Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
138
486
63
749

அத்தியாயம் - 15

அவளது முகத்திலும் லேசான அதிர்ச்சி தெரிந்தது.

“சாரி! என் கசினோட கார் மாதிரி இருந்தது” என்றவள் காரின் நம்பர் ப்ளேட்டைப் பார்த்துவிட்டு, “ஒரே கலர் ஒரே மாடலா இருந்ததால தப்பா நினைச்சிட்டேன்” என்றதும், இருக்கலாம் என்றுதான் அவனும் நினைத்தான்.

“இட்ஸ் ஓகே” என்றான்.

அவள் அத்துடன் சென்றிருந்தால் எதுவும் தெரிந்திருக்காது. ஆனால், “என் கசின் பேரும் பிரபுதான்” என்று அவள் சொன்னபோது, ஸ்ரீராமின் மனத்தில் சிறிதாக அல்ல பெரிய கிளர்ச்சியே எழ்ந்தது.

அவளையே ஆழ்ந்து பார்த்தவன், “நானும், காருக்குச் சொந்தக்காரனோட பேரு பிரபுன்னு சொல்லவேயில்லையே” என்றான்.

அவளது முகம் அப்பட்டமாக திகைப்பை வெளிப்படுத்த, ஸ்ரீராமின் மனத்திற்குள் இனம்புரியா அச்சம் சூழ்ந்து கொண்டது.

“நீங்க யாரு?” என்று அவன் விசாரிக்க, அவள் ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

பார்க்கிங்கை நோக்கி வந்துகொண்டிருந்த தங்கையைப் பார்த்தான். உடன் வந்த தேவி ஏதோ சொன்னதற்குச் சிரித்தபோதும், அவளது எண்ணங்களெல்லாம் வேறெங்கோ இருப்பதாகவே தோன்றியது.

காலையில் பிரபுவிடம் பேசியபோது, அவன் சலிப்புடன் பேசியது நினைவிற்கு வந்தது. பிரபு, சஹானா, அந்தப் பெண் மூவரையும் ஒரே வரிசையில் வைத்து யோசித்தவனுக்கு தலை சுற்றியது.

‘வேண்டாம்! கனவிலும் அப்படி எதுவும் நடக்கக்கூடாது’ என்று நினைத்தவன் தங்கையைப் பார்த்தான்.

‘சஹி! நீ சந்தோஷமா இருக்கியாடா!’ என மானசீகமாகத் தங்கையிடம் கேட்டான். அந்த நொடியிலிருந்து அவனது கவனம் முழுக்க முழுக்கச் சகோதரியின் மீதே இருந்தது.

அண்னன் தன்னைக் கவனிக்கிறான் என்ற பிரக்ஞை சிறிது ஏற்பட்டிருந்தாலும் கூட, சஹானா கவனமாகியிருப்பாள். ஆனால், அவளது வாழ்க்கையில் எப்போதோ நுழைந்து விட்டவளைப் பற்றிய நினைப்பிலேயே அவளது நோக்கமெல்லாம் இருந்ததில், தமையனின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அவள் உணரவேயில்லை.

பிரபு அலுவலகத்திலிருந்து வந்த பின்பும், அவர்களிடையில் பெரிதாக எந்தப் பேச்சும் இருந்ததாகத் தெரியவில்லை. பிரபு தாமதமாக அலுவலகத்திலிருந்து வந்ததால், அவனுடன் சேர்ந்து உணவருந்த முடியாவிட்டாலும், தான் இருந்த அறையிலிருந்து தங்கையையும், அவளது கணவனையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் ஸ்ரீ.

இருவரும் ஏதோ பேசிக்கொண்டே, சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், அதில் அன்னியோன்யம் என்பது எள்ளளவிற்குக் கூடத் தென்படவில்லை. அதிலும், அவன் கையலம்ப எழுந்து செல்லும் முன் ஏதோ சொல்ல, சஹானாவின் முகம் அதிர்வையும், சோர்வையும் ஒருசேர வெளிப்படுத்தியது.

‘நிச்சயம் ஏதோ இருக்கிறது. ஆனால் அது என்ன?’ புரியாமல் குழம்பிப் போனான்.

மறுநாள் காலையில் கிளம்பும் போதும் இருவரும் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கடமைக்கு என்று சொல்வார்களே அதைப் போன்றிருந்தது அவர்களது நடவடிக்கை. தென்காசிக்கு வந்திருந்தபோது அவர்கள் இருவருக்கும் மத்தியிலிருந்த அனுசரணையையும், அன்னியோன்யத்தையும் நேரில் கண்டிருந்தவனுக்கு, இரண்டிற்குமான வித்தியாசம் தெளிவாகத் தெரிந்தது.

பிரபு கிளம்புவதற்கு முன்பாக, வளைகாப்புப் பத்திரிகையை முறைப்படி கொடுத்து அவர்களை அழைத்தான்.

“இதுக்கெல்லாம் என்ன அவசியம்? நம்ம வீட்டு ஃபங்க்‌ஷன். நீ சொல்லணும்னு அவசியமே இல்லை” என்ற பிரபுவை, உணர்வுகளைத் தொலைத்த விழிகளால் பார்த்தான்.

‘பிரபு! நீ நல்லவன் தானே! என் தங்கைக்கு, எந்தத் துரோகமும் நீ செய்யவில்லையே! என்னோட அனுமானமெல்லாம் தவறாகவே போகட்டும்’ என மானசீகமாக கேட்டுக்கொண்ட ஸ்ரீராம், “முறைன்னு ஒண்ணு இருக்கு இல்லயா!” என்றான்.

“ஓகே ஓகே. உங்க விருப்பத்தையும் ஏன் கெடுப்பானேன்” என்றான் சிரிப்புடன்.

‘கடவுளே! உன் நினைப்பெல்லாம் கற்பனை என்று சொல்லி, என்னை இந்தக் குழப்பத்திலிருந்து வெளியே கொண்டு வா’ என்று வேண்டிக்கொண்டான்.

