Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
139
487
63
753

அத்தியாயம் - 18

கடைசி நேரத்தில் வந்து விழாவில் கலந்து கொள்ளும் மருமகனைக் கண்டதும், சஹானாவின் பிறந்த வீட்டினருக்குப் பெரும் சந்தோஷம். வளைகாப்பு வைபவம் நல்லநேரத்தில் ஆரம்பிக்க, அனைவரது மனமும் நிறைந்திருந்தது.

வர்ஷா, சஹானா வயதையொத்த பெண்கள் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு அவளுக்கு வளையல் அணிவிக்க, வர்ஷா நாணத்துடன் அமர்ந்திருந்தாள். மனைவியின் புன்னகையையும், பெண்களின் கேலியையும் கண்ட பிரபாகர் முகம் சிவக்க நின்றான்.

“டேய் மாப்பிள்ளை! ஓவரா வெட்கப்படாதே… விடு. நாளைக்கு இவங்க எல்லோருடைய வீட்டுக்காரரும் வெட்கப்பட்டு இப்படி ஒரு ஓரமா நிக்கத்தான் போறாங்க. நாமல்லாம் பார்க்கத்தான் போறோம்” என்றான் ஸ்ரீராம்.

“உங்களுக்கும், நாளைக்கு அதேதான் அத்தான்! மறந்துடாதீங்க” கூட்டத்தில் ஒருத்தி ஸ்ரீராமைப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.

“இதுக்கெல்லாம் அசரும் ஆளா நான்?” என்றவன் திவ்யாவைப் பார்த்து புருவத்தை உயர்த்திச் சிரிக்க, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.

விசேஷத்திற்கு வந்த பெண்கள் அனைவருமே, விதவிதமான கண்ணாடி வளையல்களை அணிந்து கொள்ள, தேவி இரு கைகளிலும் சூடியிருந்த வளையல்களைச் சேர்த்துத் தட்டிப் பார்த்தாள். இரு கைகளையும் தட்டி கைகளை விலக்கியவள், விழா நடந்துகொண்டிருந்த ஹாலின் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவனைப் பார்த்ததும், சிலையென சமைந்து நின்றாள்.

‘ஹய்யய்யோ! இவன் எங்கே இங்கே வந்தான்?’ அவனைக் கண்ட பயத்தில் மனத்திற்குள் புலம்பினாலும், அங்கிருந்து நகரமுடியாமல் நின்றிருந்தாள்.

வந்தவன் அவளைக் கடந்து, ஒரு பக்கமாக அமர்ந்திருந்த ஸ்ரீராம், பிரபாகர் இருவரது முதுகிலும் தட்டினான்.

திரும்பிய இருவரும் ஒரேநேரத்தில், “டேய் தமிழ்!” என்று சந்தோஷத்துடன் சப்தமிட்டனர்.

“ஏன்டா! இதான் வர்ற நேரமா?” என்று அவனது வயிற்றில் லேசாகத் தட்டினான் பிரபாகர்.

“சாரிடா! காலைல தான் ஊர்லயிருந்து வந்தேன்” என்றான் தமிழ்.

“சரிப்பா! நீ கடமை தவறாத காவல் அதிகாரின்னு ஒத்துக்கறோம்” என்றான் ஸ்ரீ.

“என்னடா பண்றது? வேலை அப்படி ஈவ்னிங் திருநெல்வேலில ஒரு மீட்டிங். அதைச் சாக்கா வச்சி வந்தேன். சஹி கல்யாணத்துக்கும் வர முடியல. இங்கே எல்லோரையும் ஒரே இடத்துல பார்த்துடலாம்னு வந்தேன்” என்றான்.

“ஆஹா! கல்யாணத்துக்குத் தான் வரமுடியல. அதே சென்னைல தானே இருக்கீங்க. உங்ககிட்ட அட்ரஸ் இருக்கில்ல. வீட்டுக்கு வந்திருக்கலாம் இல்லயா?” என்று கேட்டுக் கொண்டே அங்கே வந்தாள் சஹானா.

“நான் என்னம்மா பண்ணட்டும்? அதான் இப்போ வந்துட்டேனே. கட்டாயம் உன் வீட்டுக்கு ஒருநாள் வரேன். இப்போ, உன் பேமலியை அறிமுகப்படுத்தி வை” என்றான் தமிழ்.

மாமனார், மாமியாரை அறிமுகப்படுத்திவிட்டு, “இவர் தமிழ்ச் செல்வன். அசிஸ்டண்ட் கமிஷனர். அண்ணாவுக்கும், அத்தானுக்கும் க்ளோஸ் ஃப்ரெண்ட். எனக்கு இன்னொரு அண்ணன்” என்று அவனை, அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள்.

“அத்தை! இவர் எங்கே போனார்?” என்று பிரபுவைப் பற்றி விசாரித்தாள்.

“ஏதோ போன் வந்ததும்மா, சிக்னல் சரியா இல்லன்னு வெளியே போனான்” என்று பதிலளித்தார் கௌரி.

