Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
135
484
63
காதலாகி நின்றேன் - ஷெண்பா
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
135
484
63
அத்தியாயம் – 1

“ஸ்ரீராம்! கையைக் கொடு. தங்கச்சி கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிட்ட. உன்னோட லைன் கிளியராகிடுச்சி…” சிரித்துக்கொண்டே சொன்ன உறவுக்கார பெண்மணியின், கரத்தைப் பிடித்துக் குலுக்கினான் ஸ்ரீராம்.

புன்னகையுடன், “தேங்க்யூ அத்தை!” என்றான்.

வேலைப்பளுவால் முகம் சற்று சோர்ந்திருந்த போதும், தங்கையின் திருமணத்தை ஊரும், உறவும் மெச்ச முடித்துவிட்ட திருப்தியில், அவனது மனம் முழுவதும் குதூகலம் நிரம்பி வழிந்தது.

“பேச்சுக்கு அத்தைன்னு சொன்னா போதுமா ஸ்ரீ? முறைப்படியும் என்னை அத்தையா ஆக்கிடேன்” என்றார் அருகிலிருந்த மற்றொரு பெண்மணி.

சமாளிப்பாகச் சிரித்தவன், “அதெல்லாம் பார்த்துக்கத்தான் வீட்ல பெரியவங்க இருக்காங்களே அத்தை!” என்றான்.

“அவன், ரொம்பப் பொறுப்பான பையனாச்சே ருக்கு! உனக்கு அப்படி ஒரு எண்ணமிருந்தா, கணேசன் அண்ணங்கிட்ட பேசிடு” அவனது ஒன்றுவிட்ட அத்தை, தனது தங்கையிடம் சொல்லிக்கொண்டிருக்க, அந்தப் பேச்சு காதில் விழாதது போல அங்கிருந்து நகர்ந்தான்.

சமாளிப்பாகச் சொன்னபோதும், பழைய நினைவுகளெல்லாம் அவனது மனத்தில் நிழலாடின.

‘சில வருடங்களுக்கு முன்புவரை, இவர்களெல்லாம் நடந்துகொண்டதென்ன! இன்று, தாங்கள் ஓரளவிற்கு தலைதூக்கியதும் நடந்துகொள்ளும் முறை என்ன? அன்று தன்னை ஒரு பொருட்டாகக்கூட கருதாதவர்கள், இன்று தன்னை அவர்கள் வீட்டின் மாப்பிள்ளையாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் போலும்’ மனத்திற்குள் நினைத்துக் கொண்டவன், கசப்புடன் புன்னகைத்தான்.

“என்ன மச்சான்! தனியா சிரிக்கிற?” கேட்டுக்கொண்டே அவனது தோளில் கை போட்டான் பிரபாகர்.

ஸ்ரீராமின், eeeஅத்தையின் ஒரே மகன். அவனது மூத்தத் தங்கை வர்ஷாவின் கணவன் மட்டுமல்லாமல், நெருங்கிய நண்பன்.

நடந்தவற்றை அவனிடம் பகிர்ந்துகொண்டவன், “பணமும், வசதியும்தான் ஒரு மனுஷனை கோபுரத்துல கொண்டுபோய் வைக்கும். அவனோட குணம் முக்கியம் இல்லன்னு ஒவ்வொருத்தரும் ப்ரூவ் பண்றாங்கடா!” எனச் சலிப்புடன் சொன்னான்.

“இதுக்கே சோர்ந்து போனா எப்படி?” என்றபடி தலையைத் திருப்பிய பிரபாகர், அதே வேகத்தில் பழையபடி திரும்பிக் கொண்டு, “அச்சச்சோ! இந்த சவுண்ட் பார்ட்டி எதுக்குடா இங்க வருது?” என்றான் பதட்டத்துடன்.

“நீதான், சவுண்ட் எஞ்சினியர் ஆச்சே… அதனால இருக்கும்” என்று நேரம் காலமில்லாமல் தங்கையின் கணவனைக் கிண்டல் செய்தான் ஸ்ரீ.

“இருக்கற தொல்லை பத்தாதுன்னு, நீ வேறடா!” என்ற பிரபாகரிடம், “ஆமாம். நான் வேறதான். அதுக்கென்ன…” என்றவனைக் கொலைவெறியோடு பார்த்தான்.

“சரி சரி விடு மச்சான்! இந்தச் சவுண்ட் பார்ட்டி என்ன பிட்டைப் போடுதுன்னு பார்ப்போம்” என அவனது காதைக் கடித்தவன், “வாங்க சித்தி!” என்று வந்தவரை வரவேற்றான்.

“என்னப்பா பிரபா! வந்தவங்கள வான்னு கூடச் சொல்லமாட்டியா? என்னதான் பாரின்ல வேலை செய்றன்னாலும், பழசெல்லாம் மறந்திடுமா என்ன?” என்று அங்கலாய்த்தார் அவர்.

‘கேட்டவனுக்குப் பதில் சொல்லாமல் என் மண்டையை உருட்டுது. இவங்கள்லாம் எவ்ளோ அனுசரணையா இருந்தாங்க… நாம மறந்து போறதுக்கு. சரியான ஏழரை!’ என மனத்திற்குள் திட்டிக்கொண்ட பிரபாகர், “வாங்க அத்தை!” என்று சமாளிப்பாகச் சிரித்தான்.

