Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 5 | SudhaRaviNovels

அத்தியாயம் - 5

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் – 5

கவி வந்துவிடுவாள் என்று காத்திருந்து அவள் வருவது தாமதம் ஆனதும் சந்தேகப்பட்டு தன் ஆட்களை விட்டு விசாரிக்க சொன்னார். அவள் கிளம்பி வெகு நேரம் ஆயிற்று என்கிற தகவல் வந்ததும் வேதநாயகம் டென்ஷன் ஆகி விட்டார்.

தன்னை விட்டு போக அவள் முடிவு செய்து விட்டாள். எங்கேயோ செல்ல முடிவெடுத்து விட்டாள் என்றெண்ணி ரயில்வே ஸ்டேஷன், மதுரை ஏர்போர்ட் என்று எல்லா இடங்களில் ஆட்களை அனுப்பி வைத்தார். அவளை எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை.

அதன் பிறகே அவருக்கு சந்தேகம் ஏற்படலாயிற்று. அவளாக சென்றாளா இல்லை கடத்தபட்டாளா? என்று. உடனே ரிஷியின் மீது தான் சந்தேகம் எழ, விசாரணை ஆரம்பம் ஆயிற்று. அன்று காலையிலேயே அவன் எங்கோ கிளம்பி சென்று விட்டதை அவனது மாளிகையிலிருந்து வந்த தகவல் உறுதி செய்தது.

அந்த தகவல் கிடைக்கப் பெற்றதும் உடனே கிளம்பி விட்டார். அவரின் ஒரே துருப்பு சீட்டான கவி கையை விட்டுப் போனதில் மிகுந்த ஏமாற்றமும் கோபமும் அடைந்திருந்தார். அவரின் கைகளில் கார் தாறுமாறாக சென்றது. ரிஷியின் மாளிகையின் முன் சென்று நின்று கதவை திறக்கும் படி ஹாரனை அடிக்க ஆரம்பித்தார்.

கேட்டிலிருந்த செக்யுரிட்டி திறக்காமல் உள்ளே இருந்தவர்களுக்கு அழைக்க, இவரோ விடாது அடிக்க ஆரம்பித்தார். தெய்வநாயகிக்கு செய்தி தெரிவிக்கப்பட உடனே திறந்து விடும்படி அனுமது கிடைத்தது.

மிகுந்த வேகத்தோடு வாயிலில் சென்று ‘க்ரீச்’ சென்று சப்தம் எழுப்பியபடி நின்றது. காரின் கதவை படாரெண்டு திறந்து கொண்டு தரை அதிர நடந்தவர் வரவேற்பறையின் நடுவே நின்று “ரிஷி வர்மா!” என்று மாளிகை அதிர கத்தினார்.

நெற்றியில் சுருக்கத்துடன் அவரின் முன்னே வந்து நின்ற தெய்வநாயகி “என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு நடுவீட்டில் நின்று இப்படி கத்துறீங்க?”.

“ரிஷி எங்கே?” என்றார் உறுமலாக.

தெய்வநாயகியும் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “அவன் வேலை விஷயமாக வெளியே போயிருக்கான்” என்றார் அமைதியாக.

கோபத்தை அடக்க பெரும்பாடுபட்டு “என்னோட மோதனும்னா நேரடியாக மோதணும். இப்படி பேடிப் பயல் வேலை செய்யக் கூடாது” என்றார் ஆங்காரமாக.

அதுவரை பொறுமையாக இருந்த தெய்வநாயகிக்கு கோபம் வந்தது. சற்றே நிமிர்ந்து நின்று “உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனைகளை வெளியே பேசணும். இந்த வீட்டில் வந்து நின்று பேசுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை”.

அவரின் பேச்சில் உக்கிரமான வேதநாயகம் “யாருக்கு உரிமையில்லை?” என்றவர் நேராக சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டவர் “உன் பிள்ளை கவின்யாவை கடத்தி இருக்கான். உடனே அவள் வீடு திரும்பியாகணும் இல்லேன்னா நான் போலீசில் புகார் கொடுக்க வேண்டியிருக்கும்” என்றார்.

அவர் நடுவீட்டில் உரிமையாக அமர்ந்து கொண்டதே அதிர்ச்சியாக இருக்க, அடுத்து அவர் சொன்ன வார்த்தைகள் தெய்வநாயகியை அதிர்ச்சி அடைய வைத்தது.

“என்ன சொல்றீங்க?”

“உன் மகனை வர சொல்லு” என்றார் அதிகாரமாக.

