Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மீண்டும் நானே வருவேன் | SudhaRaviNovels

மீண்டும் நானே வருவேன்

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அந்நேரம் அங்கே வந்த கோணேஸ்வரன் “மருதும்மா குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே செல்!” என்று கத்தினார்.

காண்டீபனோ அவசரமாக தனது குடிசைக்குள் நுழைந்து வேர் இருக்குமிடம் அருகே அமர்ந்து கொண்டான். வந்திருப்பது கார்கோடகன் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.

வெளியில் நடப்பவற்றை அறிந்து கொண்ட முருகபூபதி வந்து பார்த்துவிட்டு கோணேஸ்வரனை அழைத்துக் கொண்டு மாளிகையின் பின்புறம் உள்ள ஐய்யனாரின் சிலை முன் வந்து நின்றார்கள். இரு கை கூப்பி “ஐயா! மந்திரவாதியிடமிருந்து குழந்தையைக் காப்பாற்று” என்று வேண்டினார்கள்.

நெருப்புச் சுவற்றின் மீது நீரை தெளித்ததும் அது விலகி வழி கொடுக்கும் என்று எதிர்பார்க்க, அக்னியோ மேலும் கொழுந்து விட்டு எரிந்தது. அதைக் கண்டு மேலும் உக்கிரமானவன் மந்திரத்தை உச்சரித்து பாதை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தான்.

அந்நேரம் குதிரையின் குளம்பொலி வெகு அருகே கேட்க, எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தவனின் விழிகள் விரிந்தது.

வெள்ளைக் குதிரையின் மீது அடர்ந்த மீசையுடனும், கையில் அருவாளுடனும் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த உருவத்தைப் பார்த்ததும் தான் வரக் கூடாத இடத்திற்கு வந்து விட்டோம் என்று புரிந்து போனது.

குதிரையின் மீதிருந்த உருவம் “ம்ம்ம்...” என்று உறும குதிரை கார்கோடகனை நோக்கி வர ஆரம்பித்தது.

அவ்வளவு தான் இனியும் தாமத்திதால் தனக்கு மரணம் தான் என்பதை உணர்ந்தவன் ஓட்டமெடுக்க ஆரம்பித்தான். குதிரையும் அவனை விரட்டிக் கொண்டு பின்னே சென்றது.
மலைப்பகுதியை அடையும் வரை இந்த ஓட்டம் தொடர்ந்தது. அவன் வனப்பகுதிக்குள் நுழைந்ததும் குதிரை மாயமாய் மறைந்து போனது.

உயிரை காத்துக் கொள்ள ஓடி வர வேண்டிய நிலையை எண்ணி ஆத்திரமடைந்த கார்கோடகன் வனத்திற்குள் ஒரு பேரழிவையே கொண்டு வந்து விட்டான். பார்க்கும் மரங்கள் எல்லாம் பிடுங்கி எறியப்பட்டது. அவனது மனநிலைக்கேற்ப கருமேகங்கள் சூழ்ந்து அமில மழை பொழிய ஆரம்பித்தது. வழியில் தென்பட்ட காணிக்குடி ஆண்களை எல்லாம் கொன்று தீர்த்தான்.
காட்டில் நடக்கும் பேயாட்டத்தைக் கண்டு அது கார்கோடனின் கோபம் தான் என்பதை உணர்ந்து கொண்டார்கள் செங்கோடனும் சடையரும்.

“அவன் வந்து கொண்டிருக்கிறான் செங்கோடா. இம்முறை உன் மகளை நீயே கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்லப் போகிறான்” என்றார் கவலையாக.

செங்கோடனும் அதை தான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் கார்கோடகன் அவர்களிடம் வரவில்லை. தனது சக்தியை அதிகரிக்க வேண்டும் என்கிற எண்ணத்திற்கு வந்திருந்தான். அதனால் தனது கோபத்தை எல்லாம் புறந்தள்ளி விட்டு ஒரு குகையில் அடைந்து கொண்டான். அங்கேயே அமர்ந்து ஆழ்ந்த தவத்தில் தனது சக்தியை அதிகரிக்கும் வழியில் ஈடுபட ஆரம்பித்தான்.

அவன் அடங்கியதுமே வனம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. காலங்கள் உருண்டோடியது. கார்கோடகன் அந்தக் குகையை விட்டு வெளியே வரவே இல்லை. சுமார் பதினெட்டு வருடங்கள் கடந்திருந்தது. மிதுனமாலினியும் நஞ்சுண்டனும் சேர்ந்தே வளர்ந்தார்கள்.
அழகு பதுமையாக பதினெட்டு வயது பருவ மங்கையாக வளர்ந்திருந்தாள் மிதுனமாலினி. அன்று அவள் இந்த பூமிக்கு வந்த தினம். காளி சிலையின் முன் அமர்ந்திருந்த அவளை வாழ்த்தினார் கோணேஸ்வரன்.

ஜமீன் தம்பதியருக்கு அவளை பிரிய வேண்டுமே என்கிற கவலையோடு வாழ்த்தினார்கள். நஞ்சுண்டன் அப்பிறவியிலும் வாய் பேச முடியாதவனாகவே பிறந்திருந்தான்.

