Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மீண்டும் நானே வருவேன் | SudhaRaviNovels

மீண்டும் நானே வருவேன்

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அத்தியாயம் - 1

அமாவாசை இரவு இருளடர்ந்த காட்டுப் பகுதி. வண்டுகளின் ரீங்காரமும், மிருகங்களின் உறுமல் சத்தமும் காட்டையே நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.

வழுக்குப் பாறையருகே அமர்ந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தது அந்த சிறு உருவம். முழங்கால்களை கட்டிக் கொண்டு வாயில் எச்சில் ஒழுக வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவத்தின் கண்களில் ஒரு மின்னல்.

சட்டென்று எழுந்து நின்று ஆகாயத்தில் தெரிந்த வெளிச்சத்தைக் கண்டு “உர்..ரூம்ம்ம்...உர்..” என்று சத்தம் எழுப்பியது.

ஆவேசமாக நெஞ்சில் தட்டிக் கொண்டு இரு கைகளை உயரே தூக்கி, கண்களில் கண்ணீர் வழிய “ம்ம்பா...ம்ம்பா..” என்று ஆடியது.

அப்போது சருகுகளின் ஓசை எழும்ப வேகமாக ஓடி வந்த மற்றொரு உருவம் “ஏட்டி கோட்டி! பின்னிரவு நேரத்தில இங்கன வந்து என் உசிர வாங்கு” என்று அவள் தோள் பற்றி இழுத்தாள்.

அந்த சின்ன உருவமோ கண்களில் உற்சாகம் தென்பட தனது தோளைப் பற்றியவளின் கையைப் பற்றி தான் பார்த்த திசையைக் காட்டி “டுர்ர்..ம்ம்பா” என்றது.

சிறு சலிப்புடன் அந்த திசையில் பார்த்து விட்டு கையைப் பிடித்து இழுத்து “இருளு! இன்னும் செத்த நேரமிருந்தா நம்மள எதாவது ஒரு மிருகம் அடிச்சிபுடும்...வெரசா வா” என்று நடக்க ஆரம்பித்தாள்.
சற்று நேரத்தில் காணிகுடியை அடைந்து இருவரும் உள்ளே நுழைந்து கதவடைத்த பின், இருளாயி யோசனையுடனே நின்றிருந்தாள்.

அவளது முகத்தில் தெரிந்த உணர்வுகள் இதுவரை அவளிடத்தில் தோன்றாதது.

பச்சை அவளைப் பிடித்து இழுத்து அமர வைத்தாள்.

அவளோ சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள். நெஞ்சில் வேகம்-வேகமாக அடித்துக் கொண்டு “வா!..வா!” என்றாள்.

அதே நேரம் காரையாறு வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் இருளில் இடுப்பில் சிறிய துண்டும், தலையெல்லாம் சிக்குப் பிடித்து போன முடியுடனும், கழுத்தில் மிகப் பெரிய ருத்திராட்சத்துடனும் அமர்ந்திருந்தவன் வேகமாக எழுந்து நின்று தன்னிடம் இருந்த விபூதியை எடுத்து உடலெல்லாம் பூசிக் கொள்ள ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கண் மூடி நின்றவன் “மிதுனமாலினி வந்துட்டா...கார்கோடகா உனக்கு சவால் விட மிதுனமாலினி வந்துட்டா” என்று ஆவேசமாக கத்தினான்.

அதே நேரம் அம்பாசமுத்திரத்திலிருந்து பாபநாசம் மலைத்தொடரை நோக்கி ஒரு கார் பயணிக்க ஆரம்பித்திருந்தது. அதில் கனிகாவும், அஸ்வத்தும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

தங்கம்பட்டி ஜமீனின் வாரிசு அவள். அஸ்வத் அவளின் நண்பன். அவனும் அவளும் வெளிநாட்டில் ஒன்றாகப் படித்தவர்கள். முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறான். கனிகா பிறந்தது முதல் வெளிநாட்டில் தான் இருந்திருக்கிறாள். அவளின் பெற்றோர் ஊருக்கு அழைத்து வந்ததில்லை. அவள் ஊருக்கு செல்வதையும் அவர்கள் விரும்பியதில்லை.