அப்போது அங்கே வந்த லோகநாயகி “நீங்க சொல்றதை நம்ப நாங்க ஒன்னும் முட்டாளில்லை. முதல்ல இங்கேருந்து கிளம்புங்க” என்றார் கோபமாக.

அவரை ஏளனமாக பார்த்து “நீ இன்னும் இந்த வீட்டில் அடிமையாகவே இருக்க போல? கவி காணாமல் போய் விட்டாள் என்று சொன்னாலே இந்த கொடைகானலே சொல்லும் ரிஷியைத் தவிர இதை யாரும் செய்திருக்க மாட்டாங்கன்னு” என்று அவர் முடிக்கும் போது உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் ரிஷி.

தன் மாளிகையில் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பவரை பார்த்ததும் ஆத்திரம் எழ, வேக நடையுடன் அவரிடம் வந்தவன் “அவுட்! என்ன தைரியம் இருந்தா இங்கே வரை வந்திருப்ப” என்றான் கடுமையாக.

அவரோ அவனை நன்றாக முறைத்து “கவி எங்கே? எங்கே மறைச்சு வச்சிருக்க?” என்றார்.

அவரின் கேள்வி புரியாமல் ‘என்ன உளறிகிட்டு இருக்க? நீ முதல்ல கிளம்பு” என்றான் கோபமாக.

அதுவரை இருந்த பொறுமை பறந்தோட வேகமாக எழுந்தவர் அவனது சட்டையைப் பற்றி “கவியை எங்கே மறைச்சு வச்சிருக்க? மரியாதையா என்னிடம் ஒப்படைச்சிடு” என்றார் மிரட்டலாக.

கவியை காணவில்லை என்கிற செய்தி அப்போது தான் புத்தியை எட்ட, வேகமாக அவரின் கைகளைத் தள்ளி விட்டவன் “என்ன செஞ்ச அவளை? பொய் சொல்லாதே! உன்னைத் தவிர அவளுக்கு தீங்கிழைக்க வேற யாராலையும் முடியாது” என்று வேதநாயகத்தின் சட்டையை இவன் பற்றி இருந்தான்.

அவனோ அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து “நடிக்கிறியா? மரியாதையா அவளை என்கிட்டே ஒப்படைச்சிடு. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அவள் வரலேன்னா நான் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டி வரும்” என்றார் மிரட்டலாக.

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. கவி காணாமல் போய் விட்டாள் என்பதையே அவனால் நம்ப முடியவில்லை. அவள் மீது கோபம், ஆத்திரம் எல்லாம் இருந்தது. ஆனால் அவள் இல்லை என்று சொன்னபோது அவனால் தாங்க முடியவில்லை. அப்படியே தொய்ந்து போய் சோபாவில் அமர்ந்து விட்டான். எங்கே சென்றிருப்பாள்? இந்த வேதநாயகம் அவளை கொன்று புதைத்து விட்டானா? என்ன நடந்திருக்கும் என்று புரியாது தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவனை ஒருபார்வை பார்த்துவிட்டு தெய்வநாயகியிடம் “ஒரு மணி நேரம் தான் டைம். கவி வந்தாகணும். அவள் வரலேன்னா ஏற்பட போகும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இது எதையுமே அறியாது அன்னையிடம் விடைப் பெற்றுக் கொண்டு விமானம் ஏறி இருந்தான் பவன். அவன் மனதில் பழைய நினைவுகளின் தூறல். அறியாத வயதில் நட்பை மட்டுமே புரிந்து கொண்ட வயதில் கவின்யாவின் மீது உரிமையுணர்வு எழுந்திருந்தது. தன்னுடனே வளர்ந்தவளின் அன்பு வேறொருவனுக்கு பகிரப்படும் போது தன்னை மீறி கோபம் எழுந்தது.

ஏனோ பவனுக்கும், ரிஷிக்கும் அத்தனை நல்லுறவு இருந்ததில்லை. அதற்கு கவின்யா ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது இப்போது. இருவருக்கும் பள்ளியில் தான் அறிமுகமானான் ரிஷி.

அவனிடமிருந்து பவன் ஓரடி தள்ளி நிற்க, கவின்யாவோ சட்டென்று ஒட்டிக் கொண்டாள். அவனும் பவனை கண்டு கொள்ளாது கவின்யாவை நட்பாக ஏற்றுக் கொண்டான்.

