Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript ஆணவம் | SudhaRaviNovels

ஆணவம்

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
764




ஆணவம் – சுதா ரவி

அன்று காலை செய்தியை கேள்விப்பட்டதில் இருந்தே ராமமூர்த்திக்கு மனம் கொந்தளித்துப் போனது.

தனது இத்தனை நாள் நெடுங்கனவானது காற்றில் கரைந்தது போல் ஆனது. அது யதார்த்தமாக நடந்திருந்தால் இயல்பாகக் கடந்து போயிருக்கலாம். ஆனால் இப்போது நடந்திருப்பது பெரும் துரோகம். அதை அவன் செய்தது தான் தாங்க முடியாமல் போனது.

தனக்கு பக்கபலமாக இருப்பான் என்றெண்ணியவன் இப்படி முதுகில் குத்திச் செல்வான் என்று சிறிதும் நினைக்கவில்லை. நெஞ்சடைப்பதுப் போல இருந்தது. அவனை நேரில் பார்த்து நாக்கைப் பிடுங்குவது போல நான்கு வார்த்தை கேட்க வேண்டும் என்று மனம் பரபரத்தது.

அந்நேரம் அங்கு வந்த சாரதா “ஏங்க இன்னுமா அதையே நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?” என்றார் கவலை தோய்ந்த முகத்துடன்.

“என்ன பண்ண சொல்ற? என்னுடைய எத்தனை வருட கனவு அது?” ‘நா’ தழுதழுக்க.

“ஒரு விஷயம் நமக்கு கிடைக்காமல் போவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். விட்டுத் தள்ளுங்க! இதை விடச் சிறப்பான ஒன்று உங்களுக்கு காத்திருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்”.

“என்னால் அப்படி நினைக்க முடியலை சாரதா. அந்தப் பயல் செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியலை”.
“நான் ஒரு கேள்வி கேட்கலாமா?”

“ம்ம்...கேளு”

“நீங்க ஆதாயத்தை எதிர்பார்த்து அவனுக்கு செய்தீர்களா? இல்லேல்ல! அவனை தவறாக நினைக்க முடியலைங்க. நிச்சயம் அவனுடைய செயலுக்கான காரணம் அவனிடம் இருக்கும் என்று தோன்றுகிறது”.

“என்ன பெரிய காரணம்? ஏற்றி விட்டவனையே கீழே போட்டு மிதித்துவிட்டு மேலே போகிற காரணம் தான்”.

மறுப்பாக தலையசைத்து “இத்தனை வருடப் பழக்கத்தில் அவனோட இயல்பாக இதைப் பார்க்க முடியல. நிச்சயமா அவன் செய்ததற்கு ஒரு ஞாயமான காரணம் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது”.

மனைவியை முறைத்து விட்டு “வீட்டுக்குள்ளேயே எனக்கு ஆதரவில்லை. அது தான் வெளியில் இருப்பவன் எல்லாம் கீழே தள்ளிட்டு போறான்” என்று புலம்பிக் கொண்டே சென்று படுத்து விட்டார்.

கணவரை கவலையுடன் பார்த்தபடியே பெருமூச்சு விட்டார் சாரதா. என்றைக்கு அலுவலகத்தில் இந்த ப்ரோமோஷன் என்கிற பேச்சு எழ ஆரம்பித்ததோ, அன்று தொடங்கியது எல்லாம். ராமமூர்த்திக்கு அந்தப் பதவிக்கு வருவது தான் வாழ்வின் லட்சியமாக இருந்தது. ரீஜினல் ஹெட்டாக தங்களது கம்பனியில் அமர்வது அவரின் கனவு. அது கைகூடி வரும் நேரம் அனைத்தையும் உடைத்து விட்டான் அந்தச் சிவராமன்.

வேலையின்றித் தவித்துக் கொண்டிருந்த நண்பரின் மகனான சிவராமனுக்கு வேலை வாங்கி கொடுத்து தங்களது கம்பனியிலேயே வைத்துக் கொண்டார். ராமமூர்த்தியின் நண்பர் குடும்பம் அவரை இழந்து பொருளாதரத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தது. தன் மனம் கேட்காமல் நண்பனின் மகனுக்கு வேலை வாங்கி கொடுத்து அந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்தைச் சீராக்கினார்.