காண்டீபனிடம் அந்த மந்திர வேர் அடங்கிய பேழையை எடுத்து வர சொன்னார் கோணேஸ்வரன். அவன் எடுத்து வரவும் அதை திறந்து உள்ளே இருந்த வேரை எடுத்து மிதுனமாலினியின் தலையில் வைத்தார். அடுத்த நிமிடம் தனது பிறப்பிற்கான அனைத்தும் அதன் மூலம் தெரிந்தது. அதோடு கார்கோடகனை எதிர்க்கும் சக்தியும் அவளுக்கு வந்திருந்தது.

அதுவரை நளினமான பெண்ணாக இருந்தவளின் உடலில் உறுதி பிறந்தது. அங்கிருந்த அனைவரையும் பார்த்தவள் “என்னை வளர்த்தவர்களுக்கு நன்றி. பாதுகாத்தவர்களுக்கும் பெரும் நன்றி. இப்பிறப்பின் காரியத்தை நிறைவேற்றப் போகிறேன். இப்பிறவியில் வெற்றி பெற முடியாமல் போனால் மீண்டும் நானே வருவேன் உங்களின் குடும்பத்திலேயே பிறப்பேன். என் பகையை முடிப்பேன்” என்று கூறினாள்.

ஜமீன்தாரின் மனைவி அவளை அணைத்து கண்ணீர் விட்டு வழியனுப்பி வைத்தார்.
இருவரும் அங்கிருந்து காரையாறு வனப்பகுதி நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். மலையடிவாரத்திற்கு செல்லும் நேரம் குதிரையின் குளம்பொலி கேட்க ஆரம்பித்தது.
மிதுனமாலினி நின்று தங்களின் பின்னே ஒலிக்கும் சப்தத்தைக் கேட்டு எதிர்பார்ப்புடன் நின்றாள்.

வெள்ளைக் குதிரை மீது வந்து நின்றார் ஐய்யனார். இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.

“சென்று வா மகளே! மீண்டும் வா உனக்கா காத்திருப்பேன்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அவரின் வார்த்தைகள் சொன்ன செய்தியை உணர்ந்து கொண்டவளின் இதழ்களில் புன்னகை.
அதே நேரம் பதினெட்டு வருடங்கள் கழித்து குகையை விட்டு வெளியே வந்திருந்தான் கார்கோடகன்.

அத்தியாயம் – 4

வனத்தின் வாசத்தை அனுபவித்தவன் “வா மிதுனா! உன்னை வரவேற்க காத்திருக்கிறேன் விரைந்து வா!” என்றான் காடே அதிர.

மலையில் ஏறிக் கொண்டிருந்தவர்களின் காதில் அது விழுந்தது. நஞ்சுண்டன் மிதுனாவின் கரங்களைப் பற்றி “ம்..பா..ம்..பா” என்றான் தன்னெஞ்சில் அடித்து.

“நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்” என்பதை தான் அவளிடம் அவ்வாறு கூறினான்.
மெல்லிய சிரிப்புடன் “இந்த மிதுனமாலினி அவனை அழிக்கவே பிறந்தவள் நஞ்சுண்டா! என் இனத்தை காப்பதற்கு உயிரையும் கொடுப்பேன்”.

காணிக்குடியில் தியானத்தில் அமர்ந்திருந்த சடையருக்கு மிதுனா வருவது தெரிந்து போனது. குடிசையிலிருந்து வெளியே வந்தவர் செங்கோடனிடம் சென்றார்.

“உன் மகள் வருகிறாள் செங்கோடா”.

“யுத்தம் தொடங்கப் போகிறதா சடையரே?”

“ஆம்! கடும் யுத்தம் நடக்கப் போகிறது. இந்த பதினெட்டு வருடத்தில் அசாத்திய சக்தியைப் பெற்று விட்டான் கார்கோடகன்”.

“என் மகளால் சமாளிக்க முடியுமா?”

கண்களை மூடித் திறந்தவர் “இந்த யுத்தம் உன் இனத்திற்கானது மட்டுமல்ல. நல்லவற்றிற்கும் தீய சக்திக்கும் நடக்கப் போகும் யுத்தம்”.

“நல்லவை என்றால் என் மகள் வென்றுவிடுவாள்” என்றவனின் முகத்தில் மகழ்ச்சி வெள்ளம்.


அதைப் பார்த்து எதுவும் சொல்லாமல் தலையசைத்துவிட்டு பெண்களின் பக்கம் திரும்பியவர் “சில நாட்களுக்கு நாம் யாரும் காட்டிற்குள் செல்ல முடியாது. அதனால் தானியங்கள், உணவுப் பொருட்கள் அனைத்தையும் சேமித்து வைத்து விடுங்கள்” என்றார்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
செங்கோடனும் ஆண்களிடம் சில பல கட்டளைகளைப் பிறப்பிக்க அனைவரும் தேவையானவற்றை சேகரித்துக் கொள்ள காட்டிற்குச் சென்று விட்டனர்.

வனமெங்கும் பரபரப்பு பற்றிக் கொண்டது. மனிதர்களின் பரபரப்பு மிருகங்களுக்கும் தொற்றிக் கொள்ள அவையும் அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தன.

