Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
139
487
63
754

அத்தியாயம் - 19

நாட்கள் வேகமாக உருண்டோட, திவ்யா, ஸ்ரீராமின் நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாட்களே இருந்தன. சொன்னபடியே பிரபு மைத்துனனின் நிச்சயதார்த்தத்திற்காக, தனது வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டுக் குடும்பத்துடன் வந்துவிட்டான்.

“சஹானா! இந்த வரிசைத் தட்டையெல்லாம் அடுக்கி இந்தப் பையில் போடு” என்றார் பரிமளம்.

“அத்தை! எல்லா தட்டும் ஃப்ளாட்டா இருக்கே. ஆரத்தி சுத்த கொஞ்சம் குழியான பேசின் மாதிரி எடுத்துக்கலாமில்ல” என்றாள்.

“நம்ம வீட்ல எல்லாமே கொஞ்சம் பழைய சாமானா இருக்கு. அதை வைதேகிகிட்டயே வாங்கிக்கலாம்” என்றார்.

“அவங்க வீட்லயும் பழசாயிருந்தா என்ன அத்தை செய்யறது?” என்றபடி அங்கே வந்தாள் வர்ஷா.

“அதெப்படி, உனக்கு மட்டும் எசகுபிசகாவே தோணுமா எல்லாம்?” என்று மருமகளைக் கேட்டார் பரிமளம்.

“கொஞ்சம் புத்திசாலித்தனமா கேள்வி கேட்டா, உங்களுக்குப் பிடிக்காதே” என்றாள் அவள்.

சஹானாவும், சுகுணாவும் சிரிக்க, “அந்தக் கேள்வியை நீ கேட்டதால தானே பிரச்சனையே” என்றபடி அங்கே வந்தான் ஸ்ரீராம்.

“வாங்க வாங்க. நீங்க ஒருத்தர் இல்லாததுதான் பாக்கி” என்றவள், “ஆனா, நீ சொன்னதே எனக்குப் புரியலைண்ணா!” என்றாள்.



“இதைத்தான் சொன்னேன்…” என்று சஹானாவைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தான் அவன். அவளும் ஒரு கையால் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள்.

“இதோ, பிரபா சொல்வான் பாரு” என்று பின்னால் வந்துகொண்டிருந்த பிரபாகரை தங்கையிடம் மாட்டிவிட்டான்.

“இதுகூட புரியலையா உனக்கு? உன்னைச் சரியான விளக்கெண்ணெய்ன்னு சொல்றான்” எனச் சொல்லிக்கொண்டே, பழங்கள் அடங்கிய பையை ஹாலின் ஓரமாக வைத்தான் பிரபாகர்.

“பார்த்தியா, சந்தடி சாக்குல உன்னை விளக்கெண்ணெய்ன்னு சொல்றான்” என்று தங்கையிடம் போட்டுக் கொடுத்தான் ஸ்ரீ.

“அத்தான்! என்ன இப்படிச் சொல்றீங்க?” என்று அவள் செல்லமாகக் கோபித்துக்கொள்ள, பிரபாகர் திரும்பி ஸ்ரீராமை முறைத்தான்.

“முறைச்சாலும் நீ சொன்னது ஓவர்டா! ஏதோ, என் தங்கச்சிக்கு மூளை கொஞ்சம் கம்மிதான். அதுக்காக, இப்படி ஒரு வார்த்தை சொல்வியா? மனசுல இருக்கறது தானே வாய்ல வருது” என்று ஏற்கெனவே விழுந்திருந்த முடிச்சை அவிழ்க்க இயலாத அளவிற்கு மேலும் சிக்கலாக்கினான்.

“டேய்! இதெல்லாம் நல்லதுக்கு இல்ல. உனக்கு ஸ்ரீராம்னு பேர் வைக்கறதுக்குப் பதிலா நாரதர்னு வச்சிருக்கலாம்” கடுப்புடன் சொன்னான் பிரபா.

