Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தந்தியில்லா வீணை | SudhaRaviNovels

தந்தியில்லா வீணை

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
தனது இருக்கையில் அமர்ந்து அன்று பதிவான வழக்கு குறிப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தான் செழியன். ஆர்- 7 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கின்றான்.

அவனது மேஜையின் மீதிருந்த போன் அடிக்க ஆரம்பித்தது. அவன் அருகே நின்றிருந்த ஏகாம்பரத்தை பார்க்க, அவர் உடனே போனை எடுத்தார். எதிர்புறம் இருந்தவரிடம் பேசி விவரங்களை தெரிந்து கொண்ட பின்னர் “சார்! காந்திமதி நகர்ல ஒரு கொலை நடந்திருக்கு”.

பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளை மூடி வைத்து விட்டு எழுந்து கொண்டவன் “வாங்க போகலாம்! போகும் போது விவரங்களை பேசிக்கலாம்” என்றபடி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான்.

அவன் பின்னோடு ஓடியவர் ஜீப்பில் ஏறி அமர்ந்து கொள்ள, கொலை நடந்த இடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. வழக்கு பற்றிய விவரங்களை எல்லாம் அவரிடம் கேட்டறிந்து கொண்டான். காந்திமதி நகரில் சம்பவம் நடந்த வீட்டின் முன் சென்று இறங்கியவன், அங்கிருந்த கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தான்.

அதுவொரு தனி வீடு. கீழே வாடகைக்கு விடப்பட்டு இருந்தது. மேலே ஓனர் குடும்பம் தங்கி இருந்தார்கள். வாசல் கதவை தாண்டி உள்ளே நுழைந்தவனின் பார்வையில் ஹாலின் நடுவே கிடந்த பிணத்தின் மீது படிந்தது. இறந்து கிடந்தவளின் வயது முப்பதுக்குள் தான் இருக்கும்.

பிணத்தின் அருகே சென்றவனின் பார்வை உடலெங்கும் ஆராயத் தொடங்கியது. உடலில் எந்தவொரு சிறு காயமோ, கீறலோ எதுவுமில்லை. இறந்து கிடந்தவளின் முகத்திலும் கடைசி நிமிட வலியோ, வேதனையோ எதுவும் தெரியவில்லை. மொத்தத்தில் உறங்குவது போன்ற தோற்றத்தில் தான் இருந்தாள்.

பிணத்தின் மீதிருந்த பார்வையை விலக்கிக் கொண்டவன் சுற்றுபுறத்தை கண்காளாலேயே அலசத் தொடங்கினான். அதோடு ஏகாம்பரத்திடம் வழக்கு சம்பந்தமான விவரங்களை கேட்கவும் தொடங்கினான்.

“யார் முதல்ல பார்த்தது?”

“வேலைக்கு வரவங்க தான் சார். காலையில வந்து பெல் அடிச்சு திறக்கலேன்னதும் ஓனர் கிட்ட சொல்லி இருக்காங்க. அவங்க தான் நமக்கு இன்பார்ம் பண்ணினாங்க”.

“கோபால் கிட்ட வெளில இருக்கிற கூட்டத்தை கலைக்க சொல்லுங்க. ஓனரை கூப்பிடுங்க” என்றவனது பார்வை அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ந்தது.

சற்று நேரத்திற்குள் வெளியில் சப்தம் குறைந்திருக்க, ஏகாம்பரத்துடன் அறுபது வயதுடைய ஒருவர் உள்ளே வந்தார்.

“சார் இவர் தணிகாச்சலம் வீட்டு ஓனர்”.

“இவங்கள பற்றிய விவரங்களை சொல்லுங்க”.

கண்களில் கலவரத்துடன் “இந்த பொண்ணு பேரு சிந்து. ஐடி கம்பனியில் வேலை பார்க்குது சார்”.

“ம்ம்..இந்த பொண்ணு மட்டும் தான் இருந்தாங்களா? எத்தனை வருடமா இங்கே இருக்காங்க?”

“இல்ல சார்! ஒரு பையனும் இருக்கான். நாலு வருஷமா இருக்காங்க” என்று இழுத்தார்.

குனிந்து எதையோ எடுத்தவன் சட்டென்று திரும்பி “லிவிங் டுகெதர்ல இருந்தாங்களா?”