சிறிது நேரத்திற்குள் ஆண்கள் அனைவரும் காணிக்குடிக்கு திரும்பி விட்டனர். பெண்கள் குழந்தைகளை எல்லாம் பாதுக்காப்பான இடத்தில் தங்க வைத்து விட்டு நடக்கப் போவதை பார்க்க காத்திருக்க ஆரம்பித்தனர்.

மிதுனாவின் தாய்க்கு மட்டும் தன் மகளைப் பார்த்து விடும் ஆவல் எழுந்தது. ஆனால் காவலை மீறி தன்னால் வெளியில் செல்ல முடியாது என்பதால் அவளுக்காக மனதிற்குள்ளேயே பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.

மிதுனமாலினியும் நஞ்சுண்டனும் வனப்பகுதிக்குள் நுழைந்தனர். அவர்களின் காலடி பட்டதுமே பேய் காற்று வீசத்தொடங்கியது.

மிதுனாவின் காதோரம் பல குரல்கள் கேட்க ஆரம்பித்தது. அவளின் உடலை யார் யாரோ உரசிச் சென்றனர். கண்ணுக்கு எந்த உருவமும் தெரியவில்லை. ஆனால் இருவரையும் சுற்றி பலர் இருப்பதை போன்று காற்று சுழன்று வீசியது.

அவளின் மனம் “ஐயனே! எனக்கு நீர் தான் துணை” என்று சொரிமுத்து ஐய்யனாரை வேண்டியது.
அந்நேரம் அவளின் அருகே நின்றிருந்த நஞ்சுண்டன் காற்றில் பறக்க ஆரம்பித்தான். அந்தரத்தில் சுழன்றவன் “ம்பா..ம்பா...” என்று கத்தினான்.

கண்களை மூடி “நஞ்சுண்டா கீழே வா!” என்றாள் சத்தமாக.

அவளின் குரலில் இருந்த அதிர்வில் காற்றில் மிதந்தவன் பொத்தென்று கீழே விழுந்தான். அவனை சுற்றி இருந்த மாயக்கயிறு அறுந்து விழுந்தது.

“ஹா..ஹா..” என்று வனத்தின் அமைதியைக் கிழித்துக் கொண்டு கார்கோடகனின் சிரிப்புச் சத்தம் கேட்டது.

தனது காற்சதங்கை ஒலிக்க பூமி அதிர நடந்தவள் “அகம்பாவச் சிரிப்போ கார்கோடகா!” என்றாள் பெருங்குரலில்.

அவளின் சதங்கை ஒலி கேட்டதுமே மரங்களின் நடுவே வந்து நின்ற கார்கோடகன் மெல்ல அவளைப் பார்த்தவண்ணம் “அழகாய் இருக்கிறாய் மாலினி. மந்திர வேரை என்னிடம் கொடுத்து விட்டால் நீ உயிர் வாழலாம்”.

“இந்த வனத்தின் தூய்மையைப் பற்றி அறிவாயா கார்கோடகா? இங்கு பல சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் என் இனத்திற்கு கொடுத்தப் பரிசு தான் அவ்வேர். நீ மனம் முழுவதும் தீய எண்ணத்துடன் வந்திருக்கிறாய். அந்த வேர் உனக்கானது இல்லை”.

அவனிடமிருந்து ஒரு உறுமல் எழ “எனது சக்தி அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறாய் மாலினி. வேரை கொடுக்கவில்லை என்றால் உனது இனமே அழிவை சந்திக்கும்”.

“என்னை மீறி இங்கே எதுவும் நடந்து விடாது” என்று அவள் கூறி முடிக்கும் முன் தூக்கி வீசப்பட்டாள்.

அதைக் கண்ட நஞ்சுண்டன் தனது கரங்களை உயர்த்தி கார்கோடகனை நோக்கி நெருப்பு கோளங்களை அனுப்ப ஆரம்பித்தான். மிதுனாவும் எழுந்து கொள்ள அங்கே கடும் யுத்தம் ஆரம்பமானது. இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்க ஆரம்பித்தனர்.
கார்கோடகனின் தாக்குதல் கடுமையாக இருந்தது. இருவரும் அதை சமாளித்து அவனை அழிக்க முயன்று கொண்டிருந்தனர்.

சுமார் நான்கு நாட்கள் கடும் யுத்தம். காட்டிலிருந்த யானைகள் எல்லாம் பிளிறிக் கொண்டு மலையை விட்டு கீழே ஓடின. மற்ற மிருகங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு மாண்டு விழுந்தன. இரவு பகல் என்றில்லாமல் எந்நேரமும் கருமேகங்கள் சூழ்ந்து மழையை பொழிந்து கொண்டிருந்தன. காணிகுடியில் இருந்தவர்களோ கதிகலங்கி அமர்ந்திருந்தனர்.
சடையர் மட்டும் தனது குருவை நோக்கி தியானத்தில் இருந்தார்.

மிதுனமாலினிக்கு அதிகம் சக்திகள் இருக்காது என்றெண்ணி இருந்தான் கார்கோடகன். ஆனால் நான்கு நாட்களாக தன்னை எதிர்க்கும் அளவிற்கு அவளுக்கு சக்தி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவன். இதற்கு மேலும் தாமதிக்க விரும்பவில்லை.

