Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
விமானப் பணிப்பெண்ணான மகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட தந்தை செய்த சுவாரஸ்யம்

உறவுகள் அழகானவை. அதிலும் அப்பா - மகள் உறவு அதீத அழகு. விமானப் பணிப்பெண்ணான தனது மகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட அப்பா செய்த நெகிழ்ச்சியான செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் ஒஹியொ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹால் வாகன். இவரின் செல்ல மகள் பியர்ஸ் வாகன். இருவரும் கிறிஸ்துமஸ் நாளை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர். விமான பணிப்பெண்ணான பியர்ஸ், திடீரென கிறிஸ்துமஸ் அன்று வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மகளைப் பிரியாமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் ஹால். மகள் பணிபுரியும் அனைத்து விமானங்களிலும் உடன் செல்ல முடிவெடுத்தார். உடனடியாக நாடு முழுவதிலும் பியர்ஸ் பயணிக்கும் அனைத்து விமானங்களிலும் முன்பதிவு செய்தார். மகளுடன் இரண்டு நாட்கள் தொடர்ந்து 6 விமானங்களில் பயணித்தார்.
ஒரு விமானப் பயணத்தின்போது உடன் வந்த மைக் லெவி என்னும் விற்பனைப் பிரதிநிதி, இந்தத் தகவலை ஹாலிடம் இருந்து கேட்டுத் தெரிந்துகொண்டார். இந்த நெகிழ்ச்சியான செயலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். அந்தப் பதிவை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்தனர். 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்தனர்.
இதே பதிவைப் பகிர்ந்த மகள் பியர்ஸ், தந்தைக்கும் தனது சக ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார். பகிர்வுக்குப் பதிலளித்த நெட்டிசன்கள் பலர், இது ''ஒரு தந்தை தனது மகளுக்கு அளித்த அற்புதமான கிறிஸ்துமஸ் பரிசு'' என்று நெகிழ்ந்தனர்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
ரூ.5000 கோடியை தானமாக எழுதிவைத்த நடிகர்
ஹாங்காங்



உலகைவிட்டுப் போகும்போது எதையும் கொண்டு போகப் போவதில்லை என்ற வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்தாரோ என்னவோ ஹாங்காங் திரை நட்சத்திரம் சவ் யுன் ஃபேட் தனது சொத்துக்களை தானமாக வழங்க உறுதியேற்றிருக்கிறார். "The Giving Pledge" என்ற உறுதியேற்பு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டிருக்கிறார்.
"The Giving Pledge" என்ற ஒப்பந்தம் உலகப் பணக்காரர்கள் பில் கேட்ஸ், வாரன் பஃப்ஃபட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. பணக்காரர்கள் ஏழை எளியவர்களுக்கு தானம் வழங்குவதை ஊக்குவிக்க இது தொடங்கப்பட்டது.தற்போது லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் நடிகர் சவ் யுன் ஃபேட்.
Crouching Tiger, Hidden Dragon தமிழில் பாயும் புலி பதுங்கும் நாகம் என்ற பெயரில் வெளியான படம் இது. உலகளவில் பிரம்மாண்ட ஹிட் அடித்த படம் இது.
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், ஏ பெட்டர் டுமாரோ ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தன.
சவ் யுன் ஃபேட்டுக்கு தற்போது வயது 62. 2015-ம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அதிக சம்பளம் வாங்கும் ஹாலிவுட் நடிகர்கள் பட்டியலில் இவர் இடம்பெற்றார்.
இந்நிலையில், தென் கொரியாவில் முன்வா ப்ராட்காஸ்டிங் நிறுவனத்துக்கு (MBC)கடந்த வாரம் வழங்கிய நேர்காணலில் தன்னுடைய மறைவுக்குப் பின்னர் தனது சொத்துக்களை மக்களுக்குச் சேரும் வகையில் எழுதிவைக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் "பணம் எப்போதும் நம்முடன் இருக்கப்போவதில்லை. ஒருநாள் இந்த உலகைவிட்டுப் போகும்போது நீங்கள் உங்கள் உடைமைகளை விட்டுச் செல்ல வேண்டும். உங்கள் பொருட்கள் உங்களுக்குப் பின் மற்றவர்களுக்குப் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். மரணத்துக்குப் பின்னர் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை உங்களுடன் எடுத்துச் செல்லவா முடியும்? அதனால் என் இறப்புக்குப் பின்னர் எனது சொத்திலிருந்து ரூ,5000 கோடி பணத்தை மக்களுக்கு தானமாக வழங்க உறுதியேற்றுள்ளேன். என்னுடைய முடிவை எனது மனைவி ஜாஸ்மின் டானும் முழுமையாக ஆதரிக்கிறார்" என அவர் கூறிய கருத்து பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது.