“ம், இந்தக் காலத்துப் புள்ளைங்ககிட்ட மரியாதையைக்கூட கேட்டு வாங்க வேண்டியிருக்கு” என்றவர், “ஸ்ரீ கண்ணு! நீ எப்படிப்பா இருக்க? ஹும்! தங்கச்சிக்கு பெரிய இடமா முடிச்சிட்ட போலயிருக்கு…” என்றவரது வார்த்தையில் மருந்துக்கும் அன்போ, கரிசனமோ இல்லை. மாறாக, மனம் முழுதும் நிறைந்திருக்கும் பொறாமையும், ஆற்றாமையும் வார்த்தைகளில் பொங்கி வழிந்தன.

வலிந்து புன்னகைத்தவன், “வீட்ல பெரியவங்கதான் பேசி முடிச்சாங்க சித்தி!” என்றான்.

“இதான் அடக்கம்ங்கறது. உங்க அப்பாவும், அத்தையும்தான் பத்திரிகை வைக்க வரும்போதே வாய் வலிக்க வலிக்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருந்தாங்களே. ம்ம், எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும். இல்லனா, இப்படி ஒரு சம்மந்தம் உங்களுக்குக் கிடைக்குமா?” என்ற பெருமூச்சுடன் அடுத்தவரிடம் கதையளக்கச் சென்றார்.

ஹப்பா! என்று பெருமூச்சொன்றை விட்டவன், “இந்த மண்டபத்தை விட்டுக் கிளம்பறதுக்குள்ள, இன்னும் என்னென்ன பேச்சையெல்லாம் நாம கேட்கணுமோ…” என்று அவன் சொல்லிமுடிக்க, அவனது அத்தை பரிமளம் அங்கே வந்து சேர்ந்தார்.

“ஏன்டா! அந்த ஆல் இண்டிய ரேடியோகிட்ட இவ்ளோ நேரம் என்னடா பேச்சு?” என்றவரை முறைத்துக் கொண்டு நின்றான் ஸ்ரீ.

“ஏம்மா! நாங்களா அந்தம்மாகிட்ட பேசினோம். அவங்களா வந்தாங்க… சஹியோட மாமியார் வீட்டைப் பத்திப் பேசினாங்க. போய்ட்டாங்க…” என்றான் பிரபாகர்.

“ஐயையோ! அந்தப் பெருங்கண்ணிக்குக் கண்ணை உறுத்திடுச்சா? இருடா! அவ கிளம்பறதுக்குள்ள அவ காலடி மண்ணை எடுத்துட்டு வந்துடுறேன். வீட்டுக்குப் போனதும், உங்க எல்லோரையும் நிக்கவச்சி சுத்திப் போடணும்” சொல்லிவிட்டு விறுவிறுவென அந்தப் பெண்மணி சென்ற திசையிலேயே சென்றார் பரிமளம்.

“அம்மா! அம்மா!” என பிரபாகர் அழைத்ததை அவர் காதிலேயே வாங்கவில்லை.

“எங்க அம்மா ஏன்தான் இப்படி இருக்காங்களோ தெரியலடா” என்றவன் ஆழ்ந்த யோசனையில் நின்றிருந்த ஸ்ரீராமைப் பார்த்தான்.

“டேய்! இன்னுமா அந்தக் கதையை நினைச்சிட்டிருக்க. விடுடா… பேசறவங்க நாம நல்லாயிருந்தாலும் பேசுவாங்க; கெட்டுக் குட்டிச்சுவரா போனாலும் பேசுவாங்க” என்றான்.

“அதில்லடா, அந்தச் சித்திக்குப் பெருங்கண்ணி, ஆல் இண்டிய ரேடியோன்னு அத்தை பேர் வச்சிருக்காங்களே… இவங்களுக்கு நாம ஹிட்லர்னு பேர் வச்சிருக்கோமே, அது தெரிஞ்சா என்னாகும்?” என்று தீவிர பாவனையுடன் கேட்டான்.

“டேய்! நான் ஏதாவது சொல்றதுக்குள்ள இங்கேயிருந்து போயிடு” கடுப்புடன் சொன்னான் பிரபாகர்.

“என்னடா மச்சான் இதுக்கெல்லாம் கோச்சிக்கிற! உன்கிட்ட விளையாடாம யார்கிட்ட விளையாடுவேன்!” என்று அவனது தோளில் கை போட்டு தன்னுடன் அழைத்துச் சென்றான்.

“மாமனும், மச்சானும் எப்படி ஒத்துமையா இருக்காங்க! சஹி வீட்டுக்காரும், இவங்களோட ஒத்திருந்தா சரி. பெரிய இடம் வேற…” என்று பெருமூச்சுடன் அந்த ஆல் இந்திய ரேடியோ பரிமளத்திடமே சொல்ல, காதுகளில் புகை வராத குறையாக ஆனது அவரது நிலைமை.
 
Last edited:
  • Like
Reactions: saru

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
135
484
63
அத்தியாயம் - 2

உறக்கம் வராமல் புரண்டு படுத்தாள் திவ்யா. சொகுசான வோல்வோவின் தாலாட்டில், அருகில் உறங்கிக்கொண்டிருந்த அன்னையின் முகத்தைப் பார்த்தாள். தன்னையும் அறியாமல் கனிவான பார்வை, அவளது விழிகளில் முகிழ்த்தது.

‘உன்னைப் போன்றொரு தாய் கிடைக்க, நான் என்ன பாக்கியம் செய்தேன்!’ அவளது மனத்தில் எழுந்த எண்ணம், ஆழ்பெரும் மூச்சாக வெளிவந்தது. அவளது எண்ண அலைகள் அவளுடைய அன்னையைத் தீண்டியதோ என்னவோ… விழித்தெழுந்து அமர்ந்தார் வைதேகி.

