
அவனொரு அசடன் – சுதா ரவி
கடற்கரையில் அமர்ந்திருந்தவனின் மனம் அலைகளோடு முன்னும் பின்னுமாக அலைபாய்ந்து கொண்டிருந்தது. விழிகள் தான் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்ததே தவிர மனம் எதையெதையோ யோசித்துக் கொண்டிருந்தது.
இந்த உலகத்தைப் பொறுத்தவரை அவனுக்கு எதுவும் தெரியாது. சுற்றம், நட்பு வட்டம் என்று எல்லோரும் அவனை ஏதுமறியாதவன் என்றே சொல்வார்கள். அவனது விழிகள் நடப்பவற்றை அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றது. காதுகள் சிறு ஒலியை கூட உற்று கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது. வாய் மட்டும் தான் ஊமையாகவே கிடக்கின்றது.
தன் மனவோட்டங்களை பேசாதவன் அசடனாக அனைவருக்கும் தெரின்கின்றான். அவன் இவ்வுலகத்தை ரசிக்க வந்தவன். அவனால் எல்லோரைப் போல வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது. கடவுளின் ஒவ்வொரு படைப்பையும் ரசிப்பவன் அவன்.
தினமும் காலை எழுந்து கடனே என்று உணவை உண்டு வேலைக்குச் சென்று சம்பாதித்து உடன் உள்ளவர்களுக்காக நான்கு வார்த்தைகள் பேசி மற்றவர்களுக்காக அவனால் வாழ முடியாது. எழும் போதே காலை காற்றை அனுபவிக்கும் மனதுடன் எழுந்து, பறவைகளின் ஒலியை ரசித்து, ஆதவனின் வருகையை, அவனது இளம் சூட்டை உள்வாங்கி நாளை தொடங்கிட வேண்டும் என்று நினைப்பான்.
அவனது செயல்களைக் கண்டு தினமும் நிந்திப்பாள் அன்னை.
“இப்படியே தூங்குமூஞ்சி மாதிரி இருந்தா எப்படி கணேசு? எந்நேரமும் எதையும் செய்யாம இருந்தா யார் கஞ்சி ஊத்துவா சொல்லு?”
அன்னையை திரும்பிப் பார்த்துவிட்டு பதிலேதும் சொல்லாமல் வெளியில் கிளம்பி விடுவான்.
கால் போன போக்கில் நடந்து கொண்டே இருப்பான். பசி தாகம் கூட அறியாது சுற்றுப்புறத்தை கவனித்துக் கொண்டே செல்வான். தாகத்திற்கு ஏதாவது ஒரு சிறு கடையில் தண்ணீரை வாங்கி பருகிவிட்டு மேலும் நடப்பான். எதுவரை போகிறான் என்று அவனுக்கு தெரியாது. பயணம் எதை நோக்கி என்றும் தெரியாது.
தனது வாழ்க்கையில் எல்லைகளே இருக்க கூடாது என்று எண்ணுவான். தினமும் இப்படியே நடந்து செல்வதும் இரவு மட்டும் வீட்டிற்கு வருவதுமாக இருந்தவனை வீடே எதிர்த்தது.
அண்ணன்கள் அவன் படித்துவிட்டு சும்மா இருப்பதையும், பிச்சைக்காரனைப் போன்று வீதியெங்கும் சுற்றுவதையும் பார்த்து திட்டி தீர்த்தார்கள். ஏதாவது வேலையை தேடிக் கொண்டு சாதரண மனிதனாக குடும்பத்தை கவனிக்க சொன்னார்கள்.
அனைத்திற்கும் அவனது பதில் மௌனம் மட்டுமே. அவனால் அவர்களுக்கு பதில் சொல்லிவிட முடியும். அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
அவனால் அவர்களுக்கு சொந்தபந்தத்தில் அவமானம் நேர்வதாக பேசினார்கள். மனநிலை சரியில்லாதவன் என்றும் இப்படியொரு பிள்ளை குடும்பத்திற்கு கேடு என்று பலதும் பேசினார்கள்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டு தான் அமர்ந்திருந்தான். அவனது செவித்திறன் நன்றாக இருந்தது. ஆனால் அவர்களிடம் தனது மனதை திறந்து ஒற்றை வார்த்தை பேசிவிடவில்லை. அமைதியாக வீசும் சொற்களை ஏற்றுக் கொண்டான்.