அந்த க்ஷணத்திலிருந்து அவர்கள் இருவரிடமிருந்தும் மெல்ல ஒதுங்கிக் கொண்டான். அருணா கூட அடிக்கடி கேட்பார். என்னடா கவி கூட நீயும் போகலையா? என்று. ஏனோ அன்றே அவன் மனதில் ஒரு விஷயம் பதிந்திருந்தது. அது அவனது தந்தை வேதநாயகம் கவிக்கு ஆதரவளித்தார் ரிஷியுடன் பழகுவதில். அதிலும் தான் அவளிடமிருந்து விலகி இருப்பதையும் விரும்புகிரார் என்பதையும் புரிந்து கொண்டான். அதற்கான காரணம் அன்று புரியவில்லை என்றாலும், இன்று நன்றாக புரிகின்றது.

அவர் ஒவ்வொன்றையும் கணக்கு போட்டே காய் நகர்த்தி இருக்கிறார் என்று தோன்றுகிறது. ஏற்காட்டில் படித்துக் கொண்டிருந்த இருவரையும் திடீரென்று கொடைக்கானல் பள்ளியில் சேர்த்து விட்டது, அதிலும் ரிஷியுடனான அறிமுகத்தை அவரே செய்து வைத்தது எல்லாம் கண்முன்னே வந்து போகின்றது.
அவரை பற்றி நினைக்கும் போதே அவனது உடல் அருவெறுத்து போனது. என்ன மாதிரியான மனிதன்...மனைவி, மகன் என்று யார் மீதும் பற்றில்லாமல், மனதிற்குள் எந்த நேரமும் கணக்கு போட்டுக் கொண்டே வாழ்வது. அதற்காக எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று ஈன செயல்களை செய்வது. அவர் தன் தந்தை என்று சொல்வதை அறவே வெறுத்தான்.

பயணம் முழுவதும் கவியிடம் சென்று எப்படி பேசுவது? தந்தைக்கு தெரியாமல் அவளை எப்படி அணுகுவது என்றெல்லாம் யோசித்தபடியே இருந்தான். தன்னை நிச்சயம் வேதநாயகம் எதிர்பார்க்க மாட்டார் என்பதை அறிந்திருந்தான். ரிஷியிடம் கவியைப் பற்றி அவர்களிடையே இருக்கும் பிரச்சனைகளை கூட சரி செய்து விட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

கவின்யா! வெகு நேரம் கழித்து கண் விழித்தாள். இருள் சூழ்ந்த அந்த அறையில் அவளுக்கு எதுவும் புலப்படவில்லை. முதலில் தனக்கு என்ன நடந்திருக்கிறது என்பதையே அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கோவிலில் இருந்து கிளம்பியது நினைவிற்கு வந்தது. வீட்டிற்கு செல்லும் வழியில் யாரோ இருவர் காரை நிறுத்தி லிப்ட் கேட்டது நினைவிற்கு வந்தது. அதன்பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. தான் கடத்தப்பட்டிருக்கிறோம் என்பதை அப்போது தான் உணர்ந்தாள்.

அவள் உடலில் பரபரப்பு ஏறிக் கொண்டது. தன்னை யார் கடத்தி இருப்பார்கள்? எதற்கு? என்கிற கேள்விக்கு பதில் தெரியாமல் அந்த அறையை பதட்டத்துடன் பார்த்தாள். கொடைக்கானலில் தான் இருக்கிறோமா? இல்லை வேறு எங்காவது கொண்டு சென்று விட்டார்களா என்று பயந்து போனாள்.

கைகள் நாற்காலியின் பின்னே கட்டப்பட்டு, வாயையும் துணி கொண்டு கட்டி இருந்தார்கள். அசையவும் முடியாது, சப்தம் எழுப்பவும் முடியாது தவிக்க ஆரம்பித்தாள். அப்போது கதவு திறக்கப்படும் ஒலி கேட்டது. அதை கேட்டதும் அமைதியாக கதவையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

மெல்ல கதவு திறந்தது. உள்ளே நுழைந்தது ஒரு பெண்மணி. கவிக்கு அந்த பெண்ணை யாரென்று தெரியவில்லை. அந்த பெண்ணோ அவள் விழித்திருப்பதை பார்த்துவிட்டு “ஒ...முழிச்சாச்சா?” என்றவள் வெளியே எட்டிப் பார்த்து “அக்கா! சாப்பாடு எடுத்து வாங்க” என்று கூறியவள் கவியின் அருகே வந்து கைகளை அவிழ்த்து விட்டாள்.

அவசரமாக எழுந்து கொண்டு வாயிலிருந்த துணியையும் எடுத்தவள் “ஏய்! யார் நீ? எதுக்கு என்னை கடத்திட்டு வந்தீங்க?” என்று குதிக்க ஆரம்பித்தாள்.