பிரபு அலுவலகத்திற்குக் கிளம்பிய பின்னர், அவனும் கான்ஃபரென்ஸ் முடிந்து வீட்டிற்குக் கிளம்புவதாகச் சொன்னான்.

“ஏண்ணா! இப்படி வந்ததும் கிளம்பறீங்க? ரெண்டு நாள் என்னோட இருந்தா எனக்கும் ஒரு மாற்றமா இருக்குமில்ல” என்றாள்.

“ஏன் இங்கே உனக்கு என்ன குறை?” என்றவனது குரலில் முற்றிலும் ஆராய்ந்து பார்க்கும் ஆவல் தெரிந்தது.

அண்ணனின் வார்த்தைகளைக் கேட்ட சஹானா, சட்டென ஒரு விரைப்புடன் திரும்பினாள்.

“என்னதுண்ணா!” என்றாள் மெல்லிய குரலில்.

”இல்ல மாற்றமா இருக்கும்னு சொன்னியே அதைச் சொன்னேன்” என்றான்.

“மாற்றம்னா சொன்னேன்… வாய்தவறி வந்துடுச்சி. எனக்குச் சந்தோஷமா இருக்கும்னு சொல்ல வந்தேன்” என்றாள் சமாளிப்பாக.

தங்கையின் முகத்தையே உற்று நோக்கினான் ஸ்ரீராம்.

“என்னண்ணா! புதுசா பார்க்கறா மாதிரி பார்க்கறீங்க?”

“நீ சந்தோஷமா இருக்கியா சஹிம்மா?” என்று அவளது தலையை வருடிக் கொடுத்தான்.

தமையனின் எதிர்பாராத கேள்வியில், திடுக்கிட்டுப் போனாள் அவள்.

மாலையில் புடவைக் கடையில் அந்த ஜோஷிதாவைக் கண்டதிலிருந்தே அவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. தனக்கும், பிரபுவிற்கும் இடையிலான அந்தரங்க வாழ்க்கையில் அனுமதியில்லாமல் நுழைந்தவள், இப்போதெல்லாம் அடிக்கடி தன் எதிரிலும் வர ஆரம்பித்திருப்பதை, எரிச்சலுடன் நினைத்துக் கொண்டாள்.

ஜோஷிதாவைப் பற்றி அண்ணனுக்குத் தெரியாது. ஆனாலும், அவள் இன்று கடையில் இருந்தபோது, ஸ்ரீராம் காரில் இருந்தான்? ‘அப்போது ஏதேனும் நடந்திருக்குமோ!’ என்ற அச்சத்துடன் அவனைப் பார்த்தாள்.

தங்கையின் பார்வையையும், திகைப்பையும் கண்ட ஸ்ரீராமிற்கு, உள்ளம் பரிதவித்தது.

“சஹானா!” என்றபடி அவளைப் பிடித்து உலுக்கினான்.

“திடீர்னு ஏன் இப்படி ஒரு சந்தேகம்?”

“நான் கேட்ட கேள்விக்கு, இது பதில் இல்ல சஹி!”

சமாளிப்பாகச் சிரித்தவள், “இப்படி ஒரு கேள்வி கேட்கறதே தப்புன்னு காலைல சொன்ன அண்ணன், திடீர்னு இப்படி ஒரு கேள்வி கேட்டா, திகைக்காம என்ன பண்ணுவேன்?” என்றாள்.

ஆனால், அவளது விழிகளில் தெரிந்த அலைக்கழிப்பைக் கண்ட ஸ்ரீராம், ‘இவள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள்!’ என்பதைச் சந்தேகமில்லாமல் புரிந்து கொண்டான்.

அண்ணனின் பார்வையில் நம்பிக்கையின்மையைக் கண்டதும், “உன் தங்கை, ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்ணா!” என்று சொல்ல, பதிலேதும் சொல்லாமல் அவளையே பார்த்தான்.

“ம்ச்சும்! இவ்வளவு சொல்றேன்... நம்பலையா நீங்க?” என்று அவனிடம் செல்லம் கொஞ்சினாள்.

“ம்” என்ற முறுவலுடன், “நீ சொல்றது உண்மையாயிருந்தா, சந்தோஷம்மா!” என்றான்.

அவன் உடைகளை அடுக்க ஆரம்பிக்க, சஹானா அயர்ச்சியுடன் சோஃபாவில் அமர்ந்தாள்.

‘என்னை மன்னிச்சிடுங்க அண்ணா! உன்னோட பிரியத்துக்குரிய மாப்பிள்ளையோட வாழ்க்கைல, எனக்கு முன்னாலயே ஒரு பொண்ணு இருந்தான்னு, நான் எப்படிச் சொல்வேன்? நிச்சயமா உங்களால தாங்க முடியாதுண்ணா! பிரபுவையும் சங்கடத்துல ஆழ்த்த விரும்பல. இந்தப் பிரச்சனையை நானே சால்வ் பண்ணிக்குவேன். என்னை நம்புங்கண்ணா!’ என்று மனத்திற்குள்ளேயே அவனிடம் மன்னிப்பை யாசித்தாள்.

“ம், கூப்பிட்டியாம்மா!” என்று திரும்பியவன், எங்கோ வெறித்துக்கொண்டிருந்த சகோதரியைப் பார்த்தான்.

அவனது மனம் சில்லு சில்லாகச் சிதறுவதைப் போலிருந்தது. அந்த நிலையிலேயும் அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது.

‘இனி என்ன ஆனாலும், எப்படிக் கேட்டாலும் அவளிடமிருந்து எந்த வார்த்தைகளையும் வாங்க முடியாது என்று அறிந்து கொண்டான். பிரபுவிடமே கேட்டுவிடுவோமா!’ என்ற எண்ணம் எழுந்த வேகத்திலேயே மறைந்து போனது.

