Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
143
491
63
அத்தியாயம் - 5

‘நாளே வீணா போச்சு. காலைலயிருந்து செய்த ஒரு வேலையும் உருப்படவேயில்ல. எல்லாம் என் நேரம். இந்த ஹெட்லைட் சனியன் அதுக்கு மேல… இப்போதானே சரி பண்ணது. அதுவும் சேர்ந்து சதி பண்ணுது’ மனத்திற்குள் திட்டிக்கொண்டே வந்தவள், கேட்டின் அருகிலிருந்த சகதியைக் கவனிக்காமல் வண்டியை நிறுத்த, நின்றவேகத்தில் கால் வழுக்கிவிட வண்டியுடன் ஒருபக்கமாகச் சாய்ந்தாள்.

“ஆ! அம்மா!” என்றபடி சமாளித்து நின்றவள், இறங்கி வண்டியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறுகையால் கேட்டைத் திறக்க முயன்றாள்.

அப்போதுதான் கேட்டில் பூட்டு தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். மணி எட்டாகுது. இந்த அம்மா எங்கே போனாங்க?’ என யோசித்துக்கொண்டே கதவைத் திறந்தாள். வீட்டிற்குள் வந்து கால்களைக் கழுவவும், மீண்டும் மழை ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.

கவலையுடன் வாசலைப் பார்த்தவள், போனை எடுத்து அன்னையின் எண்ணுக்கு அழைத்தாள். தொலைதொடர்போ தொடர்பு எல்லைக்கு அப்பாலாகவே இருந்தது. கவலையுடன், சலிப்பும் சேர்ந்துகொள்ள குளித்துவிட்டு வந்தவள், தலையைத் துவட்டியபடி மீண்டும் அன்னையின் மொபைலுக்கு அழைத்தாள்.

இப்போது கதவுக்கு வெளியே மொபைலின் சப்தம் கேட்க, வேகமாக கதவைத் திறந்தாள். அங்கே தெப்பலாக நனைந்தபடி நின்றிருந்த வைதேகியைக் கண்டதும், கோபமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோக, கையிலிருந்த துண்டால் அவரது தலையைத் துடைத்தாள்.

“ஏம்மா இப்படிப் பண்ற? ஏற்கெனவே உனக்கு அலர்ஜி, சைனஸ்னு எதுவும் பாக்கி இல்ல. இப்படிக் கொட்டுற மழைல நீ நனைஞ்சிட்டு வரலன்னு யாரு கேட்டா?” என்று கடிந்துகொண்டாள்.

“இன்னைக்குச் செவ்வாய்கிழமைன்னு துர்கைக்கு விளக்கேத்த போனேன். பரிமளம் அக்கா வந்திருந்தாங்கடா! அவங்களோட பேசிட்டு இருந்தேன். அவங்க வற்புறுத்தினதால வீட்டுக்குப் போயிட்டு வர நேரமாகிடுச்சி. பாதி வழி வர்றதுக்குள்ள நல்லா மழை பிடிச்சிக்கிச்சி” என்றவர் வரிசையாக மூன்று முறை தும்மினார்.

‘யாரு பரிமளம்?’ என்று அவள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவர் வரிசையாக தும்மவும், அவளது கவனம் சிதறியது.

“ஹீட்டர் போட்டிருக்கு… நீ முதல்ல குளிச்சிட்டு வாம்மா” என்று மேற்கொண்டு அவரைப் பேசவிடாமல் குளியலறைக்குள் தள்ளினாள்.

குளித்துவிட்டு வந்தவருக்கு ஹேர் டிரையரால் தலையை உலர்த்திவிட்டாள். சூடுபறக்க அவரது பாதத்தில் நீலகிரி தைலத்தைத் தடவியவள், “இந்த மிளகு ரசத்தைக் குடி” என்று கொண்டுவந்து கொடுத்தாள்.

அவளது இத்தனை ஆர்ப்பாட்டத்திற்கும், வைதேகி வாயைத் திறக்கவில்லை. திறந்தால் என்னாகுமென்று அவருக்குத் தெரியாதா?