“ஆமாம் சார்!”

“அவனை பற்றி சொல்லுங்க? அவனுக்கு இன்பார்ம் பண்ணியாச்சா?”

“அவன் பேர் நரேஷ். ரொம்ப நல்ல பையன் சார். வேலை விஷயமா மும்பை போயிருக்கான். சிந்துவை பார்த்துக்க சொல்லிட்டு தான் போனான்” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

“ம்ம்..சரி சொல்லுங்க இந்த பெண்ணுக்கும் அவனுக்கும் ரிலேஷன்ஷிப் எப்படி இருந்தது? அதாவது கொலை செய்கிற அளவுக்கு அவங்களுக்குள்ள எதுவும்?”

“ஐயோ! இல்லவே இல்ல சார். கல்யாணமான தம்பதிகள் கூட இத்தனை ஒத்துமையாக இருப்பாங்களான்னு கேட்டா சந்தேகம் தான். ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் அவ்வளவு பாசமா இருந்தாங்க. நான் கூட பலமுறை சொல்லி இருக்கேன். இவ்வளவு அன்பா இருக்கிற நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு கேட்டிருக்கேன் ”.

அவனது அவர் சொல்லும் விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்தாலும், பார்வை வீட்டை சுற்றியே வந்து கொண்டிருந்தது. சிறு விஷயங்கள் கூட அவன் கண்களுக்கு தப்பவில்லை. அனைத்தையும் கேட்டுக் கொண்டவன் ஏகாம்பரத்திடம் நரேஷின் விவரங்களையும், சிந்துவின் பெற்றோர்களின் விவரங்களையும் பெற்றுக் கொள்ள கூறினான். அதோடு நரேஷ் வந்திறங்கியதும் உடனே தகவல் தெரிவிக்கும்படி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அவனது சிந்தனை முழுவதும் இந்த வழக்கைப் பற்றியே ஓடியது. இதுவரை பார்த்ததில் எந்த க்ளுவும் கிடைக்கவில்லை. சண்டை நடந்ததற்கான ஆதாரமோ, அடித்து உதைதற்க்கான ஆதாரமோ உடலிலும் இல்லை. பின்னர் எப்படி இந்த மரணம் நிகழ்ந்தது? அவர்கள் இருவருக்குள்ளும் எந்த பிரச்னையும் இல்லை. கொலைக்கான காரணம் என்ன?”

சுமார் இரண்டு மணி நேரம் கடந்த பின்னர் நரேஷ் வந்து விட்டதாக தகவல் வந்தது. அதற்குள் செழியன் சில பல விவரங்களை சேகரித்திருந்தான். அதோடு அரசாங்க பிணவறையில் நரேஷிற்காக காத்திருந்தான்.

ஒல்லியான உருவத்தோடும் பால்வடியும் முகத்தோடும் கலங்கிய விழிகளோடும் தன் முன்னே வந்து நின்றவனை கூர்மையான விழிகளால் ஆராய்ந்தான். உடலில் ஒரு நடுக்கம், கண்களில் கலக்கம் என எதிரே நின்றவனை பார்த்து “என் கூட வாங்க” என்றபடி முன்னே நடந்தான்.

அவனோ “சார்! எப்..எப்படி?” என்றான் உள்ளுக்குள் எழுந்த கேவலை அடக்கியபடி.

சட்டென்று நின்றவன் “நீங்க தான் சொல்லணும்?” என்றான்.

அதில் அதிர்ந்து போய் கண்ணீர் கன்னங்களை தொட “என்ன...என்ன சொல்றீங்க?”.