ஆனால் இந்த முறை விடாபிடியாக அஸ்வத்துடன் தானும் இந்தியா செல்வேன் என்று சொல்லி ஊருக்கு வந்து விட்டாள்.

“கனி! நாம மார்னிங் வந்திருக்கலாம். நேச்ச்சரை ரசித்துக் கொண்டே போயிருக்கலாம்”.

“நோ வே அஸ்! நீ தான் பார்த்தேயில்ல. நாம வந்து இறங்கியதிலிருந்து அந்தக் கிழவி என்னை ஊருக்குப் போகச் சொல்லி மிரட்டிகிட்டே இருந்ததை”.

“ம்ம்...ஐ தின்க் ஓல்ட் லேடிக்கு சைக்கலாஜிக்கல் இஷ்யூஸ் இருக்கு”.

“அதை விடு! நாம விடிகிற நேரத்துக்குள்ள பாணதீர்த்த அருவி கிட்ட போயிடனும். அந்த ரேஞ்சர் அது தான் சொன்னார். அப்போ தான் நாம காட்டுக்குள்ள போனது யாருக்கும் தெரியாம போகும்னு சொன்னார்”.

இருவரும் பேசிக் கொண்டே நகரத்தின் எல்லையைக் கடந்து வனத்தின் எல்லைக்குள் நுழைந்திருந்தனர். அவர்களின் கார் வனத்தினுள் நுழையும் போது அதுவரை அமைதியாக இருந்த சூழ்நிலை மாறி காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. எங்கிருந்தோ மேகங்கள் எல்லாம் வனத்தின் வான்பரப்பை சூழ ஆரம்பித்தது.

கருமேகங்கள் வனத்தின் அடர்த்தியை மேலும் கூட்டியது. மண் வாசனை எழ காற்றின் வேகத்தோடு லேசான தூறல் விழ ஆரம்பித்தது. மலையின் மீது ஏற ஆரம்பித்த கார் திணற ஆரம்பித்தது. மழை பொழிய இடியும் சேர்ந்து கொண்டது.

“ஒ மை காட்! என்ன இது அஸ்?”

“எஸ்! பாரெஸ்ட்டில் இப்படித்தான் இருக்கும். டோன்ட் வொர்ரி” என்றபடி எதிரே இருந்த பாதையை உற்று நோக்கிக் கொண்டு வண்டியை செலுத்த ஆரம்பித்தான்.
 

Attachments

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அப்போது பெருத்த சப்தத்துடன் இடியொன்று இடிக்க, கார் சேற்றுக்குள் சிக்கிக் கொண்டது. அந்த நேரம் காரின் வைப்பர் மழை நீரைத் தள்ளிக் கொண்டிருக்க, மின்னலில் எதிரே தெரிந்த பாதையை கவனித்த போது இருவருக்கும் ‘நா’ உலர்ந்து போனது.

மழையின் சப்தமும், வைப்பரின் சப்தத்துடன் அவர்களின் இதய துடிப்பும் சேர்ந்து கொண்டது. எதிரே தெரிந்த காட்சியைக் கண்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஜடாமுடியுடன் கையில் தண்டத்துடன் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து அவர்களயே கூர்ந்து பார்த்தபடி நின்றிருந்தார் ஒருவர்.

“ஹூ இஸ் ஹீ?” என்றான் அஸ்வத்.

“தெரியல அஸ்” என்றவளின் இதழ்கள் பயத்தில் லேசாக துடித்தது.

அந்த உருவம் மெல்ல காரின் அருகே வர ஆரம்பித்தது. அதைக் கண்டதும் இருவரும் பயந்து போயினர். காரின் ஜன்னலருகே வந்து நின்றவரின் பார்வை முழுவதும் கனிகாவின் மீதே இருந்தது.