அதுவரை கண்களால் அவரை ஸ்பரிசித்துக்கொண்டிருந்தவள், சட்டென இமைகளை மூடி உறங்குவதைப் போல நடித்தாள். திடீரென விழிப்புத் தட்டியதற்கான காரணம் புரியாமல், மகளைக் கண் நோக்கினார். அவளோ சீரான மூச்சுடன் அசையாமல் படுத்திருந்தாள்.

சிறுமுறுவலொன்று இதழ்களில் தவழ, பரிவுடன் அவளது தலையைக் கோதிக் கொடுத்தார். தான் பெறாமல் பெற்ற மகளானாலும், தன்னிடம் கொண்டிருக்கும் பாசத்தில் அந்தத் தாய்க்கு இதயம் நெகிழ, இமைகள் நனைந்தன.

கிட்டத்தட்ட இருபது வருடச் சிறை வாழ்க்கையிலிருந்து, தன்னை விடுவித்திருக்கும் தேவதையாக மகள், அவரது கண்களுக்குப் புலப்பட்டாள். ‘இனி, அந்த நரக வாழ்க்கையை கனவாக எண்ணி மறந்துவிடவேண்டும்’ என அவரும் நான்கு ஆண்டுகளாக முயன்றுகொண்டிருக்கிறார்.

ஆனால், நினைவுகளின் வலிமைக்கு முன்னால், அவரது மன உறுதி கண்ணாடிச் சில்லுகளாகச் சிதறிப் போகின்றனவே தவிர, மனத்தின் அடி ஆழத்து காயங்களெல்லாம் மறைந்து போவது சாத்தியமற்றுப் போயிற்று.

இதோ, வீடு விட்டு வீடு என்பது மாறி, இன்று ஊரை விட்டு ஊருக்கும் குடிபெயர்ந்தாகிவிட்டது. இனியேனும், அந்தக் காயங்களெல்லாம் ஆறுமா! அல்லது வடுவாக மாறித் தன்னை வதைத்தெடுக்குமா?’ எனப் புரியாமல், மீண்டும் தனது படுக்கையில் சென்று அமர்ந்தார்.

சற்று நேரத்தில் இருவருமே, தங்களது கவலைகளை மறந்து உறங்கிப் போயினர். காலையில் எழுவதற்காக வைத்திருந்த அலாரம் மெலிதாக ஒலிக்கவும், விழித்தெழுந்தாள் திவ்யா.

அன்னையை எழுப்பியவள், “குட் மார்னிங்மா!” என்றாள்.

“குட்மார்னிங்டா! என்றார் வைதேகி.

“எந்த இடம் வந்திருக்குன்னு கேட்டுட்டு வந்திடுறேம்மா” என்று கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றவள், சில நொடிகளில் திரும்பி வந்தாள்.

“இன்னும் பத்து நிமிஷத்துல இறங்கணும்மா!” என்றவள் தங்களது உடமைகளைச் சரிபார்த்து எடுத்து வைத்தாள்.

பேருந்திலிருந்து இறங்கிய இருவரும், தென்காசியின் இயற்கைச் சூழலில் இலயித்துப் போயினர்.

வெண்மேகக் கூட்டங்கள் பஞ்சுப் பொதிகளாக மலையை அணைத்திருக்க, பச்சைப் பசேலென்ற வயல் வரப்பில் வெண்ணிற கொக்குகள் உலவிக்கொண்டிருந்தன. இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல், அதிகாலை நேரப் பொதிகைத் தென்றல் இருவரையும் தழுவி வரவேற்றதென்றால், அவர்களைக் கடந்து சென்ற மேகக்கூட்டம் மென் சாரலைத் தெளித்து அவர்களை நனைத்துவிட்டு நகர்ந்தது.

உடலை உறுத்தாத அந்த மிதமான குளிர் மயிலிறகாக வருட, பெண்கள் இருவரும் அந்தச் சூழலை தங்களை மறந்து இரசித்துக் கொண்டிருந்தனர். சென்னையின் பரபரப்பிலேயே ஊறித் திளைத்தவர்களுக்கு ஆரவாரமற்ற அமைதியும், குளிர்ச்சியும் கண்களுக்கும், மனத்திற்கும் பேரமைதியைக் கொடுத்தன.

“வாவ்! எவ்ளோ அழகாயிருக்கு இல்லம்மா…!” எனக் குதூகலித்தவளுக்குச் சிறுபுன்னகையைப் பதிலாக்கினார் வைதேகி.

“நாடோடி மாதிரி இப்படி ஊரைவிட்டு அவசர அவசரமா வரோமே… போற இடம் எப்படி இருக்குமோன்னு ரொம்பக் கவ்வலையா இருந்தேன் திவி! ஆனா, இந்த இடத்தைப் பார்த்ததும் கடவுள் நம்மள பத்திரமான ஒரு இடத்துக்குத் தான் கூட்டிட்டு வந்திருக்காருன்னு தோணுதுடா!” என ஆத்மார்த்தமாகச் சொன்னார்.

“அம்..மா! உன்னோட நல்ல மனசுக்கு… இனி, நீ சந்தோஷமா நிம்மதியா இருப்ப. கவலைப்படாதே!” என்று பெரிய மனிதத் தோரணையுடன் அவரது தோளைச் சுற்றிக் கை போட்டு அவரை அரவணைத்துக் கொண்டாள் திவ்யா.

