Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 2 | SudhaRaviNovels

அத்தியாயம் - 2

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் – 2

ஸ்வான் லேக் க்ரூப் ஆப் ஹோட்டல்ஸ் இந்தியா முழுவதிலும் மட்டுமல்லாது அயல்நாட்டிலும் பரந்து விரிந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது. ரிஷிவர்மனின் மூதாதையர்கள் தொடங்கி வைத்ததை வழி வழியாக தாங்கிப் பிடித்து மாபெரும் ஸ்தாபனமாக உருவாக்கி இருந்தார்கள்.

இந்தக் குழுமத்தின் ஒற்றை வாரிசாக அனைத்தையும் தாங்கிப் பிடித்து நிற்பவன் அவன். சமீபகாலமாக அவன் மனது எதிலேயும் நிலைக்காமல் ஒதுங்கி நின்று கொண்டிருந்தது. ஆனால் என்று கவின்யா தங்களது குழுமத்திலேயே போர்ட் ஆப் டைரெக்டரில் ஒருத்தியாக வந்தமர்ந்தாளோ, அன்றே பழிவெறி அவன் மனதில் குடி கொண்டது.

மீட்டிங்கிற்காக அனைவரும் வந்து குழுமி இருக்க, சம்மந்தப்பட்ட இருவரும் ஒரே நேரத்தில் அறைக்குள் நுழைந்தனர்.

வீட்டிலிருந்து கிளம்பிய போது இருந்த கவின்யா காணாமல் போயிருந்தாள். ரிஷிவர்மனை பார்க்கையில் அவளது இதழில் கிண்டலான ஒரு புன்னகை தவழ “ஹலோ மிஸ்டர் ரிஷி. நீங்க சீக்கிரம் வந்திருப்பீங்கன்னு நினைச்சேன்”.

கண்களில் அணிந்திருந்த கூலர்சை கழட்டிவிட்டு நிதானமாக அவளை திரும்பி பார்த்தவன் அங்குலம் அங்குலமாக அவளை ஆராய்ந்துவிட்டு ஏளனமான புன்னகையுடன் “காத்திருப்பது எனக்கு பிடிக்காத ஒன்று” என்று கூறியபடி தனது நாற்காலியில் சென்றமர்ந்தான்.

அவளது முகம் மீண்டும் இறுகிப் போனது. அவன் தன்னைப் பற்றி இப்போது என்ன நினைத்துக் கொண்டிருப்பான் என்று அறியாதவளா? தன்னுடைய இந்த ஆடை அலங்காரத்தை கேவலமாக எண்ணி இருப்பான் என்றெண்ணி அவமானத்தில் முகம் விழுந்து போனது.

அன்றைய மீட்டிங்கிற்கு தேவையானவற்றை பேச ஆரம்பித்தவனின் பார்வை அவ்வப்போது அவள் பக்கம் சென்று மீண்டது. அவளது கவனம் தங்களிடம் இல்லை என்பதை உணர்ந்தவனின் இதழ்கள் கடுமையை பூசிக் கொள்ள “மிஸ்.கவின்யா! நான் சொல்றது சரி தானே” என்றான் வேண்டுமென்றே சீண்டலாக.

தனது சிந்தனையிலிருந்து கலைந்தவள் “ம்ம்...” என்றாள் தடுமாற்றத்துடன்.

அவனோ அவளை அழ வைத்துவிட வேண்டும் என்கிற வெறியுடன் அனைவரின் முன்பாக “உங்களுக்கு பழக்கமில்லாத விஷயமில்லையா இந்த போர்ட் மீட்டிங், கம்பனி நிர்வாகம் எல்லாம். நமக்கு எது தேவை, என்ன தகுதி என்று தெரிந்து கொண்டு இறங்கனும்’ என்று நேரடியாக தாக்கி விட்டான்.