ஜன்னல் கதவுகள் மூடி இருந்தாலும் அந்த மனிதன் பேச ஆரம்பித்த போது அனைத்தும் அவர்களுக்கு துல்லியமாக விழுந்தது.

“மிதுனமாலினி! கார்கோடகா உனக்காக காத்திருக்கிறான். இந்த வனம் உனக்காக காத்திருக்கிறது. போ! அவனை வென்று விட்டு வா!”.

கனிகாவுக்கு அந்த மழையிலும் வியர்த்து வழிந்தது. இவர் என்ன சொல்கிறார்? யார் இவர்? என்கிற கேள்வியும் எழுந்தது.

அஸ்வத் பயத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது காரின் ஜன்னல் கதவுகள் தானாக திறந்து கொள்ள ஒரு சிறு மாலை ஒன்று பறந்து வந்து அவளின் கழுத்தில் விழுந்தது. அதன்பின்னே அந்த உருவம் அவர்களின் கண்முன்னேயே மறைய, கார் தானாக நகர ஆரம்பித்தது.

அதைக் கண்டு “ஹேய்! இதென்ன கார் தானாக போகுது” என்று அலற ஆரம்பித்தான்.

கனிகாவிடம் எந்தவித அசைவும் இல்லை. அவளின் விழிகள் நிலைகுத்தி நின்றது.
அதே நேரம் அடர்வனத்தின் மத்தியிலிருந்த குகையில் கண்மூடி அமர்ந்திருந்த கார்கோடகன் இதழ்கள் மந்திர உச்சாடனத்தில் இருந்தது.

காணிக்குடியில் தனது குடிசையில் படுத்திருந்த இருளாயி எழுந்து சென்று கதவை திறந்து கொண்டு வெளியே நடக்க ஆரம்பித்தாள். அவள் செல்வதை அறியாத பச்சை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

தானாக கார் ஓடுவதைக் கண்டு பயந்த அஸ்வத் கதவை திறக்க முயற்சி செய்து முடியாமல் துவண்டு போனான். கனிகாவோ விழிகள் வெறித்த நிலையில் அப்படியே பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள்.

“கனி! உனக்கு என்னாச்சு? கார் தானாக போகுது பார்” என்று அவளைப் பிடித்து உலுக்கினான்.

அப்போதும் அவள் அப்படியே இருக்க சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றி அவளது கழுத்தில் இருந்த மாலையை எடுக்க முயல ஓங்கி அறைந்திருந்தாள். அதில் அப்படியே மயங்கி சரிந்து விட்டான்.

கனிகாவின் இதழ்களில் புன்னகை மிளிர “வந்துட்டேன் கார்கோடா! என் வனத்தை காப்பதற்கு வந்து விட்டேன்” என்றாள் சப்தமாக.

குகையில் அமர்ந்து மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருந்த கார்கோடன் எழுந்து நின்றான். அவன் கண்களில் தீவிரம் வந்தமர்ந்து கொண்டது. மிதுனமாலினி நெருங்கிக் கொண்டிருக்கிறாள். இந்த முறையும் ஜெயித்து அவளிடம் இருக்கும் அந்த மந்திர வேரை கவர்ந்து விட்டால் அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும்.

வனமே அதிர குகையை விட்டு வெளியே வந்தான். நடக்கப் போவதை எண்ணி மிருகங்கள் எல்லாம் பயந்து ஓலமிட ஆரம்பித்தது. அந்த சப்தமே யுத்தம் வரப் போவதற்கு முன்னறிவிப்பாக இருந்தது.

காட்டின் மத்தியில் அவன் வந்து நிற்க, அவன் எதிரே அந்த குட்டி உருவம் வந்து நின்றது கண்கள் பளபளக்க.

“உம்...பா....டூர்..உம்...பா!” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டது.