சவ்வின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது அவருக்கே உறுதியாகத் தெரியவில்லை. இதனால், பல்வேறு ஊடகங்களும் சவ்வின் சொத்து விவரமென பல தகவல்களைத் தெரிவிக்கின்றன. ஆனால், இந்திய ரூபாய் மதிப்பில் அவர் ரூ.5012 கோடியே 54 லட்சத்து 33 ஆயிரத்து ஐநூறு அளவிலான சொத்துக்களை தானமாக வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
சவ்வை ஹாங்காங் மக்கள் பாசமாக "Brother Fat" என்று அழைக்கின்றனர். சவ்வின் பழக்கவழக்கங்கள் பற்றி அவரது மனைவி டான் கூறும்போது, "அவருக்கு எளிமையான உணவே பிடிக்கும். சாலையோரக் கடைகள் சாப்பாட்டை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார். பல ஆண்டுகளாக நோக்கியா ஃப்ளிப் ஃபோனையே பயன்படுத்தி வந்தார். இப்போது அந்த ஃபோன் செயலிழந்துவிட்டது" என்றார்.
எளிமையாக சாப்பிடவே விருப்பம்..
எம்பிசி செய்தி நிறுவனத்தின் பேட்டியில் சவ் தனது உணவுப் பழக்கம் பற்றி பேசும்போது, "சாப்பிடுவதற்கு உணவு கிடைத்தால்போதும். ஏனெனில் நாங்கள் ஒருகாலத்தில் பரம ஏழைகள். அப்போதெல்லாம் உருளையும் கொஞ்சம் காய்கறியும் சாப்பிடக் கிடைத்தாலே மகிழ்ச்சியடைந்துவிடுவேன். புத்தாண்டு பிறப்பன்று கறியோ கோழியோ கிடைத்துவிட்டால் பேரானந்தம் வந்துவிடும்" என்றார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
போராட்டக் குணத்தைக் கற்பிக்கும் சைனிக் பள்ளி!


இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராணுவம், கப்பற்படை, விமானப் படைகளில் உயர் நிலை அதிகாரிகளாய்த் தேர்ந்தெடுக்கப் படுவதற்காகச் சிறுபிராயத்தில் இருந்தே மாணவர்களைத் தயார்படுத்த மத்திய அரசாங்கத்தால் 1961-ல் சைனிக் பள்ளிகள் நிறுவப்பட்டன. இந்தியா முழுவதும் 28 சைனிக் பள்ளிகள் உள்ளன. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் சைனிக் உண்டு உறைவிடப் பள்ளி திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் செயல்பட்டுவருகிறது.
மத்திய அரசின் பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கில வழிப் பள்ளி இது. இங்குப் பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்துக் கற்றுத் தரப்படுகின்றன.
சி.பி.எஸ்.இ.யில் இணைக்கப்பட்ட இந்தப் பள்ளியில், பயிற்று மொழி ஆங்கிலமாக இருந்தாலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இங்குப் பயிலலாம். பெற்றோரின் மாத வருமான அடிப்படையில், ரூ.50,000வரை மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை வழங்கப்படும்.
ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 6-ம் வகுப்பில் சேர, 10-ல் இருந்து 11 வயதுக்குள் இருக்க வேண்டும். 9-ம் வகுப்பில் சேர 13- இருந்து 14 வயதுக்குள் இருக்க வேண்டும். அத்துடன், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8-ம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் 9-ம் வகுப்பில் சேரத் தகுதி உண்டு. இவற்றில் சேர்வதற்குத் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமின்றி நேர்முகத் தேர்விலும் உடல் தகுதியிலும் வெற்றி பெற வேண்டும்.