செழியன் அவனது கண்ணீரையோ உணர்வுகளையோ கண்டு கொள்ளவில்லை. இது போன்று தினமும் பலரை சந்திப்பவனுக்கு அவனது உணர்வு சாதரணமாக தெரிந்தது. அதோடு அவனது சந்தேக லிஸ்ட்டில் முதலில் இருப்பவனும் அவன் தான். அதனால் சிந்துவின் பிணம் இருந்த இடத்திற்கு சென்று நின்றான்.
அதே சமயம் வெளியில் கதறலும், அழுகை சப்தமும் கேட்க ஏகாம்பரத்தை அழைத்து என்னவென்று பார்க்க கூறினான். சிந்துவின் உடலைக் கண்டதும் பாய்ந்து கட்டிக் கொண்டு கதற முயன்றான். அருகே இருந்த பிணவறை காப்பாளார்கள் அவனை பிடித்து தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதே நேரம் சிந்துவின் பெற்றோரும் கண்ணீருடனும், அழுகையுடனும் வந்து விட்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் பிணத்தின் அருகே செல்லாதவாறு பார்த்துக் கொள்ள ஏற்பாடுகளை செய்தவன் தள்ளி நின்று ஒவ்வொருவரின் நடவடிக்கையையும் கவனித்தான்.

சிந்துவின் பெற்றோர் மகளை கண்டு கதறினாலும் நரேஷை அவர்கள் திட்டவோ, சாபமிடவோ செய்யவில்லை. அவனும் அவர்கள் அருகே செல்லவில்லை என்றாலும் சிந்துவை பார்த்து கண்ணீர் விட்டபடியே நின்றான்.


அவர்கள் அனைவரையும் பிணவறையிலிருந்து வெளியேற சொல்லிவிட்டு தானும் வெளியேறினான். போனில் டாக்டரை தொடர்பு கொண்டு எப்போது பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்படும் என்கிற விவரத்தையும் அறிந்து கொண்டவன் பார்வை நரேஷின் மீது விழுந்தது.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அவனது பெற்றோரும் வந்து விட்டிருந்தனர். இருவரின் முகத்திலும் துளி வருத்தமோ வேதனையோ எதுவுமில்லை. அதே சமயம் அவனிடம் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். சற்று நேரம் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தவன் டீ குடிக்க கடையை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

அவர்களை கடக்கும் நேரம் “அது தான் செத்து ஒழிஞ்சிட்டாளே இன்னும் என்னடா வேண்டி இருக்கு? மரியாதையா எங்களோட வந்துடு. நான் பார்த்து வச்சிருக்கிற பெண்ணை கல்யாண பண்ணிக்கோ” என்று மிரட்டிக் கொண்டிருந்தார் அவனது தந்தை.

அவர்களின் பேச்சைக் கேட்டு கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தானே தவிர எதுவும் பேசவில்லை. அதே சிந்தனையுடன் டீக்கடைக்கு சென்று குடித்து முடித்தவனுக்கு டாக்டர் வந்து விட்டதாக செய்தி தெரிவிக்கப்பட, உடனே அவரை சந்திக்க கிளம்பினான்.

அதன்பின்னர் மருத்துவரை சந்தித்துவிட்டு அவர் பிரேத பரிசோதனையை செய்ய ஆரம்பித்ததும் கிளம்பி விட்டான். ஏகாம்பரத்தை அழைத்துக் கொண்டு தணிகாச்சலத்தை சந்திக்க சென்றான்.

அவனை கண்டதும் முகத்தில் கலவரம் எழ “வா...வாங்க சார்” என்று அழைத்து அமர வைத்தார்.
“எனக்கு சில விவரங்கள் தெரிய வேண்டி இருக்கு? நரேஷ் எப்போ மும்பை கிளம்பி போனான்? எத்தனை நாள் என்று சொன்னனா?”

“புதன்கிழமை தான் கிளம்பி போனான் சார். செவ்வாய்கிழமை ராத்திரி என் கிட்ட வந்து சொல்லிட்டு சிந்துவை பார்த்துக்கோங்க தனியா இருப்பான்னு சொல்லிட்டு போனான். அஞ்சு நாள் ஆகும்னு சொன்னான் சார்”.

“அவன் போன பிறகு சந்தேகப்படும் வகையில் யாரும் வீட்டுக்கு வந்து போனாங்களா?”

“இல்ல சார். அப்படி யாரும் வரல”.

அவரை கூர்ந்து பார்த்தவன் “எப்படி சொல்றீங்க? வெள்ளிக்கிழமை உங்க சொந்தத்தில் ஒரு இழப்புன்னு கிளம்பி போன நீங்க ஞாயிற்றுக் கிழைமை காலையில தான் வந்தீங்க. அப்புறம் எப்படி அடிச்சு சொல்றீங்க?” என்றதும் பயத்துடன் “அது வந்து சார்...என் மச்சான் வீட்டில் ஒரு சாவு” என்றார் தயங்கியபடி.