‘வேண்டாம்! என்ன என்று அவனிடம் கேட்பது! இந்தக் குதிருக்குள் என்ன இருக்கிறது என்று தெரியாமல் எப்படி விசாரிப்பது?’ என்ற நினைப்பில் தங்கையின் அருகில் அமர்ந்தான்.

“சஹிம்மா! நான் கிளம்பறேன். நீ உன் ஹெல்தைப் பார்த்துக்கடா!” என்றான்.

“கண்டிப்பா!” என்றாள் புன்னகையுடன்.

**********

“இந்தப் ஃபைலை ஜி.எம்கிட்ட கொடுத்திடுங்க” என்று பியூனிடம் ஃபைலை நீட்டினான் ஸ்ரீராம்.

“சரி சார்!” என்றபடி வாங்கிக் கொண்ட பியூன், “கேக்கறேன்னு தப்பா நினைச்சிக்காத சார்! வூட்ல எதனா பிரச்சனையா சார்?” என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

“தப்பா நினைச்சிக்காத சார்! நீ இப்பிடி உம்முன்னு இருந்து நான் பாத்ததேயில்லயா… அதான், கேட்டேன்” என்றான் பியூன்.

“அதெல்லாம் எதுவுமில்ல. கொஞ்சம் வேலை டென்ஷன். நீங்க வேலையைப் பாருங்க” என்றான் சுரத்தே இல்லாமல்.

“இன்னிக்கு நேத்தா பாக்கறேன் உன்னை. எனக்குத் தெரியாதா சார்!” என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியில் சென்ற பியூன், சற்று நேரத்திற்கெல்லாம் ஆவி பறக்கும் காஃபியுடன் திரும்பி வந்தான்.

நெற்றியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஸ்ரீராமின் எதிரில் வைத்தவன், “காப்பிய குடிச்சிடு சார்… உனக்காக சூடா கொண்டாந்தேன்” என்று சொல்லிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியேறினான்.

ஸ்ரீக்கும் அப்போது அது தேவையாக இருக்க, காஃபி கப்புடன் ஜன்னல் வழியாக வெளியே வெறித்துக் கொண்டிருந்தான்.

சென்னையிலிருந்த நாட்களில் நடந்த நிகழ்வுகளெல்லாம் அவனது சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்துவதாகவே இருந்தது. ‘பிரபுவும், சஹானாவும் இயல்பாகப் பேசிக் கொள்வதைப் போலிருந்தாலும், அவர்களுக்கிடையிலிருந்த அன்னியோன்யம், இப்போது சுத்தமாக இல்லை’ என்றே தோன்றியது.

ஆனாலும், அவனைப் பொறுத்த வரையில், முழுதாக விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் தங்கையிடமும், பிரபுவிடமும் பேசவும் அவன் தயாராக இல்லை. அதனால், முடிந்த அளவிற்கு இயல்பாகவே நடந்துகொள்ள முயன்றான். தென்காசிக்கும் திரும்பி விட்டான். ஆனாலும், மனம் எதிலும் ஈடுபட மறுக்கிறது.

தங்கையின் வாழ்க்கையில் இருக்கும் சீர்கேட்டை அறிந்துகொள்ள, மனம் தவித்தது. நிச்சயமாக சஹானா வெளிப்படையாக எதையும் சொல்லப்போவதில்லை. அப்படியிருக்க, அவளிடமே இதைப் பற்றிக் கேட்டுச் சங்கடத்தில் ஆழ்த்தவும், அவனுக்கு மனமில்லை. அதோடு, வர்ஷாவின் வளைகாப்பு முடியும்வரை காத்திருக்க நினைத்தான்.

எப்போதும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவனை என்னவென்று வீட்டிலிருப்பவர்கள் விசாரிக்க, வேலைப் பளு’ என்று சமாதானப்படுத்திவிட்டான். ஆனால், திவ்யாவைத் தான் அவனால் சமாளிக்க முடியவில்லை.

ஊருக்குத் திரும்பி வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இரண்டு முறை அவளாக போன் செய்த போது, மீட்டிங்கில் இருப்பதாகக் கூறி தவிர்த்துவிட்டான். அதன்பிறகு அவள், அவனுடைய வீட்டுத் தொலைபேசியில் அழைக்க, தவிர்க்க முடியாமல் பேசினான். நாளைச் சந்திக்க வருகிறேன் என்றும் சொன்னான். ஆனால், அதைக் கடைபிடிக்கத் தவறிவிட்டான்.

முன்தினத்திலிருந்து இருமுறை போனில் அழைத்துவிட்டாள். நான்குமுறை குறுஞ்செய்தியும் அனுப்பிவிட்டாள். எதற்குமே அசைந்து கொடுக்காமல், ‘இப்போதிருக்கும் மனநிலையில் அவளைச் சந்தித்தாலும், இயல்பாக பேச முடியாது’ என்ற காரணத்தால், அவளை இன்னும் சந்திக்காமல் தவிர்த்து வந்தான்.

அதே நினைவுடனே, கையிலிருந்த காஃபியை உறிஞ்சியவனது நாக்குச் சுட்டுக் கொள்ள, “ஸ்! ஆ…!” என்றவன் வேகமாக தண்ணீரை எடுத்துப் பருகினான்.

நன்றாக பொத்துக் கொண்ட நாக்கில் எரிச்சல் அடங்கவேயில்லை. சலிப்புடன் நெற்றியைத் தடவிக் கொண்டே இருக்கையில் அமர, யாரோ கதவை தட்டும் சப்தமும் கேட்டது.

சப்தமாக, “வாங்க…” என்றான்.

“ஹாய் ராம்! குட்மார்னிங்” என்றபடி அறைக்குள் நுழைந்தாள் திவ்யா.

அவளை அந்தநேரத்தில் சற்றும் எதிர்பாராதவன், திகைத்துப் போனான். ஆயினும், அவளது மலர்ந்த முகத்தைப் பார்த்ததும், தனது இறுக்கத்தைக் களைந்து சிறு முறுவலை உதிர்த்தான்.