அந்த பெண்ணோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “மேம்! உங்களை நல்லவிதமா பார்த்துக்க சொல்லி தான் எங்களுக்கு உத்திரவு. அதனால எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க. உங்க கேள்விகளுக்கு எங்களிடம் பதில் இல்லை” என்றாள்.

கவியோ அங்கிருந்து எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்கிற எண்ணத்தோடு அவசரமாக அறையை விட்டு வெளியே ஓடினாள். அப்போது எதிரே அவளுக்கு உணவை எடுத்துக் கொண்டு வந்த பெண் மீது மோதி உருண்டு, எழுந்து அவசரமாக வாயிற் கதவை நோக்கிச் சென்றாள்.

கை வைத்ததும் வாசற்கதவும் திறந்து கொள்ள, ஒரே பாய்ச்சலாக பாய இருந்தவளை லேசான உறுமல் சப்தம் தடுத்து நிறுத்தியது. அங்கு உயரம் உயரமாக பத்து பதினைந்து நாய்கள் அவளை முறைத்தபடி எந்நேரமும் பாய தயாராக நின்றிருந்தது.

அவற்றை பார்த்ததும் தன்னையும் அறியாமல் கால்கள் பின்வாங்க, முகம் பயத்தில் வெளிறிப் போக, மெல்ல திரும்பி பின்னே நின்றிருந்த அந்த பெண்ணை பார்த்தாள்.

“மேம்! வந்துடுங்க! அவனுங்க எல்லாம் மோசமானவங்க! இங்கே உங்களுக்கு எந்த கெடுதலும் வராது. சில நாட்களுக்கு மட்டும் இங்கே இருக்கப் போறீங்க. வாங்க” என்றழைத்தாள்.

அங்கிருந்து வெளியேற முடியாமல் போனதில் எமாற்றமடைந்தவள் “ஏன்? உண்மையை சொல்லுங்க? என்னை யார் கடத்தி வச்சிருக்காங்கன்னு உங்களுக்கு தெரியாது?”

அவளை பாவமாக பார்த்து “தெரியாது மேம்! உங்களை கொண்டு வந்து விட்டுட்டு வேண்டியதை செய்ய சொல்லி உத்திரவு வந்தது”.

“யார் கொண்டு வந்து விட்டாங்க” என்றாள் பரபரப்புடன்.

“அது தெரியாது மேம்! நீங்க இங்கே வந்த பிறகு தான் நாங்க வந்தோம்”.

“ப்ளீஸ்! என்னை விட்டுடுங்க! என்னால இங்கே இருக்க முடியாது”.

கவியின் அருகில் வந்து அவளது கைகளைப் பற்றிக் கொண்டவள் “மேம்! உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். இங்கேருந்து அவங்களாக அனுப்பினாலே தவிர வெளியே போக முடியாது. அமைதியா இருங்க. எல்லாவற்றிற்கும் முடிவு வரும்” என்றாள் ஆறுதலாக.

கோபமும், ஏமாற்றமுமாக அங்கிருந்த சோபாவில் சென்றமர்ந்து கொண்டாள். அந்நேரம் ஏனோ மனம் ரிஷியை நினைத்துக் கொண்டது. அவனுக்கு தெரிந்திருக்குமோ? தெரிந்திருந்தால் நிச்சயம் தவித்து போயிருப்பான். எப்பாடுபட்டாவது தன்னை காப்பாற்றி விடுவான் என்கிற மெல்லிய நம்பிக்கை மனதில் இழையோடியது.

வேதநாயகத்திடம் இருந்து தப்பித்து விட்டோம் என்கிற நினைவு மனதோரம் லேசான நிம்மதியை கொடுத்தது. அதே சமயம் தன்னை கடத்தும் அளவிற்கு யாருக்கு தன் மேல் வன்மம் இருக்கிறது என்று தெரியாமல் பலவித யோசனைகளில் மூழ்கி இருந்தாள்.

அதே நேரம் செங்கமலத்துக்கு கவின்யா கடத்தப்பட்ட செய்தி சொல்லப்பட்டது. அது தெரிந்ததுமே டென்ஷன் ஆனவர் உடனே மித்ராவை அழைத்தார்.

வேலையில் இருந்தவள் “சொல்லுங்க பாட்டி”.

“நிலைமை கை மீறி போயிடுச்சு மித்ரா. ரிஷி ஆட ஆரம்பிச்சிட்டான்”.

“என்ன சொல்றீங்க?”

“கவின்யாவை ரிஷி கடத்திட்டான்”.