“உண்மையை பேசுங்க! நீங்க சொல்கிற பொய்யால இறந்த அந்த பெண்ணுக்கு அநியாயம் நடக்க வாய்ப்பிருக்கு”.

“சாரி சார்! தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் நானும் என் மனைவியும் கிளம்பி போனோம். சிந்து கிட்டயும் பல முறை ஜாக்கிரதையா இருந்துக்க சொல்லிட்டு தான் போனோம்”.

செழியனுக்கு தணிகாச்சலத்தின் மீதும் அவர் மனைவியின் மீதும் சந்தேகம் இருந்தது. அவர்கள் எதையோ மறைப்பதாக தோன்றியது. அவரை கண்காணிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

சற்று நேரம் யோசித்தவன் “இதோ பாருங்க மிஸ்டர் தணிகாச்சலம் எதையும் மறைக்கவோ பொய் சொல்லவோ நினைக்காதீங்க. இந்த கேஸ் சம்மந்தமா என்ன சொல்லனும்னு நினைச்சாலும் இந்த நம்பருக்கு கூப்பிட்டு பேசுங்க. இது என்னோட பெர்சனல் நம்பர்” என்று கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

தணிகாச்சலத்தைப் பற்றி அவர் ஊருக்கு சென்று வந்ததை பற்றியும் விசாரணையை தொடங்கினான்.

அதன்பின்னர் அக்கம்பக்கத்து வீடுகளில் எல்லாம் தனது விசாரணையை துவங்கி இருந்தான். அவன் எதிர்பார்த்த தகவல் எதுவும் அவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை. நகரத்தில் இருப்பவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் பெயர் கூட தெரியாதது தான் இன்றைய நிலை.

அன்றைய நாளின் முடிவில் அந்த வழக்கு சம்மந்தமாக சிறிய ஆதாரம் கூட சிக்கவில்லை. எப்படி சுற்றி வந்தாலும் ஆரம்ப புள்ளியிலேயே வந்து நின்றது. நரேஷின் கம்பனியில் அவனை பற்றி அறிந்து கொண்டதும் அவனுக்கு சாதகமாகவே இருந்தது. இறந்து போனவளின் மீதும் எந்தவிதமான தவறான அபிப்பிராயமோ, எதிரிகளோ இல்லை என்றே அறியப்பட்டது. பின்னர் எதற்காக இந்த கொலை நடந்தது? கொலை செய்தவனின் நோக்கம் தான் என்ன?
பணமோ, பொருளோ கொள்ளை போகவில்லை. அதே சமயம் அவளது கற்பும் பறிபோகவில்லை. கொலையாளியின் நோக்கம் தான் என்ன? எதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டது? அதனால் அவன் அடையும் ஆதாயம் என்ன? என்று பலவாறு யோசித்தும் பதில் கிடைக்கவில்லை.
மறுநாள் ஸ்டேஷன் சென்று வேறு வழக்குகளில் கவனத்தை வைத்தவனை அவனது அலைப்பேசி அழைப்பு கலைத்தது.

“சொல்லுங்க டாக்டர்”.

“பிரேத பரிசோதனை அறிக்கை தயாராகிடுச்சு . வாங்க பேசலாம்”.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அவர் சொன்னதும் பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளை எல்லாம் வைத்துவிட்டு ஏகாம்பரத்தை அழைத்துக் கொண்டு அரசாங்க மருத்துவமனையை நோக்கி சென்றான்.

அவர் எதிரே அமர்ந்தவன் “சொல்லுங்க டாக்டர்? மரணம் நிகழ்ந்தது எப்படி?”

அவன் முன்னே ரிபோர்ட்டை வைத்தவர் “இறந்து போவதற்கு முன் அவங்களுக்கு ப்ரொபோபோல் என்கிற மயக்க மருந்து தரப்பட்டிருக்கு. இந்த மருந்து சாதாரண ஆட்களுக்கு அதிகம் தெரியாது. மயக்க மருந்து நிபுணர்கள் தான் உபயோகிப்பாங்க”.

“ஒ...அப்போ இது கொலை தான் இல்லையா?”