“குட்மார்னிங்! உட்கார்” என்று இருக்கையைக் காட்டினான்.

“தேங்க்யூ!” என்றபடி அமர்ந்தவள், அவனது முகத்தையே கூர்ந்து பார்த்தாள்.

பியூனை அழைத்து அவளுக்கும் காஃபி கொண்டுவரச் சொன்னவன், “அப்புறம், எப்படியிருக்க?” என்று விசாரித்தான்.

குறுநகையுடன், “பரவாயில்லயே, நாலு நாள் கழிச்சி என்னை ஒருவழியா விசாரிச்சிட்டீங்களே” என்றாள்.

கீழுதட்டைக் கடித்து தன்னைச் சமன்படுத்திக் கொண்டவன், “சரி, என்ன இந்தப் பக்கம் திடீர் விஜயம்?” என்றான்.

“நான் அத்தனை முறை போன் செய்தும், நீங்க என்னைப் பார்க்க வரல. பிஸியா இருக்கீங்களோன்னு நானே வந்துட்டேன்” சொல்லும்போதே, லேசான சோகம் அவளது குரலில் இழையோடியது.

சட்டென் அவனுக்கு எரிச்சல் மூள, “என்னைச் சந்தேகப்படறியா?” என்றான் கோபத்துடன்.

அவனை உறுத்துப் பார்த்தவள், “இது நான் கேட்கவேண்டிய கேள்வி. என்னை ஏன் அவாய்ட் பண்றீங்க?” என்றாள் அழுத்தமாக.

“படிச்ச பொண்ணு மாதிரி பேசு. பைத்தியம் மாதிரி உளறாதே” என்றான் வேகமாக.

“படிச்ச பொண்ணு என்ன? படிக்காத பொண்ணு என்ன? நீங்க செய்யறதைப் பார்த்தா எல்லாப் பொண்ணுங்களும் ஒரே மாதிரிதான் யோசிப்பாங்க” அவளும் கோபத்தை மறைத்துக் கொண்டு பேசினாள்.

“ஆஃபிஸ் வேலை கொஞ்சம் அதிகம். வர்ஷா வளைகாப்பு வேலை வேற…” என்று மெல்ல முனகினான்.

“என் கண்ணைப் பார்த்துப் பேசுங்க ராம்! என்னதான் ஆஃபிஸ் வேலையிருந்தாலும், அதைச் சொன்னா நான் புரிஞ்சிக்க மாட்டேனா? என்னை அவாய்ட் பண்றா மாதிரி தானே பேசினீங்க...” என எரிச்சலுடன் கேட்டாள்.

ஸ்ரீராமிற்கு கடுப்பாக இருந்தது.

“சரி, அப்படிப் பேசினதுக்குச் சாரி! போதுமா…” என்றவன் தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

ஆற்றாமையுடன், “நான் உங்ககிட்ட சாரியை எதிர்பார்க்கல ராம்!” என்றாள்.

“ப்ளீஸ் திவ்யா! ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ…” என்றவனைப் பார்க்கவே அவளுக்குப் பரிதாபமாக இருந்தது.

‘எதையோ மனத்திற்குள் போட்டு உழப்பி, தன்னையே வருத்திக் கொண்டிருக்கிறான்’ என்று புரிய, அவனருகில் சென்றாள்.

“ராம்! ஏதாவது பிரச்சனையா?” கவலையுடன் கேட்டாள்.

இப்போது அவளிடம் அவனால் சொல்லவும் முடியவில்லை; சொல்லாமல் இருக்கவும் இயலவில்லை. ‘தான் ஏதாவது சொல்லி, கடைசியில் அது பொய்யாகப் போகும் பட்சத்தில், பிரபுவின் மீது அவளுக்கொரு தவறான எண்ணம் தோன்றிவிடக்கூடாது’ என்று பயந்தான்.

“ஒண்ணுமில்ல… இது கொஞ்சம் பர்சனல். அதாவது, எங்க குடும்ப விஷயம். ப்ளீஸ் எதுவும் கேட்காதே” என்றான்.

அவனது வார்த்தைகள் மனத்தை முள்ளாகத் தைக்க, ஆதரவுடன் அவனது தோளைப் பற்றிக் கொண்டிருந்த கரத்தை விலக்கிக் கொண்டாள். உணர்ச்சிகளைக் கலைந்த முகத்துடன் தனது கைப்பையை எடுத்தாள்.

“நான் கிளம்பறேன்…” என்றவள் விறுவிறுவென அங்கிருந்து சென்றாள்.

‘ம்’ என்றவன் அவள் பக்கமாகத் திரும்பவே இல்லை.

“இன்னா சார்! டாக்டரம்மாவை ஏதாவது சொல்லிக்கினியா? அழறா மாதிரி போவுதே… என்னமோ போ சார்! நல்ல டாக்டரம்மா சார்! அதை அழவுட்டுகினியே… வாங்கியாந்த காபியும் வீணா பூட்ச்சி…” என்றவன், ஸ்ரீராம் குடிக்காமல் வைத்திருந்த காஃபியையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

அப்போதுதான், பேசிய வார்த்தைகளின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்தவன், தன்னையே நொந்து கொண்டான்.

‘இருக்கும் பிரச்சனை போதாதென்று இதுவேறு. நான் ஏன் அப்படிப் பேசினேன்? பாவம் திவ்யா… என்ன நினைத்திருப்பாள்? கடவுளே!’ என்று அலுத்துக் கொண்டான்.

*************

“இன்னும் கொஞ்சம் வச்சிக்கோங்க தம்பி!” என்று அவியலை அவனது தட்டில் வைத்தார் வைதேகி.

“அத்தை! போதும்… இதுவே வயிறு நிரம்பிடும் போலிருக்கே. நைட் நான் எப்படி சாப்பிடுறது?” என்று போலியான கவலையுடன் சொன்னான் ஸ்ரீராம்.