சற்று தொலைவில் தெரிந்த காசிவிஸ்வநாதர் ஆலய கோபுரத்தைச் சுட்டிக்காட்டியவள், “அம்மா! இப்போதைக்கு உன்னோட சிவனை இங்கேயிருந்தே கும்பிட்டுக்க. நாம செட்டில் ஆனதும் கோவிலுக்குப் போய்ட்டு வரலாம்” என்றாள்.

இருவரும் கோபுரத்தை தரிசித்துவிட்டு, தங்களை அழைக்க வருகிறேன் என்ற தோழிக்காக காத்திருந்தனர்.

கிட்டதட்ட அரைமணி நேர காத்திருப்பில், அருகிலிருந்து குழாயடியில் இருவரும் முகத்தைக் கழுவிக்கொண்டு, அங்கிருந்த கடையிலேயே டீயையும் பருகினர்.

மொபைலில் தோழிக்கு முயன்று கொண்டிருந்த திவ்யாவிடம், “உன் ஃப்ரெண்ட் கல்பனா இங்கேதானேம்மா வெயிட் பண்ணச் சொன்னாங்க!” எனக் கேட்டார் வைதேகி.

மொபைலிலிருந்து பார்வையை அகற்றாமல், “இங்கேதான் சொன்னா. நான் அவளுக்குத்தான் ட்ரை பண்ணிட்டிருக்கேன்… எடுக்கமாட்டேன்றா. சரியான கும்பகர்ணி. வந்ததும் அலாரம் அடிக்கலன்னு சொல்வா பாருங்க” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவர்களருகில் கால் டாக்ஸி ஒன்று வந்து நின்றது.

“சாரி திவி! வெரி சாரி” என்றபடி டாக்ஸியிலிருந்து இறங்கியவள், “வணக்கம்மா! பிரயாணமெல்லாம் சௌகர்யமா இருந்ததா…” என வைதேகியிடம் விசாரித்தாள்.

அவரும் மலர்ந்த முகத்துடன் பதில் சொல்ல, “காலைல அலாரம் அடிக்காம சதி பண்ணிடுச்சிம்மா! அதான், லேட்டாகிடுச்சி” என்றதும் அவர் சிரிப்பை மறைத்துக்கொண்டு திவ்யாவைப் பார்த்தார்.

“போதும்டீ அளக்காதே. அதெப்படித்தான் உன் அலாரம் மட்டும் எப்பவுமே அடிக்காமலேயே இருக்குன்னு எனக்குப் புரியாத புதிராவே இருக்கு…” என்று தோழியின் காலைவாரினாள் திவ்யா.

“இல்லப்பா…” என்று நீட்டி முழக்கிய கல்பனாவை, “அம்மாடி! போதும் நீ அளக்கப் போறதையெல்லாம் இனி தினமும் கேட்கத்தானே போறேன். இப்போதைக்கு என்னைப் ப்ரீயா விடு. கிளம்பலாமா?” என்றாள்.

“நீ இன்னும் மாறவேயில்லடி!” என்ற தோழிக்கு, “யூ டூ கும்பகர்ணி!” என்று செல்லமாகக் கொஞ்சினாள் திவ்யா.

“எங்க வீட்லயே தங்கிக்கலாம். நீதான் ஒத்துக்கவேயில்ல…” தாங்கலான குரலில் உரைத்தாள் கல்பனா.

“ஃப்ரெண்டா இருந்தாலும், ஒரடி தள்ளியே நின்னுக்கறது தான் நமக்கும் நல்லது; நம்மகூட நட்பா இருக்கவங்களுக்கும் நல்லது” என்றவளை ஆற்றாமையுடன் பார்த்தாள் அவள்.

“இருந்தாலும், உங்க பொண்ணுக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாதும்மா. தள்ளி நிக்கிறேன்னு எல்லோரையும் ஒதுக்கி வைக்கிறது மாதிரி பேசினா என்ன அர்த்தம்! இதுவே, அவங்களுக்குக் கஷ்டமா இருக்காதா… சரிதான் போடின்னு அவங்களும் திருப்பிகிட்டு போய்ட்டா என்ன செய்வ?” எனக் கேட்டாள் கல்பனா.

“ரொம்ப சிம்பிள் என்னோட ஃப்ரெண்ட்ஷிப் கிடைக்க அவங்களுக்கு கொடுத்துவைக்கலன்னு நினைச்சிகிட்டு என் வழியிலே போயிட்டிருப்பேன்” என்று தோள்களைக் குலுக்கினாள்.

மகளின் பேச்சை ஆமோதிப்பதைப் போலப் புன்னகைத்தபடி எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார் வைதேகி.

“அம்மா தாயே! தெரியாம கேட்டுட்டேன். உன் அளவுக்கு என்னால கல்நெஞ்சா இருக்க முடியாதுப்பா!” என்றவள் வைதேகியிடம், “உங்களுக்குப் போய் இப்படியொரு பொண்ணு!” என அங்கலாய்த்துக் கொண்டாள்.

“டிரைவர் அண்ணா! காரை அப்படி ஓரமாக நிறுத்துங்க” என்றவள், “இதான் திவி இப்போதைக்கு நீங்க தங்கப்போற இடம்” என்று அவர்களை அங்கிருந்த ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

உள்ளே சென்ற திவ்யா, “கிச்சன், டைனிங், ஹால், பெட்ரூம்னு வீடு மாதிரியே இருக்கு” என்றாள்.