எஸ்.சி. வகுப்பினருக்கு 15 சதவீதமும் எஸ்.டி. வகுப்பினருக்கு 7.5 சதவீதமும் படை வீரர்கள், ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படையினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அமராவதி சைனிக் பள்ளியின் முதல்வர் குரூப் கேப்டன் ஹர்ஜித் சிங் சிதானா, விஎஸ்எம். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தவர். 1992-ல் இந்திய விமானப் படையில் சேர்ந்தார். பாட்டியாலாவில் உள்ள தாபர் பல்கலைக்கழகத்தில் பிடெக்., எம்டெக்., பயின்ற இவர் மனித வள மேம்பாட்டு துறையில் எம்.பி.ஏ., பாதுகாப்புத் துறையில் எம்.ஃபில். முடித்தவர். 2018 குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவருக்கு விஷிஷ்த் சேவா விருது வழங்கப்பட்டது
“1961, ஜூன் 23-ல் அன்றைய மத்தியப் பாதுகாப்பு அமைச்சரான வி.கே.கிருஷ்ண மேனனால் முதல் சைனிக் பள்ளி திறக்கப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்து பொது மக்களில் இருந்து ஆயுதப்படை அதிகாரிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜவாஹர்லால் நேருவும் கிருஷ்ண மேனனும் உணர்ந்தபோது தற்காப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். உயர்நிலைக் கல்வி, பொதுப் பள்ளிகளில் பாடத்திட்ட வளர்ச்சியை வழங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் தேவை என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
ஆகையால், நாட்டில் பள்ளிக் கல்வித் துறையுடன் ராணுவத்துக்குத் தேவையான அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்ற பார்வையில் பொதுப் பள்ளியாக இவற்றைத் தொடங்கினர். தேசியப் பாதுகாப்பு என்பதே இதன் இலக்கு. இதர துறைகளுக்கும் செல்லத் தேவையான கல்வி அறிவும் இங்குப் புகட்டப்படுகிறது. அதே நேரத்தில் சைனிக் பள்ளிகளில் தரம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.” என்கிறார் ஹர்ஜித் சிங் சிதானா.
அமராவதி சைனிக் பள்ளியில் 600 மாணவர்கள் பயில்கின்றனர். தற்போதுவரை மாணவர்கள் மட்டுமே பயிலும் பள்ளிகளாக இவை உள்ளன. தேசியப் பாதுகாப்பு அகாடமி எப்போது மாணவிகளுக்கும் பயில வாய்ப்பளிக்கிறதோ அதே நாளில் சைனிக் பள்ளிகளிலும் மாணவிகள் சேர்க்கை தொடங்கும் என்கிறார் ஹர்ஜித் சிங் சிதானா.
இந்தியாவைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று உண்டு உறைவிடப் பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்தியது. நாட்டின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதில் இடம்பெற்றன.
அதில் ஆசிரியர் நலன் மற்றும் வளர்ச்சி, போட்டியை எதிர்கொள்ளும் திறன், நிறுவனத்தின் நற்பெயர், விளையாட்டு கல்வி, வாழ்க்கைக் கல்வி மற்றும் நிர்வாகம், மாணவர்களின் தனிப்பட்ட நலன் பேணுதல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், கட்டமைப்பு, சமூகச் செயல்பாடுகள் எனப் பல்வேறு துறைகளில் பள்ளிகளின் பங்களிப்பு குறித்தும் ஆய்வு நடைபெற்றது.


அதில் அமராவதி சைனிக் பள்ளி மாநிலத்தில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 20-வது இடத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவின் சிறந்த உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஒன்றாக அமராவதி சைனிக் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ஹர்ஜித் சிங் சிதானா
“எத்தனை முறை வீழ்ந்தாலும் எழுந்து நின்று சமூகத்தில் நிலவும் சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொள்ளும் போராட்டக் குணத்தை சைனிக் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டுகிறது. சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, விசுவாசம் ஆகியவை இங்குத் துளிர்த்தெழும் இளமனங்களில் விதைக்கப்படுகின்றன.