அங்கிருந்த அனைவருமே ஒரு நிமிடம் அதிர்ந்து அவளை பாவமாக பார்த்தனர். அவர்கள் இருவருக்கிடையே இருந்த உறவு கொடைக்கானல் முழுவதும் அறிந்ததே. இப்போது நடந்து கொண்டிருக்கும் பனிப்போரை பற்றியும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ரிஷிவர்மன் இப்படி அவளை அனைவரின் முன்பாக பேசி விடுவான் என்று எதிர்பார்க்கவில்லை.

அவனது பேச்சு சாட்டையடி போல உடலையும், மனதையும் வருத்த, படபடத்த நெஞ்சையும், கண்களையும் சமாளித்துக் கொண்டு “என் தகுதியைப் பற்ற பேச ஒரு தகுதி வேண்டும் மிஸ்டர். ரிஷி” என்று அவளும் திருப்பிக் கொடுத்து விட்டாள்.

அவளின் பதிலை எதிர்பார்க்காதவனின் விழிகள் கனலை கக்கியது. அனைவரும் தங்களிடையே நடக்கும் வார்த்தையாடல்களை கவனித்துக் கொண்டிருப்பதை எண்ணி மனதில் பொங்கிய கோபத்தை அடக்கி கொண்டு கம்பனி விவகாரத்தை பேச ஆரம்பித்தான்.

அவளோ அவனது கோபத்தை அடங்க விட மாட்டேன் என்பது போல அவனது ஒவ்வொரு முடிவிற்கும் முட்டுகட்டையாக நின்றாள். பல்லைக்கடித்துக் கொண்டு அன்றைய மீட்டிங்கை முடித்தவன் அவளை திரும்பியும் பாராது அங்கிருந்து சென்றான்.

அவன் சென்றதுமே இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டவள் திரும்பி மாமனை பார்க்க, அவரிடமிருந்து திருப்தியான ஒரு பார்வை கிடைத்தது. இப்படியொரு வாழ்க்கை வாழ்வதற்கு செத்துப் போய் விடலாம் என்றே தோன்றியது.

மனதில் எழுந்த உணர்வுகளை அடக்க முடியாமல் வாஷ்ரூம் நோக்கி சென்றாள். உள்ளே சென்று ஒருபாடு அழுத்து தீர்த்து முகத்தை கழுவி விட்டு வெளியே வரும் நேரம் அவளது கைகளை யாரோ பிடித்து இழுக்க, எதன் மீதோ மோதி நின்றாள்.

பயத்துடன் என்ன நடந்தது என்று நிமிர்ந்து பார்க்க, கோப விழிகளுடன் அவளது கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டு நின்றான் ரிஷி.

அவனைப் பார்த்ததும் அதிர்ந்து அவசரமாக அவனிடமிருந்து கைகளை உதறிக் கொண்டவள் “விடுங்க என்னை!....பிரச்சனை பண்ண வந்திருக்கீங்களா?”.

அவளது செயலில் மேலும் சீண்டப்பட்டு “ஏண்டி நான் தொட்டா அத்தனை அருவெறுப்பா இருக்கா?” என்று அவளது கழுத்தைப் பிடித்து நெறித்தான்.

கன்னங்களில் கண்ணீர் வழிய மனம் அவனுக்கு ஆறுதலாக பேச விழையும் முன்பு தங்களை பார்த்தபடி நிற்கும் வேதநாயகத்தை கண்டவுடன் “ஆமாம்! எனக்கு உன்னை பிடிக்காது! விடு என்னை” என்று போராடி விடுபட்டாள்.

அவளது பேச்சு அவனுக்கு ஆங்காரத்தை எழுப்ப “இத்தனை நாள் நீ பார்த்த வர்மனை இனி பார்க்கப் போறதில்லை. ஒவ்வொரு நாளும் உனக்கு நரகம் தாண்டி” என்று மிரட்டிவிட்டு வேதநாயகத்தின் அருகே சென்றவன் “உங்க வளர்ப்பு நல்லாவே இருக்கு. இதை எதிர்பார்த்து தானே என்னையும், இவளையும் பழக விட்டீங்க?” என்றான் கேவலமான பார்வையுடன்.

“ரிஷி!”

“என் பெயரை சொல்லக் கூட உங்களுக்கு தகுதியில்லை”.