அவனது அந்த அமைதியே அங்கிருந்தவர்களை பித்துபிடிக்க வைத்தது. அப்பா கையை ஓங்கிக் கொண்டு வந்தார். அதையும் தடுக்கவில்லை. நிமிர்ந்து அவரின் விழிகளை நேருக்கு நேர் நோக்கினானே தவிர அப்போதும் பேசவில்லை.
“இவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. டாக்டர் கிட்ட தான் காட்டனும்” என்றார் தந்தை.
“அதுக்கு வேற தண்ட செலவு அழனுமா அப்பா?” என்று எகிறினான் அண்ணன்.
“அப்போ என்ன தான் செய்றது? இவன் இப்படியே தினமும் பிச்சைக்காரன் மாதிரி ஊரைச் சுற்றி வரான். வாயை திறந்து பேசினாலாவது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்” என்றான் இரெண்டாவது அண்ணன் சலிப்புடன்.
அம்மா தான் அழுது கொண்டே “அவன் நல்ல பிள்ளை தாண்டா. என்ன கொஞ்சம் அசடு. நாம எடுத்து சொன்னா கேட்டுப்பான்” என்றாள்.
பெற்றுவிட்ட காரணத்திற்காக அவளும், கூட பிறந்த காரணத்திற்காக அவர்களும் அவனைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியவில்லை இங்கு அனைவருமே தனி மனிதர்கள். அவரவருக்கு என்று பசி, தாகம், உறக்கம், காதல், காமம் எல்லாமே தனித்தனி தான்.
அவன் இவ்வுலகில் நுழைய அவர்கள் ஒரு காரணி அவ்வளவு தான். இதை சொன்னால் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
தனது சிந்தனையிலேயே மூழ்கி இருந்தவனின் சட்டையைப் பற்றி தூக்கிய பெரியவன் “என்னடா! உன் மனசுல என்ன தான் இருக்கு? எதையாவது பேசித் தொலை” என்றான்.
“என்னை இப்படியே விட்டு விடுங்கள். எங்கேயாவது போய் விடுகிறேன்” என்று வாயைத் திறந்து பேசிவிட்டான்.
அதுவரை ‘பேசு பேசு’ என்று குதித்தவர்கள் அதிர்ந்து போய் பார்த்தனர்.
“என்னடா இப்படி சொல்றான்?” என்று அண்ணன்களைப் பார்த்து கேட்டார்.
நான் உங்களைப் போல அல்ல. உங்கள் மொழியில் சொன்னால் அசடன். என் கண்கள் இந்த பூமியின் அழகை ரசிக்கப் பிறந்தவை. என் காதுகள் இந்த பூமியில் எழும் ஒலிகளை ரசிக்கும். இந்த வாய் தேவையானவற்றை மட்டுமே பேசும்.
நானொரு அசடன் தான். எல்லோரையும் போல படித்து வேலைக்குச் சென்று பணம் சம்பாதித்து, திருமணம் குழந்தைகள் என்று வாழ தெரியாத அசடன் தான்.
நாம் வாழும் இந்த பூமியை ரசிக்கப் பிறந்தவன் நான். என்னை பிரசவித்த இவள் எனக்கு எல்லாம் கொடுப்பாள். நீங்கள் நினைப்பது போல அந்த வெற்றுக் காகிதத்தை சொல்லவில்லை. என் பசி தீர்ப்பாள், என் தாகம் தீர்ப்பாள். அது போதும் எனக்கு.
இவ்வுலகம் எனக்கு ஒவ்வொரு நாளும் கொண்டாட்டத்தை தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நகரும் ஒவ்வொரு சிறு புள்ளியையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். இவைகள் எனக்கு பல கதைகளை சொல்லுகிறது. உங்களைப் போல உள்ளவர்களால் அவற்றை உணர முடியாது.
என் கால்கள் துவண்டு விழும் வரை பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். நான்கு சுவர்களுக்குள் மூச்சு முட்டுகிறது. பரந்த இந்த பூமியின் மடியில் இருக்க தான் விரும்புகிறேன். ஒரு பறவையைப் போல பார்க்கும் இடங்களுக்கு எல்லாம் பயணிக்க வேண்டும்.