“ம், இங்கே சீசனுக்கு வந்து குடும்பத்தோட தங்கறவங்களுக்காக இப்படிக் கட்டி வாடகைக்கு விடுறாங்க. பிடிச்சிருக்கா? இல்ல, வேற இடம் பார்க்கலாமா?” எனக் கேட்டாள் கல்பனா.

“ரெண்டு மூணு நாளைக்குத்தானே… என்னம்மா சொல்றீங்க?” என அன்னையிடம் கலந்து பேசினாள்.

அவரும் சரியென்று சொல்லிவிட, அங்கேயே குளித்து விட்டு தங்களுக்காக கல்பனா பார்த்திருக்கும் வீட்டைப் பார்க்கக் கிளம்பினர்.

“திவ்யா! இந்த ரெண்டு வீட்டையும் பாருங்க. உங்களுக்கு எது பிடிக்குதோ எடுத்துக்கலாம். இல்லனா, வேற வீடு பார்க்கலாம். நானும் எனக்குத் தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி வச்சிருக்கேன்” என்றாள்.

அவர்கள் சென்று பார்த்த முதல் வீடே இருவருக்கும் பிடித்துவிட, அதையே முடித்துவிடலாம் என்றாள் திவ்யா.

“அவசரமில்லப்பா! இன்னொரு வீட்டையும் பாரு. இதைவிட அந்த வீடு பிடிக்கவும் சான்ஸ் இருக்கில்ல” என்றாள் கல்பனா.

“இல்லன்னு யார் சொன்னா? எங்க தேவைக்கு ஏத்தமாதிரி இந்த வீடே இருக்கே. ரெண்டு தெரு தள்ளிப் போனா கோவில். தெரு முனையிலேயே பஸ் ஸ்டாண்ட். நம்ம ஹாஸ்பிட்டலுக்கும் பக்கமா இருக்குன்னு வேற சொல்லிட்ட. இதைவிட என்ன வேணும்?

அதோட, எப்பவுமே சாய்ஸ் இருக்கேன்னு எல்லாத்தியும் பார்த்தோம்னா ஒண்ணைவிட இன்னொன்னு எப்பவும் பெட்டராகத்தான் தெரியும். முதல்ல பார்க்கறதே திருப்தியா இருந்தா, எதுக்கு அடுத்ததைத் தேடிப் போகணும்?” என்றாள் திவ்யா.

“உன்னைப் பத்தித் தெரிஞ்சும், தெரியாம கேட்டுட்டேன். ஆளை விடும்மா!” எனக் கையெடுத்துக் கும்பிட்டாள் கல்பனா.

“அந்தப் பயம் இருக்கட்டும்” எனச் சிரித்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில், வீட்டு உரிமையாளரிடம் பேசி முன்பணத்தையும் கொடுத்து பாண்ட் எழுதிக் கொண்டனர். ரெண்டு நாள் கழித்து பால் காய்ச்சிவிட்டு, குடிவருவதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டனர்.
 
  • Like
Reactions: saru and lakshmi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
135
484
63
அத்தியாயம் - 3

“அத்தை! நீங்க இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு. இறங்குங்க” என்ற ஸ்ரீராம், காரை காசி விஸ்வநாதர் கோவிலின் அருகில் நிறுத்தினான்.

“பார்த்து இறங்கு வர்ஷா!” என்ற பரிமளம் மெல்ல இறங்க, முன்னால் அமர்ந்திருந்த பிரபாகர், வர்ஷா இறங்குவதற்காகக் கதவைத் திறந்து விட்டான்.

“அப்பப்பா… இவனோட அலம்பல் தாங்க முடியலயே” என்றபடி பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே, “உன்னை ரூமுக்குள்ள விடாம கதவைச் சாத்துவேன்னு சொன்ன பொண்டாட்டிக்கே இவ்ளோ சேவகம் பண்றன்னா, இன்னும் உன்னைக் கண் கலங்காம வச்சிருந்தா, அவ்வளவுதான் போலிருக்கே” என்று சப்தமாகச் சலித்துக் கொண்டான் ஸ்ரீ.

“ம்ம், நீ அண்ணிக்குக் கூஜா தூக்கப் போறதை, நாங்களும் பார்க்கத்தான் போறோம்” என்றபடி இறங்கினாள் வர்ஷா.

”ஹா ஹா! கலாய்ச்சிட்டியா…” என்றவன், “என் பேரு ஸ்ரீராம். பிரபாகர் இல்ல” என்றவனைக் கடுப்புடன் பார்த்தாள் அவள்.

“முற்பகல் செய்யின்; பிற்பகல் விளையும்டா!” என எச்சரிக்கும் குரலில் சொன்னான் பிரபாகர்.

“ஹா ஹா. இந்தக் கொன்றை வேந்தன், ஆத்திச்சூடியெல்லாம் நாங்க மூணாங் கிளாஸ்லயே படிச்சிட்டோம்ப்பா!” என்று பதிலுக்குக் கிண்டலாகச் சொன்னான் ஸ்ரீ.

“இந்தச் சட்டம் பேசினதெல்லாம் போதும். ஒரு ரெண்டு நிமிஷம் கோயிலுக்குள்ள வந்து விஸ்வநாதரை தரிசிச்சிட்டுக் கிளம்புடா” என்றார் பரிமளம்.