இத்தனைக் கை வைத்தியத்திற்குப் பின்பும், காலையில் தலைபாரத்துடனேயே எழுந்தார் வைதேகி. அன்று முழுதும் இருமலும் தும்மலுமாக இருந்தவரை, தலைப்பாரமும் சேர்ந்துத் தாக்கியதில் அயர்ந்துபோனார். கை வைத்தியம் செய்துகொண்டிருந்தவரைக் கட்டாயப்படுத்தி மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள் திவ்யா.

ஆனாலும், வைதேகி ஜுரத்தில் விழுந்தார். ஏற்கெனவே, பூஞ்சை தேகமுடைய அன்னையின் உடல் நலிவடைந்ததில், தவித்துப் போனாள் திவ்யா.

வேலைக்கும் சென்றுவந்து வீட்டிலும் வேலைசெய்து, அன்னைக்கும் பணிவிடை செய்வதென அல்லாடிப் போனாள். நடுவில் ஒருநாள் கல்பனாகூட வந்து சென்றாள். மூன்று நாள்களுக்குப் பிறகு, ஓரளவு நிதானத்திற்கு வந்தார் வைதேகி.

“அம்மா! இந்தக் கஞ்சியைக் குடிச்சிட்டுப் படுத்துக்க” ஜுரத்தில் படுத்திருந்த அன்னையை, கைத்தாங்கலாக எழுப்பி அமரவைத்தாள்.

மெல்லக் கஞ்சியைப் புகட்டியவள், வாயைத் துடைத்துவிட்டு சுவரோரமாகச் சற்று சாய்வாக அமர வைத்தாள்.

“இதையெல்லாம் நான் செய்துக்கமாட்டேனா திவி!” என்றவர் சோர்வில் சுவற்றில் தலையைச் சாய்த்துக் கொண்டார்.

“ஆமாம். எல்லாத்தையும் செய்துக்குவேன், பார்த்துக்குவேன்னு சொல்லித்தான் இப்படி ஜுரத்தை இழுத்துக்கிட்ட. மழை பெய்யுதுன்னு தெரியுதில்ல. கொஞ்சம் நின்னு வந்திருக்கணும். இல்லன்னா, ஆட்டோலயாவது வந்திருக்கணும். சொட்டச் சொட்ட நனைஞ்சிட்டு வந்துட்டு, இப்போ அவஸ்தைப்படுற” மீதமிருந்த கஞ்சியைக் கிண்ணத்தில் ஊற்றிக்கொண்டே கடுகடுத்தாள்.

பேச்சில் வார்த்தைகள் சூடாக வந்தாலும், அது பாசத்தின் வெளிப்பாடு என்பதை அறியாதவரா அவர்! நைந்த உடல்நிலையிலும், அவளது அன்பில் தன்னைமீறி குறுநகை புரிந்தார் வைதேகி.

“இந்தச் சிரிப்புல ஒண்ணும் குறைச்சல் இல்ல” என்றவள், டம்ளரிலிருந்த கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்தாள்.

“எனக்குத்தான் ஜுரம். உனக்கென்ன… மாவுதான் இருக்கே, ரெண்டு தோசைய ஊத்திக்கக் கூடாதா?” என்றார்.

“ம்க்கும். நீ மட்டும் கஞ்சி குடி. நான் நல்லா வக்கணையா தோசை சாப்பிடுறேன்” என்றவள் மடமடவென கஞ்சியைக் குடித்துவிட்டு எழுந்தாள்.

“எல்லாம் உன்னாலதாம்மா! நீ ஒழுங்கா இருந்திருந்தா, நானும் இந்தக் கஞ்சியைக் குடிக்க வேண்டியிருக்காது இல்ல” என்றவள் சமையலறைக்குச் சென்றாள்.

‘என் உடம்பு சரியாகும்வரை, இந்தச் சண்டிக் குதிரை இப்படித்தான் முரண்டு பிடிக்கும். உனக்குக் கடிவாளம் போடப் போற மகராசன் எங்கே இருக்கானோ!’ என நினைத்துக் கொண்டார் வைதேகி.

“நீ படுத்துக்கோம்மா!” என்றவள், மெடிக்கல் ஜர்னலுடன் அவரது காலருகில் வந்து அமர்ந்தாள்.

“ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பலையா?”

