Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 7 | SudhaRaviNovels

அத்தியாயம் - 7

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் – 7

கொடைக்கானலின் ஹோட்டல் அறையிலிருந்தவனின் முகம் கோபத்தையும், குழப்பத்தையும் ஒன்றாக சுமந்திருந்தது. கவின்யாவை வேதநாயகதிடமிருந்து விடுவித்து அழைத்துச் சென்று விட வேண்டும் என்று வந்தவனுக்கு அவள் கடத்தப்பட்டிருகிறாள் என்கிற செய்தி இடியாக இறங்கியது.

கடத்தியது யார்? ரிஷியா? இல்லை வேறு யாருமா? என்று பதில் தெரியாமல் எந்த புள்ளியிலிருந்து தனது தேடலை ஆரம்பிப்பது என்று புரியாமல் அமர்ந்திருந்தான். அந்நேரம் அருணாவிடமிருந்து அழைப்பு வர, அலைப்பேசியை எடுத்து காதில் வைத்தவன் “வந்து இறங்கியாச்சும்மா” என்றான்.

அவரோ அவனை யோசிக்க விடாமல் “நடந்ததை கேள்விபட்டிருப்பேன்னு நினைக்கிறேன். நாம யோசிக்கும் முன்னே இது நடந்து போச்சு”.

கவலையுடன் கூடிய குரலில் “என்னால ரிஷியை சந்தேகப்பட முடியலம்மா. அப்போ வேற யார் செய்திருப்பா?”

“உன்னோட குழப்பங்கள், பதட்டம் எல்லாவற்றையும் ஒதுக்கி வச்சிட்டு யோசிச்சா விடை கிடைக்கும். உன் முன்னாடியே தான் இருக்கு உனக்கான பதில் நல்லா யோசி” என்று கூறி போனை வைத்து விட்டார்.

போனை தூக்கி படுக்கையில் போட்டுவிட்டு ஜன்னலின் ஓரம் சென்று நின்றவனின் மனம் கவின்யாவை சுற்றியே வந்தது. பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காணாமல் போயிருக்கிறாள். அவளை அக்கறையாக தேடக் கூட இங்கே ஆட்கள் இல்லை. காதலித்தவனுக்கு கூட அவள் மேல் அன்பில்லாமல் போய் விட்டதா என்றெண்ணி குமைந்து போனான்.

தெரியாத ஊரில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரியாமல் குழம்பிப் போய் நின்றான். அந்நேரம் அவனது அலைப்பேசிக்கு மெசேஜ் வந்ததற்கான சப்தம் வர, வேகமாக சென்று அதை எடுத்துப் பார்த்தான்.

அருணாவிடமிருந்து தான் வந்திருந்தது. ரிஷியின் எண்ணை அனுப்பி வைத்திருந்தார்.

அதை கண்டதும் சற்றே தெளிவு பிறக்க, உடனடியாக அந்த எண்ணுக்கு அழைத்தான். புதிய எண்ணிலிருந்து அழைப்பு வரவும், அதை எடுக்காமல் யோசனையுடன் நின்றிருந்தான் ரிஷி. அலைப்பேசியோ விடாது அடிக்க யோசனையுடன் ஆன் செய்து காதில் வைத்தான்.

“ஹாய் ரிஷி! நான் பவன் பேசுகிறேன்”.

அந்த பெயரை அறியாதவன் “யார் நீங்க?” என்றான் சந்தேகத்துடன்.

தன்னை அவனுக்கு தெரியாது என்பதில் அதிர்ந்து பின் சமாளித்துக் கொண்டவன் “கவின்யா விஷயமா உங்களை பார்த்து பேசணும்” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டான்.

தன்னவளின் பெயரை கேட்டதுமே பதறி போனவன் “நீங்க யார்? கவியைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினான்.

“எனக்கு உங்களை நேரில் பார்க்கணும். இப்போ என்னால உங்க கேள்விகள் எதற்கும் பதிலளிக்க முடியாது. நாம எங்கே சந்திக்கலாம்?”

சற்று யோசித்து “என் ஆபிசுக்கு வந்துடுங்க...அட்ரெஸ் தெரியுமா?”

“எனக்கு உங்களைப் பற்றி எல்லாம் தெரியும். அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன் ” என்றான் ஆழ்ந்த குரலில்.

