந்த வார்த்தையை கேட்டதுமே பதறி போனவள் “ரிஷி! இனியொரு முறை கல்யாணத்தை பற்றி பேசினா நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என்றாள் சத்தமாக.

அதைக் கேட்டதும் கடுப்பாகி போனவன் “வாடி வா! என் கூட கல்யாணம் சொன்னதுமே அவ்வளவு கசக்குதா? உன் மாமா எங்க சொத்தை எல்லாம் அபகரிச்சு உனக்கு கொடுத்து வேற மாப்பிள்ளை பார்க்க போறானா?”

அவன் கூறியதில் சுத்தமாக உடைந்து போனவள் போனுடன் மடங்கி கீழே அமர்ந்து வாயை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“என்ன சத்தத்தையே காணும்? என்னோட ரொமான்ஸ் பண்ணின மாதிரி அவனோட கனவு காண போயிட்டியா?” என்று வார்த்தையால் குத்தி குதற ஆரம்பித்தான்.

அதற்கு மேல் தாள முடியாமல் போனை அணைத்து தூக்கிப் போட்டுவிட்டு வாய்விட்டு அழ ஆரம்பித்தாள். என்ன வார்த்தை எல்லாம் பேசி விட்டான். இந்த வார்த்தையின் அர்த்தங்கள் எல்லாம் உண்மை தெரியும் போது அவனையே குத்துமே அதை அவன் தாங்க மாட்டான் என்று அவனை எண்ணியும் கலங்கினாள்.
இருளில் தெரிந்த சிறிய வெளிச்சத்தில் நிழலாட, தன் எதிரே தெரிந்த உருவத்தைப் பார்த்ததும் கோபம் தலைகேற “ஏன் இப்படி பண்றீங்க? உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இல்லையா? எல்லோரையும் அழ வைத்து ஜடமாக்கின பிறகு என்ன சாதிக்கப் போறீங்க?”

வாக்கிங் ஸ்டிக்கை அழுந்தப் பற்றியபடி நின்றிருந்த வேதநாயகம் உணர்வில்லாத சிரிப்பொன்றை சிரித்து “முப்பது வருடம் முன்பே ஜடமாகி போனவன் தான் நான். என்னை ஜடமாக்கினவங்களை உணர்வுகள் உள்ள மனுஷங்களால நடமாட விடுவது தவறில்லையா?”

“அப்போ பழிக்கு பழி வாங்க போறீங்க? ஆனா இதில் நான் எங்கே வந்தேன்? உங்களுக்கு நான் என்ன செய்தேன்? எதுக்கு எனக்கு இந்த நிலை? என்னை ஏன் கொடுமை படுத்துறீங்க?”

அவளை உற்றுப் பார்த்து “நீயெல்லாம் உன்னுடைய வாழ்க்கையை வாழ்வதற்காக உருவாக்கப்பட்டவள் இல்லை. என்னுடைய கனவுகளை, பகையை நனவாக்க உருவாக்கப்பட்டவள். நான் என்னுடைய முடிவின் படி உருவாக்கிய பொம்மை நீ. நான் சிரின்னு சொன்னா சிரிக்கணும் அழுனு சொன்னா அழனும். அது தான் உன் வேலை” என்று அழுத்தமாக உரைத்துவிட்டு நகர்ந்தார்.

கோபத்தோடு எழுந்து நின்றவள் “முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?”

மெல்ல திரும்பி பார்த்து “சொல்லித்தான் பாரேன்...என்ன நடக்கும்னு உனக்கு நல்லா தெரியும். தைரியம் இருந்தா சொல்லிப் பார்” என்றார் மிரட்டலாக.

அவரின் கண்களில் தெரிந்த செய்தியில் அப்படியே தொய்ந்து போய் கீழே அமர்ந்தாள். அதை திருப்தியாக பார்த்துவிட்டு “இனியொரு முறை தவறா யோசிக்காதே. நான் சொல்வதை நீ செய்யணும். அதை தாண்டி தனியாக யோசிக்க உனக்கு அனுமதி இல்லை” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இதற்கு விடிவே கிடையாதா? தன்னை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என்றெண்ணி மனம் உடைந்து அப்படியே அமர்ந்திருந்தாள். அந்நேரம் அவளது அலைப்பேசி மீண்டும் அழைக்க, அவன் தானோ என்றெண்ணி அதையே வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவோ விடாது அழைக்க, மாமா பேசிய வார்த்தைகளில் நொந்து போய் இருந்தவள் எரிச்சலுடன் ஆன் செய்து “என்ன வேணும் உனக்கு? என்னை அழ வைக்கிறது தான் நோக்கம்னா தினம்-தினம் அழுது கொண்டு தான் இருக்கிறேன். நீ என்னை காயப்படுத்துறேன்னு சொல்லி உன்னையும் காயப்படுத்திக் கொண்டு இருக்க” என்று பொரிந்தாள்.