புத்தகத்தில் பார்வையைப் பதித்தபடி, “லீவ் சொல்லிட்டேன்…” என்றாள்.

“ஏன்?”

“ம், லீவ் போடணும் போல இருந்தது” என்றாள் இடக்காக.

“நான் சமாளிச்சிக்குவேன் திவிம்மா! அப்புறம், போன வாரம் மாதிரி தொடர்ந்து ஒரு வாரத்துக்கு நைட் டியூட்டி பார்ப்ப. உடம்பு என்னத்துக்கு ஆகும்?” கவலையுடன் சொன்னார் வைதேகி.

“ஓஹ்! எனக்காக நீ கவலைப்படுவ. கேட்டா, அக்கறைன்னு சொல்வ. அந்த அக்கறை எனக்கு இருக்காதா?” என்றாள் கோபத்துடன்.

“இருக்கக்கூடாதுன்னு யார் சொன்னது? அம்மா மேல, பொண்ணுக்கு அக்கறை இல்லன்னாதான் ஆச்சரியம்” என்றார் வைதேகி.

அவர்மீது ஆழ்ந்த பார்வையை வீசினாள் அவள்.

“ரெண்டு நாளா கண்ணையே திறக்க முடியாம இருந்த. உன்னைப் பார்க்க எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா?” என்றவள், அவரது கரத்தைப் பற்றிக் கன்னத்தில் அழுத்திக் கொண்டாள்.

வைதேகி மௌனமாக இருக்க, “இன்னைக்குத் தான் எழுந்து உட்கார்ந்து நிதானமா பேசற. இப்போ வேலைக்குப் போனாலும், என்னால நிம்மதியா இருக்க முடியாதும்மா!” என்றாள்.

விழியோரம் வழிந்த கண்ணீரைத் துடைக்கக்கூடத் தோன்றாமல் அவர் படுத்திருக்க, திவ்யா நிமிர்ந்து அமர்ந்தாள்.

“ரொம்ப ஃபீல் ஆகிடாத வைதேகி! என்னால வீட்லயும் வேலை செய்துகிட்டு, ஹாஸ்பிட்டல்லயும் வேலை செய்ய முடியாது. உனக்கு இன்னும் ரெண்டு நாளைக்குத்தான் ரெஸ்ட்… மூணாவது நாள் எழுந்து வீட்டு வேலையைப் பார்க்கற. புரிஞ்சிதா?” என்றாள்.

மகளின் கிண்டலில் சற்று இலகுவான வைதேகி, “அடிக்கழுதை! கல்யாணம் ஆகியிருந்தா குடும்பத்தையும் பார்த்துகிட்டு வேலைக்கும் போயிருப்ப இல்ல. அங்கே போய் இந்தச் சட்டமெல்லாம் செல்லுபடியாகுமா?” என்றார்.

“ஆமாம். அது ஒண்ணுதான் குறை. இந்த டேப்லட்டைப் போட்டுக்கிட்டுத் தூங்கும்மா!” என்று மாத்திரையைப் பிரித்துக் கொடுத்தாள்.

ஒரு கையில் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு மறுகரத்தால், அன்னையின் பாதத்தைப் பிடித்துவிட்டாள். மகளின் அன்பில் நெகிழ்ந்தவருக்கு, அவளது எதிர்காலத்தைக் குறித்த பெரும் கவலை உள்ளுக்குள் குடைந்து கொண்டிருந்தது.

‘அப்பா காசி விஸ்வநாதா! என் மகளோட வாழ்க்கை இனி, உன்னோட பொறுப்பு. அவளை நல்லபடியா கரை சேர்க்க வேண்டிய வேலையை, உன் கைல ஒப்படைச்சிட்டேன்’ என மானசீகமாக அந்தச் சுயம்பு நாதனிடம் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தார் வைதேகி.

************

“அத்தை! இதுக்குமேல வண்டி ஒரு இன்ச்கூட நகராது. நீங்க நடராஜா சர்வீஸுக்கு மாறுறது தான் சரிவரும்” என்றான் ஸ்ரீராம்.