“நிச்சயமா! அவங்க சுவாச குழாய் பலமாக பாதிக்கப்பட்டிருக்கு. மயக்க மருந்தை கொடுத்து ஏதோவொரு பொருளை கொண்டு அழுத்தம் கொடுத்து மூச்சை நிறுத்தி இருக்காங்க”.

“ஆனா அவங்க கழுத்திலோ உடலிலோ எந்த காயமும் இல்லையே?”

“மயக்க மருந்தின் வீரியத்தில் அவங்க விழுந்ததும் தலையணையை வைத்து அழுத்தி கொன்றிருக்க கூடும் என்று நினைக்கிறேன். அதனால தான் அவங்க கழுத்தில் எந்த மார்க்கும் தெரியல. ஆனா சுவாச குழாயில் அந்த பாதிப்பு தெரியுது”.

ரிப்போர்ட்டை எடுத்து படித்தவன் “இரவு பதினொரு மணியளவில் மரணம் நிகழ்ந்ததாக கொடுத்திருக்கீங்க. அப்போ மயக்க மருந்து எப்போ கொடுக்கப்பட்டிருக்கும்?”

“எட்டரை மணிக்கு கொடுக்கப்பட்டிருக்கு செழியன். குடழிலில் மீதம் இருந்தவற்றை வைத்து சொல்றேன். அவங்க சாப்பிட்டதும் சற்று நேரத்திலேயே மயங்கி விழுந்திருப்பாங்க. ஆனா கொலைகாரன் உடனே தனது திட்டத்தை செயல்படுத்தாம வெயிட் பண்ணி இருக்கான்”.

அவர் சொன்னவைகள் எல்லாம் ரிப்போர்ட்டில் இருக்க, அனைத்தையும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டவன் “எனக்கு ஒரே ஒரு முறை சொல்லிடுங்க. அந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மயக்க மருந்து மருத்துவரை தவிர வெளியாட்கள் வாங்க முடியுமா முடியாதா?”

“நிச்சயமா முடியாது! மயக்க மருந்து நிபுணரை தவிர அந்த மருந்தை வேற யாரும் உபயோகிக்க மாட்டாங்க” என்றார் உறுதியாக.

வேகமாக எழுந்து கொண்டவன் “தேங்க்ஸ் டாக்டர். குற்றவாளியை நெருங்கிட்டேன். உங்க அறிக்கை எனக்கு மிகவும் உதவியா இருந்தது உறுதிபடுத்திக் கொள்ள’ என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

தனது ஜீப்பிற்கு வந்தவன் அதில் அமர்ந்து மீண்டும் ரிப்போர்ட்டை படித்தான். அதை படிக்க- படிக்க அவனுக்கு தனது விசாரணையை எப்படி கொண்டு போவது என்கிற தெளிவு பிறந்தது.
“ஏகாம்பரம் வண்டியை எடுங்க”.

நரேஷின் வீட்டிற்கு சென்றவன் மீண்டும் அங்கிருந்த ஒவ்வொன்றையும் ஆராய்ந்தான். அன்று சரியாக கவனிக்காதது எல்லாம் இன்று கண்ணில் பட்டது. சமயலறையில் சிங்க்கின் ஓரம் ஒரே ஒரு பாத்திரம் மட்டும் கழுவி வைக்கப்பட்டிருந்தது. அது சரியாக கழுவப்படாமல் இருந்தது. அதை எடுத்து ஆயய்வகத்திற்கு கொடுக்க சொல்லிவிட்டு, மீண்டும் ஒவ்வொரு மூளையாக ஆராய தொடங்கினான்.

சற்று நேர தேடலுக்குப் பின் அவன் எதிர்பார்த்தது கிடைத்தது. சிங்க்கின் கீழே ஓரமாக சுருண்டு கிடந்த அந்த மாத்திரை கவரை எடுத்தான். அது டாக்டர் சொன்ன அந்த ப்ரோபோபோல் மாத்திரையின் கவர். அதே நேரம் ஆய்வகத்திலிருந்து இருந்து அழைப்பு வந்தது. அவன் எதிர்பார்த்தபடி அந்த பாத்திரத்தில் தான் மயக்க மருந்து கலக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்பின்னர் நடந்தவைகள் எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்தது. செழியனின் ஜீப் நரேஷின் பெற்றவர்கள் வீட்டின் வாசலை அடைந்தது. நரேஷ் தான் சோகமே உருவாக வாசலில் அமர்ந்திருந்தான்.