“இதோ, உன் அம்மாதான் தேடித் தேடி இந்தப் பேரை வச்சாங்களாம் அவங்களையே கேளு” என்றவன், “அத்தை! பிரபாவுக்கு ஏதோ கேட்கணுமாம். என்னன்னு கேளுங்க” என்றான்.

“எழுந்து போங்கடா அந்தப் பக்கம். தலைக்கு மேலே வேலையிருக்கு. கடவுளே! இன்னும் வர்றவ இவன்கிட்ட மாட்டிகிட்டு என்ன திண்டாடப் போறாளோ!” என்று அங்கலாய்த்துக் கொண்டார் பரிமளம்.

“சேச்சே! தியாகிட்ட இப்படில்லாம் நான் வம்பு பண்ணுவேணா?” என்றான் நல்ல பிள்ளையாக.

“பண்ணா தெரியுமில்ல சேதி. நம்மள மாதிரி அவங்களும் சும்மா இருப்பாங்களா?” என்றாள் வர்ஷா.

“அதென்னடா தியா! திவ்யான்னு கூப்பிட எவ்வளவு அழகாயிருக்கு” என்றார் சுகுணா.

“தியான்னா தீபம், விளக்குன்னு மீனிங்ம்மா! அவள் இந்த வீட்டுக்கு வரப்போற குடும்ப விளக்கு இல்லையா!” என்றான்.

“டேய் முடியலடா!” என்றான் பிரபாகர் பரிதாபமாக.

“குடும்ப விளக்கு… பாரதிதாசன் கவிதை இல்ல…” என்ற வர்ஷா, “வெவ்வெவ்வே” என்று அண்ணனுக்கு ஒழுங்கெடுத்தாள்.

“இதுக்குத்தான் அவன் உன்னை விளக்கெண்ணெய்ன்னு சொல்லியிருக்கான்” என்று கடுப்படித்தான் அவன்.

“அம்மா!” என்ற வர்ஷா மீண்டும் ஆரம்பிக்கும் முன், “சஹி! இவனுங்களுக்குச் சாப்பாட்டைப் போட்டுத் துரத்திவிடு. இவனுங்களும் வேலை செய்யமாட்டனுங்க. நம்மளையும் செய்ய விடமாட்டானுங்க” என்றார் பரிமளம்.

“அத்தை! அந்தக் காலத்துல எந்த வேலை செய்தாலும் களைப்பு தெரியாமயிருக்க, பாடிக்கிட்டே செய்வாங்களாம். இந்தக் காலத்துல அதைக் கொஞ்சம் மாத்தி வேலை செய்ற உங்களுக்குக் களைப்புத் தெரியாம இருக்க பேசறோம்” என்றான் ஸ்ரீ.

“டேய் போதும்! எழுந்து போங்க” என்றார் பரிமளம்.

“அது அத்தை!” என்று ஆரம்பித்தவனது வாயைப் பொத்தினான் பிரபா.

“மச்சான்! நீ ஆணியே புடுங்கவேணாம். பேசிப் பேசிக் கடைசில, எங்க எல்லோரையும் மாட்டிவிட்டுட்டு போயிடுவ. முதல்ல கிளம்பு” என்று அவனை இழுத்துச் சென்றான்.

“சஹானா! கோவில்லயிருந்து கிளம்பிட்டாங்களான்னு உன் வீட்டுக்காரருக்குப் போன் செய்து கேளும்மா” என்றார் சுகுணா.

“கிளம்பும்போது அவரே போன் பண்ணுவாரும்மா!” என்றவள் அண்ணணுக்கும், அத்தானுக்கும் உணவு பரிமாறக் கிளம்பினாள்.

”அக்கா! நீங்களும் வரீங்களா?” எனக் கேட்டாள்.

“முதல்ல அவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாட்டைப் போட்டுக் கிளப்பு. நான் அப்புறம் வரேன்” என்றாள் அவள்.

