தினம் ஒரு தகவல்

#26
உங்கள் நிறுத்தத்துக்கு பஸ் எப்போது வரும்?- செல்பேசி மூலம் அறியலாம்!
ஓலா, ஊபருக்குச் சவால்விடத் தயாராகிறது மும்பை போக்குவரத்துக்குக் கழகம் (பெஸ்ட்). நமக்கான பேருந்துகள் எங்கே வருகின்றன, எத்தனை மணிக்கு நம் நிறுத்தத்துக்கு வந்து சேரும் என்பதைப் பயணிகள் தங்கள் செல்பேசி மூலம் தெரிந்துகொள்ள முடியும். இதற்காக ரயில்களில் உள்ளதுபோலவே பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. இதற்கான செலவு ரூ.112 கோடியாம். பேருந்துக்காகக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பயணிகளின் அரிதான நேரத்துடன் ஒப்பிட்டால், இந்தத் தொகை ஒருபொருட்டே இல்லை என்கிறார்கள் மும்பை பயணிகள். அப்புறம் என்ன? தமிழ்நாடு போக்குவரத்துக்கழகமும் களத்தில் இறங்க வேண்டியதுதானே?
 
#27
காட்டெருமையுடன் யானை கொண்டுள்ள 'விசித்திர' நட்பு!
யானை , காட்டெருமையுடன் நட்பாகப் பழகிவருகிறது.

ழக்கமாக நாய் - பூனையுடன் நட்பு பாராட்டுவதை அரிதாகப் பார்ப்போம். குரங்கும் நாயும் நட்புக்கொண்டால் அதுவும் அரிதானதே. இந்த வரிசையில், நீலகிரி மாவட்டத்தில் யானை ஒன்று காட்டெருமையுடன் நட்புடன் பழகிவருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில்தான் வனப்பகுதி அதிகம். இங்கே, 1000 யானைகளுக்கு மேல் வசிக்கின்றன. ஆயிரக்கணக்கான காட்டு எருமைகளுக்கும் நீலகிரிக் காடுகள்தான் அடைக்கலம் கொடுக்கின்றன. இந்தக் காட்டில் விசித்திர நட்பு ஒன்று உருவாகியுள்ளது. உதகை- கோவை தேசிய நெடுஞ்சாலையில், காட்டேரி- ரன்னிமேடு பகுதியில் யானையுடன் காட்டெருமை நட்புக்கொண்டுள்ளது. தங்கள் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, இவை எப்போதும் ஒன்றாகவே வலம்வருகின்றன.


யானைக்கு காட்டெருமைதான் வழிகாட்டுகிறது. இரண்டு விலங்குகளும் ஒன்றின்மீது மற்றொன்று அக்கறையுடன் நடந்துகொள்கிறது. எப்போதும் ஒன்றாகவே திரிகின்றன. உணவைக்கூட பகிர்ந்துகொள்கின்றன. காட்டெருமை உண்பதற்காக யானை மரக்கிளைகளை முறித்துப் போடுவதையும் மக்கள் பார்த்து ஆச்சர்யப்படுகின்றனர். இரண்டு விலங்குகளும் இலை தழைகளை உண்பவை என்பதால், பரஸ்பரம் உதவிக்கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றன. குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் இரண்டும் சேர்ந்தே வருவதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த அரிய நட்பில், மனிதர்களின் கண் பட்டுவிடாமல் இருந்தால் சரிதான்!
 
#28
பட்டுப்போன மரங்களில் சிற்பம்! -கலக்கும் திருவண்ணாமலை கலெக்டர்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பட்டுபோன மரங்களில் சிற்பம் அமைக்க உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.திருவண்ணாமலை கிரவலப்பாதையின் இரு புறமும் பக்தர்களுக்கு நிழல் தரும் வகையில் ஏராளமான மரங்கள் உள்ளன. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும், பல மரங்கள் பட்டுப்போனது. இந்த நிலையில் மரங்களுக்கு அமிலம் ஊற்றி அழித்திருக்கலாம் என்ற ஒரு சந்தேகமும் மக்களிடையே எழுந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் கந்தசாமி, 'மரங்கள் எப்படி செத்துப்போனது என்பதை தெரிந்துகொள்ள ஆய்வு மேற்கொண்டார்'. ஆய்வின் முடிவில் பூச்சித் தாக்குதலில் மரம் பட்டுப்போனது தெரியவந்தது.