“ரெண்டு நாளைக்கு முன்னாலதானே அத்தை சகி, பிரபு ரெண்டு பேரையும் அழைச்சிட்டு வந்தோம். நான் வேலையை முடிச்சிட்டு அரைமணி நேரத்துல வந்து உங்களை பிக்அப் பண்ணிக்கிறேன்” என்றவன், “இன்னும் என்னடா அர்ச்சனைத் தட்டை வச்சிகிட்டு நின்னுட்டிருக்க. வந்து வண்டியில் ஏறு!” என்றான் தங்கையின் கணவனிடம்.

“ரெண்டு நிமிஷம்டா. அவங்களை ரோட்டைக் கிராஸ் பண்ணி விட்டுட்டு வந்திடுறேன்” என்றான்.

“சின்னக் குழந்தையாடா அவள்!” என அவன் சொன்னதைக் கேட்க, பிரபாகர் அங்கே இல்லை.

தனது தங்கையின் கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்லும் பிரபாகரைப் பார்த்தவனுக்குப் பெருமையாக இருந்தது. ‘சகோதரிகள் இருவருக்குமே, நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டோம்’ என்ற சந்தோஷத்துடன் காரில் அமர்ந்தபடியே கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட்டான்.

அதேநேரம் கோவில் கோபுரத்தைப் பார்த்துக் கொண்டே, “எவ்ளோ பழமையான கோவில் இல்லம்மா! சோ நைஸ்!” என்று ஸ்லாகித்தபடி, பிரகாரத்தில் அமர்ந்தாள் திவ்யா.

அவளருகில் அமர்ந்த வைதேகி, “ம், சாமியைப் பார்க்கும்போதே தெய்வீகமா இருக்கு” என மனநிறைவுடன் சொன்னார்.

அர்ச்சனைத் தட்டிலிருந்த தேங்காயை உடைத்து ஒரு சில்லை அன்னையிடம் கொடுத்தவள், தானும் ஒரு சில்லைக் கடித்தபடி உயர்ந்து கம்பீரமாகக் காட்சியளித்த கோபுரத்தை ஆராய்ந்தாள்.

“யூ நோம்மா! முதல்ல இந்த ஊருக்குப் செண்பகப்பொழில்ன்னு தான் பெயராம். இந்த ஊரை ஆட்சிசெய்த பராக்கிரம பாண்டியனோட கனவுல சிவபெருமான் வந்து, உன்னோட முன்னோர்கள் வணங்கின சுயம்பு லிங்கம் செண்பக தோட்டத்துல இருக்கு. கோட்டைலயிருந்து ஊர்ந்து போற எறும்பைப் பின்தொடர்ந்து போனா, லிங்கத்தைப் பார்க்கலாம்னு சொன்னாராம். அப்படிக் கண்டுபிடிச்ச சுயம்பு லிங்கம் தான், இந்தக் காசி விஸ்வநாதர்” என்றாள்.

“ம், அப்புறம்” ஆர்வத்துடன் கேட்டார் வைதேகி.

“இங்கேயிருந்து, காசிக்குப் போறதுக்கு முன்னயே பயணத்துல பாதிபேர் இறந்து போயிட்டதால, அந்த சுயம்பு லிங்கத்துக்கு இங்கேயே ஒரு கோவில் கட்டச் சொன்னாராம் சிவபெருமான். அதனாலதான் இந்த ஊருக்குத் தென்காசின்னு பேர் வந்துச்சாம்” என்று விளக்கமாகச் சொன்ன மகளை, இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் வைதேகி.

“இதல்லாம் யார் சொன்னா? உன் ஃப்ரெண்ட் கல்பனாவா?”

“ம்க்கும். அவளா… சாப்டுட்டு தூங்குடின்னா தூங்குவா. சினிமா பார்க்கச் சொன்னா பார்ப்பா. அவளுக்கு இந்த இன்ஃபர்மேஷன்லாம் தெரிஞ்சிக்க கொஞ்சங்கூட இண்ட்ரஸ்ட் கிடையாது. எல்லாம் கூகுள் ஆண்டவரால தான்” என்றாள் புன்சிரிப்புடன்.

முறுவலித்த வைதேகி, “கிளம்பலாமா. நீ நைட் டியூட்டிக்குக் கிளம்பணுமே” என்று நினைவுபடுத்தினார்.

“ம், கிளம்பலாமா. நேரம் கிடைக்கும் போது, திரும்ப இந்தக் கோவிலுக்கு வரணும்” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே, தங்களை நோக்கி வந்த பெண்மணியைப் பார்த்துப் புன்னகைத்தார் வைதேகி.

“அடடே! வைதேகியா எப்படியிருக்கீங்க? வீடெல்லாம் சௌகர்யமா இருக்கா?” என விசாரித்தார் அங்கே வந்த அவர்களது வீட்டின் உரிமையாளரின் மனைவி.

“வாங்கம்மா. ரொம்பச் சௌகர்யமாயிருக்கு. வீட்டுக்கு ஒரு நாள் வாங்கம்மா!” என்றார் வைதேகி.

“கண்டிப்பா வரேன். நீங்க வந்தே ஒருவாரம் தானே ஆகுது. செட்டில் ஆகுங்க. அப்புறம், நிதானமா வரேன்” என்றவர், திவ்யாவிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசினார்.

“வீட்டுக்குக் கிளம்பியாச்சா?”

“கிளம்ப வேண்டியதுதான் ஆன்ட்டி!” என்றவள் அன்னையைப் பார்த்துத் தலையசைத்ததும், மூவரும் மெல்ல நடக்க ஆரம்பித்தனர்.