”நேரத்தோட சாப்டுட்டு கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு. ஈவ்னிங் நீயும், சஹானா மாமியாரோட திவ்யா வீட்டுக்குப் போய்ட்டு வாயேன்” என்றார் சுகுணா.

“என்னை ஆளை விட்டுடுங்க. சஹானாவும், அத்தையும் போகட்டும். எனக்குக் கால் குடையுதும்மா” என்றாள் கொஞ்சலாக.

“ரெண்டு தலைக்காணியைக் காலுக்கு வச்சிப் படுன்னா கேட்கறதில்ல. சாப்டுட்டு சுடுதண்ணியில உப்பு போட்டுக் கொஞ்சநேரம் காலை வச்சிக்க. நாளைக்கு நிச்சயதார்த்தத்துல உட்காரவாவது தெம்பு வேணாமா?” என்று அதட்டலாகச் சொன்னார் பரிமளம்.

“சரிங்கத்தை! நான் போய்ப் படுக்கறேன். அரைமணி நேரம் கழிச்சி எழுப்பறீங்களா?” எனக் கேட்டுக்கொண்டே எழுந்தாள்.

“போய்ப் படு. எழுப்பறேன்” என்றார் சுகுணா.

“அண்ணா! மெஹந்தி கோன் வாங்கிட்டு வரச்சொன்னேனே வாங்கிட்டு வந்தீங்களா?” எனக் கேட்டாள் சஹானா.

“அந்த பச்சைக் கலர் கவர்ல நீ கேட்ட ஐட்டமெல்லாம் இருக்கு. பார்த்துக்க” எனச் சொல்லிக்கொண்டே சட்டையின் கையை மடித்துவிட்டுக் கொண்டு சாப்பிட அமர்ந்தான்.

வரிசைச் சாமான்களை ஒருமுறை சரிபார்த்து எடுத்துவைத்த சுகுணாவும், பரிமளமும் கையைத் துடைத்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தனர்.

“அம்மா! நீங்களும், அத்தையும் சாப்பிட்டுருங்களேன்” என்றாள் சஹானா.

“சம்மந்தியும் வந்துடட்டும்மா!” என்றார் சுகுணா.

“சரி” என்றபடி அன்னையின் அருகில் அமர்ந்தாள்.

கையைக் கழுவிக்கொண்டு வந்த ஸ்ரீராம் அத்தையின் காலருகில் அமர்ந்தவன் காலை நீட்டிக்கொண்டு சோஃபாவில் சாய்ந்தான்.

“ஏன்டா! நாளைக்கு நிச்சயதார்த்தம். இன்னைக்காவது இந்தத் தாடியை எடுக்கக்கூடாதா? என்னவோ லவ்ஃபெயிலியர் மாதிரி ஒரு வாரமா ஷேவ்கூட பண்ணாம திரிஞ்சிகிட்டு இருக்க” என்றார் பரிமளம்.

“அம்மா! அது தாடி இல்ல. ட்ரிம் பண்ணிக்கிறது. இப்போ, இதான் பேஷன்” என்றான் பிரபா.

“என்ன ஃபேஷனோ? அழகா ஷேவ் பண்ணிகிட்டு மாப்பிள்ளையா வந்து நில்லேன்டா” என்றார்.

“அத்தை! என் ஆளுக்கு என்னைப் ஃப்ரெஞ்ச் பியர்ட்ல பார்க்கணுமாம்” என்றான் ஸ்ரீராம்.

“என்னது ஃப்ரெஞ்ச் பியரா?”

“ம், பியர்… விஸ்கி… என்னடா உனக்குப் பிடிச்ச ஐட்டமா சொல்றாங்க உன் மம்மி!” என்று மென்குரலில் சொன்னவன், பிரபா தன்னை முறைப்பதைக் கண்டதும் சிரித்தான்.