சைனிக் பள்ளி களில் அவர்கள் கற்றுக்கொள்ளும் வாழ்க்கைத் திறன்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கும். என் மாணவர்களிடமிருக்கும் திறனை வேறு எந்த மாணவரிடமும் ஒப்பிட முடியாது” என்று மிடுக்குடன் சொல்கிறார் ஹர்ஜித் சிங் சிதானா.
சைனிக் பள்ளியில் சேர்க்கைக்கு உரிய நுழைவுத் தேர்வு புத்தாண்டில் ஜனவரி 6 அன்று சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரியில் உள்ள வள்ளலார் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டையில் உள்ள லூர்த்துமாதா எம்.எச்.எஸ்.எஸ்., அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளி ஆகிய இடங்களில் நடக்கவிருக்கிறது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
துணிப்பை கொண்டு வந்தவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ காய்கறி வழங்கல்: பாளையங்கோட்டை வியாபாரி அசத்தல்
திருநெல்வேலி



பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக துணிப்பை கொண்டுவந்தவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ காய்கறி விற்பனை செய்து பாளை யங்கோட்டை வியாபாரி அசத்தி னார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்தவர் டேவிட்(50). இவர், பாளை யங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரி சாலையில் காய்கறி வியாபாரம் செய்து வருகி றார். பிளாஸ்டிக் தடை அறி விக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களாக தனது கடைக்கு வரும் வாடிக்கை யாளர்களிடம் ஜனவரி 1-ம் தேதி துணிப் பை கொண்டுவந்தால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ காய்கறி விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி, நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ காய்கறி விற்பனை செய்தார். அத்துடன் ஒரு பாக்கெட் உப்பும் இலவசமாக வழங்கினார்.
இதுகுறித்து டேவிட் கூறும் போது, “பிளாஸ்டிக் பொரு ட்களை தடை செய்தது வர வேற்கத்தக்கது. வாடிக்கையா ளர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை அறிவித்தேன். இன்று (நேற்று) 430 கிலோ காய்கறிகளை கிலோ ஒரு ரூபாய் வீதம் விற்பனை செய்தோம்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி சலுகை விலையில் கரும்பு விற்பனை செய்யவும், சுதந்திர தினம், காந்திஜெயந்தி நாளில் காய்கறிகளை சலுகை விலையில் விற்பனை செய்யவும் உள்ளேன். வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் உப்பு பாக்கெட் இலவசமாக வழங்கினேன்” என்றார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
நம்பிக்கையை விதைக்கும் ‘பருப்புக்காரர்கள்’- ‘பண்டமாற்று முறை’ காலத்தில் தொடங்கி ‘ஆன்லைன்’ யுகத்திலும் தொடர்கிறது

திருச்சி



புளிக்காரர், பருப்புக்காரர், கடலைக்காரர் என பல்வேறு பெயர்களில் மக்களால் அழைக்கப்படும் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், திருச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாள்தோறும் பலசரக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று வீடுகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
வாரத்துக்கு ஒருமுறை வரும் வியாபாரி வராவிட்டால், மறுவாரம் வரும்போது, ஏன் போன வாரம் வரவில்லை என்று உறவினர்களிடம் கேட்பது போல வாடிக்கையாளர்கள் கேட்பது இத்தகைய வியாபாரிகளிடம் மட்டும்தான் என்று சொல்லலாம்.
மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையை எடுத்துவிட்டு பெரிய மூங்கில் கூடை, அதன் இருபுறமும் பெரிய பைகள், முன்னால் முடிந்த வரை அட்டைப் பெட்டியில் பொருட்கள் என வண்டி முழுவதும் மளிகை பொருட்கள் மற்றும் தின்பண்டங்களால் நிறைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்வார்கள்.