“இந்தக் கார்ப்பரேஷன் ஆளுங்களுக்கு வேற வேலையே இல்ல. எப்போ பாரு தெருவைக் குண்டும், குழியுமா தோண்டி வைக்கறதே வேலையா போச்சு. வயசான காலத்துல நிம்மதியா ரோட்டுல நடக்கக்கூட முடியல” என்று முனகிக்கொண்டே பைக்கிலிருந்து இறங்கினார் பரிமளம்.

“பரிமளம் வரும் தெருல பள்ளம் தோண்டி வைக்கணும்னு, அவங்களுக்கு வேண்டுதலா என்ன?” எனச் சிரித்தான் ஸ்ரீ.

“ஆமாம்டா… பாதியில இறக்கி விட்டுட்டுப் போற நீ, பேசவேண்டியது தான்…” என்று நொடித்துக் கொண்டார் பரிமளம்.

“ரெண்டு கிலோமீட்டர் உங்களைக் கூட்டிட்டு வந்தவனுக்கு, அவங்க வீட்டு வாசல்ல இறக்கிவிட கஷ்டமா என்ன? தெரு முழுக்கப் பள்ளம் தோண்டி வச்சிருக்கே நான் என்ன செய்யட்டும்?” எனக் கேட்டான்.

“ம், உனக்கேத்த மாதிரிதான் எல்லாமே நடக்குது” எனச் சலித்துக்கொண்டவர், “வரும்போது நானே வந்துடுறேன்” என்றவர் பைக்கில் மாட்டியிருந்த கூடையை வாங்கிக்கொண்டு, வைதேகியின் வீட்டை நோக்கி நடந்தார்.

நன்றாக வியர்த்துவிட, மெல்ல எழுந்து அமர்ந்தார் வைதேகி.

காலருகில் நெஞ்சின் மீது புத்தகத்தைச் சாய்த்தபடி அமர்ந்த நிலையிலேயே உறங்கிக்கொண்டிருந்த மகளை ஆதூரத்துடன் பார்த்தார். மெல்லப் புத்தகத்தை எடுத்து புக்மார்க்கை வைத்து டேபிள் மீது வைத்தவர், கட்டிலிலிருந்து இறங்கினார்.

கட்டிலின் சிறு கிறீச் ஒலியில் சட்டென உறக்கம் கலைந்த திவ்யா, “என்னம்மா ஏதாவது வேணுமா?” எனக் கேட்டுக்கொண்டே வேகமாக எழுந்தாள்.

“ஒண்ணுமில்லடா! வியர்த்து போச்சு. அதான், ஃபேனைக் கொஞ்சம் வேகமா வைக்கலாம்னு எழுந்தேன்” என்றார்.

“ஆஹ்! உடம்பு நல்லாயிடுச்சின்னு வீட்டு வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிடாதே. நான் பார்த்துக்கறேன். மணி அஞ்சாகுதே காஃபி போடட்டுமா?”

“கொஞ்ச நேரம் ஆகட்டும். நீ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கேன்” என்றார்.

முகத்தைக் கழுவியவள், “ஆறரை மணிக்கு ஒருத்தரைப் பார்க்க ஹாஸ்பிட்டல் வரேன்னு சொல்லியிருந்தேன். போகணும்” என்றாள்.

அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கேட்டைத் திறக்கும் சப்தம் கேட்க, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் திவ்யா.

அங்கே வந்து கொண்டிருந்தவரைப் பார்த்தவள் சிலநொடிகளுக்குப் பின்பே, ‘இவர் தானே அம்மா சொன்ன அந்தப் பரிமளம் ஆன்ட்டி!’ என்று அவரை நினைவிற்குக் கொணர்ந்தாள்.

“வாங்க ஆன்ட்டி!” என்று கதவைத் திறந்ததுமே, அவளை விசாரித்த பரிமளம், வைதேகியை நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

“உனக்கு உடம்பு சரியில்லைன்னு நேத்து கோவில்ல பார்த்தப்போ வீட்டுக்காரம்மா சொன்னாங்க. என் போன் நம்பர் உன்கிட்ட இருக்கு இல்ல. எனக்கு முதல்லயே சொல்லியிருந்தா, ஹெல்புக்கு வந்திருப்பேன் இல்ல” என்று உரிமையுடன் கோபித்துக்கொண்டார் அவர்.