“நீங்க வீட்டுக்குப் போறதுக்குள்ள செரிச்சிடும் சாப்பிடுங்க” என்று சொல்லிக் கொண்டிருக்க, வீட்டிற்குள் நுழைந்த திவ்யா, இதையெல்லாம் பார்த்துக் கொண்டு வாசலருகிலேயே நின்றிருந்தாள்.

சிரிப்புடன் நிமிர்ந்தவன் அவளைக் கண்டதும், “ஹாய், குட் ஈவ்னிங்!” என்றான்.

கடுகடுத்த முகத்துடன் அவனது மாலை வணக்கத்தைப் புறம் தள்ளியவள், எதுவுமே பேசாமல் தனது அறைக்குச் சென்றாள்.

அவளது கோபத்தைப் புரிந்து கொண்டிருந்தவன், அதிருப்தியுடன் புருவத்தை உயர்த்தினான்.

மகளின் போக்கைக் கவனித்த வைதேகி, “நீங்க சாப்டுட்டே இருங்க தம்பி! இதோ வந்திடுறேன்” என்றவர், கவலையுடன் மகளது அறைக்கு விரைந்தார்.

“திவி! மாப்பிள்ளை வந்திருக்கார். வாங்கன்னு ஒரு வார்த்தைக்கூடச் சொல்லாம வர்ற. இதெல்லாம் நல்லாவாயிருக்கு? அவர் என்ன நினைச்சிக்குவார்?” அன்னைக்கே உரிய கவலையும், ஆதங்கமுமாக வினவினார் வைதேகி.

தோளிலிருந்த கோட்டை ஹாங்கரில் மாட்டிவிட்டு, பின்னியிருந்த கூந்தலை விரித்து உதறி அப்படியே உயர்த்திக் கொண்டையிட்டபடி திரும்பியவள், “அதான், விருந்து உபச்சாரமெல்லாம் நீ பலமா பண்றியேம்மா! அப்புறம் என்ன?” என்றாள்.

“ஏய்! அவர் உன்னைப் பார்க்கத்தானே வந்திருக்கார். நீ இப்படிப் பேசற?” என்றார் கோபத்துடன்.

“அவர் ஒண்ணும் சும்மா வரல. அவர் பேசின பேச்சு, இங்கே இழுத்துட்டு வந்திருக்கு. எனக்குப் பசிக்குது… ரெண்டு அடை சுட்டு வைம்மா. குளிச்சிட்டு வந்திடுறேன்” என்று விட்டேத்தியாகச் சொல்லிவிட்டுச் செல்லும் மகளை, ஆற்றாமையுடன் பார்த்தார்.

கையைப் பிசைந்தபடி ஹாலுக்கு வந்தவர், “ஐந்து நிமிஷத்தில் வந்திடுவா தம்பி! நீங்க இன்னொரு அடை…” என்று சொல்ல, “அத்தை! இனி, முடியவே முடியாது” என்று சொல்லிக் கொண்டே எழுந்து வாஷ்பேசினை நோக்கி ஏறக்குறைய ஓடினான்.

கையைத் துடைத்துக் கொண்டே வந்தவனிடம், “இந்தாங்க தம்பி!” என்று ஆவி பறக்க காஃபியைக் கொடுத்தார்.

“வாவ்! வாசனையே அமர்க்களமா இருக்கே” என்றபடியே வாங்கிப் பருகியவன், “பிரமாதம். எங்க வீட்டுக் காஃபி மாதிரியே அட்டகாசமா இருக்கு அத்தை!” என்றான்.

“சர்க்கரை போதுமா? சூடு சரியா இருக்குங்களா?” என்று வினவ, “எல்லாமே அருமையா இருக்கு. எங்க ஹிட்லர் அத்தையோட கைமணம், அப்படியே உங்க சமையல்ல தெரியுது” என்று வருங்கால மாமியாரின் தலையில் பெரிய ஐஸ் பாரையே இறக்கி வைத்தான்.

இருவரது உரையாடலையும் கேட்டுக் கொண்டே உர்ரென்ற முகத்துடன், அவன் அமர்ந்திருந்த சோஃபாவிலேயே வந்தமர்ந்தாள் திவ்யா.

“அம்மா! எனக்குப் பசிக்குதுன்னு சொன்னேன்ல… கொஞ்சம் உன் பொண்ணையும் கவனி. அதுக்குள்ள உன் மாப்பிள்ளையைக் காக்கா தூக்கிட்டுப் போயிடாது” என்றாள் கோபத்துடன்.

“என்ன… காக்கா தூக்கிட்டுப் போயிடுமா?” கேட்டுக் கொண்டே அவளைத் திரும்பிப் பார்த்தவன் தீவிரமான முகபாவத்துடன், “காக்கா தூக்கிட்டுப் போக, நான் என்ன வடையா?” என்றான்.

அதுவரை போலியாக குடிகொண்டிருந்த அவளது கோபம் விலகியோட, தன்னையும் மீறி சிரித்துவிட்டாள்.

மகளின் துடுக்குத்தனத்தைக் கண்டிக்கும் வகையில், “ஏய் திவி!” என்ற வைதேகியும், அவனது பதிலில் சட்டென சிரித்துவிட்டார்.

கலகலவென நகைத்த திவ்யாவின் முகத்தையே அவன் முறுவலுடன் பார்த்துக் கொண்டிருக்க, அங்கிருந்து மெல்ல நழுவினார் வைதேகி.

“ம்… கோபமெல்லாம் போயிடுச்சா?” என்று கேட்டான்.

துப்பட்டாவின் முனையைக் கையில் சுற்றிக் கொண்டே நிமிர்ந்தவள், “நீங்க சொன்ன வார்த்தை என்னைக் காயப்படுத்தியிருக்குன்னு தெரிஞ்சதும், என்னைத் தேடி வந்திருக்கீங்களே! அதுக்கப்புறமும் உங்கமேல கோபம் இருக்குமா என்ன?” என்றாள் மென்குரலில்.

“அப்போ… கோபமா இருக்கறது மாதிரி நடிச்சிருக்க?”