நடமாடும் மளிகை கடையாக மோட்டார் சைக்கிளில் வலம்வரும் இந்த பருப்புக்காரர்களின் பாரம்பரியம், 50 ஆண்டுகளுக்கு முன் தலைச் சுமையாக புளி, மிளகாய் வற்றல் போன்ற பொருட்களை கிராமங்களில் வீடு வீடாக கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக அவர்கள் விளைவித்த நெல், பயறு வகைகள் உள்ளிட்ட சிறு தானியங்களை வாங்கிச் செல்வார்கள். பணம் இல்லாத பண்டமாற்று முறைக்கு உதாரணமாக இவர்களைச் சொல்லலாம். அந்த காலகட்டத்தில் இவர்களை மக்கள் புளிக்காரர் என்று அழைத்தனர். இத்தொழில் அடுத்த தலைமுறையினரின் கைக்கு வந்தபோது புளி, மிளகாய் வற்றலுடன், சிறு தானியங்கள், அரிசி, பலசரக்கு ஆகிய பொருட்களையும் சேர்த்துக் கொண்டனர். நடந்து செல்வதில் இருந்து சைக்கிளுக்கும் பின்னர் மோட்டார் சைக்கிளுக்கும் மாறினர்.
இன்றைக்கு குக்கிராமங்களில் கூட மளிகை, பெட்டிக் கடைகள் வந்துவிட்ட நிலையிலும் இவர்களுக்கான வரவேற்பு மக்களிடம் குறையவில்லை.
இதுகுறித்து கருமண்டபத்தை சேர்ந்த வியாபாரி ரவி கூறியபோது, "தாத்தா, அப்பா செய்த வியாபாரத்தை தொடர்ந்து நான் செய்கிறேன். திருச்சியில் மட்டும் 500-க்கும் அதிகமான வியாபாரிகள் இருக்கிறோம். ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கிராமம் அல்லது ஏரியா என பிரித்துக்கொண்டு அங்கு செல்வோம். ஒருவர் பார்க்கும் லைனில் மற்றவர் வியாபாரம் செய்ய மாட்டார்.
பெரும்பாலும் கடனாக பொருட்களை வழங்குவோம். வார சம்பளத்துக்கு வேலைக்கு செல்பவர்கள் சனிக்கிழமை தோறும் பணம் கொடுத்து விடுவார்கள். மாத கணக்கும் உண்டு.
இதுதவிர, வீட்டு விசேஷங் களுக்கு மொத்தமாக பலசரக்கு வாங்கிக் கொண்டு மொய்யைக் கொண்டு கடனை கட்டுவதும் உண்டு. ஒரு வியாபாரி ஒரு லைனில் குறைந்தது ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கடனாக கொடுத்திருப்பார்.
பண்டமாற்று முறையில் தொடங்கிய இத்தொழிலில் பணப்புழக்கம் வந்து விட்டாலும் நம்பிக்கை இருப்பதால் இன்றும் தொடர்ந்து எங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது" என்றார்.
இதுகுறித்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த லதா கூறியபோது, "பருப்புக்காரர்களிடம் கடன் வியாபாரமே பிரதானம், அதையும் தாண்டி மனிதநேயம் இருக்கும். பணம் இல்லாத நேரத்திலும் பொருட்களை கொடுத்து உதவுவார்கள். ஆன்லைன், ஷாப்பிங் மால் என பெருகிவிட்ட நகர்ப்புற வியாபாரத்தில் கடன் என்பது வங்கி அட்டை சார்ந்து இருக்கும். பருப்புக்காரர்களிடம் நம்பிக்கையுடன் எந்த பொருளையும் வாங்கலாம். அவர்களிடம் இல்லையென்றால் அடுத்த வாரம் வாங்கிவந்து கொடுத்துவிடுவார்கள்.
10 வருடமாக ஒருவரிடமே எங்கள் பகுதியில் பொருட்கள் வாங்குகிறோம்" என்றார்.பருப்புக்காரர்களிடம் கடன் வியாபாரமே பிரதானம், அதையும் தாண்டி மனிதநேயம் இருக்கும். பணம் இல்லாத நேரத்திலும் பொருட்களை கொடுத்து உதவுவார்கள். பருப்புக்காரர்களிடம் நம்பிக்கையுடன் எந்த பொருளையும் வாங்கலாம். அவர்களிடம் இல்லையென்றால் அடுத்த வாரம் வாங்கிவந்து கொடுத்துவிடுவார்கள்