கார்கோடன் மெல்ல கீழே குனிந்து இருளை ஒற்றைக் கையில் தூக்கி ஒரு சுழற்று சுழற்றினான்.
“நீயும் வந்து விட்டாயா நஞ்சுண்டா! இந்த ஜென்மத்தொடு அனைத்தும் முடிந்து போகும்!” என்று அவளை வீசி எறிந்தான்.

அந்நேரம் சரியாக கார் மத்தியில் வந்து நின்றது. கதவுகள் தானாக திறக்க, மிதுனா பொம்மை போல இறங்கினாள்.

அவளைப் பார்த்ததும் காடே அதிர சிரிக்க ஆரம்பித்தான்.

அவளின் பார்வை நஞ்சுண்டன் மேல் இருக்க, சிறு உருவமாக இருந்தவன் தன் பழைய உடலைப் பெற்று எழுந்து வந்தான்.


தங்கம்பட்டி ஜமீன் பங்களாவில் மழையின் காரணமாக கரென்ட் போயிருக்க, கையில் லாந்தர் விளக்குடன் ஒரு உருவம் மெல்ல ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்துக் கொண்டிருந்தது.
கனிகா இருந்த அறையின் கதவு திறக்கப்பட்டு படுக்கையில் அவளில்லாது போக, வேக நடையுடன் மாளிகையை விட்டு வெளியேறியது. தோட்டத்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டின் கதவை தட்டி “கஜேந்திரா கதவை திற” என்று அழைத்தாள் அந்த மூதாட்டி பேச்சியாயி.

கதவை திறந்து வெளியே வந்த கஜேந்திரன் “என்ன பேச்சி இந்த நேரத்துல இங்கே என்ன பண்ற?” என்று கடிந்து கொண்டான்.

“மோசம் போயிட்டோம் கஜேந்திரா! அவளை காணவில்லை”.

அதுவரை அலுப்பாக நின்று கொண்டிருந்த கஜேந்திரனின் உடலில் ஒரு விறைப்பு தென்பட “என்ன சொல்ற? நல்லா தேடித் பார்த்தியா?”.

“ம்ம்...எங்கேயும் இல்லை”.

அவனது பார்வை சுற்றுப்புறத்தை அலச, கண்கள் ஆகாயத்தை நோக்கியது. எங்கும் கும்மிருட்டு சூழ்ந்திருக்க “அமாவாசையா? என்ன நட்சத்திரம் இன்று?”.

“மிருகசீரிஷம்”.

“உம்...இன்று தான் யுத்தம். இன்றிரவோடு முடிந்து விடும் பேச்சி. அது தான் மிதுனமாலினி கிளம்பி விட்டாள்”.

“என்ன சொல்கிறாய் கஜேந்திரா?”

“பகை முடிக்க சென்று விட்டாள். கார்கோடகனை அடக்க கிளம்பி விட்டாள்”.

பேச்சியின் விழிகளில் ஒரு பளபளப்பு தோன்ற “அவளால் முடியுமா? கடந்த நான்கில் முடியாதது இப்போது எப்படி முடியும்?”

“இது இறுதிப் போர். இதில் அவன் வென்றால் உலகம் அழிவை நோக்கிச் சென்று விடும்”.

“கார்கோடகன் அளவிற்கு அவளுக்கு சக்தி இருக்காதே”.

“அதை விட பெரிய சக்தியின் துணை அவளுக்குண்டு”.

“அவரா?” என்றாள் விழிகள் விரிய.

“ஆம்! அவரே தான்!”.

“அந்தப் பையனும் சென்றிருக்கிறானே?”
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
“அவனுக்கு இந்த யுத்தத்தைப் பார்க்கும் மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது அவன் செய்த புண்ணியம்”.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே சடசடவென்று மழை பொழிய ஆரம்பித்தது. காற்றின் வேகம் பயங்கரமாக இருந்தது. பெரிய மரங்கள் எல்லாம் பெயர்ந்து கீழே விழ ஆரம்பித்தது. பேச்சியால் நிற்க முடியவில்லை. கஜேந்திரனும் தடுமாற ஆரம்பித்தான்.