ஆழ்ந்த பார்வையுடன் “நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு ரிஷி. ரொம்ப ஆடாதே தாங்க மாட்ட”.
அவரை கேவலமாக பார்த்தவிட்டு “மிஸ்டர். வேதநாயகம் உங்க கணக்கு தப்பாக போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை’ என்றவனின் பார்வை கவின்யாவை தொட்டு மீண்டது.

அமைதியாக அவனைப் பார்த்தவரின் மனமோ “நீ அறியாத பல கணக்குகள் இருக்கு ரிஷி. அதை அறியும் போது இந்த ஸ்தாபனம் முழுவதும் என் கைக்கு வந்திருக்கும்” என்றெண்ணிக் கொண்டு கவின்யாவை அழைத்துக் கொண்டு சென்றார்.

வீட்டினுள் நுழைந்ததுமே வேதநாயகத்தை திரும்பியும் பாராது தனது அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். அவரோ அவளை ஒரு பொருட்டாக கருதாது தனது அறைக்குச் சென்று அலைபேசியில் யாரோ ஒருவனை அழைத்தார்.

“அந்த வீட்டில் எதுவும் மாற்றம் தெரியுதா? ஒரு சின்ன விஷயம் கூட தவறி போய் விடக் கூடாது”.

“..........”

“நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும். நம்மை மீறி ஈ எறும்பு கூட நுழையக் கூடாது சொல்லிட்டேன்” என்று கூறி போனை அனைத்து விட்டு திரும்பியவரின் பார்வை கதவோரம் இரு கைகளையும் கட்டிக் கொண்டு ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்தவளின் மீது விழுந்தது.

“என்ன வேணும்?”

“நானும் அதை தான் கேட்கிறேன்? என்ன தான் வேணும் உங்களுக்கு?”

“உனக்கு தெரியாதா?”

ஒருவித முறைப்புடன் “என்ன சாதிக்கப் போறீங்க? நடந்தவைகளை விட்டுடுங்க. நீங்க செய்த தப்பெல்லாம் மன்னித்து விடுகிறேன் மாமா. வாங்க எங்கேயாவது போயிடலாம்”.

தனது நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்தவர் “என்ன செய்யணும் செய்யக் கூடாது என்பதை இங்கே நான் தான் முடிவு செய்யணும். இதே மாதிரி பேசிக் கொண்டே இருந்தா நான் ரிஷி கிட்ட பேசி வேண்டி வரும்” என்றார் மிரட்டலாக.

அதைக் கேட்டதுமே முகம் மாறி சட்டென்று அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

தனது அறையில் சென்று கதவடைத்துக் கொண்டவள் அழுகை௧ அழுகை ! அப்படியொரு அழுகை. என்ன செய்துவிட முடியும் அவளால்?

எத்தனை நேரம் அழுதிருப்பாளோ தெரியவில்லை. அவளை காப்பாற்ற வந்தது போல அலைப்பேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. எடுக்க மனமில்லை என்றாலும் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு மெல்ல எழுந்து சென்று கையில் எடுத்தாள்.

அதில் மாமி காலிங் என்று வரவும் அவசரமாக போனை ஆன் செய்தாள்.

“கவி! என்னடா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”

அருணாவின் குரலைக் கேட்டதுமே அதுவரை அடக்கி வைத்திருந்த துன்பமெல்லாம் தொண்டையை அடைக்க லேசான விசும்பலுடன் “மாமி” என்று அழ ஆரம்பித்தாள்.

அந்தப் பக்கம் இருந்தவரோ பதறி போய் “என்னம்மா? எதுவும் பிரச்சனையா? கவி அழாதடா” என்று சமாதானப்படுத்த முயன்றார்.

சற்று நேரம் பொங்கி பொங்கி அழுதவள் துக்கம் சற்று மட்டுப்பட்டதும் மெல்லிய குரலில் வேதநாயகம் செய்து கொண்டிருப்பவைகளை எல்லாம் அவரிடத்தில் கூறினாள். அவள் சொல்லாமல் விட்டது ரிஷிக்கும் தனக்குமான உறவையும், இப்போது அதிலிருக்கும் விரிசலையும்.