“அப்போ, நம்ம கார்லயே போயிடலாம்” என்றார் வீட்டின் உரிமையாளரின் மனைவி.

“ரொம்பத் தேங்க்ஸ் ஆன்ட்டி! நாங்க டூவீலர் தான் வந்திருக்கோம்” என்றாள்.

“ஓ! அப்படியா? உங்களை வீட்லவிடும் சாக்குல… வீட்டுக்கு வரலாம்னு நினைச்சேன்” எனச் சிரித்தார் அவர்.

“நீங்க எப்போ வேணும்னாலும் வரலாம் ஆன்ட்டி! சாக்கு வச்சிகிட்டு வரணும்னு அவசியமில்ல” எனச் சிரித்தாள்.

“விளையாட்டுக்குச் சொன்னேம்மா” என்றபடி அவர்களுடன் இணைந்து நடந்தவர், சுவாமி தரிசனம் முடித்துக்கொண்டு வெளியில் வந்தவர்களைக் கண்டதும், “அடடே! பரிமளம் சௌக்கியமா?” என அவரிடம் நலம் விசாரித்தவர், வர்ஷாவையும் விசாரித்தார்.

பரிமளத்தின் பார்வை வைதேகியின் மீது படியவும், அப்போதுதான் நினைவு வந்தவராக அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

“பரிமளம்! இவங்க வைதேகி. நம்ம வீட்டுக்குப் புதுசா குடித்தனம் வந்திருக்காங்க. அவ இவங்க பொண்ணு திவ்யா. டாக்டரா இருக்கா” என்றதும், இருவரும் புன்னகையுடன் வணக்கம் என்றனர்.

சிரித்த முகமாக, நெஞ்சில் கை வைத்து லேசாக தலையை அசைத்து, “வணக்கம்மா!” என்ற திவ்யா, அவரது மனத்திற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டாள்.

மூக்குக் கண்ணாடியை லேசாக உயர்த்தி அவளைப் பார்த்தார்.

“எந்த ஹாஸ்பிட்டல்மா?” என்றவருக்குப் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றின் பெயரைச் சொன்னாள்.

“ஓஹ்! அந்த ஹாஸ்பிட்டல் டீன்தான் எங்க ஃபேமலி டாக்டர்” என்றார் பரிமளம்.

பரிமளத்தையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியவர், “இவ வர்ஷா. பரிமளத்தோட சொந்தத் தம்பி பொண்ணு. அவளையே பையனுக்கு முடிச்சிகிட்டாங்க. இவள் பாரின்ல இருக்கா. டெலிவரிக்காக வந்தா. அதுக்குள்ள அவளோட தங்கைக்கும் கல்யாணம் நிச்சயமாகி இருபதே நாள்ல கல்யாணத்தையும் முடிச்சிட்டாங்க. நீங்க தென்காசிக்கு வந்து சேர்ந்த அன்னைக்குத்தான், அவளோட கல்யாணம் நடந்தது” என்று விவரமாகச் சொன்னார்.

வர்ஷாவிற்கும், திவ்யாவிற்கும் என்ன தோன்றியதோ… இருவரும் ஒருவரையொருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

“உங்களைச் சந்திச்சதுல எங்களுக்கு ரொம்பச் சந்தோஷம். அவசியம் நீங்க வீட்டுக்கு வரணும்” என அழைப்பு விடுத்தார் வைதேகி.

“நீங்களும் வாங்க. ஊர் புதுசுன்னு அச்சப்படாதீங்க. எந்த ஒத்தாசை வேணும்னாலும், தயங்காம கேளுங்க” என்ற பரிமளம் தங்களது தொலைபேசி எண்ணையும், முகவரியையும் கொடுத்தார்.

விடைபெற்றுக் கொண்டு வீட்டிற்கு வரும் வழியெல்லாம், வீட்டுக்காரம்மா பேசியதைச் சொல்லிச் சிரித்துக் கொண்டே வந்தாள் திவ்யா.

“பார்த்த முதல் நாளே, நமக்கு இவ்ளோ இன்ஃபர்மேஷன்ஸ் சொன்னா, எப்படிம்மா ஞாபகம் வச்சிக்கிறது? எனக்கு அடுத்தமுறை அவங்களைப் பார்த்தா சரியா நினைவிருக்குமோ இல்லயோ!” என்றாள்.

புன்னகைத்த வைதேகி, “அவங்களைப் பார்த்தா ரொம்ப நல்லவங்களா தெரியுது திவிம்மா!” என்றார்.

வண்டியை கேட்டருகில் நிறுத்தியவள், “நீ, பாண்டவர் பரம்பரைம்மா. அதான், பார்க்கற அத்தனைப் பேருமே, உனக்கு நல்லவங்களா தெரியறாங்க” என்றவள் பூட்டைத் திறந்தாள்.

“எல்லோரையும் சந்தேகத்தோடவே பார்க்கக்கூடாது” என்றவர் அர்ச்சனைத் தட்டை பூஜையறையில் வைத்தார்.

பூஜையறையிலிருந்த கடவுளைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்த இளையவள், “அதேமாதிரி, எல்லாரையும் நம்பிடவும் கூடாது” என்றாள்.

“ஹும்! உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது” ஆயாசத்துடன் சொன்ன வைதேகி, கையைக் கழுவிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார்.

“இப்படித்தாம்மா நீ சொல்வ. நாளைக்கு இதேமாதிரி என்கிட்ட ஆர்கியூ பண்ணுவ” என்றவள் ஒரு தட்டை எடுத்துக்கொண்டு அடுப்படி மேடைமீது அமர்ந்தாள்.