“மாளிகைக்குள் சென்று விடு பேச்சி. கார்கோடகனின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. என்ன சப்தம் வந்தாலும் வெளியே வராதே” என்று சொல்லிவிட்டு அவன் தோட்டத்தின் பின்பக்கம் செல்ல ஆரம்பித்தான்.

அத்தியாயம் – 2

சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு...

காரையாறு வனப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த கூட்டத்தின் தலைவன் செங்கோடனுக்கு மகள் பிறந்திருக்கிறாள். அவர்களின் குடிகள் அதை கொண்டாட ஆரம்பித்தினர்.

அக்கூட்டத்தின் மூத்தவர் முத்துக்காணி குழந்தையை முதலில் கையில் ஏந்தி அவளின் உடலில் உள்ள மச்சங்களை சோதித்து அவளின் வாழ்வில் நடக்கவிருக்கும் அனைத்தையும் கணித்து விடுகிறார்.

அக்குடியினருக்கு பெயர் வைக்கும் விழாவை தங்கள் தெய்வம் கருப்பு முன் பலி கொடுத்து தான் ஆரம்பித்து வைப்பார்கள். அவர்களின் மூத்த தலைவர் பிறந்திருக்கும் குழந்தையை கையில் ஏந்தி அவர்களின் வாழ்வில் நடக்கவிருப்பவற்றை கணித்து அதற்கேற்றார் போல் பெயர் வைப்பார்.

செங்கோடனின் மகளை கையில் ஏந்தி இருந்த முத்துக்காணியின் நெற்றியில் சிந்தனை முடிச்சுகள் விழுந்திருந்தது. மீண்டும் கையிலிருந்த குழந்தையின் முகத்தையும் மச்சங்களையும் ஆராய்ந்தார். அவை சொல்லும் செய்தி உவப்பானதாக இல்லை. குழந்தை இந்த ஜென்மம் மட்டுமல்லாது ஐந்து ஜென்மங்களுக்கு போராட வேண்டி வரும் என்பதை உணர்ந்து கொண்டார்.

தலைவனின் மகளுக்கு பெயர் சூட்டுதல் என்கிற உற்சாகத்தில் இருந்தவர்களுக்கு அவரின் அமைதி குழப்பத்தைக் கொடுத்தது.

செங்கோடன் மெல்ல அவர் சென்று “என்னவாயிற்று ஐயனே? ஏன் இந்த மௌனம்?” என்றான்.

மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்துவிட்டு கூடி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தவர் “இவள் மிதுனமாலினி. காற்றின் ராசியைக் கொண்டவளான இவள் காளியைப் போன்று பகைவனை வேட்டையாடப் போகிறாள்” என்றார் சப்தமாக.

அதுவரை குழப்பத்துடன் இருந்தவர்கள் ஆரவாரத்துடன் சப்தமிட ஆரம்பித்தனர். செங்கோடன் மட்டும் “இவளின் வாழ்க்கையில் நடப்பவற்றை சொல்லுங்கள் ஐயனே” என்றான் ஒருவித பயத்துடன்.

நீண்ட பெருமூச்சுடன் “இவள் சாதரண குழந்தை இல்லை செங்கோடா. நாம் இன்னும் சற்று நாட்களுக்குள் கார்கோடகன் என்கிற பைசாச காலத்திற்குள் நுழையப் போகிறோம்”.

“புரியவில்லை ஐயனே!”.

“கார்கோடகன் என்கிற மந்திரவாதி இவ்வனத்தை ஆக்கிரமிக்கப் போகிறான். அவனுடைய தேவை நம் இனத்தின் மந்திர வேர்”.

“ஐயனே!” என்று அதிர்ந்து விட்டான்.

“ஆம்! கார்கோடகன் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். நம் இனத்திற்கு இது சோதனை காலம். அவன் இங்கு வந்து தவம் செய்யப் போகிறான். அந்த தவம் மிக கடுமையானதாக இருக்கப் போகிறது”.