சிவராமனும் அவரை தந்தையின் ஸ்தானத்தில் வைத்துத் தான் பார்த்தான். அவர் சொன்னால் மறுபேச்சு கேட்காமல் எதையும் செய்வான். ஆரம்பத்தில் நண்பனின் மகன் என்கிற எண்ணமும், அவனது குடும்ப கஷ்டமும் அவன் மீது அன்பு வைக்க சொன்னது. அலுவலகத்தில் தனக்குக் கீழ் அவனை வைத்துக் கொண்டபோது, அதிலும் தான் சொல்லும் வேலைகளை அவன் உடனடியாகச் செய்து கொடுத்ததை மெல்ல ரசிக்க ஆரம்பித்தார்.

அந்த ரசனையானது அவனைத் தனக்கு அடிமையாக வைத்துக் கொள்ளும் எண்ணத்தை மனதில் ஊன்றச் செய்தது. அதிலும் அலுவலக நண்பர்கள் “அவனுக்கு என்னப்பா சிவராமன் எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்துவிடுவான்” என்று கூறும் போது தலைக்கனமாக மாறத் தொடங்கியது.

அந்தப் புள்ளியில் தான் அவரது மனம் முற்றிலும் வேறுபட ஆரம்பித்தது. சிவராமன் மிகவும் திறமையானவன். ராமமூர்த்தியின் உதவியினால் வேலையில் சேர்ந்திருந்தாலும், சட்டென்று அனைத்தையும் பற்றிக் கொள்ளும் கற்பூரப் புத்தி கொண்டவன்.

அவருக்கு உதவி செய்து அவரது வேலைகளைச் செய்து கொடுப்பதின் மூலம் வேலையை நன்றாக கற்றுக் கொண்டு விட்டான். இதை அறியாத ராமமூர்த்தி தான் எதைச் சொன்னாலும் செய்வான் தனக்கு நன்றி உடையவனாக இருக்கிறான் என்று உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டிருந்தார்.. தன்னை மீறிப் போக மாட்டான் என்கிற நிலைக்கு வந்திருந்தார். அவர் கண்ணில் படாத ஒன்று அவருடைய மேலதிகாரிகள் கண்ணில் விழுந்தது.

அவனது திறமையை அவர்கள் கண்டு கொண்டார்கள். மெல்ல கம்பனியில் பதவி உயர்வு வர ஆரம்பித்தது அவனுக்கு. அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவனது உழைப்பிற்கு ஒன்று இரண்டு பதவிகள் வருவது சகஜம் என்று கடந்து சென்றார்.

வருடங்கள் உருண்டோடியது அவனும் அந்த கம்பனியில் அசைக்க முடியாத ஒருவனாக உருவாகிக் கொண்டிருந்ததை அவர் கவனிக்கவே இல்லை. எப்பொழுதும் போலத் தான் கேட்கும் வேலைகளை அவன் செய்துக் கொடுத்துக் கொண்டிருந்தது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் அவனது வளர்ச்சியின் வேகத்தை அறிந்து கொள்ள முடியாமல் அவருடைய கண்கள் குருடாகி இருந்தது.

தனது கனவு பதவிக்குப் போட்டியாக அவன் வந்து நிற்பான் என்றெல்லாம் அவர் யோசித்ததே இல்லை. அப்படியொரு சம்பவம் நடக்கும் என்கிற எண்ணம் இல்லாமல் இருந்தவருக்கு அது நடந்த போது பேரதிர்ச்சி.

அதிலும் தனக்கு இணையாக அவன் வந்து நின்றதைத் தாங்க முடியாமல் போனது. அலுவலகத்தில் இருப்பவர்கள் எல்லாம் தன்னையே கேலியாகப் பார்ப்பது போல தோன்றியது.

அவனை எப்படியாவது போட்டியிலிருந்து விலக்கி விடும் வேகம் எழுந்தது. அதனால் வெகுநாட்களுக்குப் பிறகு அவனை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார். அந்தப் பதவியை தொட்டுவிடும் ஆசை அவனிடம் இருக்கிறதா என்று பேச்சுக் கொடுத்துப் பார்த்தார்.