“ஓ!” என்றவள் சற்று தள்ளி அமர்ந்திருந்த தேவியைக் கண்டதும், “தேவி! இங்கே வா!” என்று சப்தமாக கைநீட்டி அழைக்க, ‘ஹய்யோ! மாட்டினேன். இப்போ என்னையெல்லாம் அறிமுகப்படுத்தலைன்னு யாரு அழுதா?’ மனத்திற்குள் புலம்பிக் கொண்டவள், உஸ்சென்று மூச்சை மூன்று நான்கு முறை ஆழ இழுத்துவிட்டுக் கொண்டு, ‘கடவுளே! இவனுக்கு என் முகம் மறந்து போயிருக்கணும்’ என்று வேண்டிக் கொண்டே, சஹானாவின் அருகில் சென்றாள்.

“சொல்லுங்கண்ணி!” என்றவள் அருகில் நின்றிருந்தவனைத் தயக்கத்துடன் ஓரப்பார்வை பார்த்தாள்.

“அண்ணா! இவள் தேவி. என் நாத்தனார்” என்று அவளை அறிமுகப்படுத்த புன்னகையுடன், “ஹலோ!” என்றான்.

அவளுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். ‘உண்மையிலேயே என்னை மறந்துவிட்டானா? எப்படியோ மறந்து போயிருந்தால் சரி’ என்று நினைத்தவளுக்கு, சற்று நிம்மதியாக இருந்தது.

அவனுடன் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சஹானா சென்றுவிட, தமிழ்ச் செல்வன் நண்பர்களுடன் அரட்டையில் இறங்கினான்.

விழாவை நல்லபடியாக நடத்திமுடித்த திருப்தியுடன் அனைவரும் அமர்ந்திருந்தனர். நெருங்கிய உறவினர்களைத் தவிர அனைவரும் சென்றிருக்க, ஸ்ரீராமின் திருமணத்தைப் பற்றிய பேச்சு ஆரம்பித்தது.
அதற்குள் ஸ்ரீராமிற்காகப் பார்த்திருக்கும் பெண் என்று திவ்யாவை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்க, உறவுக்கூட்டம் திருப்தியுடன் தலையாட்டினர்.

“அப்புறம் என்ன கணேசா! கையோட அவங்க நிச்சயத்தையும் முடிச்சிடு. வர்ஷாவுக்குக் குழந்தை பிறந்ததும் கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்றார் வயதில் மூத்தவரான ஒருவர்.

அனைவரும் அதை ஆமோதிக்க, சஹானாவின் புகுந்த வீட்டினரும் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டனர். அந்த மாத இறுதியிலேயே நல்ல நாள் இருக்கிறது என்றும் அன்றே நிச்சயத்தை வைத்துவிடலாம் என்று நாளும் குறிக்கப்பட்டு விட்டது.

உறவுக்கூட்டமும், “அதான் இங்கேயே பேசிட்டோமே. இதையே அழைப்பா எடுத்துக்கறோம். ஜமாய்ச்சிடுவோம்” என்று சொல்லிவிட, இரு வீட்டினருக்கும் உண்டான சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

வைதேகி மகளைப் பார்த்து ஆசையுடன் கண்கலங்க, திவ்யா அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டாள். அன்னையின் நெகிழ்வையும், மகளின் ஆறுதலையும் பார்த்த ஸ்ரீராம் முறுவலித்தான்.

அனைவரும் வீட்டிற்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்க, யாரிடமோ பேசி முடித்து மொபைலை அணைத்த தேவி, அங்கே வந்த தமிழ்ச் செல்வனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

பதிலுக்குச் சிரித்தவன், “ஹெல்மெட்டை உங்க சேஃப்டிக்கு போட்டுக்கறீங்களா? இல்ல, இன்னும் கண்ணாடிக்குத் தான் மாட்றீங்களா மிஸ்.தேவி!” என்று கேட்டான்.

அவளுக்குக் குப்பென உடலில் சூடு பரவியது. ‘அப்படியானால், இவன் எதையும் மறக்கவில்லை. என்னையும் மறக்கல. இவ்வளவு நேரம் தெரியாதது போலவே இருந்திருக்கிறான்’ என எண்ணியவளுக்கு எங்கேயாவது முட்டிக் கொள்ளவேண்டும் போலிருந்தது.

அதற்குள் சஹானா அவளை அழைப்பதைக் கண்டவன், “ஹலோ! சஹானா உங்களைக் கூப்பிடுறா” என்று சொல்லிவிட்டுச் செல்ல, தேவி தவிப்புடன் சென்றாள்.
‘நடந்ததை இவன் யாரிடமும் சொல்லாமல் இருக்கணும் கடவுளே!’ மனத்திற்குள் வேண்டிக் கொண்டே காரில் ஏற, அவன் பைக்கில் அமர்ந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

**************

“சஹி! நீயாவது மாப்பிள்ளைகிட்ட சொல்லக்கூடாதா? வளைகாப்பு முடிஞ்சதுமே கிளம்பணுமா? இருந்து நாளைக்கு எல்லோரும் ஒண்ணா கிளம்பக்கூடாதா?” சுகுணா, ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டிருக்க, சஹானா தண்ணீர் பாட்டிலை நிரப்பிக் கொண்டிருந்தாள்.