“மந்திர வேரினால் அவனுக்கு என்ன பயன்?”

“அவனுடைய தவத்தின் பலனை அடைய மந்திர வேர் தேவை”.

“சரி! மிதுனமாலினிக்கும் கார்கோடகனுக்கும் என்ன சம்மந்தம்? இவளின் பங்கு என்ன?”

செங்கோடனை நிமிர்ந்து பார்த்தவர் “அவனை அழிக்கப் போகிறவள் இவள் தான்” என்றார்.

“என் மகளா? இந்தக் குழந்தை எப்படி?”

“இவள் பிறந்தது அவனுக்கு தெரிந்திருக்கும். நாம் இவளையும் மந்திர வேரையும் மறைத்து வைத்து பாதுகாக்க வேண்டும். இங்கு பல உயிர்கள் போகப் போகிறது”.

“இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?”

“நம் கூட்டத்தில் இருவரை தேர்ந்தெடுத்து அவர்கள் கையில் இவளையும் வேரையும் கொடுத்து நான் சொல்லும் இடத்திற்கு அனுப்பி விடு. அங்கு இவள் பாதுகாப்பாக வளர்வாள். வேரும் அவன் கையில் சிக்காது”.


“அவனது மந்திர சக்தியால் அறிந்து கொள்ள மாட்டானா?”

“அவனது மந்திர சக்தி பொய்த்து போகுமிடம் அது. அங்கு அவனால் எதையும் செய்ய முடியாது”.

“அது எந்த இடம்?”
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
“வனத்தின் கீழே தங்கம்பட்டி ஜமீன் குடும்பம் வாழ்கிறது. அது அய்யனாரின் இருப்பிடம். அவனே அவர்களின் காவல் தெய்வம். அங்கே எந்த துர்சக்தியும் நெருங்க முடியாது”.

அவர் சொன்னதைக் கேட்டு உள்ளத்தில் எழுந்த துயரத்தை மறைத்துக் கொண்டு தனது இணையை சமாளித்து குழந்தையை காண்டீபன் மற்றும் மருதம்மாளிடம் ஒப்படைத்தான்.

அனைவரிடமும் கார்கோடகனின் வருகையைப் பற்றி கூறப்பட்டது.

அதுவரை மகிழ்ச்சியில் இருந்தவர்கள் பயத்தில் மிரண்டு போய் நின்றார்கள். மந்திர வேர் அடங்கிய பேழையை காண்டீபனிடம் கொடுத்த முத்துக்காணி அவன் காதில் செய்ய வேண்டியவற்றை எல்லாம் சொல்லி விட்டார்.

அந்த தம்பதி மந்திர வேருடனும் குழந்தையுடனும் கீழே இறங்க ஆரம்பித்தார்கள். வனத்தை விட்டு அவர்கள் இறங்கும் சமயம் மிருகங்கள் எல்லாம் ‘ஒ’வென்று அழ ஆரம்பித்தது. ஓநாய்கள் ஊளையிட ஆரம்பித்தன. மருதம்மாள் கர்ப்பமாக இருந்தாள். அவள் வயிற்றில் இருக்கும் சிசு அந்த சப்தத்தில் அதிகமாக உருண்டு பிரண்டது.

அவர்களுக்கு காவலாக சிங்கமொன்று முன்னே செல்ல ஆரம்பித்தது. அதைக் கண்ட காண்டீபனும், மருதம்மாளும் திகைத்து போனார்கள். தங்களின் பணி எப்படிப்பட்டது என்று புரிந்து போனது. நீண்ட பயணத்திற்குப் பிறகு ஜமீன் மாளிகைக்குச் சென்றார்கள். அங்கு இவர்களின் வருகைக்காக காத்திருந்தான் பத்ரன்.

மாளிகையின் பின்னே ஒரு குடிலில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. அவர்களை அங்கே அழைத்துச் சென்றான் பத்ரன்.