செழியனை கண்டதும் அவசரமாக எழுந்து கொண்டவன் “வாங்க சார்! எதுவும் தெரிஞ்சுதா சார்?” என்றான் பரபரப்பாக.

அவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டவன் “அதை சொல்லத் தானே வந்திருக்கேன். வாங்க” என்றழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

அவனை கண்டதும் மொத்த குடும்பமும் வரவேற்பறையில் கூடிவிட, நரேஷின் தந்தையோ கோபத்தோடு “செத்தும் கெடுத்தான்னு சொல்வாங்க. அது போல அந்த சனியனை நம்மளை நிம்மதியாவே இருக்க விடாது போல” என்றார் எரிச்சலாக தன் மனைவியிடம்.

அவரை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தவன் “நீங்களும் உங்க மனைவியும் நிம்மதியா இருக்கலாம் சார். அதற்கான ஏற்பாட்டை தான் செஞ்சு வச்சிருக்கீங்களே”.

“என்ன சொல்றீங்க?”

நரேஷின் அருகே நின்ற அவன் அண்ணனைப் பார்த்து “என்ன டாக்டர் சார்? நீங்களாவது சொல்வீங்கன்னு நினைச்சேன்? சொல்லுங்க? எப்படி ப்ளான் பண்ணுனீங்க?”

நரேஷிற்கு நடப்பது எதுவும் புரியவில்லை. குழப்பத்தோடு “என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்?”
“உங்க சிந்துவோட மரணத்திற்கு காரணம் உங்க குடும்பம் தான். முக்கியமா அப்பாவும், அம்மாவும் தான். மயக்க மருந்தை கொடுத்து உங்க அண்ணனும் ஹெல்ப் பண்ணி இருக்கான்” என்று போட்டுடைத்தான்.

அவனது வார்த்தையை கேட்டு அதிர்ந்தவன் “என்ன சொல்றீஎங்க?”

விசாரணையில் எப்படி அவர்கள் சிக்கினார்கள் என்று அவனிடம் சொல்ல ஆரம்பித்தான். சம்பவம் நடந்த அன்று எதுவுமே புரியாத நிலையில் நரேஷிடம் இருந்து தான் விசாரணையை துவங்கி இருந்தான். அவனது அலுவலகத்திலும் அக்கம்பக்கத்திலும் அவனது நண்பர்களிடமும் விசாரித்ததில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் ஒரு மாதம் முன்பு நரேஷின் தந்தை அலுவலகத்திற்கு வந்து அவளை விட்டு விட்டு வரும்படி சப்தம் போட்டு சென்றதை பற்றி தெரிய வந்தது. அதன்பின்னர் அவன் வேலைக்கு செல்லும் போது வழியில் மடக்கி அவனிடம் வாக்குவாதம் செய்ததாகவும் விசாரணையில் அறிந்து கொண்டான்.

அவர்களின் வீட்டிற்கு யாரும் வந்து போனதாகவும் தெரியவில்லை. அந்த சமயம் தான் தணிகாச்சலத்தின் பேச்சில் இருந்த தடுமாற்றமும், பொய்யும் அவரை காட்டிக் கொடுத்தது.
நரேஷின் பெற்றவர்கள் சிந்துவின் போனிற்கு அழைத்தும் அவளிடம் பிரச்சனை செய்திருக்கிறார்கள். அவளது போன் ஹிஸ்டரியின் மூலம் அதுவும் தெரிய வந்தது. நரேஷும் அவளும் லிவிங் டுகெதரில் இருப்பதால், அவர்களின் பெரிய மகனுக்கும் வரன் எதுவும் அமையவில்லை. சொந்தங்களிடையே அவமானமாக இருந்தது. அது அவர்களுக்கு மன உளைச்சலை கொடுக்க, எப்படியாவது நரேஷை தங்களிடம் கொண்டு வந்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் போராட ஆரம்பித்தனர்.