“நாங்களே சமாளிச்சிட்டோம் ஆன்ட்டி! உதவி தேவைன்னா உங்களையெல்லாம் கேட்காம யாரைக் கேட்போம்?” என்று சொல்லிக்கொண்டே சிரித்தபடி சமையலறைக்குள் சென்றவளை, இன்முகத்துடன் பார்த்தார் பரிமளம்.

“உன் பொண்ணு கெட்டிக்காரிதான். வீட்டுக்காரம்மாகூட ரெண்டுமூணு முறை சொல்லிட்டாங்க திவ்யா மாதிரி ஒரு பொண்ணு எனக்கு இல்லயேன்னு” என்றவரைப் பார்த்து முறுவலித்தார் வைதேகி.

“காஃபி எடுத்துக்கோங்க ஆன்ட்டி!” என்று மூவருக்குமாக காஃபியும், பிஸ்கெட்டுமாக வந்து அமர்ந்தாள்.

சிறிதுநேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தவள், “ஆன்ட்டி ஒண்ணு கேட்ட தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே” என்ற மகளைச் சற்று கலவரத்துடன் பார்த்தார் வைதேகி.

‘வாய்த்துடுக்காக ஏதேனும் சொல்லிவிடுவாளோ!’ என்ற பயம் அவருக்கு.

“சொல்லும்மா” என்றார் பரிமளம்

தான் மருத்துவமனை வரை செல்லவேண்டியதைச் சொன்னவள், “நான் வர எட்டு மணி ஆகிடும். அதுவரைக்கும் அம்மாகூட இருக்கீங்களா?” எனக் கேட்டாள்.

“அட! அதெல்லாம் வேணாம். நான் தனியா இருந்துக்கமாட்டேனா” என்று இடைமறித்தார் வைதேகி.

“நீங்க இருந்தா நான் கொஞ்சம் தைரியமா போய்ட்டு வருவேன் ஆன்ட்டி!” என்றவளை அன்புடன் பார்த்தார் பரிமளம்.

“அவ்ளோதானே, நீ வர்ற வரைக்கும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் போதுமா!” என்று சிரித்தார்.

“தேங்க்யூ ஆன்ட்டி!” என்றவள் வேகமாகத் தயாராகி, விடைபெற்றுக் கிளம்பினார்.

கதவை தாளிட்டுவிட்டு வந்த வைதேகியிடம், “பொண்ணை ரொம்ப நல்லா வளர்த்திருக்க வைதேகி! உன்மேல எவ்ளோ பிரியமாயிருக்கா. போன ஜென்மத்துல ஏதோ புண்ணியம் பண்ணியிருக்க” என்றார்.

“ஆமாம்க்கா! அதான், நான் பத்துமாசம் சுமக்கலன்னாலும், என்னை அவள் சுமந்துட்டிருக்கா” என்றவருக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டுவர, புரியாமல் பார்த்தார் பரிமளம்.


காதல் வளரும்....
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
143
491
63
இந்த உண்மை திவ்யாக்கு தெரியுமா?
படிக்கப் படிக்கத் தெரிஞ்சிடுமே சிஸ்டர். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
143
491
63
அத்தியாயம் - 6

டிராவல் ஏஜென்சியிலிருந்து வெளியில் வந்த ஸ்ரீராமின் மொபைல் ஒலிக்க, எடுத்துப் பேசினான்.

“சொல்லு சஹி!”

“அண்ணா! நாங்க இத்தனை நாள் கழிச்சி வந்திருக்கோம். அவசர வேலை வந்திடுறேன்னு போனீங்க. மணி எட்டாகப் போகுது. எத்தனை மணிக்கு வீட்டுக்கு வர்றதா உத்தேசம்?” என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டாள் அவனது இளைய தங்கை சஹானா.

திருமணமாகி இருமாதங்களுக்குப் பிறகு, பிறந்த வீட்டிற்கு கணவன் பிரபுவுடன் வந்திருக்கிறாள் சஹானா.

“நீ கிளம்பினதில்லாம, அத்தையும் யாரையோ பார்த்துட்டு வரேன்னு உன்னோட சேர்ந்துக் கிளம்பிட்டாங்க. ரெண்டு பேருமே இல்லாம போரடிக்குது தெரியுமா?” என்று சிணுங்கினாள்.