அங்கே குடிலின் நடுவே மிகப் பெரிய காளி சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டிருந்தது. அதன் அருகே கண்மூடி அமர்ந்திருந்த கோணேஸ்வரன் “வா காண்டீபா! குழந்தையை கொண்டு வந்து தாயின் காலில் வை” என்றார்.

அவர் சொன்னதும் பயத்துடன் குழந்தையை மனைவியிடம் இருந்து வாங்கி காளியின் பாதத்தருகில் வைத்தான். அடுத்த நிமிடம் குழந்தை கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தது. அந்த நேரம் ஜமீன்தார் அதிர்ச்சியோடு பார்த்தபடி உள்ளே நுழைந்தார்.

“வாருங்கள் முருகபூபதி”.

“இதென்ன இந்தச் சிறு குழந்தை இப்படிச் சிரிக்கிறாளே”.

“அவள் இனி வரப் போகும் ஊழி காலத்தை எண்ணி சிரிக்கிறாள்”.

“தாங்கள் கூறிய குழந்தை இவள் தானா?”

“ஆம்! இவளால் உங்கள் குடும்பத்தில் பல நல்ல நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. உங்களின் காவல் தெய்வம் ஐய்யனார் இவளுக்கு காவலாக இருக்கப் போகிறார்”.

“என்ன சொல்கிறீர் ஐயா?”

“மாளிகையை சுற்றி காவல் பெருகப் போகிறது ஜமீன் அவர்களே. இவள் வன ராணி. இவளின் வனத்தை அழித்து அவர்களின் சொத்தான மந்திர வேரை எடுக்க ஒருவன் வர இருக்கிறான்”.

“அவனால் எங்களுக்கு பாதிப்பு?”

“இது யாரின் இடம்? சொரி முத்து ஐய்யனாரின் எல்லை. இங்கே எந்த தீய சக்தியும் அணுக முடியாது”.

“நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”

“இந்தக் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டும். அவளின் பதினெட்டு வயதில் கார்கோடகனை தேடிச் செல்வாள்”.

முருகபூபதி அனைத்தையும் கேட்டுக் கொண்டு குழந்தையை எடுத்துக் கொண்டு தனது மாளிகைக்குச் செல்கிறார். அங்கே அவரின் மனைவியிடம் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது.

காண்டீபன் தன்னிடம் இருந்த அந்தப் பேழையை பத்திரமாக வைத்துக் கொள்கிறான். முத்துக்காணி அவனிடம் அதை தான் சொல்லி இருந்தார். அதே நேரம் இங்கே மருதம்மாளுக்கு பிரசவ வலி எடுத்து நஞ்சுண்டன் பிறக்கிறான்.

இவை அனைத்தும் கோணேஸ்வரன் இருந்த அந்தக் குடிலில் தான் நடக்கிறது.

அங்கே வனப்பகுதியில் மிதுனமாலினியை அனுப்பி வைத்து விட்டு செங்கோடனும் முத்துக்காணியும் அவர்களின் தெய்வம் கருப்பு இருக்கும் இடத்திற்குச் செல்கிறார்கள். அவர்களுக்கான நேரம் குறைவாகவே இருந்தது. காற்றின் வேகத்தை வைத்து கார்கோடகன் தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டிருந்தார்கள்.
தங்களின் எல்லை முழுவதும் கருப்பின் சக்தியை வைத்து மாயக்கட்டுப் போட்டுவிட்டு வேக நடையுடன் குடில்கள் இருக்கும் பகுதிக்கு வந்தார்கள். தங்களிடம் மந்திர வேர் இல்லை என்று உணரும் போது கார்கோடகன் பழி வாங்குவான். அதில் எத்தனை உயிர்கள் போக போகிறதோ என்கிற பயம் இருவருக்கும் இருந்தது.

அந்நேரம் அவர்கள் இருந்த இடத்திற்கு சடையர் வந்து சேர்ந்தார். அவர்களின் அருகே வந்தவர் “குழந்தைகளையும், பெண்களையும் ஓரிடத்தில் வைத்து விடுங்கள். அவனுடைய தவம் மிகப் பயங்கரமாக இருக்கும்”.