ஆனால் அவர்களின் மகன் அவள் மீது உயிரையே வைத்திருந்தான். அவளை எக்காரணம் கொண்டு விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான். சரி கல்யாணமாவது செய்து கொள் என்று அவர்கள் இறங்கி வர, அவன் அதற்கும் மறுத்தான்.

சிந்துவின் பெற்றோர்களிடமும் சென்று சண்டையிட்டு பார்த்து ஓய்ந்து போனார்கள். அப்போது தான் இப்படியொரு விபரீதமான ஒரு முடிவிற்கு வந்தனர். அதன்பின்னர் மூவருமாக சேர்ந்து இதை எப்படி நடத்தி முடிப்பது என்று திட்டமிட ஆரம்பித்தனர்.

இவர்களின் திட்டத்தில் தணிகாச்சலத்தையும் இணைத்துக் கொண்டனர். ஆனால் இவர்கள் கொலை செய்கிற அளவிற்கு போவார்கள் என்று அவர் அறியவில்லை. அவளை மிரட்டி அவனிடம் இருந்து பிரிக்க போகிறோம் என்று மட்டுமே சொல்லி இருந்தனர்.

நரேஷ் மும்பை கிளம்பி சென்ற சமயம் அவர்களின் பக்கத்து வீட்டில் இருந்தவர்களும் மகனுக்கு மொட்டை அடிக்க திருப்பதி சென்றுவிட, தணிகாசலம் சிந்து தனியாக இருப்பதையும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் சென்று விட்டதையும் கூறினார். நரேஷின் தந்தை அவரையும் வீட்டைப் பூட்டிக் கொண்டு எங்காவது போய் வரும்படி அவரையும் அங்கிருந்து அகற்ற முயன்றார்கள். அதற்கு மறுத்த அவரிடம் தாங்கள் அவளை மிரட்ட மட்டுமே செய்யப் போவதாக உத்திரவாதம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

ஞாயிற்றுகிழமை காலை வந்து பார்த்தவருக்கு அத்தனை அதிர்ச்சி. அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் நரேஷின் தந்தையிடம் பேசவும் முடியாமல் ஒருவித அவஸ்த்தையோடு காத்திருந்தார். விசாரணையின் தீவிரம் சற்றே குறைந்த நேரம் மெல்ல நரேஷின் தந்தையை அழைத்து சண்டயிட ஆரம்பித்தார்.

அதற்காகவே காத்திருந்த செழியயன் அந்த அழைப்பை கவனிக்க ஆரம்பித்தான். அதில் அதுவரை புரியாத பல உண்மைகள் வெளிவர, அந்நேரம் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் கைக்கு வந்துவிட, குற்றவாளியை நெருங்கி விட்டான்.

அவன் சொன்னவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் முகமும் பேயறைந்தது போலானது. நரேஷின் கண்களிலோ கண்ணீர் வழிய தொடங்கி இருந்தது. அண்ணனைப் பார்த்தவன் “ஏன் அண்ணா? உயிர் காக்கும் தொழிலில் இருக்கும் நீ இப்படியொரு காரியத்தை செய்யலாமா?” என்றான் கதறலோடு.

“நீ ஒரு அசிங்கமான உறவில் இருந்தது உனக்கு தவறாக தெரியல. எங்களை கேள்வி கேட்க வந்துட்ட? உன்னால எல்லா இடத்திலேயும் எங்களுக்கு அவமானம்” என்றான் முகச் சுளிப்போடு.
“இந்த கொலை மூலியமா உன்னுடைய அவமானம் எல்லாம் துடைக்கப்பட்டு விட்டதா? சொல்லு? இனி உங்களை எல்லோரும் மரியாதையா நடத்துவாங்களா?”

அவனை பிடித்து தள்ளியவன் “எல்லாம் உன்னால தாண்டா” என்று அடிக்க முயன்றான்.
நரேஷின் பெற்றோர்களோ பயத்தில் உடல் நடுங்கி போய் நின்றிருந்தனர். அவர்களை பார்த்த செழியன் “சொல்லுங்க அன்னைக்கு என்ன நடந்துச்சு?” என்றான் கடுமையான குரலில்.
நரேஷின் அன்னை பயத்தில் அழத் தொடங்க, அவனது தந்தை தான் சொல்லத் தொடங்கினார்.