அவள் சொன்னவற்றை எல்லாம் கேட்டு அருணாவின் நெஞ்சம் பாரமாகி போனது. தன்னை மீறி அவருக்கு குற்ற உணர்வு உணடானது. வேதநாயகத்தை மீறி கவின்யாவையும் தங்களோடு அழைத்துச் சென்றிருக்க வேண்டுமோ என்றெண்ணி வருந்தினார்.

அவளை சமாதானப்படுத்திவிட்டு வைத்த பின்பும் கவின்யாவின் அழுகையை மறக்க முடியாமல் வேதனையுடன் அமர்ந்திருந்தார். வெளியில் சென்றிருந்த மகன் உள்ளே நுழைந்ததை கூட அறியாது யோசனையுடன் அமர்ந்திருந்தவரை பார்த்துக் கொண்டே உள்ளே சென்ற பவன் ஆடைகளை மாற்றிக் கொண்டு அன்னையின் முன் வந்தமர்ந்தான்.

“மாம்! என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”

“ம்ம்...ஐ அம் ஓகே டா”.

“பீலிங் கோல்ட்? சூடா டீ போட்டு எடுத்திட்டு வரவா?”

“இரு நானே எடுத்திட்டு வரேன்” என்று எழுந்து செல்லும் அவர் பின்னோடு அவனும் செல்ல “என்ன பிரச்சனை மாம்?”

“கவி கிட்ட பேசினேன்”.

அதை கேட்டதுமே “நல்லா இருக்காயில்ல?”

“இல்லடா...அவ நல்லாயில்ல”.

“ஏன் அந்த மனுஷன் எதுவும் பிரச்சனை பண்றாரா?”

மகனை திரும்பி பார்த்தவர் “தப்பு பண்ணிட்டேன்டா. எல்லாவற்றையும் உதறிட்டு வரும்போது அவளையும் உன்னை கூட்டிட்டு வந்த மாதிரி கூட்டிட்டு வந்திருக்கணும்” என்றார் வேதனையாக.
முகமும் உடலும் இறுக “என்ன பண்றான் அந்தாளு?” என்றான் கோபமாக.

“பவன்!”

“மாம்! நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன் ஆனா அந்தாளுக்கான மரியாதை மட்டும் என்னிடம் எப்பவும் கிடைக்காது”.

டீயை போட்டு அவனிடம் கொடுத்துவிட்டு “கவி பாவம்” என்றவர் அவள் கூறியவற்றை எல்லாம் அவனிடத்தில் ஒன்று விடாமல் கூற அமைதியாக கேட்டுக் கொண்டான்.

சற்று நேரம் இருவருக்கும் இடையே பேரமைதி. அவர்கள் இருப்பது கனடாவில். கவியை அழைத்து வர வேண்டும் என்றால் உடனடியாக நடக்காத காரியம். அதுமட்டுமல்ல வேதநாயகத்திடம் இருந்து அழைத்து வருவது அத்தனை எளிதான காரியமும் அல்ல.

“பிள்ளையும் பொண்டாட்டியையும் விரட்டி விட்டாச்சு. அந்த சொத்தை அநியாயமா அடிச்சு என்ன செய்ய போறான் அந்தாள்?” என்றான் எரிச்சலாக.

“என்னவேணா பண்ணிக்கட்டும் பவா! ஆனா கவியை எதுக்கு போர்ட் டைரெக்ட்டாராக அங்கே உட்கார வைத்தார்? அவர் எதையோ மறைக்கிறார். அவள் பாவம்-டா. என்னால அவ அழுவதை பார்க்க முடியல” என்றார் வருத்தமாக.

“நான் பேச மட்டுமா அவளிடம்”.

“எதாவது செய்யணும் பவா” என்றார் யோசனையாக.