“ஏய்! பொய் சொல்லாத… பிரபு பக்கத்துல இருக்கும்போது உனக்குப் போரடிக்குதா?” கிண்டலாகக் கேட்டுக்கொண்டே பைக்கில் அமர்ந்தான்.

“போங்கண்ணா! அவர் ஏதோ வேலைன்னு லேப்டாப்போட உட்கார்ந்துட்டார்” என்றாள்.

“அதான பார்த்தேன்” என்று சிரித்தான்.

“அண்ணா!” என்று போலியாக அதட்டியவள், “அத்தையும் இன்னும் வீட்டுக்கு வரலை. அத்தைக்குப் போன் செய்துட்டு வரும்போது நீங்களே கூட்டிட்டு வந்திடுவீங்களாம். அம்மா சொல்லச் சொன்னாங்க” என்றாள்.

“நானே கூட்டிட்டு வந்திடுறேன்” என்றவன் போனை அணைத்துவிட்டு, அத்தைக்கு அழைத்தான்.

‘அவரை இறக்கிவிட்ட இடத்திலேயே காத்திருப்பதாகவும், தான் அங்கே வர எப்படியும் அரைமணி நேரம் ஆகிவிடும். வர்ஷாவுக்கு மருந்து வாங்கணும். அதை முடிச்சிகிட்டு பக்கத்துல வந்தபின் போன் செய்கிறேன். பிறகு, கிளம்பிவந்தால் போதும்’ என்று அவருக்குத் தகவலைச் சொல்லிவிட்டு பைக்கை கிளப்பினான்.

**************

மருத்துவமனையில் தனது வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்குப் போன் செய்த திவ்யா, தான் இன்னும் பதினைந்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று தகவல் சொல்லிவிட்டுப் பார்க்கிங்கை நோக்கி நடந்தாள்.

‘பாவம் ஆன்ட்டி! அவங்களை வேற அங்கே உட்கார வச்சிட்டு வந்துட்டோம். மணி எட்டரை ஆகப்போகுது’ என்ற நினைப்புடன் வேகமாக வண்டியை எடுத்தாள். பாதி தூரத்தைக் கடக்கும் முன்பே, ஸ்கூட்டியின் ஹெட்லைட் அணைந்துவிட, வண்டியை ஓரம் கட்டினாள்.

‘மெக்கானிக் ஷெட்டையும் தாண்டி வந்தாகிவிட்டது. இனி, திரும்பிச் சென்று சரிபார்த்துக் கொண்டு, வீட்டிற்குச் செல்வதற்குத் தாமதமாகிவிடும். அதோடு, மெயின் ரோடில் எப்போதும் நிற்கும் கான்ஸ்டபிளிடமும் மாட்டிக் கொள்ள நேரிடும்’ என்ற யோசனையுடன் நின்றிருந்தாள்.

சற்றுதூரம் சென்றால் வீட்டிற்குச் செல்லும் குறுக்கு வழி ஒன்று இருப்பது நினைவிற்கு வந்தது. கூடவே, ‘பாதை அத்தனை நன்றாக இராதே... பரவாயில்லை போலீஸுக்கு மொய் எழுதறதுக்குப் பதிலாக, மெதுவா அந்த வழியில் போய்விடலாம்’ என்ற முடிவுடன் கிளம்பினாள்.

தெரு விளக்கும் இல்லாத அந்தக் குறுக்கு வழியில், பத்தடி கூடச் சென்றிருக்க மாட்டாள். அவளுக்கு வலதுபுறத்திலிருந்த மற்றொரு சந்திலிருந்து, வேகமாகத் திரும்பிய பைக்கைக் கண்டதும், தடுமாறி காலை கீழே ஊன்றினாள்.

மேடும் பள்ளமுமாக இருந்த சாலையில், இருட்டில் ஒரு கல்லின் மீது காலை வைத்துவிட, வண்டியுடன் கவிழ்ந்து விழுந்தாள்.