அவனும் தனக்கு அந்தப் பதவி கனவு என்று சொல்லிவிட அதிர்ந்து போனார். அதற்காக எல்லாம் விட்டு விடாமல் அவனிடம் “இப்போ வந்த உனக்கே அந்தப் பதவி கனவு என்றால் நானெல்லாம் இத்தனை வருடமாக அதை நோக்கித் தான் போய் கொண்டு இருக்கிறேன் சிவா. அதனால நீ என்ன பண்ற என் வழியிலிருந்து ஒதுங்கிவிடு. நீ சின்னப் பையன் உனக்கான நேரம் நிறைய இருக்கு” என்றார் அதிகாரமாக.
அவனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “அதற்கான நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் மாமா” என்று சொல்லி விட்டான்.

ராமமூர்த்தியும் அதை அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நிச்சயம் நம்மை மீறி இவன் எதையும் செய்துவிட மாட்டான் என்கிற நம்பிக்கையோடு இருந்தார்.

அந்தப் பதவிக்காக பரிந்துரைகளை அனுப்பும் நாளும் வந்தது. மேலதிகாரிகள் இருவரின் ப்ளஸ் மைனஸ் இரெண்டையும் விவாதித்து முடிவிற்கு வருவதாக இருந்தது. அலுவலகம் முழுவதும் ராமமூர்த்திக்குத் தான் அந்தப் பதவி கொடுக்கப்படும் என்கிற பேச்சிருந்தது.

அவரும் அப்போதே ரீஜினல் ஹெட் ஆனது போல நடந்து கொள்ளத் தொடங்கினார். அவருடைய நண்பர்கள் எல்லாம் ஒவ்வொருவராக அழைத்து அவருக்கு வாழ்த்தைத் தெரிவிக்கத் தொடங்கி இருந்தனர்.

சிவராமன் எப்பொழுதும் இருப்பது போல அமைதியாக இருந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பரிந்துரைகள் அனுப்பப்பட்டு விட்டதாக தகவல் அலுவலகம் முழுவதும் பரவியது.
பத்து நாட்களுக்குள் முடிவு தெரிந்து விடும் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. ராமமூர்த்தி கனவில் வாழ ஆரம்பித்தார். வீட்டில் எந்நேரமும் அதே பேச்சு தான். பதவி அளிக்கப்பட்டதும் தன்னுடைய கெளரவம் பல மடங்கு உயர்ந்து விடும் என்றும் அனைவரின் பார்வையிலும் தானும் பெரியாளாக இருக்கப் போகிறேன் என்றும் பேசிக் கொண்டிருந்தார்.

இப்படியே தினம் ஒரு பேச்சாக எட்டு நாட்களைக் கடந்திருந்த போது தான் அந்தச் செய்தி அவரின் காதில் விழுந்து அதிர்ச்சியைக் கொடுத்தது.

அதாவது சிவராமன் அவருக்கு அந்தப் பதவியை கொடுக்க கூடாது என்பது போல பேசி இருப்பதாக தகவல் வந்தது. தன் மூலமாக கம்பனியில் நுழைந்து படிப்படியாக மேலே வந்தவன் சிறிதும் நன்றி இல்லாமல் தனக்கு எதிராக இப்படியொரு காரியத்தைச் செய்திருக்கிறானே என்று கொதித்துப் போனார்.
அவரால் அந்தச் செய்தியை ஏற்கவே முடியவில்லை. தன்னால் தானே அந்தக் குடும்பமே பிழைத்து கிடக்கிறது. எப்படி அவனால் தனக்கு துரோகம் செய்ய முடிந்தது என்று மனைவியிடம் குதித்தார்.

இப்படியே கோபமும், ஆத்திரமும் எழ இரு நாட்களைத் தாண்டியவருக்கு அன்று முடிவு அறிவிக்கப்படும் நாள் என்பதால் ஒருவித பதற்றம் எழுந்தது. சிவராமனிடம் தான் கேள்விப்பட்டதை கேட்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை. சரி முடிவு தெரிந்த பிறகு அந்தப் பயலை ஒரு கை பார்த்து விடுவோம் என்று முடிவு செய்து கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றார்.