அவனை ஊன்றிப் பார்த்தவள், “வெளியே சாதாரணமா பேசிகிட்டு, உங்க மனசுக்குள்ளயே எதையோ வச்சி மருகறீங்களே அதைவிடவா?” என்றாள்.

மௌனமாக நெற்றியைத் தடவிக்கொண்டவனது முகம், பலவிதமான பாவங்களை வெளிப்படுத்தின. பார்வையை அகற்றாமல் அவனையே ஆழ்ந்து பார்த்தவள், ஆதரவுடன் அவனது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“தியா! நான்…” சொல்லிக் கொண்டே திரும்பியவனது கண்கள் மிகுந்த வேதனையை வெளிப்படுத்தின.

“ராம்! உங்க மனசுல இருக்கற பாரத்தை பகிர்ந்துகிட்டா, கொஞ்சம் இலகுவா இருக்குமேன்னு சொன்னேன். என்கிட்ட சொல்லமுடியாத அளவுக்குப் பர்சனல்னா… பரவாயில்ல” என்றாள்.

மெல்லிய குரலில் நடந்தவைகளைச் சொல்லி முடித்தவன், “எனக்கென்னவோ, சஹானா முன்ன மாதிரி சந்தோஷமா இல்லைன்னு தோணுது. அவள் தன் மனசுல இருக்கறதை வெளியே சொல்லவும் மாட்டா” என்றான்.

அவன் சொன்னவற்றை உள்வாங்கிக் கொண்டவள், “இது, உங்க யூகம் மட்டும் தானே” என்றாள்.

“ம், இருக்கலாம். அப்படியிருந்தா, ரொம்ப நல்லாயிருக்கும். ஆனா, ஏதோ சரியில்லன்னே தோணுது திவி!” என்றான்.

“அப்படி எதுவும் இருக்காதுன்னு நம்புவோமே! ஏன் நெகடிவா யோசிக்கணும்?” என்றாள்.

சற்று யோசித்தவன், “சகியும், பிரபுவும் முன்ன மாதிரி…” என இழுத்தான்.

“ஏன்? பிரியமா இருக்கறவங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் வராதா? கணவன், மனைவிக்குள்ள சின்னச் சின்ன உரசல் வர்றதெல்லாம் சகஜம் தானே” எனக் கேட்டாள்.

“என் சந்தேகமே, இது சின்ன உரசல் தானாங்கறது தான்.”

இந்தச் சில நிமிடப் பேச்சிலேயே, ‘பிரச்சனை என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும். அதேநேரம் அவன் நினைப்பது போலிருந்தால், அவனது நடவடிக்கை என்னவாக இருக்கும்?’ என்பதையும் ஓரளவு யூகித்துவிட்டாள்.

“ராம்! இப்போதைக்கு இந்தப் பிரச்சனையைக் கொஞ்சம் தள்ளி வைங்க. எனக்குத் தெரிஞ்சி, இதை சஹானாவே ஹாண்டில் பண்ணிப்பாங்க” என்றாள்.

“அப்போ, என்னை இதுல தலையிடாதேன்னு சொல்றியா?” கோபத்துடன் கேட்டான்.

“அப்படி நீங்க நினைச்சபடி இருந்தால், சஹானாவுக்கு உதவலாமே தவிர, நிச்சயமா நீங்க தலையிடக்கூடாது. உங்க தங்கையே அதை விரும்பமாட்டாங்க. இது, அவங்களோட குடும்ப விஷயம்” நிதானமாகவே சொன்னாள்.

“அப்போ நான் மூணாவது மனுஷனா?” கோபம் சற்றும் குறையாமல் கேட்டான்.

“அப்படிச் சொல்லல ராம்! நீங்க தலையிட்டா பிரச்சனை பெரிசாகும். சஹானாவைக் கேட்காம, நீங்க இதுல மூக்கை நுழைக்காதீங்க” என்றாள்.

“நீயும் ஒரு சாதாரண பொண்ணுதான்னு நிரூபிச்சிட்ட திவ்யா! என்னைக்கு இருந்தாலும் பொண்ணுங்களுக்குக் கல்யாணமானா, புருஷன் தனக்கு மட்டுமே சொந்தம்னு நினைக்கறது மாறவே போறதில்ல” என்றான் கசப்புடன்.

“பாருங்க ராம்! நான், சாதாரண பொண்ணுதான். அதுக்காக, சுயநலவாதி இல்ல. புகுந்த வீட்டை, என்னோட குடும்பமா நினைக்க எனக்கும் தெரியும். அப்படி நினைச்சித்தான், உங்ககிட்டப் பேசிட்டிருக்கேன். அது உங்களுக்குத் தப்பா தெரிஞ்சா, நான் எதுவுமே செய்யமுடியாது” என்றாள் வேகமாக.

அதற்குமேல் அங்கே அமர்ந்திருக்கும் பொறுமையில்லாமல் எழுந்தவன், “இதுக்கு மேல இதைப் பத்தி உன்கிட்டப் பேச விரும்பல. கிளம்பறேன்” எனச் சொல்லிக்கொண்டே வாசலை நோக்கி நடந்தான்.

கோபமாகக் கிளம்பிச் செல்பவனை, எதுவும் சொல்லாமல் பார்த்தாள். அவன் வாங்கி வந்திருந்த உடைகள் அடங்கிய கவர், அவளிடம் சேர்ப்பிக்கப்படாமல், சோஃபாவில் அப்படியே இருந்தது.

காதல் வளரும்...
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
138
486
63
751

அத்தியாயம் - 16

“அம்மா! எனக்கு லஞ்ச் பேக் பண்ணிடேன்!” என்ற திவ்யா, ஸ்ரீராம் வைத்துவிட்டுச் சென்ற உடைகள் அடங்கிய கவரை எடுத்துவந்து டீபாயின் மீது வைத்தாள்.

“இதை, எங்கே எடுத்துட்டுப் போற?” எனக் கேட்டர் வைதேகி.