அந்தத் தெருவில் அவ்வளவாக நடமாட்டம் இருக்காது என்று தெரிந்த ஸ்ரீராம், வண்டியின் வேகத்தைக் குறைக்காமல் திரும்பினான். போதிய வெளிச்சமும் இல்லை. எதிரில் வந்த வாகனத்தின் முன் விளக்கு எரியாததால் நெருங்கி வந்தபின்பே, எதிரில் வந்த வாகனத்தைக் கவனித்தான். அவன் பிரேக் போட்டும் பலனில்லாமல், ஸ்கூட்டியில் வந்தவள் கீழே விழுந்தாள்.

அவளது வண்டியின் மீது மோதாமல் சமாளித்து நின்றவன், வேகமாக பைக்கிலிருந்து இறங்கினான்.

“சாரி! அடி ரொம்பப் பலமா பட்டுடுச்சா…” கேட்டுக் கொண்டே ஸ்கூட்டியைத் தூக்கி நிறுத்தியவன், விழுந்துக் கிடந்தவள் எழ உதவியாகத் தனது கரத்தை நீட்டினான்.

“சாரி, நான்தான் கவனிக்காம…” சொல்லிக்கொண்டே கையில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிக்கொண்டே நிமிர்ந்தவள் அப்படியே உறைந்து போனாள்.

அவனது பைக்கின் ஹெட்லைட் வெளிச்சத்தில் இருவருமே, ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டனர்.

‘ஆத்தாடி! இந்தச் சொர்ணாக்காவா?’ என்று அவன் திகைத்துப் போனானென்றால்; ‘இந்த வாலில்லாத குரங்கா?’ என்று அவள் கடுப்பில் முறைத்தாள்.

‘எதற்கடா வம்பு!’ என்ற எண்ணத்துடன், நீட்டிய கரத்தை விலக்கிக் கொண்டு தள்ளி நின்றான்.

அவள் கடுகடுத்த முகத்துடன், “இடிச்சித் தள்ளினதும் இல்லாம, ஹெல்ப் பண்ண வந்துட்டான்” என்று முணுமுணுத்துக் கொண்டே சமாளித்து எழுந்து நின்றாள்.

“ஹலோ! என்னம்மா கிண்டலா? நோ எண்ட்ரில வந்ததும் இல்லாம, எனக்கே கதை சொல்றியா? ராங் ரூட்ல வந்ததே தப்பு. இதுல வண்டியில லைட் வேறயில்ல. இந்த லட்சணத்துல பேச வந்துட்ட. வண்டி வாங்கினா மட்டும் போதாது. அதை மெயிண்டெயின் பண்ணவும் தெரியணும்” என்றான் கிண்டலாக.

“தோடா! அட்வைஸ் ஐயாசாமி வந்துட்டாரு” அவளும் தனது கோபத்தை வார்த்தைகளில் கொட்ட ஆரம்பித்தாள்.

“தோடாவா… மெட்ராஸ் பார்ட்டியா இது?” என்று வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டான்.

“உன் வண்டியில தான் விளக்கெரியுதே… நீ பார்த்து வரவேண்டியது தானே… உன் கண் என்ன பிடறியிலயா இருக்கு?” என்று கேலியாகச் சிரித்தாள்.

அவனுக்குச் சுறுசுறுவென கோபம் ஏறியது.

“உன்கிட்டலாம் மனுஷன் பேசுவானா? பிடாரி!” என்றவன் வேகமாகச் சென்று வண்டியை எடுத்தான்.

“மூஞ்சியைப் பாரு…” என்று கடுகடுத்துக் கொண்டே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

அதுவரை எரியாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்த ஹெட்லைட், பளிச்சென ஜோராக ஒளிர்ந்தது.

‘இது முதல்லயே ஒழுங்கா எரிஞ்சித் தொலைஞ்சிருந்தா, மெயின்ரோட்லயே போயிருப்பேன். இந்தப் பக்கம் வந்து, இவன்கிட்ட மோத வேண்டியதா போச்சு’ அலுப்பும், சலிப்புமாக வீட்டை நோக்கி ஸ்கூட்டியை விரட்டினாள்.

சொன்னபடியே வீட்டிற்கு வந்து சேர்ந்தவள், “ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி! உங்களுக்குச் சிரமம் கொடுத்துட்டேன்” என்றாள்.