அந்தப் பக்கமிருந்த பவன் இதை எதிர்பார்க்கவில்லை.

“கவி!” என்றான் அதிர்ச்சியுடன்.

அவனது குரலை கேட்டவுடன் அதிர்ந்து திரையில் தெரிந்த எண்களைப் பார்க்க பவனின் எண்ணை கண்டதும் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை மீண்டும் வர “என்னை ஏன் தனியா விட்டுட்டு போன பவா?” என்று விட்டாள்.

அவளிடம் பேசி அங்கிருக்கும் நிலையை அறிந்து கொள்ள தான் போன் செய்தது. அவளது இந்த கேள்வியில் அனைத்திற்குமான பதில் அவனுக்கு கிடைத்து விட்டது. அவளின் குரலில் தெரிந்த அழுத்தம், போராட இயலாமல் போன மனம் என்று ஒவ்வொன்றும் சொல்லியது அவளின் நிலையை.

நீண்ட நெடிய பெருமூச்சை இழுத்து விட்டு தன்னை சரி செய்து கொண்டவன் “வரேன்! உன்னை கூட்டிட்டுப் போக வரேன் கவி. என்னோட வர தயாரா இரு”.

“ம்ம்ம்...சீக்கிரம் வா பவா. என்னால முடியல. ரிஷி முன்னாடி உடைஞ்சிடுவேனோன்னு பயமா இருக்கு”.

“நான் வரப் போறது அந்தாளுக்கு தெரிய வேண்டாம். நீ எப்போதும் போல இரு. மற்றதெல்லாம் நான் பார்த்துகிறேன்”.

“ம்ம்..”என்று கூறி போனை வைத்துவிட்டு அப்பட்டியே தோட்டத்து தரையில் படுத்து விட்டாள்.

அங்கே பவனுக்கோ அவளது கேள்வியே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. எத்தனை துயரப்பட்டிருந்தால் அந்த வார்த்தையை கேட்டிருப்பாள். இத்தனை வருடத்தில் ஒருநாள் கூட அவர்களுடன் வராததற்கு வருத்தப்பட்டதில்லை. ஆனால் இன்று மனதிலிருந்த வார்த்தை வெளியே வந்து விட்டது. இனியும் தாமதிக்க கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டான்.

அன்னையிடம் சென்றமர்ந்தவன் “மா!” என்று அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“கவி கிட்ட பேசிட்டியா பவா?”

“ம்ம்...எனக்கு ஒன்னு புரியலம்மா? அவ அந்தாளோட சொந்த தங்கை பெண் தானே? அப்புறம் ஏன் அவளை இந்தளவுக்கு டார்சேர் பண்றார்?”

வெற்றுப் பார்வையுடன் அவனை பார்த்தவர் “அவருக்கு பந்த பாசம் எல்லாம் கிடையாது. யார் மீதும் பற்றும் கிடையாது”.

“என் கிட்ட கேட்டுடாம்மா. என்னை ஏன் விட்டுட்டு போனீங்கன்னு கேட்டுட்டா”.

மகனின் கைகளை அழுந்த பற்றிக் கொண்டவர் “அழைச்சிட்டு வந்துடுடா...இங்கே வர முடியலேன்னாலும் நம்ம பாதுகாப்பு அவளுக்கு முக்கியம்”.

“முடிவு பண்ணிட்டேன்-மா. நாளைக்கே நான் கிளம்புறேன்”.

அவனை நிமிர்ந்து பார்த்தவர் “அவள் மனசில ரிஷி இருக்கான்டா” என்றுவிட்டார்.

கண்களை அழுந்த மூடித் திறந்தவன் “ம்ம்...அவளோட உணர்வுகளுக்கு எப்பவும் என்கிட்டே மரியாதை இருக்கும்மா. அவள் விருப்பபடாமல் எதுவும் நடக்காது”.

அவனது தோள்களை தட்டிக் கொடுத்தவர் “நல்லதுடா! ஏற்கனவே காயப்பட்டிருக்கிற மனசை நாம மேலும் புண்படுத்திட கூடாது. நான் இங்கே என்னென்ன செய்யணும்னு சொல்லு ஏற்பாடு செய்து வைத்திடுறேன்”.