“ம், யார் எடுத்துட்டு வந்தாங்களோ, அவங்ககிட்டயே கொடுக்க” என்றாள்.

“உனக்காகப் பிரியமா வாங்கிட்டு வந்ததை, எதுக்கு எடுத்துட்டுப் போய்க் கொடுக்கணும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

“பிரியமா வாங்கிட்டு வந்தேன்னு உன்கிட்ட சொன்னாரா?” என்று வெடுக்கென கேட்டாள்.

“சொல்லலை. ஆனா, உனக்காகத்தான் வாங்கிட்டு வந்தாருன்னு, உனக்கும் தெரியும்” என்றார்.

“இல்லன்னு சொல்லலை. ஆனா, அவர் என் கைலயும் கொடுக்கலையே… அவரா என்கிட்ட கொடுக்கற வரைக்கும், இது என் உடமை இல்ல. அவரோடது” என்றாள்.

வார்த்தைக்கு வார்த்தை பதிலளிக்கும் மகளை எரிச்சலுடன் பார்த்தார்.

“அவர் உனக்குக் கொடுக்கத்தானே எடுத்துட்டு வந்தாரு. நீ சும்மா இல்லாம, ஏதேதோ பேசிக் கோபப்படுத்திட்ட. அதான், இதை மறந்துட்டுப் போயிருப்பார்” என்று மருமகனுக்காகப் பரிந்து கொண்டு வந்தார் வைதேகி.

இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அன்னையை முறைத்தவள், “மாப்பிள்ளைக்குச் சப்போர்ட்டா?” என்றாள்.

“பின்னே, தப்பை உன்கிட்ட வச்சிகிட்டு அவரைச் சொன்னா…”

“ஏம்மா, நான் உன் பொண்ணுதானே. என்னை நம்பவே மாட்டியா நீ! அவர்கிட்ட தேவையில்லாம சண்டை போட, எனக்குப் பைத்தியமா? குடும்பம்னா, பிரச்சனை இருக்கத்தான் செய்யும். அதுக்காக, எல்லாப் பிரச்சனையிலேயும் தலையிட முடியுமா? அவங்க ஹெல்ப் கேட்டா பரவாயில்ல. இவர் போய்த் தலையிட்டு, அது வேற மாதிரி போறதுக்கா! அதைத் தானே சொன்னேன். இதைச் சொல்லாத… நீ சுயநலமா யோசிக்கிறன்னு சொன்னா, கோபம் வருமா, வராதா!” என்று கேட்டாள்.

“ஆம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க திவி! நாமதான் பக்குவமா எடுத்துச் சொல்லணும்” என்ற அன்னையை கிண்டலாகப் பார்த்தாள்.

“வேணாம்மா! என் வாயைக் கிளறாத. நான் நல்லா ஏதாவது சொல்லிடப் போறேன்” என்று பற்களைக் கடித்தவள், “நம்ம கதையே இங்கே கழுதை மேல போகுது” என்று அவருக்குக் கேட்கா வண்ணம் முணுமுணுத்தாள்.

“கோபத்துல ஆம்பள கோபம் பொம்பளைக் கோபம்ன்னு தனித்தனியா இருக்கா என்ன? அவங்களை மாதிரி தானே நாமளும். அதே கண்ணு, மூக்கு, காதோட பிறந்திருக்கோம். இல்லன்னா ஆம்பளைங்கன்னு அவங்களுக்குத் தனியா தலைல ரெண்டு கொம்பு முளைச்சிருக்கா! அவங்களுக்கு இருக்கற ஸ்ட்ரெஸ்ஸை விட லேடீஸ்க்குத்தான் அதிகம். நியாயமா, நாமதான் எடுத்ததுக்கெல்லாம் கோபப்படணும்” என்று கடுகடுத்தாள்.

“சரி, நமக்குள்ள எந்தப் பிரச்சனையும் வேணாம். பத்திரமா போய்ட்டு வா” என்றார்.

“உன்னால பேச முடியலன்னா, என் வாயை எப்படி அடைக்கறதுன்னு பாரு” என்றவள் ஹேண்ட் பேகை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டே, “நான் வர எப்படியும் ஏழு மணியாகிடும்மா. சாவி எடுத்துட்டுப் போறேன். நீ எங்கேயாவது போகணும்னா போய்ட்டு வா” என்றாள்.

“சரி, மாப்பிள்ளையைக் கேட்டேன்னு சொல்லு” என்றார்.

“ம், முடிஞ்சா நாளைக்கு மதியானம் விருந்துக்கு வரச் சொல்லவா?” என்றாள் எரிச்சலுடன்.

“விசாரிக்கறதா சொல்றதுக்கு என்ன?”

“ஒண்ணுமில்ல… சொல்லிடுறேன்!” என்றாள்.

“ம்ம், அவசரப்பட்டு எதுவும் பேசிடாதே. பக்குவமா நடந்துக்க” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்க, தலையெழுத்தே என்பதைப் போல அமைதியாகக் கேட்டுக்கொண்டாள்.

“ஆமாம். மாப்பிள்ளை, உன் மேல கோச்சிக்கிறதுக்கு என்ன காரணம்? அவ்வளவு பெரிய பிரச்சனையா?” எனக் கேட்டார்.

திரும்பி அன்னையைப் பார்த்தவள், “ம்ம், அது, எங்க குடும்ப விஷயம். உனக்குத் தெரிய வேணாம்” என்றபடி ஸ்கூட்டியை எடுத்தவளை, இமைகள் விரியப் பார்த்தார்.

“நீ பிழைச்சிக்குவடியம்ம்மா!” என்று புன்னகைத்தார் வைதேகி.

கண்களைச் சிமிட்டிச் சிரித்தவள், “உன்னோட பொண்ணாச்சே வைதேகி! வரட்டுமா” என்றவள் ஸ்கூட்டியில் பறந்தாள்.