தன்னை சிங்கமாக மாற்றிக் கொண்டவன் இருவரையும் தாக்கினான். நஞ்சுண்டன் கார்கோடகனை மறித்து கடுமையாக போர் புரிந்தான். ஒரு கட்டத்தில் அவனது உடலைக் கிழித்து இரு திசைகளிலும் வீசி எறிந்தான் கார்கோடகன்.

நஞ்சுண்டனை அவன் கொன்றதும் ஆத்திரம் எழ கார்கோடகன் மீது பாய்ந்து தாக்க ஆரம்பித்தாள். சிங்க உருவில் இருந்த அவனுக்கும் மிதுனாவிற்கும் கடும் சண்டை நடந்தது.

கார்கோடகனின் வாயை கிழிக்க முயற்ச்சிதாள். ஆனால் கார்கோடகன் அவளை மொத்தமாக விழுங்கி போரை முடித்து விட்டான். திடீரென்று நடந்து விட்ட சம்பவத்தில் அதுவரை போர்களமாக இருந்த வனாந்திரம் அமைதியானது.

சிங்க உருவில் இருந்தவன் தன்னுருவதிற்கு திரும்பி காடே அதிர சிரிக்க ஆரம்பித்தான். அதில் பறவைகள் எல்லாம் பயந்து கூட்டம் கூட்டமாக பறக்க ஆரம்பித்தது.

அங்கே சடையர் கண்களை திறந்தார்.

குடிசையில் இருந்தவர்கள் எல்லாம் என்னவென்று சடையரைப் பார்த்தனர்.

நீண்ட பெருமூச்சுடன் “போர் முடிந்தது செங்கோடா! உன் மகளை விழுங்கி விட்டான் கார்கோடன்” என்றதும் “ஐயோ!” என்று பெண்கள் எல்லாம் அலறினார்கள்.

“என்ன சொல்கிறீர்கள் சடையரே? என் மகளை...எ..எப்படி?”

“சிங்க உருவில் அவளை விழுங்கி விட்டான்”.

“அவ்வளவு தானா? அவனை அழிக்கப் பிறந்தவள் என்று சொன்னீர்களே சடையரே?” என்று அழ ஆரம்பித்தான்.

அவனது கரத்தைப் பற்றி அழைத்துக் கொண்டு “என்னோடு வா!” என்று பரபரவென்று போர் நடந்த இடத்தை நோக்கிச் சென்றார்.

அங்கே கார்கோடன் “ம்ம்...ம்ம்..” என்கிற உறுமலுடன் நடந்து கொண்டிருந்தான்.

சடையரைப் பார்த்ததும் “எனது சக்தி புரிந்ததா சடையா? இனி, இந்த வனம் என் இடம்” என்றான் கர்வமாக.

அலட்சியமாக அவனைப் பார்த்த சடையர் “யுத்தம் முடிந்ததாக யார் சொன்னது கார்கோடா? இது முதல் யுத்தம் தான். அதோடு மந்திர வேர் ஜமீன் இல்லத்தில் இருக்கிறது. முடிந்தால் தொட்டுப் பார்” என்றார்.

“பதினெட்டு வருடங்களுக்கு முன் புறமுதுகிட்டு வந்த கார்கோடகன் இல்லை இவன். வேரை எடுத்துக் காட்டுகிறேன்”.

“உன்னால் முடியாது! மிதுனமாலினி மீண்டும் வருவாள். இந்த யுத்தம் இன்னும் நான்கு ஜென்மங்களுக்கு தொடரும். இறுதியில் வெல்லப் போவது அவளே”.

சடையரின் அருகே வந்து நின்று தனது மிரட்டும் விழிகளால் பார்த்து “வேருடன் வந்து உன்னை இங்கே இருக்கும் மரங்களில் தொங்க விடுகிறேன் சடையா. என் கையால் தான் உன் மரணம்” என்றான் கர்வமாக.

“வேரை எடுத்து வா பார்க்கலாம்” என்று சொல்லி செங்கோடனை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
கார்கோடகனை அந்த வார்த்தைகள் சீண்டிவிட உடனே மலையை விட்டு இறங்க ஆரம்பித்தான். மனதினுள் அத்தனை வெறி. வேரை உடனே எடுத்தாக வேண்டும் என்று எண்ணியபடி ஜமீன் மாளிகையின் முன் வந்து நின்றான்.

தனது சக்தி அதிகரித்து விட்டது என்கிற மமதையில் இருந்தவன் உள்ளே நுழையப் போக தூக்கி வீசப் பட்டான்.

அதில் அதிர்ந்து எழுந்தவன் மீண்டும் முயற்சி செய்ய அவனால் எல்லையைக் கடக்க முடியவில்லை. உள்ளுக்குள் சடையரின் வார்த்தைகள் கோபத்தை விசிறி விட, என்ன செய்வது என்று யோசித்தான்.

அப்போது மருதம்மாள் எதற்கோ வெளியே வர அவளைப் பிடித்து தூக்கி அந்தரத்தில் சுழல விட்டவன் “காண்டீபா! மந்திர வேரை எடுத்து வந்து என்னிடம் கொடு” என்று கத்தினான்.