அவன் குரலில் என்ன இருந்தது என்று உணரும் முன்பே போனை வைத்துவிட்டான். ரிஷியின் மனமோ யார் இவன் என்னைப் பற்றி தெரியும் என்கிறான் என்று யோசித்தவன், யாராக இருந்தால் என்ன கவின்யா கிடைத்தால் போதும் என்கிற முடிவிற்கு வந்து அவசரமாக கிளம்பி கீழே இறங்கி வந்தான்.
மித்ராவும், பாட்டியும் அவரவர் அறைகளில் இருக்க, தெய்வநாயகியும், லோகாவும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“அத்தை கிட்ட கொஞ்சம் பணிவா நடந்துக்க கூடாதா லோகா?”

அவரை முறைத்த லோகா “நான் என்ன பண்ணினேன் அக்கா. அவங்க தான் தேவையில்லாமல் என்னை வம்பிழுத்தாங்க. அதோட அவங்க பேத்தி நான் என்னவோ ஒட்டு கேட்கிற மாதிரி என் அறைக் கதவு கிட்ட வந்து செக் பண்றா” என்றார் கோபமாக.

அவர் சொன்னதில் சங்கடப்பட்டுப் போனவர் “அவ செய்தது தப்பு தான் லோகா. சின்ன பொண்ணு தெரியாம செஞ்சிட்டா விட்டுடு. அவங்க இருக்கிற வரை நீ ஒதுங்கியே இரு” என்றார் ஆறுதலாக.

“நான் அமைதியா தான் இருக்கேன் அக்கா. இன்னொரு முறை என்கிட்டே வம்பு பண்ணினா விட மாட்டேன்”.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டு வந்தவன் “மா! எனக்கு ஆபிசில் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துடுறேன்” என்றான்.

“என்னப்பா இந்த நேரத்திலையா?”

“கிளையன்ட் ஒருத்தர் வராரும்மா”.

“சரிப்பா...இப்போ நீ எதை செய்தாலும் எல்லோருடைய பார்வையும் உன்னை தான் சந்தேகமா பார்க்கும். அதனால கவனமா இரு”.

“இவன் செய்யுறதை பார்த்தா எனக்கே சந்தேகமா தான் இருக்குக்கா...கவின்யாவை இவன் தான் கடத்தி வச்சிருக்கானோ என்னவோ?” – லோகா.

“சித்தி!”

“லோகா!”

முகத்தை தோளில் இடித்துக் கொண்டு “என்கிட்டே வந்து கத்துங்க. நானும் அவ காணாமல் போன அன்னையிலிருந்து பார்த்துக் கொண்டு தானே இருக்கேன். அன்னைக்கும் இவன் சீக்கிரம் போனான். இப்பவும் அவசரமாக யாரையோ பார்க்க போறேன்னு போறான். அதுவும் அவளை மறக்க முடியாம இவன் தவிக்கிறதை பார்த்தா நீங்க பேசாம உண்மையை சொல்லிடலாம் அக்கா” என்று தெய்வாவிடம் முடித்தார்.

பல்லைக் கடித்துக் கொண்டு நின்ற ரிஷி அவர் கடைசியாக சொன்னதை கேட்டு “என்ன உண்மை?” என்றான்.

தெய்வநாயகி லோகாவை முறைத்து விட்டு “அவ ஏதாவது லூசு மாதிரி பேசிட்டு இருப்பா. உனக்கு நேரமாகலையா நீ கிளம்பு” என்று அவனை பிடித்து தள்ளிவிடாத குறையாக கிளம்பச் சொன்னார்.

அவர் சொன்னதும் பவன் வந்திருப்பானே என்கிற எண்ணத்துடன் லோகானாயகி சொன்னதை மறந்து வேகமாக அங்கிருந்து சென்றான். நடந்தவற்றை எல்லாம் மாடியிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த மித்ராவிற்கு தவறு ரிஷி மேல் இல்லை என்று நன்றாக புரிந்தது. இந்த வீட்டில் நிறைய மர்மங்கள் புதைந்திருக்கின்றது என்பதும் புரிந்து போனது. அதிலும் லோகநாயகிக்கும் அந்த மர்மங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கின்றது என்று தெளிவாக தெரிந்தது.