அவர் கிளம்பிக் கொண்டிருக்கையில் வீட்டின் வாசல் மணி அடித்தது. அவரின் மனைவி கதவை திறக்க, கையில் பெரிய தாம்பாளம் முழுவதும் பழமும், இனிப்பு பொட்டலமும் நிறைந்திருக்க, முகத்தில் புன்சிரிப்புடன் நின்றிருந்தான் சிவராமன்.

அவனைப் பார்த்ததுமே கோபம் எரிமலையென பொங்கி எழ, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் பல்லைக் கடித்தபடி.

ராமமூர்த்தியின் மனைவியிடம் கையிலிருந்த தாம்பூலத்தை கொடுத்துவிட்டு “மாமி! மாமாவோட சேர்ந்து நில்லுங்க” என்றவன் படாரென்று இருவரின் காலிலும் விழுந்து விட்டான்.

அதில் அதிர்ந்து போனவர் “டேய்! டேய்! என்ன பண்ற?” என்றார் கோபமாக.

மெதுவாக எழுந்து அவரின் கைகளைப் பற்றிக் கொண்டவன் “இந்த வாழ்க்கை, இந்த உயரம் நீங்க கொடுத்தது மாமா. எங்கப்பா இறந்தப்ப இனி எப்படி வாழப் போகிறோம் என்று திகைத்து நின்ற எங்களுக்கு நீங்கள் தான் வாழ வழி காட்டுனீங்க”.

“அதுக்கு தான் எனக்கு நல்ல கைமாறு செஞ்சிட்டியே. ப்ரோமோஷன் எனக்கு கிடைக்க விடாம செய்து உன் நன்றிக் கடனை தீர்த்துட்டியே”.

“மாமா! நீங்க என்னை தவறாகப் புரிந்து கொண்டு இருக்கீங்க. எங்கப்பா எதனால இறந்து போனாங்க என்று நினைவிருக்கா? அதிகம் வேலை உள்ள பிரிவில் இருந்து அதனுடைய அழுத்தம் தாங்காமல் தான் இறந்தாங்க”.

“இப்போ என்ன சொல்ற? ப்ரோமோஷன் கிடைத்தால் நானும் இறந்து போயிடுவேன்னு சொல்றியா?”
“உங்க மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க மாமா. இந்த பதவியின் தன்மை உங்களுக்கே நன்றாகத் தெரியும். உங்களால அந்த அழுத்தத்தை தாங்க முடியுமா?”

அவன் அப்படி கேட்டதும் அவருடைய மனம் லேசாக இடித்தது. இப்போவே பாதி வேலையை அவன் தான் செய்து தருகிறான். இதில் அந்த பதவி கிடைத்திருந்தால் நிச்சயமாக வேலை செய்ய முடியாது தான். ஆனால் அதை ஒப்புக் கொள்ள மனம் வரவில்லை.

“உங்கள் பதவியை நான் தட்டிப் பறிக்கவில்லை மாமா. இந்தக் காரணத்தை சொன்னது மேலதிகாரிகள் தான். உங்களை என் அப்பா ஸ்தானத்தில் தான் பார்க்கிறேன். எந்த மகனும் தந்தைக்கு எதிராக செயல்பட மாட்டான்”.

“அப்போ நீ மேலதிகாரிகள் கிட்ட அவர் இந்தப் பதவிக்கு சரி வர மாட்டார் என்று சொன்னதெல்லாம் பொய்யா?” என்றார் எகத்தாளமாக.

நீண்ட பெருமூச்சுடன் “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு- இந்தப் பதவிக்கு முக்கியமா தேவையான ஒன்று மாமா. யார் எதை சொன்னாலும் தீர விசாரிக்காமல் முடிவு செய்வது பெரும் நஷ்டத்தைக் கொண்டு வரும்” என்றவன் ராமமூர்த்தியின் மனைவியைப் பார்த்து இரு கை கூப்பி கும்பிட்டு அங்கிருந்து விறுவிறுவென்று வெளியேறினான்.

அவன் சொல்லிச் சென்றதின் அர்த்தம் விளங்க அவரின் ஆணவம் அடிபட்டு போனது.