மனைவியின் நிலையைக் கண்ட காண்டீபன் வேகமாக ஓடிச் சென்று கருப்பனின் சிலையை அகற்றி வேரை எடுக்க முயற்ச்சித்தான். அடுத்த நிமிடம் அவன் கார்கோடகனின் காலில் கிடந்தான்.

நடந்தவற்றைக் கண்ட கார்கோடகன் அப்படியே அங்கேயே அமர்ந்து தனது சக்தியை பிரயோகிக்க மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தான்.

அந்தரத்தில் சுழன்று கொண்டிருந்த மருதம்மாள் கீழே விழ, கணவனும் மனைவியும் எழுந்து ஜமீன் மாளிகைக்குள் ஓடி விட்டனர். இவன் மந்திரத்தை உச்சரிக்கும் நேரம் குதிரையின் குளம்பொலி கேட்க ஆரம்பித்தது.

ஆத்திரத்தில் மதியிழந்திருந்தவன் அதை கவனிக்கவில்லை. வெள்ளைக் குதிரை அவன் அருகே வந்து நின்று ஒரு வட்டம் அடித்தது. அடுத்த நிமிடம் அவனது ஜடாமுடியைப் பற்றி இழுத்துக் கொண்டு வனத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது.

அவனால் மந்திரத்தை தொடர முடியவில்லை. ஐய்யனாரின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் முடியவில்லை. தனது சக்தியால் அவரிடமிருந்து விடுபட போராட எதுவும் நடக்கவில்லை.

மலையடிவாரத்திற்கு சென்ற குதிரை நின்றது. ஐய்யனார் தனது கைப்பிடியில் இருந்தவனை வனத்தை நோக்கி வீசினார். காற்றில் பறந்து போர் நடந்த இடத்தில் சென்று விழுந்தான் கார்கோடன்.

மெல்ல எழுந்து நின்றவனின் உள்ளத்தில் குரோதம் பொங்கியது. தான் அளப்பரிய சக்திகளை அடைந்து விட்டோம் என்கிற இறுமாப்பில் இருந்தவனுக்கு மிகப் பெரிய அடி. அவனால் அந்த வேரை நெருங்கக் கூட முடியவில்லை.

அவமானத்தால் மீண்டும் குகைக்குள் அடைந்தான். இம்முறை அவனிடம் அதிக வெறி இருந்தது. இனி, எந்த சக்தியும் நெருங்க முடியாத இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தீவிரமாக தவம் புரிய ஆரம்பித்தான்.

செங்கோடனும் அவனது கூட்டமும் மிதுனமாலினியின் மறைவில் வருத்தத்தில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு இருந்த ஒரே நிம்மதி மந்திர வேரை கார்கோடனால் எடுக்க முடியவில்லை என்பதே. சடையரும் அவர்களிடம் இருந்து கிளம்பி விட்டார். நேரம் வரும் போது வருகிறேன் என்று சொல்லி சென்று விட்டார்.

காலங்கள் உருண்டோட செங்கோடனும் அவனது மனைவியும் இறந்து போக, அடுத்த தலைவன் வந்தான். கார்கோடகன் குகைக்குள்ளேயே இருந்தான். ஜமீன் குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தது.

இரெண்டாவது யுத்தத்திற்கு தயாரானான் கார்கோடகன்.

அத்தியாயம் – 5

மீண்டுமொரு யுத்தம் நடந்து மிதுனமாலினி என்கிற மஞ்சரி கார்கோடகனிடம் தோற்றுப் போனாள். நஞ்சுண்டனும் இப்பிறவியிலும் அவளுடனே உயிர் தியாகம் செய்தான். காணிகுடி மக்களுக்கு நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. ஆனால் மந்திர வேரை மட்டும் அவனால் எடுக்க முடியவில்லை. அதில் தான் எங்கு தோற்கிறோம் என்று புரியாமல் வெறி பிடித்துப் போனது.
இம்முறை தனது கோபத்தை எல்லாம் மக்களின் மீது காட்ட ஆரம்பித்தான். குகைக்குள் அடையாமல் காணிகுடி பகுதியிலேயே சுற்றி அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருந்தான்.

ஜமீன் வம்சத்திலும் தங்களின் குழந்தையை இழந்த பிறகு ஐய்யனாரிடம் சரணடைந்தார்கள். அவரோ நடப்பவற்றை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.

மூன்றாம் தலைமுறையாக ஜமீனின் பேரனுக்கு பெண் குழந்தையாக பிறந்தாள் மிதுனமஞ்சரி. காண்டீபன் வம்சதினரில் நஞ்சுண்டன் மீண்டும் மகனாகப் பிறந்தான். மிதுனமாலினியின் நினைவும், மஞ்சரியின் நினைவுடனும் இந்தக் குழந்தைக்கு பெயர் வைத்தார்கள்.