மெல்ல மாடியிலிருந்து அவள் இறங்கி வர, தங்களுக்குள் மெல்லிய குரலில் வழக்கடித்துக் கொண்டிருந்தவர்கள் அவளைக் கண்டதும் அமைதியாகி விட “அத்த! நான் தோட்டத்து பக்கம் போய் பார்க்கலாமா?” என்றாள்.

அவளைக் கண்டதும் வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்ட லோகா வேகமாக அங்கிருந்து வேறொரு அறைக்குள் சென்று நுழைந்து கொண்டார்.

“கேட்கனுமாடா? தாராளமா போகலாம். வா நானும் உன்னோட வரேன்” என்று அவளுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தார் தெய்வநாயகி.

அது தோட்டமல்ல! மிகப் பெரிய காடு! அத்தனை மரங்களும், பலவேறு விதமான மூலிகை செடிகளும், கொடிகளும் பராமரிக்கப்பட்டு எழில் கொஞ்சும் இடமாக இருந்தது.

“வாவ்! அத்தை! இந்த இடமே மனசுக்கு பெரிய நிம்மதியை கொடுக்கும். எத்தனை அழகாக இருக்கு”.
“ஆமாம்-டா! இங்கே வந்து உட்கார்ந்தால் நம்மோட கவலைகள் எல்லாம் மறந்தே போயிடும்” என்றார் சிரிப்புடன்.

அந்த தோட்டத்தின் அழகை ரசிப்பதை தவிர மித்ராவின் கண்கள் அந்த சூழலை ஆராய்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொன்றின் மீதும் கண்கள் அளவிற்கு அதிகமாக பதிந்து மீண்டது. மனமோ இந்த சூழலே இதற்கு பின் நிறைய உண்மைகளை மறைத்து வைத்திருக்கும் என்று தோன்றுகிறது என்றெண்ணிக் கொண்டாள்.

தனது ஆபிஸ் அறையில் நுழைந்த ரிஷி பவனின் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தான். அவனால் துளியும் பவன் யார் என்று கணிக்க முடியவில்லை. ஆனால் அவன் மூலமாக கவி பற்றிய செய்தி ஏதாவது கிடைத்தால் நல்லது என்று நினைத்தான். அப்போது அவனது அலைப்பேசி அழைக்க, அவனை சந்திக்க ஒருவர் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட, அனுமதி அழைத்துவிட்டு காத்திருந்தான்.

சற்று நேரத்தில் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவனைப் பார்த்ததும் சிறுவயதில் பார்த்த ஞாபகம் என்று தோன்றியது.

“பவன்” என்று கூறி கைகளை நீட்டியவனிடம் கை கொடுத்து அமர சொன்னான்.

சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் ஆராயும் பார்வை பார்த்தபடியே அமர்ந்திருந்தனர்.

“சொல்லுங்க கவியைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”

சாய்வு நாற்காலியில் நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்ட பவன் “கவியை யாரோ கடத்தி இருக்காங்க. அந்தப் பழி உங்க மேல இருக்குன்னு தெரியும்” என்றான்.

அவனை கூர்ந்து பார்த்து “சோ இதை தவிர உங்களுக்கு எதுவும் தெரியாது. அதோட கவின்யான்னு சொல்லுங்க. டோன்ட் கால் கவி. அவளுக்கு உரிமையானவங்க மட்டும் கூப்பிடுகின்றது போல் வெளியாட்களுக்கு உரிமை இல்லை ” என்றான் அழுத்தமாக.

“எல்லோரையும் விட அதிகம் உரிமையுள்ளவன் நான் மிஸ்டர். ரிஷி. அதை விடுங்க...மற்றவங்களைப் போல எனக்கு உங்க மேல துளி சந்தேகமில்லை. ஆனால் கவி விஷயத்தில் நீங்க அமைதியாக இருப்பது போல தோன்றுகிறது. மனதிற்கு பிடித்த பெண் காணாமல் போயிருக்கிறாள். ஆனால் நீங்கள் அமைதியாக எதையுமே செய்யாமல் இருப்பது தான் எனக்கு சந்தேகத்தை வரவழைக்கிறது”.

சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவன் “நான் ஒரு பிசினெஸ்மேன் மிஸ்டர் பவன். நீங்க இங்கே வருவதற்குள்ள உங்க ஜாதகம் மொத்தமும் என் கைக்குள்ள. சோ உங்க உரிமையோட அளவுகள் எல்லாம் எனக்கு நன்றாக தெரியும். நீங்க கேட்ட கேள்வியையே நானும் திருப்பி கேட்கிறேன். இத்தனை வருடங்களாக தோன்றாத ஒரு உரிமையுணர்வு திடீர்னு எப்படி? அவளை வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போன நீங்க எதுக்கு இப்போ அவளை தேடி வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”

தானும் எழுந்து கொண்டு “நம்ம இருவருக்குமான உறவு முறை என்ன என்பது பிரச்சனையில்ல. பழையவற்றை பேசியும் உபயோகமில்லை ரிஷி. இப்போ நாம சிந்திக்க வேண்டியது கவியை பற்றி மட்டுமே”.

அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்து தானும் ஒரு முடிவிற்கு வந்தவன் “எனக்கு தெரிந்த வகையில் எல்லாம் முயற்சி செய்து பார்த்துட்டேன் பவன். ஒரு சின்ன க்ளு கூட கிடைக்கல. ஆனாலும் என் ஆட்கள் தேடிகிட்டு தான் இருக்காங்க”.

சிந்தனையுடன் நின்ற பவன் “அந்தாளை ட்ராக் பண்ண சொல்லி இருக்கியா?”

அதிர்வுடன் நிமிர்ந்து பார்த்துவிட்டு “ஆள் போட்டிருக்கிறேன். ஆனா சந்தேகப்படுகிற மாதிரி எதுவும் நடக்கல”.

“ம்ம்...எனக்கு சில டீடைல்ஸ் தேவைப்படுது. அதை கொடு மற்றதை நான் பார்த்துக்கிறேன்” என்று தனக்கு தேவைப்பட்டதை அவனிடம் கேட்டறிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

ரிஷியின் அலுவலகத்திலிருந்து காரில் ஏறியதும், அவனது காரை ஒரு கார் பின்தொடர் ஆரம்பித்தது.

முதலில் அதை கவனிக்காத பவன், ரிஷியிடம் வாங்கிய தகவல்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

யதேச்சையாக நிமிர்ந்தவனின் பார்வையில் தங்களை ஒரு கார் தொடருவது தெரிந்தது.

மெல்லிய புன்னகை இதழில் வந்தமர, அலைப்பேசியை எடுத்து வேதநாயகத்தை அழைத்தான்.
ஒரே ரிங்கில் போன் எடுக்கப்பட “பரவாயில்லையே படுவேகமா தான் வேலை செய்றீங்க?” என்றான் கிண்டலாக.

“டேய்! நீ எதுக்கு இங்கே வந்திருக்க? ரிஷி ஆபிசில் உனக்கென்ன வேலை?” என்றார் அதட்டலாக.

“சோ நான் வந்து இறங்கியதிலிருந்து என்னை கண்காணிக்க ஆள் ஏற்பாடு செஞ்சிருக்கீங்க?’

“எதுக்கு வந்திருக்க? உனக்கு இங்கே என்ன வேலை? எதுவும் வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போனீங்க இப்போ எதுக்கு உங்கம்மா உன்னை அனுப்பி வச்சிருக்கா?”

அன்னையின் பேச்சை எடுத்தும் “மரியாதை இல்லாம பேசக் கூடாதுன்னு பார்க்கிறேன். யாரை கேட்டு நான் இங்கே வரணும்? தேவையில்லாம என் பெர்சனலில் தலையிடாதீங்க. என் கிட்ட எட்டியே நில்லுங்க. என் உடம்பிலும் வில்லனோட ரத்தம் ஓடுது. ஒரு நேரம் போல இருக்க மாட்டேன்” என்று மிரட்டிவிட்டு போனை வைத்தான்.

அதன்பின் சிறிது தூரம் வரை அவர்களை பின்தொடர்ந்த கார் காணாமல் போனது. தனக்குள் சிரித்துக் கொண்ட பவன் தனது நண்பர்களின் உதவியை நாடினான். கவி காணாமல் போன அன்று நடந்தவைகளை ஆராய்ந்து கொடைக்கானலில் இருக்கும் பழைய நண்பர்கள் மூலியமாக அங்கிருக்கும் பகுதிகளில் தேடுதல் வேட்டையை தொடங்க முடிவெடுத்தான்.

தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்துவிட, அங்கும் அவனை இருவர் கண்காணிப்பது போல தோன்றியது. அவர் திருந்த மாட்டார் என்று மனதினுள் வசைப்பாடிக் கொண்டே தனதறைக்குள் நுழைந்து கொண்டான்.

அதே நேரம் ரிஷி வர்மனுக்கு அவன் கேட்ட இடத்திலருந்து முக்கியமான தகவல் ஒன்று கிடைத்தது. அதாவது கவின்யாவை கடத்தியவர்கள் அவளுக்கு தெரிந்தவர்கள் தான் என்று அந்தப் பக்கம் சென்றவர்கள் மூலியமாக உறுதியானது. வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவளை வழிமறித்து பேசி, அவளது காரில் ஏறி சென்றவர்கள் அவளை வலுகட்டாயமாக கடத்தவில்லை.

தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் இருவர் அவள் காரில் அமர்ந்தபடி யாரோ இருவரிடமும் நன்றாக பேசி கொண்டிருந்ததாகவும், பின்னர் அவர்கள் இருவரும் அவளது காரில் ஏறிக் கொள்ள அங்கிருந்து சென்றதாக கூறி இருந்தனர்.

தனக்கு வந்த தகவல்களும், கார் சென்ற திசையும் அறிந்தவன் அவசரமாக தனது காரை எடுத்துக் கொண்டு அந்த திசையில் பயணித்தான். அதுவொரு மேடு பள்ளங்கள் நிறைந்த நீண்ட நெடிய சாலை. கண்ணுக்கு எட்டியவரை எதுவும் புலப்படவில்லை. அவன் சென்ற நேரம் அந்தி மயங்கும் வேளை ஆதலால் எங்கும் இருள் மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருந்தது.

அந்தப் பாதை போய் கொண்டே இருந்தது. வழியில் எதுவுமே இல்லை. காட்டு மிருகங்கள் கூட வழியில் தென்படலாம் என்றெண்ணியவன் காரின் டேஷ் போர்டை திறந்து துப்பாக்கி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான். அவனது மனமோ தனது வாழ்க்கையின் முக்கியமான ஏதோவொன்றை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியது.

சுமார் அரை மணி நேர பயணத்திற்கு பின் அந்த கரடுமுரடான பாதை சமமமாக்கப்பட்டு ஒத்தையடி பாதை போல நேராக ஓடியது. ரிஷியின் மனம் கவி அங்கே எங்கோ தான் இருக்கிறாள் என்று அடித்துச் சொல்லியது. இதயத்தின் ஓசை அவனது காதுகளை அடைக்கச் செய்தது. அந்தப் பாதையின் முடிவில் சுற்றிலும் வேலிப் படல்கள் சூழப்பட்டதொரு ஒரு வீடு தென்பட்டது.

வீடு என்பதை விட சிறிய பங்களா என்றே சொல்லலாம். தூரத்திலிருந்து பார்க்கும் போது மஞ்சள் நிற விளக்கொன்று மினுக்கு மினுக்கென்று அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது. சுற்று வட்டாரத்தில் எங்கும் நடமாட்டமே இல்லை. மனித சஞ்சாரமே இல்லாத இடத்தில் யார் இந்த வீட்டை கட்டி இருப்பார்கள் என்கிற யோசனையுடன் காரை விட்டு இறங்கினான்.

கையில் துப்பாக்கியுடன் இறங்கியவனின் பார்வை அந்த வீட்டின் மீது விழுந்தது. புதிதாய் கட்டிய வீடல்ல அது. முப்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்றே தோன்றியது. எந்த பராமரிப்பு இன்றி இருந்தது. யோசனையுடன் துப்பாக்கியை தூக்கிப் பிடித்தவாறு மெல்ல அடியெடுத்து வாசல் கதவருகே சென்றான்.

பராமரிக்கப்படாத கதவு உளுத்து போயிருந்தது. சுற்றிலும் காடாக இருந்ததால் கோட்டான்களின் குரலும், ஏதோ பறவைகளின் குரலும் பயமுறுத்தியது. மெல்ல கதவின் மீது கை வைக்கும் நேரம் பெருச்சாளி ஒன்று அவன் கால் மீதேறி ஓட, அதில் பயந்து குதித்தவனின் கரங்கள் அருகே சுவற்றில் பதித்திருந்த கல்லின் மீது அழுந்தியது.