பட்டுப்போன மரங்களை அகற்றாமல் அதை பாதுகாக்கவேண்டி அதிகாரிகளிடம் கூறினார். அதற்கு சில அதிகாரிகள் ஏன் இந்த மரங்களை வைத்திருக்க வேண்டும். அகற்றிவிடலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர். அதற்கு கலெக்டர், இந்த மரங்கள் மேலும் பூச்சி தாக்காதவாறு பாதுகாக்குமாறு கூறியுள்ளார். இப்போது அந்த மரங்கள் நன்றாக காய்ந்த நிலையில், மரச்சிற்பிகளை வரவைத்து எந்த எந்த மரத்தில் என்ன சிற்பங்கள் வரையலாம் என்று ஆலோசனை செய்துவிட்டு மரங்களில் சிற்பங்கள் செதுக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இப்போது நன்றாக காய்ந்த மரங்களில் சிற்பங்கள் செய்யப்பட்டு வருகிறது. முதலை, மயில், நத்தை, மற்றும் பூ வகைகள், விலங்குகள் மற்றும் மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் சிற்பம் செதுக்கப்பட்டு வருகிறது. இந்தப்பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் 8 லட்சம் மதிப்பில் 60 மரங்களில் சிற்பம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதுபோன்று மரத்தில் சிற்பம் செதுக்குவதால் கிரிவலம் வரும் பக்தர்களையும் சுற்றுலாப்பயணிகளையும் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி கூறுகையில், ``பட்டுப்போன மரங்களுக்குப் பதிலாக வேறு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆனால், இந்த காய்ந்த மரத்தை அகற்றினால் விறகுக்கு மட்டுமே பயன்படும். வேறு பிரயோஜனம் இல்லை. அதனால் இந்த மரங்களை அகற்றாமல் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அதான் இந்த மரசிற்ப ஏற்பாடுகள்’ என்றார். இந்தச் செயல் மூலம் கலெக்டர் கந்தசாமியை வெகுவாக பாராட்டி வருகின்றனர் திருவண்ணாமலை மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.
 
#29
40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பனில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை! - அமைதியான கடல்... அச்சத்தில் மீனவர்கள்
40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பன் துறைமுகத்தில் 8-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் கஜா புயல் பாம்பன் பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.வங்கக் கடலில் கடந்த 9-ம் தேதி உருவான கஜா புயல் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகர்ந்துகொண்டு வருகிறது. தொடக்கத்தில் சென்னை, புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் கரையேறும் என அறிவிக்கப்பட்ட இந்தப் புயலானது தற்போது கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்க இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நள்ளிரவு இந்தப் புயல் நாகப்பட்டினத்தில் கரையைக் கடக்கும் எனத் தெரிகிறது. இதையடுத்து நாகப்பட்டினத்தில் 10 எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் கடலூரில் 9-ம் எண் கூண்டும், பாம்பன், தூத்துக்குடியில் 8-ம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன.40 ஆண்டுகளுக்குப் பின் பாம்பனில் 8-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்தக் கூண்டின் எச்சரிக்கையானது, பெரிய அபாயத்தைக் குறிக்கும் எனவும், துறைமுகத்தின் இடது பக்கமாகப் புயல் கரையைக் கடந்து செல்வதாக எதிர்பார்க்கப்படுவதுடன், துறைமுகம் கடுமையான வானிலை மாற்றத்துக்கு உள்ளாகும் எனவும் அறிவுறுத்துகிறது. இந்நிலையில் தற்போது வரை பாம்பனில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை கடல் பகுதிகள் வழக்கம்போலவே அமைதியாகவே காணப்படுகிறது. கடலின் இந்த அமைதியானது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பாதுகாப்பு கருதி தென்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளுக்கு பெரும் சேதம் ஏற்படக் கூடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.
இதனிடையே தனுஷ்கோடி பகுதியில் தற்காலிக குடிசை அமைத்துத் தங்கியிருந்த 15 குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் கரையூர் பகுதியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் தீவுப் பகுதி முழுவதும் இன்று காலையிலிருந்து வெயிலும் மந்தாரமுமாகப் பருவநிலை மாறி மாறி இருந்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்துக்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் வாகனங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகள் வழக்கம்போல் பாம்பன் பாலத்தில் நின்றபடி கடலினையும் ரயில் பாலத்தையும் ரசித்துச் செல்கின்றனர். பாம்பன் சாலை பாலத்தில் வேடிக்கை பார்க்கும் நோக்கத்தில் நிற்கும் சுற்றுலா பயணிகளுக்குப் புயலால் ஆபத்து ஏதும் ஏற்படாத வகையில் அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
#30
கஜா’ புயல்: 10 முக்கிய தகவல்கள்
கஜா’ புயல் நாகை அருகே இன்று இரவு கரையை கடக்கவுள்ள நிலையில் அதுகுறித்து 10 முக்கிய தகவல்கள் வருமாறு:
1) மாலை நேர நிலவரப்படி ‘கஜா’ புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. நாகைக்கு 187 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புயல் 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
2) கஜா’ புயல் இன்று இரவு 8 மணியில் இருந்து 11 மணிக்குள் நாகை அருகே கரையை கடக்கும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. நாகை, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் புதுச்சேரியின் கரைக்கால் மாவட்டங்களில் பரவலமாக கன மழையும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும்
3) வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் 22 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து வருவதாகவும், இன்று இரவு நாகை அருகே கரையைக் கடக்கும்போது ஒரு சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
4) நாகர்கோயிலில் 3 செ.மீ மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் ஆய்க்குடியில் 2 செ.மீ மழையும், பேச்சிபாறை, தென்காசி, சிவகிரி, மாதவரம் ஆகிய இடங்களில் ஒரு செ.மீ மழை பெய்துள்ளது.
5) ‘கஜா’ புயல் காரணமாக நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
6) புயல் கரையை கடக்கும்போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் கடந்து செல்லும் பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் நிறுத்தப்படும்.
7) 'கஜா' புயல் இன்று கரையைக் கடக்கும் நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் 4 மணிக்கே வீட்டுக்குச் செல்ல அரசு அறிவுறுத்தியது.
8) புயல் பாதிக்கும் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்காக அவசர கால தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


9) கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், செல்பி ஆர்வலர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
10) நாகை, கடலூர் துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.