“அந்த தெருவில் எட்டு மணிக்கு மேல ஆள் நடமாட்டம் குறைஞ்சிடும்னு தணிகாச்சலம் மூலியமா தெரிந்து கொண்டு அன்னைக்கு நைட் எட்டு மணிக்கு நரேஷ் வீட்டுக்குப் போனோம். எங்களை பார்த்ததும் அந்த பொண்ணு முதலில் பயந்து போயிடுச்சு. ஆனா நாங்க எதுவுமே நடக்காத மாதிரி சாதரணமா பேசி உள்ளே போயிட்டோம். உன்னை நாங்க ஏற்றுக் கொள்கிறோம்னு சொல்லி நம்ப வச்சோம். உடனே சந்தோஷத்தோட நான் பாயசம் செய்றேன்னு சொல்லி போனா. என் மனைவியும் அவளோடவே உள்ளே போய் உதவி பண்ணி அவ கவனிக்காதப்ப அதுல மருத்ந்தை கலந்துட்டா. எல்லோருமா ஹாலில் உட்கார்ந்து பாயசத்தை சாப்பிட்டோம். சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அப்படியே மயங்கி சாஞ்சிட்டா. அப்போ எட்டரை மணி தான் ஆகி இருந்தது. அதனால இப்போவே அவ கழுத்தை நெறிச்சு போட்டுட்டா வெளியே போகும் போது யார் கண்ணிலாவது பட்டுவிடுவோம்னு பதினொரு மணி வரை காத்திருந்தோம். என் மனைவி போய் படுக்கை அறையில் இருந்த தலையணை ஒன்றை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தாள். நான் அதை அவள் முகத்தில் வைத்து உயிர் போகும் வரை அழுத்தினேன். மயக்கத்தில் இருந்ததால் அதிக போராட்டம் இல்லாமல் சீக்கிரமே உயிர் பிரிஞ்சு போச்சு. அதன்பின்னர் நானும் என் மனைவியும் இருந்த தடயங்களை எல்லாம் அழித்துவிட்டு அவசரமாக கிளம்பிட்டோம்” என்றவரை கண்கள் சிவக்க பார்த்துக் கொண்டிருந்தான் நரேஷ்.

அந்த பால்வடியும் முகத்தில் அத்தனை வெறுப்பு. பெற்றவர்களை அருவெறுப்புடன் பார்த்தவன் “நான் செய்தது தவறு என்றால் நீங்க செய்திருக்கிறதுக்கு பெயர் என்ன? ஒரு கொலையை செஞ்சிட்டு எப்படி உங்களால நிம்மதியாக தூங்க முடிஞ்சுது? ஒரு உயிரை எடுக்கிற அளவிற்கு உங்களுக்கு தைரியம் இருந்திருக்கு. என்னை சேர்ந்தவங்கன்னு நம்பித் தானே உங்களை வீட்டுக்குள்ள அனுமதிச்சா? அந்த நம்பிக்கைக்கு நீங்க கொடுத்திருக்கிற விலை அதிகம்” என்றவன் செழியனிடம் திரும்பி “கூட்டிட்டுப் போங்க சார். அப்படியே அப்பா மாதிரின்னு நினைச்சு அவளை பார்த்துக்க சொன்ன அந்த ஆளையும் உள்ளே தள்ளுங்க” என்றவன் தளர்வான நடையோடு வீட்டை விட்டு வெளியேறினான்.

காலமென்றே யொருநினைவுங் காட்சியென்றே பலநினைவும்

கோலமும் பொய்களோ?- அங்குணங்களும்பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர்
விதையிலென்றால்
சோலை பொய்யாமோ?- இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ?
 
  • Like
Reactions: rajeswari sivakumar

rajeswari sivakumar

Administrator
Staff member
Mar 26, 2018
223
23
43
சூப்பரா இருக்கு க்கா. இந்த சமூகத்தில் வாழறதுக்குன்னு ஒரு வரைமுறை இருக்கு. அதை பின்பற்றாம வரைமீறி வாழ்ந்தா வருவதை அனுபவிச்சி தான் ஆகனும்ன்னாலும் அதுக்கு மரணம் கொஞ்சம் அதிகபடி தான். பாவம் சிந்து