“ஏன்டா! இந்தக் கொலைவெறி” என்றான் பரிதாபமாக.

“நான் சொல்றதைக் காதுல வாங்கறானான்னு பாரு” என்றார் பரிமளம்.

“அது அத்தை! உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லணும்னா குறுந்தாடி!” என்றான்.

“அடக்கண்றாவியே… அது எதுக்குடா உனக்கு? நல்லாயிருக்குற முகத்தைக் குரங்கு மாதிரி காட்டவா?” என்றார்.

அதைக் கேட்ட அனைவரும் சிரிக்க, அவர்களைப் போலியாக முறைத்தான்.

“கொஞ்சங்கூட இரசனையே இல்லாத குடும்பத்துல பிறந்தது, உன் தப்பில்ல. அதேநேரத்துல, இரசனையான ஒருத்தியை லவ் பண்ணி கல்யாணம் பண்ற பாரு… அங்கே நிக்கிறடா ஸ்ரீ!” என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

“என் ஆளுகிட்ட கேளுங்க அப்படியே வெட்கப்பட்டுகிட்டு, ஓரக்கண்ணால பார்த்துகிட்டே நீங்க ஃப்ரெஞ்ச் பியர்ட் வச்சா, அப்படியே பிரித்விராஜ் மாதிரி இருப்பீங்கன்னு சொல்வா பாருங்க... அதுக்காகவே காலம்பூரா ஃப்ரெஞ் பியர்ட் வச்சிக்கலாம்” என்று இரசனையுடன் சொன்னவனைப் பார்த்து, சஹானா குறுஞ்சிரிப்பை வெளியிட்டாள்.

“பிரித்விராஜா… இந்த மொழி படத்துல நடிச்சானே அவனா!” என்றார் சுகுணா.

“பின்னே, சம்யுக்தாவை குதிரைல தூக்கிட்டுப் போனவனா…” என்றபடி அங்கே வந்தாள் வர்ஷா.

அவளது கரத்தைப் பற்றி தன்னருகில் அமர வைத்துக் கொண்டான் பிரபாகர்.

“பிரித்விராஜ் மாதிரியே இருக்குனு சொல்றதுக்கு உனக்கெதுக்குடா அந்தப் பியர்டு. அந்தப் பிரித்விராஜோட முகத்தையே பார்த்துக்கலாமே…” என்று பரிமளம் சொன்னதும், அனைவரும் வாய்விட்டு நகைத்தனர்.

“ச்சே! இந்த ஹிட்லர் இப்படி என் மானத்தை வாங்க வேணாம். இது என்னை மட்டும் இல்ல… இந்த வீட்டுக்கு வரப்போற மருமகளையும் அவமானப்படுத்துறது மாதிரி. இனியும், இந்த தாடியை வச்சிருந்தா… எனக்குத்தான் அசிங்கம்” என்றவன் எழுந்து செல்ல, பரிமளம் பெருமூச்சு விட்டார்.

“ஒரு தாடியை எடுக்கறதுக்கு என்னவெல்லாம் கதை சொல்றான் பாரு. பாவம் அந்தப் பொண்ணை இவன்கிட்ட மாட்டிவிட்டுட்டேன்” என்று அங்கலாய்த்துக் கொண்டார் பரிமளம்.

****************

காலையிலேயே சஹானாவும், அவளது மாமியார் கௌரியும் திவ்யாவின் வீட்டிற்குக் கிளம்பிவிட்டனர்.

திவ்யாவிற்கு அலங்காரத்தை சஹானாவும், கல்பனாவும் கவனித்துக்கொள்ள, வைதேகியும், கௌரியும் மற்ற வேலைகளைப் பார்க்கலாயினர்.

திவ்யாவின் பக்கத்தில் வீட்டு உரிமையாளர், கல்பனாவின் குடும்பத்தினர், ஹாஸ்பிட்டல் டீன் மற்றும் உடன் பணிபுரியும் சில டாக்டர்கள் மட்டுமே விழாவிற்கு வந்திருந்தனர்.