கோணேஸ்வரன் வணங்கிய காளியிடம் ஆசிர்வாதம் வாங்கி குழந்தைக்கு எல்லாம் போதித்து வளர்த்தார்கள். அவளும் சரியாக பதினெட்டு வயதில் யுத்தத்திற்கு தயாரானாள். நஞ்சுண்டனும் அவளுடன் பெற்றவர்களை பிரிந்து கிளம்பினான்.அவள் கிளம்பவும் ஜமீன் வம்சத்தினரால் தாங்க முடியவில்லை.

அனைவரையும் சமாதானப்படுத்திக் கிளம்பியவள் கார்கோடனுடன் கடும்போர் புரிந்தாள். முதல் இரு ஜென்மங்களைப் போல் அல்லாது இந்த ஜென்மத்தில் அவளது சக்தி அதிகரித்திருந்தது. அதை கார்கோடகன் கண்டு கொண்டான். இருவரையும் சமாளிப்பது அவனுக்கு சற்று கடினமாக இருந்தது.அவளை சாமர்த்தியமாக தனது மந்திர சக்தியால் கிளியாக மாற்றி கழுத்தை திருகி கொன்று விடுகிறான். நஞ்சுண்டனை பன்றியாக மாற்றி அவனையும் கொன்று விடுகிறான்.

அதன்பின்னே வழக்கம் போல மந்திர வேரை எடுக்க முயல அது தோல்வியில் முடிந்தது. அந்த வேரை மிதுனமாலினியால் மட்டுமே அங்கிருந்து எடுக்க முடியும் என்பதை அவன் இதுவரை அறிந்து கொள்ளவில்லை.

நான்காவது ஜென்மம் மீண்டும் ஜமீன் வம்சத்திலேயே தொடங்கியது. தங்களின் வரலாற்றில் இருந்தவற்றை கேள்விப்பட்ட சிறியவர்கள் குழந்தைக்கு அந்தப் பெயர்களை வைக்க விரும்பவில்லை. அவளுக்கு மோகினி என்று பெயர் சூட்டினார்கள். மோகினிக்கு அனைத்து கலைகளும் பயிற்றுவிக்கப்பட்டது.

எங்கிருந்தோ சித்தர்கள் எல்லாம் வந்து அவளை வாழ்த்திவிட்டுச் சென்றனர். ஜமீன் வம்சத்தினருக்கு இம்முறை நிச்சயம் அவள் வெற்றி பெற்று விடுவாள் என்கிற எண்ணம் இருந்தது. அதோடு கார்கோடகன் வனத்தை ஆக்கிரமித்த பின் அந்தப் பகுதியே ஒரு சுடுகாடு போல மாற ஆரம்பித்திருந்தது.

நல்ல மழை இல்லாது, அங்கு சூழ்நிலையே மெல்ல மாறி வர ஆரம்பித்திருந்தது. அதோடு மலையடிவாரத்திலும் அதே சூழல் பரவ ஆரம்பித்தது. மக்களின் வீடுகளில் திடீர் திடீரென்று கல் மழை பொழிய ஆரம்பித்தது. ஒரு சில வீடுகள் தானாக பற்றி எரிந்தது.

இரவு நேரம் யாருக்கும் பாதுகாப்பானதாக இருக்கவில்லை. மக்கள் பயத்தில் ஆறு மணியளவிலேயே வீட்டில் அடைய ஆரம்பித்தனர். இதை எல்லாம் கவனித்த ஜமீன்தார் ஐய்யனாருக்கு பூஜை போட்டு அவரிடம் பாதுகாப்பை கேட்க நினைத்தார். ஆனால் அதே சமயம் வீட்டிலிருந்த பெண்கள் தோட்டத்திலிருக்கும் வேரினால் தான் இத்தனையும் நடக்கிறது. அதை அப்புறப்படுத்தினால் எல்லாம் சரியாகும் என்று கூறினார்கள்.

மக்களும் ஜமீன்தாரிடம் வந்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினார்கள். ஜமீன்தார் தனது யோசனையின்படி ஐய்யனாருக்கு பூஜை போட்டு குறி கேட்டு விடுவோம் என்ற முடிவு செய்தார். பூஜை ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கியது. ஊரே கூடி நின்று பூஜை போட, ஊரிலிருந்த ஒரு பெரியவர் மீது இறங்கினார் ஐய்யனார்.

அவர்கள் தனக்கெதிராக பூஜை செய்வதாக எண்ணிய கார்கோடகன் அதை கெடுக்க காற்றும் மழையுமாக அந்த இடத்தை ஆட்டிப் படைத்தான். ஐய்யனாரின் பூஜை தடைபட வேண்டும் என்பது அவனது எண்ணம். அவரால் தான் தன்னால் வேரை எடுக்க முடியவில்லை என்பதால் தனது கோபத்தை அதில் காட்டினான்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
பூசாரியும் கோடாங்கியும் மக்களை அங்கிருந்து நகர வேண்டாமென்று கட்டளையிட்டனர். ஜமீன் குடும்பம் அந்தக் காற்று மழையிலும் அங்கேயே நின்றது. பெரியவரின் மீது இறங்கிய ஐய்யனார் இடி இடியென்று சிரிக்க ஆரம்பித்தார்.

“அடேய் கார்கோடகா! ஆடாதே! என் எல்லையில் வந்து இடர் தருகிறாயா? விடமாட்டேன்” என்று ஆடினார்.