அன்பும் வேண்டாம். துரோகங்களும் வேண்டாம். சுதந்திரம் மட்டுமே வேண்டும். என் வழியில் விட்டு விடுங்கள். நானொரு பரதேசியாய் வாழவே விரும்புகிறேன். அது தான் என் விருப்பம். இந்த கண்கள் உடலில் உயிர் இருக்கும் வரை பூமியின் அற்புதங்களை கண்டு களிக்க வேண்டும். இந்தக் காதுகள் என்னைச் சுற்றி எழும் ஒலிகளை கேட்டு குளிர வேண்டும்.
அவன் பேசிக் கொண்டிருக்க “இவனுக்கு பைத்தியம் தாண்டா. என்னென்னவோ பேசுறானே? ஒருவேளை பேய் அடிச்சிருக்குமோ” என்றாள் அன்னை.
அண்ணன்கள் இருவரும் “ம்ம்...சரியில்ல. சைக்கிரியார்டிஸ்ட் கிட்ட காண்பிக்கிற நிலையில் இருக்கான். இவனை வீட்டில் வைத்துக் கொள்வது ஆபத்து. ஏதாவது செய்திடுவான்” என்றான் பயத்துடன்.
அவர்களை எல்லாம் பார்த்து சத்தமாக சிரித்தவன் “பேசு பேசு என்றீர்களே? நான் பேசியதும் என்னைக் கண்டு பயம் வர ஆரம்பித்து விட்டதா? என் எண்ணங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்று தான் அமைதியாக இருந்தேன்”.
அவனது அந்தச் சிரிப்பு அவர்களை மேலும் பயமுறுத்த “இது சரி வராதுடா. முத்திடுச்சு போல. இவன் இத்தனை வருஷத்தில் இப்படி சிரிச்சதே இல்லை” என்றார் அப்பா பயத்துடன்.
தந்தையை கனிவுடன் பார்த்தவன் “பயப்பட வேண்டாம் அப்பா. நான் யாரையும் எதுவும் செய்து விட மாட்டேன். தெளிந்த சிந்தனை உள்ளவன் தான். என்னை விட்டுவிடுங்கள். குடும்பம் எனும் தளைகளை அறுத்துக் கொண்டு செல்லவே விரும்புகிறேன்”.
“ஏண்டா இப்படி பேசுற? இத்தனை நாள் நல்லா தானே இருந்த? திடீர்னு ஏன் இப்படி பேசுற?” என்று அம்மா கண்ணை கசக்கினாள்.
அவளின் சொற்கள் அவனை சிரிப்பில் ஆழ்த்த “இத்தனை நாட்கள் நான் சரியாக இல்லை என்று இப்போது தானே அம்மா சொன்னாய்? இது தான் நான். என்னை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. இந்தப் பிள்ளையை உலகத்துக்கு நேர்ந்து விட்டு விட்டதாக எண்ணிக் கொள்”.
அனைவருக்கும் அவனது பேச்சு கண்ணீர் துளிகளை வரவழைக்க அவனது கைகளைப் பற்றிக் கொண்டார் தந்தை.
“ஏண்டா? நீயும் இவர்களை மாதிரி சராசரி மனிதனா மாறி விடு” என்றார் கெஞ்சலாக.
பிறக்கும் எல்லா உயிர்களும் ஒன்று போலவே சிந்திக்காது. நூற்றில் ஒன்று ஆயிரத்தில் ஒன்று வேறுபட்டு நிற்கும். அவர்களின் உலகம் வேறானது. அதை சாமானிய மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவன் அவர்களின் உலகத்தைப் பொறுத்தவரை அசடனாக வாழ்ந்து மடிகிறான். நான் அந்த தளைகளை உடைத்து என் உலகத்தில் வாழ உங்களிடம் அனுமதி கேட்கிறேன். என்னை விட்டு விடுங்கள். இந்த அசடனை அவன் உலகில் ரசிகனாக வாழ விடுங்கள் என்றான் இரு கை கூப்பி.
அங்கே அந்தக் குடும்பம் அந்த அசடனை புரிந்து கொண்டு அவனுலகத்தில் வாழ வழியனுப்பி வைத்தது தங்களின் துக்கத்தை மறைத்து.