அந்தக் கல்லில் ஏதோ எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. இருளில் அது என்னவென பார்க்க முடியாமல் அலைப்பேசியை எடுத்து பார்க்க, அது எப்போதோ உயிரை விட்டிருந்தது.

ஏனோ அந்த கல்லில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவாக எழுந்தது. அதற்கு வழி இல்லை என்று தெரிந்ததும் மெல்ல கதவின் மீது கை வைக்க, அது கிர்ரென்ற சப்தத்துடன் திறந்து கொண்டது.

மிகப் பெரிய அந்த ஹாலில் சின்னஞ்சிறிய லாந்தர் விளக்கொன்று எரிந்து கொண்டிருந்தது. கண்கள் அந்த வெளிச்சத்திற்கு பழக சற்று நேரம் எடுத்தது. அப்போது தன்னை யாரோ உற்று நோக்குவது போல தோன்ற, அங்குமிங்கும் ஆராய்ந்தான். எந்த சப்தமுமின்றி காற்றின் ஓசை மட்டுமே நிறைந்திருந்தது.
மிகவும் உஷாராக ஒவ்வொரு அடியாக முன்னே வைத்து முன்னேறினான். அந்த அறை முழுவதும் எந்த படங்களோ, வரைபடமோ எதுவவுமில்லாமல் இருந்தது. ஆனால் ஒரு கலாரசிகனால் உருவாக்கப்பட்ட இடம் என்பதை சொல்லாமால் சொல்லியது.

கீழே இருந்த அறைகளில் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து யாரும், எதுவும் தென்படாமல் சோர்ந்து போனவன் மாடிப்படிகளின் முன் வந்து நின்றான்.

அவனது மனம் கவி எங்காவது இருந்துவிட மாட்டாளா? என்று ஏங்கியது. அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையையும் கண்கள் துழாவியது. எதுவுமே தென்படாமல் மனமும் உடலும் சோர்ந்து போனது.
அந்நேரம் மாடியில் யாரோ தன்னைப் பார்த்துவிட்டு ஓடியது போல தோன்றியது. அப்போது

பெண்ணாக பிறந்தவர்க்கு கண்ணுறக்கம்
இரண்டு முறை பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் மறு தூக்கம் இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கமில்லை என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்மணியே!

என்று மெல்லிய குரலில் பாடல் சப்தம் கேட்க, யோசனையுடன் மெல்ல சப்தம் எழுப்பாமல் படியில் ஏறியவனின் பார்வை சுற்றுப்புறத்தை ஆராய அங்கு எவருமில்லை. அங்கிருந்த அறை ஒன்றிலிருந்து தான் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

துப்பாக்கியுடன் கதவருகே சென்று மெதுவாக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் நேரம், பாடல் சப்தம் நிறுத்தப்பட்டு, உள்ளிருந்த பொருட்கள் எதுவோ உருண்டு ஓடிய சப்தம் கேட்டது.

அவசரமாக உள்ளே நுழைந்தவந்து பார்வையில் எவரும் சிக்கவில்லை. பாடலும் கேட்கவில்லை. நிச்சயம் அந்த அறையில் எவரோ இருந்திருக்கின்றனர் என்று மட்டும் தெரிந்தது. அப்போது அவனது காலை இடறியது எதுவோ. குனிந்து எடுத்துப் பார்த்தவனின் கைகளில் ஒரு குழந்தை பொம்மை.

அந்நேரம் எங்கோ யாரோ “என் குழந்தை! என் குழந்தை” என்று கதறும் சப்தம் கேட்டதும். அதை கேட்டதும் அங்குமிங்கும் ஓடியவனால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த பொம்மையை எடுத்துக் கொண்டு கீழே வந்தான். கவி அங்கிருப்பாள் என்று நம்பிக் கொண்டு வந்தவனுக்கு மிகப் பெரிய ஏமாற்றம். சோர்வுடன் நடந்தவன் கதவை நெருங்கும் நேரம் அந்த விளக்கு தென்பட, அதை எடுத்துக் கொண்டு வந்தவன் சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த கல்லின் மீது வெளிச்சத்தை பாய்ச்சினான்.

“நீலோற்பலம்” என்று பொறிக்கப்பட்டு அதைச் சுற்றி நீல அல்லி மலர்கள் வரையப்பட்டிருந்தது.