ஸ்ரீராம் உறவில் ஒரு எழுபது பேர் என மொத்தம்மாக நூறு பேரே இருந்ததால், விழாவை வீட்டிலேயே வைத்துக்கொண்டனர். மொட்டை மாடியும், பின்னாலும், முன்னாலும் தாராளமாக இடமிருந்ததால் வசதியாகவே இருந்தது.

“வாங்க வாங்க!” மாப்பிள்ளை வீட்டினரை அன்புடன் வரவேற்றார் வைதேகி.

வைதேகியிடம், “ஆன்ட்டி! அக்கா எங்கே?” என்று கேட்ட தேவி, “பின்னால ரூம்ல இருக்காம்மா” என்றதும் அங்கே ஓடினாள்.

“ஹாய்க்கா! சூப்பரா இருக்கீங்க” என்றவள் கையிலிருந்த ஹாண்டிகேமில் திவ்யாவை வீடியோ எடுக்கத் துவங்கினாள்.

“ஹேய் போதும்ப்பா! ஃபங்ஷன்ல எடுத்துக்கலாம்” என்றாள் வெட்கத்துடன்.

“அது ஃபங்க்‌ஷன். இப்போ, ப்ரீ ஷூட்… இருங்க அத்தானைக் கூட்டிட்டு வரேன்” என்று ஓடினாள்.

“ஏய்! தேவி வேணாம்” என்று திவ்யாவின் அழைப்பை அவள் காதில் வாங்கவேயில்லை.

“சஹி ! ப்ளீஸ் அவளைக் கூப்பிடேன். உங்க அண்ணாவைக் கூட்டிட்டு வந்துடப் போறா” என்றாள் தவிப்புடன்.

“நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதே திவி!” என கல்பனா கேலி செய்ய, திவ்யா படபடப்புடன் கையைப் பிசைந்தாள்.

“வாங்க அத்தான்!” என்று ஸ்ரீராமின் கையைப் பிடித்து அழைத்து வந்தாள் தேவி.

“அச்சச்சோ!” என்றபடி எதிர்புறமாகத் திரும்பி நின்றுகொண்டாள் திவ்யா.

“ஹேய்! இங்கேயா கூட்டிட்டு வந்த…” என்றபடி வெளியே செல்ல முயன்றவனைப் பிடித்து நிறுத்தினாள் தேவி.

“அலட்டாதீங்க அத்தான். அக்கா பக்கத்துல நில்லுங்க” என்று அவளருகில் அழைத்துச் சென்று நிறுத்தினாள்.

“அக்கா! அத்தானை இப்போதான் பார்க்கறீங்களா? திரும்புங்க இந்தப் பக்கம். பெரியவங்க வந்து தடா போடுறதுக்கு முன்ன, ரெண்டு மூணு ஸ்டில்ஸ் எடுத்துக்கறேன்” என்றவள் கல்பனாவிடம் கேமராவைக் கொடுத்தாள்.

“அக்கா! நீங்க போட்டோ எடுங்க. நான் வீடியோ எடுக்கிறேன்” என்றாள்.

திவ்யா வெட்கத்துடன் திரும்பாமலேயே நிற்க, “தியா! இந்தப் பக்கமா திரும்பு. நீ அந்தப் பக்கம் நின்னாலும், கண்ணாடியில உன் முகம் தெரியுது” என்று சிரித்தான் ஸ்ரீராம்.

சட்டென நிமிர்ந்த திவ்யா, கண்ணாடி வழியாக அவளது ஸ்ரீராமனைப் பார்த்தாள்.

“இப்போ இன்னும் க்ளியரா தெரியுது” என்று கண்களைச் சிமிட்டி அவன் குறுஞ்சிரிப்பு சிரிக்க, அவள் வெட்கத்துடன் முகத்தை மூட, அழகான அத்தருணத்தை கேமராவிலும், வீடியோவிலும் படம் பிடித்தனர்.