“அம்மா! அவருக்குத் தலைக்கு மேல வேலையிருக்கு. வளைகாப்புக்கு வந்ததே அதிசயம். அண்ணாவோட நிச்சயதார்த்தத்துக்கு ரெண்டு நாள் முன்னாலயே வந்திடுவார்” என்று அன்னையைச் சமாதானப்படுத்தி விட்டுத் தண்ணீர் பாட்டிலுடன் சென்றாள்.

“நம்ம ஆதங்கத்தை நாம சொன்னா, இவள் சமாதானம் சொல்லிட்டுப் போறா. நல்லப் பொண்ணு!” குறையாகச் சொன்னாலும், மகளை நினைத்து அவருக்குப் பெருமையாக இருந்தது.

“எல்லாம் தெரிஞ்சது தானே. அந்தமட்டும் சந்தோஷமா நம்ம குழந்தையை வச்சிருக்காரில்ல. அதுல எந்தக் குறையும் இல்லாம தானே இருக்கா. அதை நினைச்சிக்க” தம்பி மனைவிக்கு ஆறுதல் சொன்னார் பரிமளம்.

“அதென்னவோ உண்மைதான் அண்ணி! அந்த வகைல சஹி ரொம்பக் கொடுத்து வச்சவ” என்று பெருமிதத்துடன் சொன்னார் சுகுணா.

பிரபு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தான்.

“பிரபு! அடுத்தமுறை நீ தங்கிட்டுப் போறா மாதிரி வரணும். இப்படி அவசரமா கிளம்பி ஓடக்கூடாது” ஸ்ரீராம் சொல்ல, “நிச்சயமா. உன் கல்யாணத்துக்கு வந்து ஒருவாரம் தங்கறேன் ஸ்ரீ” என்று சிரித்தான்.

“நீ சொன்னதை பத்திரமா தண்ணில எழுதி வைக்கிறேன்” என்றான் கிண்டலாக.

“ஹேய்! கொஞ்சமாவது நம்பிக்கை வைப்பா” என்றான் பிரபு.

“அடப்பாவி! உன்னை நம்பாம, யாரைடா நம்பப் போறேன்” என்றவனைப் பார்த்த பிரபுவின் முகம் லேசாக இறுகியது.

உடனே தன்னைச் சமாளித்துக் கொண்டவன், “பிரபா! குழந்தை பிறந்ததும் சொல்லுங்க. உடனே வந்திடுறோம்” என்றான்.
“நிச்சயமா. நீ ஃபங்ஷனுக்கு வந்ததே எனக்கு ரொம்பச் சந்தோஷம்” என்றான் பிரபாகர்.

சிரித்தவன், “தேவி எங்கே காணோம்?” என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

“ஆமாம், அவளோட சத்தமே காணோமே… என்ன பண்றா?” – கௌரி.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் மாடிக்குப் போனா” சஹானா சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாடியிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தாள் தேவி.

அவளைப் பெயர் சொல்லி அழைத்தும் ஏதோ, கனவில் நடப்பதைப் போலச் சென்று கொண்டிருந்தாள்.

“என்னாச்சு இவளுக்கு? கூப்பிடுறதைக் கூட காதில் வாங்காம போற?” மகளின் போக்குப் புரியாமல் சொன்னார் கௌரி.

“ஏய்! தேவி! என்று வர்ஷா அவளைப் பிடித்து நிறுத்தினாள்.

என்னவென்று புரியாமல் விழித்தவள், “என்னண்ணி?” என்று கேட்டாள்.

“ம், நொன்ன அண்ணி. உன்னை எவ்வளவு நேரமா கூப்பிடுறாங்க. நானும் வீட்டுக்கு வந்ததுலயிருந்து பாக்கறேன், மயங்கி மயங்கி நிக்கிற” என்று அதட்டலாகக் கேட்டாள் வர்ஷா.

“அதெல்லாம் ஒண்ணுமில்லயே” என்றாள் அவசரமாக.

“உன் அண்ணன் ஊருக்குக் கிளம்பறார். பாசமலரைப் பார்க்காம கிளம்ப மனசில்லையாம். சீக்கிரமா வந்து வழியனுப்புமா!” கிண்டலாகச் சொன்னான் ஸ்ரீராம்.

“உங்களை விடவா நாங்க பாசமலராகிட்டோம்?” என்று கழுத்தை நொடித்தவள், “கிளம்புண்ணா! நாங்க நாளைக்கு நைட் வந்திடுவோம்” என்று சொல்லி பிரபுவை வழியனுப்பி வைத்தாள்.

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டவன், ‘வருகிறேன்’ என்பது போல சஹானாவைப் பார்த்துத் தலையசைக்க, அவளும் இதழ்களில் முறுவலுடனும், விழிகளில் சிறு சஞ்சலத்துடனும் அவனை வழியனுப்பினாள்.

காதல் வளரும்...
 
  • Like
Reactions: lakshmi and saru