“அதனால என்னம்மா? உங்க அம்மாகூட உட்கார்ந்து பழங்கதையெல்லாம் பேசிட்டு இருந்தோம். மனசுவிட்டுப் பேசிக்கவும் நமக்கு மனுஷங்க வேணுமில்ல” என்று ஆதரவுடன் சொன்னார் பரிமளம்.

“உங்ககிட்ட பேசினதுல எனக்கும் மனசுல கொஞ்சம் பாரம் குறைஞ்சிருக்குக்கா” என்ற அன்னையை, அர்த்தத்துடன் பார்த்தாள் திவ்யா.

“சரிம்மா. நான் கிளம்பட்டுமா?” – பரிமளம்.

“ஆன்ட்டி! பத்து நிமிஷத்துல டிஃபன் ரெடி பண்ணிடுறேன். சாப்டுட்டுக் கிளம்பலாம்” என்று துப்பட்டாவை இழுத்துக் கட்டிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் திவ்யா.

“இல்லம்மா! இன்னொரு நாள் பொறுமையா வந்து சாப்பிடுறேன். என் தம்பியோட சின்னப் பொண்ணும், மாப்பிள்ளையும் ஊர்லயிருந்து வந்திருக்காங்க. வைதேகிக்கு உடம்பு சரியில்லன்னதும் மனசு கேட்கல கிளம்பி வந்துட்டேன்” சிரித்துக்கொண்டே சொன்னவரது மொபைல் ஒலித்தது.

“இதோ, என் தம்பிப் பையன் போன் பண்ணிட்டான்” என்றவர், ‘தான் தெருமுனைக்கு வந்துவிடுவதாக தகவல் சொல்லிவிட்டு மொபைலை அணைத்தார்.

“இருங்க ஆன்ட்டி! நான் தெருமுனை வரைக்கும் வரேன்” என்றவளை தடுத்து வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் பரிமளம்.

இரவு உணவிற்குப் பிறகு, எல்லோரும் உறங்கச் சென்றபின்னும், பரிமளத்திற்கு உறக்கம் வரமறுத்தது. வைதேகி சொன்ன விஷயத்தையெல்லாம் நினைத்துப் பார்த்தவருக்குப் பரிதாபமாக இருந்தது. பெற்றவரது துணையும் இல்லாமல், கட்டியவனின் அரவணைப்பும் இல்லாமல் ஒரு பெண் எந்த அளவிற்கு நொந்து போயிருப்பாள் என்று அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இனியாவது அவளது வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்கட்டும். இப்போதைக்கு அவளுக்கு எல்லாமே திவ்யா தான். அவளது வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொடுப்பது தான் தனது கடமை என்று அவர் கண்ணீர் மல்க பேசியதை நினைத்தபடியே படுத்துக் கொண்டிருந்தவர், ஹாலில் சப்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தார்.

ஸ்ரீராம் லேப்டாப்பில் ஏதோ செய்துகொண்டிருந்தான்.

“என்ன ஸ்ரீ தூங்கலையா?”

“தூக்கம் வரலை அத்தை! வர்ஷாவோட வளைகாப்புக்கு இன்விடேஷன் டிசைன் பண்ணிட்டிருந்தேன். சார்ஜ் கம்மியாகிடுச்சி… என் ரூம்ல ஃப்ளக் பாயிண்ட் வேலை செய்யல. அதான், ஹாலுக்கு வந்துட்டேன்” என்றான்.

“சரிப்பா ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்காதே…” என்று சொல்லிவிட்டு அறைக்குச் செல்லத் திரும்பியவர் சட்டென நின்றார். மீண்டும் தம்பியின் மகனைத் திரும்பிப் பார்த்தார்.

‘காசி விசுவநாதா! இதுக்காகத்தான் வைதேகியை உன்னோட சன்னதியிலேயே எனக்கு அறிமுகப்படுத்தி வச்சியா? உன்னோட விருப்பம் அதுவாயிருந்தா… எனக்கும் சந்தோஷம்’ என்று நினைத்துக் கொண்டவர், ஹாலில் மாட்டியிருந்த காசிவிஸ்வநாதரின் படத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

காதல் வளரும்...