கையில் அருவாளுடன் ஐய்யனாரின் ஆட்டம் உக்கிரமாக இருந்தது. தனது மக்களை துன்பப்படுத்த நினைக்கும் அவனுக்கு பாடம் புகட்டுவேன் என்று சூளுரைத்தார்.

குழந்தைகள் எல்லாம் பயந்து போய் தாயின் சேலையில் மறைந்து கொண்டன. பெண்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் அண்டி நின்று தங்களின் பயத்தைக் குறைக்க முயன்றனர்.

விழிகள் சிவக்க அந்தப் பெரியவர் ஐயன்னாரே நேரில் வந்தது போல திமிறிக் கொண்டு நின்றார்.
பூசாரி மக்களின் குறையெல்லாம் சொல்லி குறி கேட்க பெரியவரோ ஜமீன்தாரைப் பார்த்து “உன் இல்லத்திலிருக்கும் வேர் உன் குலமகளின் சக்தி. அதை எமது அனுமதியில்லாமல் யாரும் எடுக்க முடியாது. எனது எல்லையில் இருக்கும் என் மக்களுக்கு நானே காவல்” என்று சொல்லி குதித்து குதித்து ஆட ஆரம்பித்தார்.

அவரின் கையிலிருந்து அருவாள் சுற்றிச் சுழன்றதில் காற்றும் மழையும் தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

காரையாற்று காட்டில்
நோயாகத் தோன்றி இருப்பான்
கார்கோடன் எனும் அரக்கன்
குடியெல்லாம் பதறி துடிக்க
வனநீலியைக் கொன்று
மந்திர வேரை அடைந்திட
ஆசை கொண்டவன்
வாழ்நாள் முடிகின்ற வேளை
வெகுதூரத்தில் இல்லை
ஐய்யன் துணையிருக்க
பயமேதுமில்லை பிள்ளைகாள்!

தனக்கு வனத்தில் ஒரு கோவில் கட்டும்படி கேட்டவர் ஆடிக் கொண்டே மக்களுக்கு நானிருக்கேன் என்று சொன்னவரின் வாயில் சூடத்தைக் கொடுக்க அதை அப்படியே விழுங்கி மடாரென்று தரையில் சாய்ந்தார்.

அவரின் உக்கிரத்தில் அந்த இடமே பயங்கரமாக இருந்தது. ஜமீன்தாருக்கும் அவரின் குடும்பத்திற்கும் தேவையான பதில் கிடைக்க, மோகினியுடன் வீடு திரும்பினார்கள்.
வனப்பகுதியில் அவருக்காக ஒரு கோவில் கட்டப்பட்டது. காட்டுச்சித்தர் ஒருவர் தினமும் பூஜை செய்து கொண்டிருந்தார்.

அதன்பின்னர் இரவு வேளைகளில் குதிரை குளம்பொலி மட்டும் தான் கேட்கும். கார்கோடனின் மந்திரங்கள் அங்கு வேலை செய்யவில்லை. மோகினி அவனுடன் போருக்கு கிளம்பினாள். தனது தோல்வியின் காரணமாக அவளுடன் படுபயங்கரமாக போரிட்டான். இறுதியில் அவளை இரண்டாக கிழித்து இரண்டு திசைகளிலும் வீசினான். அப்போதும் அவனது வெறி அடங்கவில்லை.

அப்போது அவன் முன்னே வந்த சடையர் “இறுதிப் போருக்காக காத்திரு கார்கோடா! அவள் வருவாள்! உன்னை அழித்து இவ்வனத்தைக் காப்பாள்” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

காணிகுடி மக்கள் நரகத்தில் உழன்றார்கள். அவர்களின் மக்கள் தொகை குறைய ஆரம்பித்தது. தனது கோபத்தில் கண்ணில் படுபவர்களை எல்லாம் கொன்று குவித்தான். காலம் கடந்தது. கனிகா ஜமீன் குடும்பத்தில் பிறந்தாள். ஆனால் பெரியவர்களின் மூலம் அறிந்து கொண்டவற்றினால் இந்த ஊரில் இருக்க மாட்டோம் என்று சொல்லி அவளை தூக்கிக் கொண்டு வெளிநாடு சென்று விட்டார்கள்.

சரியாக பதினெட்டு வயதில் இதோ விதி அவளை கார்கோடனின் முன் நிற்க வைத்திருக்கிறது.
தன் முன்னே நின்ற கனிகாவைப் பார்த்தவன் “முடித்தது இன்றோடு அனைத்தும் முடிந்து விடும் மாலினி. நீ வேரை எடுத்துக் கொடுத்து விட்டால் எல்லாம் முடிந்து விடும்” என்றான் உறுமலுடன்.
“ஆம்! இன்றோடு உன் ஆட்டம் முடிந்து விடும் கார்கோடா! உனக்காகவே வந்திருக்கிறேன். என் வனத்தை விட்டு உன்னை அகற்றவே வந்திருக்கிறேன்” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போது மயக்கத்திலிருந்து எழுந்த அஸ்வத் அவளை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தான் காரில் இருந்தே.