“அங்கே போயிட்டு சொல்றேன். ஏன்னா அத்தனை ஈஸியா அவளை அழைச்சிட்டு வந்துட முடியாதுன்னு தோணுது. நிறைய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும்னு தோணுது”.

“ம்ம்...பார்க்கலாம். நான் அங்கே வரணும்னாலும் எனக்கு ஓகே தான்”.

“வேண்டாம்மா! நானே பார்த்துக்கிறேன். நீங்க அங்கே வர வேண்டாம்”.

அருணாவிற்கும் அங்கே செல்வதில் விருப்பமில்லை. வேண்டாத பழைய நினைவுகளை கிளறுவதில் வலிகள் மட்டுமே மிஞ்சும். பவா சென்று அவளை அழைத்து வந்துவிடட்டும் என்று எண்ணிக் கொண்டார்.
அம்மாவிடம் பேசிய பின்னர் அடுத்தநாள் பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்து விட்டான்.

மறுநாள் விடியல் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது. வேதநாயகத்தின் ஆட்டத்தை அடக்க மித்ரா ஒருபுறம் தயாராக, கவியை அவரிடமிருந்து மீட்டு அழைத்துச் செல்ல பவா தயாராக, அந்த நாள் அவர்களுக்கு எல்லாம் வேறொரு செய்தி வைத்திருந்தது.

வழக்கத்தை விட சீக்கிரம் எழுந்து விட்ட தெய்வநாயகி மகனை காண அவன் அறைக்குச் செல்ல, அவன் எங்கோ செல்வதற்கு தயாராகி நின்றான்.

“என்ன ரிஷி? காலையிலையே கிளம்பிட்ட?”

“முக்கியமான மீட்டிங் இருக்கும்மா” என்றானே தவிர அது என்னவென்று கூறவில்லை.

ஒருவித சோர்வுடன் “நீ முன்ன மாதிரி இல்ல ரிஷி. தயவு செய்து எல்லாத்தையும் மறந்திட்டு பழைய ரிஷியா மாறனும்” என்றார் கெஞ்சலாக.

மும்மரமாக கிளம்பிக் கொண்டிருந்தவனின் முகத்தில் ஒரு தீவிரம் இருந்தது. அன்னை சொன்னதை கேட்டவன் ஏளன சிரிப்போடு “எதை மறக்க சொல்றீங்கம்மா? நான் முக்கியமான விஷயமா போறேன். தயவு செய்து இதை இப்போ பேசாதீங்க” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றான்.

வேதனை கலந்த முகத்தோடு விறைப்பாக செல்லும் மகனையே பார்த்தபடி நின்றிருந்தார் தெய்வநாயகி.

அதே நேரம் கவியும் கோவிலுக்கு செல்வதற்காக தயாராகி கீழே வந்தாள். வரவேற்பறையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த வேதநாயகம் அவளை பார்த்ததும் புருவத்தை உயர்த்தி “இந்த நேரத்தில் எங்கே கிளம்பிட்ட?” என்றார் கடினமாக.

சோர்ந்து போன விழிகளோடு “கோவிலுக்குப் போறேன். என் மனசுக்கு ஆறுதலான ஒரே இடம் அது தான். அங்கேயும் போக கூடாதா?”

சற்று நேரம் யோசித்தவர் “ம்ம்ம்...போயிட்டு சீக்கிரம் வந்துடு. நம்ம குணாவை கூட்டிட்டுப் போ” என்றார்.

அவரை ஒரு மாதிரியாக பார்த்து “நான் எங்கேயும் ஓடி போயிட மாட்டேன். குணா காவல் எல்லாம் எனக்கு வேண்டாம். நானே வண்டி எடுத்திட்டு போறேன்” என்றவள் அங்கிருந்து வெளியேறினாள்.

அவளின் பேச்சில் கடுப்பானவர் “உடம்பெல்லாம் திமிர்” என்று முணுமுணுத்து விட்டு மீண்டும் பேப்பரை படிக்க ஆரம்பித்தார்.

கோவிலுக்கு சென்று வழிபட்டால் மனம் சிறிது அமைதிப்படும் என்றெண்ணி அந்தப் பாதையில் சென்றாள்.

அவரவர் பணியில் மூழ்கி அவர்களை மறந்திருக்க, கோவிலுக்கு சென்ற கவி மாலை வரை வீடு திரும்பவே இல்லை.

அந்த நாளின் இறுதியில் கவி கடத்தப்பட்டாள்...கடத்தியது யார்? அவளுக்காக வரும் பவன் இதை எப்படி எதிர்கொள்வான்?