அன்று வந்தவன், தன்னிடம் வாங்கிவந்த உடைகளைக் கொடுக்கவில்லை என்ற கோபமெல்லாம் ஆரம்பத்தில் திவ்யாவிற்குச் சிறிதும் இல்லை. கோபம் தணிந்தபின் பேசுவான் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால், அடுத்துவந்த இரண்டு நாள்களும் அவன், அவளைத் தொடர்பு கொள்ளவே இல்லை.

‘ஒருவேளை, வளைகாப்பு வேலைகளில் இருக்கிறானோ!’ என்று தன்னையே தேற்றிக்கொண்டாள்.

மூன்றாவது நாள் அவளே, அவனுக்குப் போன் செய்தபோதும், அவளது அழைப்பை ஏற்கவே இல்லை. இருமுறை முயன்ற திவ்யாவிற்கும் அதற்குமேல் போன் செய்ய தயக்கமாக இருக்கவே அவனைக் காணவேண்டும், பேசவேண்டும் என்ற ஆவலைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

தான் முதல் அடியை எடுத்து வைத்தும், அவன் இன்னமும் அதே இடத்தில் நின்றிருப்பதை உணர்ந்தவளுக்கு எரிச்சலாக வந்தது.

‘நீ வாங்கி வந்த உடைகளும், உன்னிடமே இருக்கட்டும். உனக்கு எப்போது என்னிடம் பேசவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறதோ, அன்றைக்கு இது என் கைக்கு வரட்டும்’ என்று எண்ணினாள்.

டீனும் மெடிக்கல் கேம்ப் பற்றிப் பேசிவிட்டு வரச்சொன்னதும், அவனைக் காணச் செல்வதற்கு நல்லதொரு காரணமாக அமைந்துவிட்டது. இல்லையென்றால், ‘ நான் விலகிப் போனாலும், விடமாட்டாயா என்று, என்னையே கடிப்பான்’ என்று நினைத்துக்கொண்டே ஸ்ரீராமின் அலுவலகத்தை அடைந்தாள்.

பார்க்கிங்கில் ஸ்கூட்டியை நிறுத்தியவள், கல்பனாவிற்குப் போன் செய்தாள்.

“எங்கேடி இருக்க?”

“இப்போதான் ஆஃபிஸ்குள்ள எண்டர் ஆகறேன்” என்றாள் கல்பனா.

“நான் பார்க்கிங்ல இருக்கேன். வா” என்று இணைப்பைத் துண்டித்தாள்.

இருவருமாக, ஸ்ரீராமின் கேபினுக்குச் சென்றனர்.

“ஹலோ சுப்பு அண்ணா! சௌக்கியமா?” என்று பியூனை நலம் விசாரித்தாள்.

“வாங்க டாக்டரம்மா! சாரைப் பாக்க வந்துக்கினீங்களா?” எனக் கேட்டார்.

“ஆமாம். வந்துட்டாரா உங்க சாரு” என்றாள் கிண்டலாக.

“அப்பவே வந்துக்குனாரும்மா… ஜி. எம்மை பாக்க போய்க்கினாரு. வந்துருவாரு” என்றவர், ஸ்ரீராம் லிஃப்டிலிருந்து வெளியில் வருவதைக் கண்டதும், “வண்ட்டாரும்மா” என்றார்.

கையிலிருந்த பேப்பரைப் படித்துக்கொண்டே வந்தவன், பியூனின் குரலில் நிமிர்ந்து பார்த்தான். திவ்யாவைக் கண்டது சட்டென இதயத்தில் மெல்லிய மலர்ச்சி தோன்றியது.

அவர்களருகில் வந்தவன், “ஹாய்! வாங்க” என்று இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.

“என்ன காலைலயே இவ்வளவு தூரம்?” என்று கேட்டவனது பார்வை முழுவதும் திவ்யாவின் மீதே இருந்தது.

அவளும், அவனைக் கண்ட நொடியிலிருந்து, பார்வையை அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மெடிக்கல் கேம்ப் போடப்போற இடத்தை ஒருமுறை பார்த்துட்டு வரச்சொல்லி டீன் அனுப்பினார்” என்றாள் கல்பனா.

“ஷ்யூர்! வாங்க. நானே கூட்டிட்டுப் போறேன்” என அவர்களை அழைத்துச் சென்றான்.

கல்பனா தங்களுக்குத் தேவையான வசதிகளைப் பற்றிச் சொல்ல, கட்டாயம் செய்து கொடுப்பதாக உறுதியளித்தான். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் அவர்கள் பேசிக்கொண்டிருந்தாலும், திவ்யா ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவன்மீதான பார்வையையும் அகற்றவில்லை.

ஸ்ரீராம், பரிதவித்துப் போனான். அவளைத் தவிர்க்க வேண்டுமென்று, அவன் நினைக்கவேயில்லை. ஆனால், ஏதோ ஒர் உணர்வு அவளைச் சந்திப்பதையும், பேசுவதையும் தடை செய்தது.

மீண்டும் மூவரும் அறைக்குத் திரும்பி வந்ததும், காஃபி வரவழைத்தான். இவர்கள் இருவர் மட்டுமே உரையாடிக்கொண்டிருக்க, திவ்யா காஃபியைப் பருகிக் கொண்டிருந்தாள்.

“தேங்க்யூ சார்! நாங்க கிளம்பறோம்” என்ற கல்பனா, தயக்கத்துடன் திவ்யாவைப் பார்த்தாள்.

“தேங்க்யூ!” என்ற திவ்யா கையிலிருந்த கவரை, அவனது மேஜை மீது வைத்தாள்.

“அன்னைக்கு, நீங்க வீட்டுக்கு வந்தப்போ விட்டுட்டுப் போய்ட்டீங்க. ஒருவேளை, நீங்க திரும்பி வருவீங்கன்னு நினைச்சேன். ஐஞ்சு நாளாகியும் வராதால், நானே கொண்டு வந்துட்டேன். எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க” என்றவள் விறுவிறுவென வெளியேறினாள்


காதல் வளரும்...