தனது சக்தியால் அவளை தூக்குவதற்கு முயல, அவளின் விரலைக் கூட அசைக்க முடியவில்லை கார்கோடனால்.

அவனது முயற்சியை புரிந்து கொண்டவள் தனது கரத்தை உயர்த்தி அவனை தூக்கி அடித்திருந்தாள். அதில் அதிர்ந்து எழ முயன்றவனை நஞ்சுண்டன் தனது சக்தியால் எட்டி உதைத்தான்.

“மிதுனமாலினி!” என்று ஆங்காரத்தோடு எழுந்து நின்றவன் அவளை நோக்கி நெருப்பு கோளங்களை அனுப்ப ஆரம்பித்தான்.

மூவருக்கும் கடுமையான சண்டை நடக்க ஆரம்பித்தது. கார்கோடகனுக்கு இந்த முறை அவளை கொல்வதை விட, அவளை வைத்தே வேரை எடுத்து விட்டு பின் கொல்ல வேண்டும் என்கிற எண்ணம் தான் இருந்தது. அதனால் அவளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்தான். ஆனால் அது அத்தனை எளிதான காரியமாக இல்லை.

அவளை வசப்படுத்த நஞ்சுண்டன் தடையாக இருப்பதாக எண்ணி அவனை தாக்க ஆரம்பித்தான். அப்போது குதிரையின் குளம்பொலி கேட்க ஆரம்பித்தது. அதோடு வனமெங்கும் ‘சிவாய நம சிவாய நம’ என்ற ஒலி எழ ஆரம்பித்தது.

வெள்ளைக் குதிரை மட்டும் தனித்து வர, அதன் மேலேயே அருவாள் காற்றில் சுழன்று கொண்டே வந்தது. மிதுனமாலினி குதிரை அருகே வந்ததும் பாய்ந்து அதன் மீது ஏறி அமர்ந்தாள்.

நடப்பவற்றை எல்லாம் காரிலிருந்து இறங்கி ஒரு மரத்தின் பின்னே ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த அஸ்வதுக்கு அதிசயமாக இருந்தது. பைக்கின் பின்னே அமர கூட பயப்படும் அவள் சாதரணமாக குதிரையின் மீதேறி அமர்ந்ததை அதிர்ந்து பார்த்தான்.

குதிரையின் மீதேறி அமர்ந்தவளின் கரங்களில் காற்றில் சுழன்று கொண்டிருந்த அருவாள் வந்தமர்ந்தது. நஞ்சுண்டனுடன் போரிட்டுக் கொண்டிருந்த கார்கோடகனை நோக்கி குதிரை பாய்ந்தது. அவளின் வருகையை உணர்ந்த நஞ்சுண்டன் கார்கோடகனை தன் இருகைகளிலும் தூக்கி விட்டான்.

குதிரையில் வந்தவளின் வாள் நஞ்சுண்டனின் கையிலிருந்தவனின் உடலை இரு துண்டுகளாக்கியது. கார்கோடகனின் கண்கள் அதிர்ச்சியுடன் அவளை நோக்கியது. அப்போது தான் அவளின் கழுத்தில் இருந்த மாலையை கவனித்தது. மந்திர வேரினால் ஆன மாலை அது.


“நஞ்சுண்டா அவனது உடலை இருவேறு திசைகளிலும் மாற்றி எறி” என்று உத்தரவிட்டாள்.

அதைப் போலவே அவன் செய்ய கார்கோடகனின் உயிர் பிரிந்தது. மிதுனமாலினி என்கிற கனிகா குதிரையிலிருந்து இறங்கினாள். அப்போது அவளின் மீது பூ மாரி பொழிய ஆரம்பித்தது. குதிரையும் வாளும் அங்கிருந்து சென்று வனத்திலிருந்த கோவிலுக்குச் சென்றது. அங்கு மாயமாய் மறைந்து போனது.


கனிகா அப்படியே மயங்கி சரிய, நஞ்சுண்டன் இருளாக மாறி தனது குடிசையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். அஸ்வத்தும் மரத்தின் பின்னே மயங்கி சரிந்திருந்தான்.

மறுநாள் காலை ஜமீன் பங்களாவில் விழித்தெழுந்த அஸ்வத் தனது தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தான். பயங்கர கனவொன்று கண்டதை எண்ணியபடி கீழே வந்தான். அங்கே கனிகா பேச்சியாயிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“கனி! எனக்கு நேற்று ஒரு பயங்கர கனவு. நீ யாரோ ஒரு மந்திரவாதியோட சண்டை போடுகிற மாதிரி பார்த்தேன்” என்றான்.

குழப்பத்துடன் கனிகா அவனைப் பார்த்து “லூசு! சரியா தூங்காம என்னைப் பற்றி வேற கனவு கண்டிருக்க” என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

பேச்சியாயியும் கஜேந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அந்நேரம் அவர்களின் தோட்டத்தில் குதிரையின் குளம்பொலி கேட்டது.

****************************************சுபம்***********************************************
 
  • Like
Reactions: rajeswari sivakumar

rajeswari sivakumar

Administrator
Staff member
Mar 26, 2018
223
23
43
அருமை க்கா. விட்டலாச்சார்யா படம் பார்த்த பீல். சூப்பர் க்கா