“எத்தனைத் தடவை சொன்னாலும், அடுப்படி மேடை மேல உட்கார்றத விடாதே. இதை உன் பாட்டி பார்த்திருக்கணும்” என்றவர் சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்திவிட்டு மகளின் முகத்தைப் பார்த்தார்.

உதட்டைக் கடித்து, கை முஷ்டியை இறுக்கித் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள் திவ்யா.

“திவி!” என்றவரை, கைநீட்டி இடைமறித்தாள்.

“எனக்கு நேரமாகுதும்மா! தோசையைச் சுட்டுக் கொடுக்கிறியா” எனக் கடுகடுத்தாள்.

அவள் மூன்று தோசையை உண்டு முடிக்கும்வரை இருவரும் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.

தட்டிலிருந்த தோசையைக் காலி செய்துவிட்டு இறங்கியவளிடம், “இன்னொரு தோசை வச்சிக்கம்மா! நைட் கண்முழிச்சி டியூட்டி பார்க்கணும். பசிக்கும்” என்றார்.

“வேண்டாம்மா!” என்றவள் கையுடன் தட்டைக் கழுவிவிட்டு, அன்னையின் கையிலிருந்த தோசைக் கரண்டியை வாங்கிக் கொண்டாள்.

“நீ உட்கார்ந்து சாப்பிடு” என ஸ்டூலை இழுத்துப் போட்டு அவரை அமர வைத்தாள்.

“நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்டா!”

“ஒண்ணும் வேணாம். சாப்பிடு” என்ற மகளை வாஞ்சையுடன் பார்த்தார்.

“உனக்கு நேரமாகுதே!”

“இன்னும் அரைமணி நேரமிருக்கு” விறைப்பாகவே பதிலளித்தாள்.

அன்னை சாப்பிடும் வரை அங்கேயே இருந்தவள், அவர் கை கழுவ எழுந்ததும், தனது அறைக்குச் சென்றாள். உள்ளே செல்லும் போதிருந்த இறுக்கமான முகத்தையும், உடையுடன் சேர்த்துக் களைந்துவிட்டு, புன்னகைத் ததும்பும் முகத்துடன் வெளியே வந்தாள்.

“அம்மா! நான் டியூட்டிக்குக் கிளம்பறேன். ஜாக்கிரதையா இரு. கதவைத் தாழ் போட்டுக்க. படுக்கறதுக்கு முன்னாடி, ஒரு தடவைக்கு ரெண்டு தடவை நல்லா சரி பார்த்துக்கோ…” என்றவள், புழக்கடைக் கதவைப் பூட்டிவிட்டு ஒருமுறை இழுத்துப் பார்த்துக் கொண்டாள்.

“காலைல நான் வர கொஞ்சம் லேட்டானாலும் ஆகும். பயந்துடாத” எனச் சொல்லிக் கொண்டே, ஸ்கூட்டியில் தனது டாக்டர் கோட்டை வைத்தாள்.

இதெல்லாம் சென்னையிலிருக்கும் போதே கேட்டுக் கேட்டுப் பழகிப்போன ஒன்றாக இருந்தபோதும், அக்கறையுடன் அவள் சொல்வதை இன்முகம் மாறாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

“அப்புறம்…” என்றபடி திரும்பியவள், தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு நின்றிருந்த அன்னையை முறைத்துப் பார்த்தாள்.

“ஏம்மா! நான் எவ்ளோ முக்கியமான விஷயம் சொல்லிட்டிருக்கேன். நீ என்னவோ சிரிச்சிகிட்டே என்னைப் பார்த்துட்டிருக்க” என்றாள் சற்று கோபத்துடன்.

“நான் என்ன சின்னக் குழந்தையா திவி! புது இடம்… நீ பத்திரமா போய் வாம்மா” என நிதானத்துடன், புன்னகை மாறாமல் சொன்ன அன்னையை இமைக்காமல் பார்த்தாள்.

அவரது மலர்ந்த முகம் அவளுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. இந்தச் சிரிப்பிற்காகத் தானே அவளும் ஊரைவிட்டே ஓடிவந்திருக்கிறாள். இனியாவது தங்களுக்குச் சற்று நிம்மதி கிடைத்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு.

“நீ எப்பவும் இப்படியே இரும்மா. நமக்குத் தேவையில்லாதவங்களைப் பத்தி இனியும் பேசாதே” எனப் பாசத்துடன் அவரது கன்னத்தை வருடிக் கொடுத்தாள்.

மகளின் அன்பில் உள்ளம் நெகிழ்ந்து போனாலும், “ஏய்! நூத்துக் கிழவி… நேரமாகுது கிளம்பு. வண்டியை வேகமா ஓட்டாதே… ஏற்கெனவே, ஹெட்லைட் சரியில்ல. நாளைக்கு டியூட்டி முடிஞ்சி வரும்போதே அதைச் சரிபண்ணிட்டு வந்திடு. பத்திரம்…” என்றார்.

“சரி சரி… வரேம்மா” என்றவள் வண்டியில் ஏறியதுமே ஆக்ஸிலேட்டரை முடுக்க, வண்டி சல்லென வேகமெடுத்தது.

இத்தனைத் தூரம் சொல்லியும், இப்படி எடுத்தவுடன் வேகமாகச் செல்லும் மகளை ஆயாசத்துடன் பார்த்தார் வைதேகி.