“திரும்பு” என்று ஸ்ரீராம், திவ்யாவின் தோளைப் பற்றித் திருப்பியதையும், அவர்கள் நேருக்கு நேராக பார்த்துக்கொண்ட அந்த முதல் பார்வையையும், அந்தப் பார்வையில் தெரிந்த நேசத்தையும் என்றும் மறக்கமுடியாத நினைவாக கிளிக்கினாள் கல்பனா.

அதற்குள், “மச்சான்! உன்னைக் கூப்பிடுறாங்க வா” என்று அங்கே வந்தான் பிரபா.

“வரேன்டா!” என்றவன், வரேன்’ என்பதைப் போல திவ்யாவைப் பார்த்துத் தலையசைக்க, அவளும், மெல்லத் தலையை ஆட்டினாள்.

மனம் நிறைந்த சந்தோஷத்துடன், அவளது கரத்தை அழுத்திக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

ஸ்ரீராமிற்கு மாலை அணிவித்து அமர வைத்துவிட்டு, “பொண்ணைக் கூட்டிட்டு வாங்க” என்றார் ஐயர்.

மனம் முழுதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும், வைதேகியின் கண்களில் லேசான ஈரம் படர்ந்தபடியே இருந்தது.

“உன் பொண்ணுக்கு நடக்கப் போற முதல் நல்ல காரியம். நீ மனசார வாழ்த்து வைதேகி” என்று வீட்டுக்காரம்மா ஆதரவுடன் கூற, வைதேகி கண்களைத் துடைத்துக்கொண்டார்.

நிச்சயப்பட்டு உடுத்திக் கொண்டு வந்து அமர்ந்ததும், நிமிர்ந்து தன் அன்னையைப் பார்த்தாள் திவ்யா. மணக்கோலத்திலிருந்த மகளைப் பூரிப்புடன் பார்த்தபடி கண்ணைத் துடைத்துக் கொண்ட வைதேகியைப் பார்த்ததும், திவ்யாவிற்கும் கண்கள் கலங்கின.

‘கண்ணைச் துடைச்சிக்க’ என்பதைப் போல மகளுக்குச் சொன்ன வைதேகி சிரிப்புடன் தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

நிச்சயதார்த்த பத்திரிகை படிக்கும் நேரம், தமிழ்ச் செல்வனும் வந்து சேர்ந்தான்.

“வாடா! அசிஸ்டெண்ட் கமிஷ்னர்” என்று பிரபா அவனை அழைக்க, “டைமுக்கு வந்தேன் பார்த்தியா” எனச் சிரித்தான் தமிழ்.

“சரிடா பங்சுவாலிட்டிக்காரன் தான் நீ” என்று சிரித்தான் ஸ்ரீ.

அங்கே நடந்துகொண்டிருந்த அனைத்தையும் படமாக்கிக் கொண்டிருந்த தேவி, சிறு படபடப்புடன் அவனிருந்த பக்கமாகத் திரும்பவேயில்லை.

“ஏங்க! பொண்ணை மட்டுமே எவ்வளவு நேரம் வீடியோ எடுப்பீங்க? எங்க மாப்பிள்ளையை எடுக்கமாட்டீங்களா?” என்று தமிழ்ச் செல்வன் கேட்டபோதும், அவள் திரும்பிப் பார்க்கவே இல்லையே.

“கல்பனாக்கா! நீங்க கொஞ்சநேரம் வீடியோ எடுங்க” எனக் கூறி ஹாண்டி கேமை அவளிடம் கொடுத்தாள்.

லக்ன பத்திரிகை வாசித்துமுடித்து தட்டை மாற்றிக்கொள்ள, திவ்யா ஓரவிழியால் ஸ்ரீராமைப் பார்த்தாள். அவனும், அவளைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தான்.

காதல் வளரும்....