அன்னையை லேசாக அணைத்து விடுவித்தவன் “நான் அவளிடம் பேசிவிட்டு முடிவெடுக்கிறேன். ஆனால் என் மனதில் சில முடிவுகள் இருக்கு. நான் முடிவெடுத்த பின் நீங்க எதற்கு தடை சொல்லக் கூடாது” என்றான் தீர்க்கமான குரலில்.

“சொல்ல மாட்டேன் பவா. என்னால கவியின் அழுகையை கேட்க முடியல. சீக்கிரம் ஏதாவது செய்து அவளை அவரிடமிருந்து விடுவித்து கொண்டு வா”.

அதன்பின் இருவரும் அவரவர் அறைகளில் சென்று முடங்கிவிட, பவனின் மனம் இந்தியாவில் இருந்த நாட்களை அசைபோட ஆரம்பித்தது. அத்தை மகளான கவின்யா தான் அவனுக்கு உற்ற தோழி. சிறு வயதிலிருந்தே தந்தையான வேதநாயகத்தை அவனுக்கு பிடிக்காது. அவருமே அவனை கண்டுகொள்ள மாட்டார். அவரின் கவனம் முழுவதும் கவின்யாவின் மீது தான் இருக்கும்.

தாயில்லாத குழந்தை அதிலும் தங்கையின் குழந்தை என்பதால் பாசம் வைத்திருக்கிறார் என்று நினைத்திருந்தார் அருணா. ஸ்வான் லேக் குழுமத்தில் உயர் பதவியில் வேலை செய்து கொண்டிருந்தார். தான் வேலை செய்யும் பிரிவில் தனது அதிகாரத்தை எப்பொழுதும் நிலைநாட்டுவதில் பிரியம் கொண்டவர். அந்த குழுமத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார்.

அவர் இருக்குமிடத்தில் அவரின் அதிகார தோரணை மட்டுமே பேசும். யாரையும் மதிக்காது நடக்கும் போக்கு கொண்டவர். ரிஷிவர்மனின் தந்தை விஸ்வநாதனுக்கு வேதநாயகத்தை மிகவும் பிடிக்கும். விஸ்வநாதனிடம் மட்டும் மிக பவ்வயமாக நடந்து கொள்வார்.

கவின்யாவிற்கு ரிஷியின் தோழமை கிடைத்ததும் பவனுக்கு பிடிக்காமல் போனது. மெல்ல தன்னையறியாமல் அவளிடமிருந்து விலகி நின்று விட்டான். அதன்பின்னர் அருணாவிற்கும், வேதநாயகத்திற்கும் பிரச்சனைகள் அதிகமாக அவரிடமிருந்து விலகும் முடிவை எடுத்து பவனை அழைத்துக் கொண்டு கனடா வந்துவிட்டார்.

அன்று அருணாவை கட்டிக் கொண்டு கவி அழுததை எண்ணி எழுந்தமர்ந்து விட்டான். அவனிடமும் வந்து “பவா! நீயும் போறியாடா? ப்ளீஸ்! போகாத” என்று அழுதவளின் நினைவில் உடல் வியர்த்து வழிந்தது.

அவன் மனதில் கவி மீதான ஈர்ப்பு இருந்தது. அதை உணரும் வயது அன்று இல்லை. ஆனால் தினம்-தினம் அவளை நினைக்காமல் இல்லை. அதே சமயம் அவளுக்கும் ரிஷிக்குமான அந்த நட்பு ஏனோ மனதிற்கு பிடித்தமானதாக இல்லை. அந்த விதத்தில் இன்று வேதநாயகம் செய்து வைத்திருக்கும் வேலையை அவன் மெச்சிக் கொண்டான். நிச்சயமாக ரிஷி இதை ரசித்திருக்க மாட்டான் என்று எண்ணி சந்தோஷப்பட்டான்.

அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இன்று மோதலாக மாறிப் போனதை அவன் அறியவில்லை. கவியை தந்தையிடமிருந்து எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.

அவன் அறியாத ஒன்று கவியை தந்தையிடமிருந்து மட்டுமல்ல, ரிஷியிடமிருந்தும் காப்பாற்ற வேண்டும்.
 
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!