“வாட்! கவின்யாவை கடத்திட்டாங்களா?” இதழில் எழுந்த சிரிப்புடன்.

“ஆமாம்...ரிஷி தான் செய்திருக்கணும்”.

“உங்களுக்கு யார் சொன்னா ரிஷி தான்னு”.

“அவனைத் தவிர அவளை கடத்த வேற யார் முயற்சி செய்வாங்க?”

“பாட்டி! எதையுமே நீங்களா முடிவு செய்யாதீங்க. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க”.

“நாம எப்ப போக போறோம் மித்து?”

“நெக்ஸ்ட் வீக் ரெஜிஸ்ட்ரேஷன் இருக்கு பட் நாம இன்னைக்கு சாயங்காலம் கிளம்புறோம்”.

“என்ன!”

“பாட்டி! எப்போ இந்த மேட்டர் பற்றி என்கிட்டே சொன்னீங்களோ அப்போவே நான் எல்லாவற்றையும் பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன். எனக்கு காலையிலேயே நியுஸ் வந்தாச்சு கவி விவகாரம்.

அதுமட்டுமில்ல ரிஷியோட வேலை இது இல்லைன்னு என்னால அடிச்சு சொல்ல முடியும்”.

“அப்புறம் அவளை யார் கடத்த போறா? வேதநாயகத்து கிட்ட இருந்து அவளை காப்பாற்றின மாதிரியும் ஆச்சு தன்னோட பாதுக்காப்பில் கொண்டு வந்த மாதிரியும் ஆச்சு”.

மெல்லிய சிரிப்பு இழையோட “ம்ம்...பார்ப்போம் பாட்டி. அது என்னோட யுகம். ஆனா இனிமேயும் இங்கே உட்கார்ந்திருந்தா இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. சோ நீங்க எனக்கு ஒரு வேலை பண்ணுங்க. நாம வரப் போவதை தெய்வநாயகி அத்தைக்கு சொல்லிடுங்க”.

அவள் சொன்னதில் அதிர்ந்து “அவளுக்கு எதுக்கு சொல்லணும்?” என்றார்.

“நாம அவங்க வீட்டில் தான் தங்கப் போகிறோம் பாட்டி”.

“என்ன! எதுக்கு அங்கே தங்கணும்?”

“தொலைத்த பொருளை தொலைத்த இடத்தில் தானே பாட்டி தேடனும். வேதநாயகம், கவி, ரிஷி இவங்களை சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு ஆதாரம் அந்த மாளிகை. அங்கே இருந்து தான் நாம எல்லாவற்றையும் கண்டுபிடிக்கணும்”.

“எனகென்னவோ இது சரி வரும்னு தோணல. உங்கப்பனும் இதுக்கு ஒத்துக்க மாட்டான்”.

“இல்ல பாட்டி! நான் முடிவு பண்ணிட்டேன். நீங்க அத்தை கிட்ட நாம வரப் போவதை சொல்லிடுங்க. இந்த செய்தி வேதநாயகத்துக்கு போய் சேரனும்” என்றாள் அழுத்தமாக.

“அவனுக்கா!” என்றவர் சற்று நேர அமைதிக்குப் பின் “நீ முடிவு பண்ணிட்ட...ம்ம்..சரி நானும் ரெடி அந்த வேதநாயகத்தை ஒரு கை பார்த்திடுவோம்”.

“தட்ஸ் இட் பாட்டி! எனக்கு வேண்டியதையும் நீங்களே எடுத்து வச்சிடுங்க. மாலை நான்கு மணிக்கு பிளைட்”.

அதன்பின்னர் இருவரும் தங்களுக்கு தேவையானவற்றை பேசி முடித்துவிட்டு வைத்துவிட, செங்கமலம் பேத்திக்கும் தனக்குமான தேவைகள் அனைத்தையும் எடுத்து வைத்தவர். தனது அலமாரியைத் திறந்து உள்ளே இருந்த லாக்கரிலிருந்து முக்கியமானதொரு ஆல்பம் மற்றும் பத்திரங்கள் சிலவற்றையும் எடுத்து உள்ளே வைத்தார்.

உள்ளே வைக்கும் முன் அந்த ஆல்பத்திலிருந்த புகைப்படங்கள் மீது விழ, அதை எடுத்துப் பார்த்தவரின் விழிகளில் கண்ணீர். எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அனைத்தையும் நடத்தி அனைவரின் வாழ்விலும் புயலை கொண்டு வந்து விட்டான் என்று வருந்தினார்.

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்து விடும்

மாறுவதை புரிந்து கொண்டால் பயணம் முடிந்து விடும்
 
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!