“சடையரே! தாங்கள் நினைத்தால் எங்களை காக்க முடியாதா?”

“எங்களால் முடியாது செங்கோடா. குறிப்பிட்ட எல்லைவரை தான் எங்களின் சக்தி அவனை முறியடிக்கும்”.

அந்நேரம் காற்று சுழன்றடிக்க ஆரம்பித்தது. மரங்கள் எல்லாம் பேயாட்டம் போட ஆரம்பித்தன. மழையோ வானம் மொத்தமாக கிழிந்து வீழ்வது போல ஊற்றியது. அடர்மழையின் ஊடே ஒரு உருவம் வேக நடையுடன் வந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்ததுமே அங்கிருந்த மூவருக்கும் பயம் எழ ஆரம்பித்தது. திடகாத்திரமான உடல்வாகுடன் கூர்மையான பார்வையோடு அவர்களின் முன்னே வந்து நின்றான் கார்கோடகன்.

“செங்கோடா! எங்கே உனது மகள்? அவளை காணவே வந்திருக்கிறேன்”.

செங்கோடனின் உடலில் உதறல் எழ “எ...என் மகள் இறந்தே பிறந்தாள்” என்றான்.

தசைகள் இறுக அவனை கூர்மையாக பார்த்த கார்கோடகன் காடே அதிர சிரித்தான்.

“எனது எதிரியான அவள் இறப்பதற்கு வாய்ப்பேயில்லை செங்கோடா” என்றவன் சடையரின் பக்கம் திரும்பி “என்ன சடையரே இதெல்லாம் உமது வேலையோ?” என்றான்.

அவனை அலட்சியமாக பார்த்து “நீ எதற்கு இங்கு வந்தாய் கார்கோடா? உனது எந்த தவமும் இவ்வனத்தில் உதவாது”.

மூவரையும் ஒருபார்வை பார்த்தவன் “மிதுனமாலினி இன்னும் சற்று நேரத்தில் என் கரங்களுக்கு வந்தாக வேண்டும். அதோடு மந்திர வேரும் வர வேண்டும்”.

அப்போது சற்றே முன்னே வந்து “நடக்காது கார்கோடா! நீ கேட்டவை எந்த ஜென்மத்திலும் உனக்கு கிடைக்காது” என்றார் முத்துக்காணி.

அவர் சொல்லி முடிக்கவும் அடுத்த நிமிடம் தனது வாயைக் குவித்து அவரின் முன்னே ஊதினான். அதில் முத்துக்காணி தூக்கி எறியப்பட்டு ஒரு மரத்தில் மோதி அப்படியே உயிரிழந்து விழுந்தார்.
“எனது முதல் பலி! மிதுனமாலினி வரவில்லை என்றால் ஒவ்வொரு உயிராக போகும்” என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

முத்துக்காணி உயிரிழ்ந்ததைப் பார்த்து அதிர்ந்து அவரை தூக்க ஓடினான் செங்கோடன்.

சடையரோ பெண்களும், குழந்தைகளும் இருக்கும் குடிலை நோக்கி நடந்தார். உள்ளே சென்றவர் இரு கை கூப்பி “தாயிகளா! கார்கோடகன் வந்து விட்டான். இன்னும் சற்று நேரத்தில் அவனின் தவம் தொடங்கப் போகிறது. அதனால் உங்களை எல்லாம் சிறிது காலத்திற்கு எல்லாம் காது கேளாதவர்களாக மாற்றப் போகிறேன்”.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
550
404
63
அவர் சொல்லி முடிக்கும் நேரம் காட்டின் மத்தியில் சென்று நின்ற கார்கோடகன் ஒற்றைக் காலை தூக்கி மற்றொரு காலின் மீது வைத்து கைகளை உயர தூக்கி கும்பிட்டு கண்களை மூடி மந்திர உச்சாடனத்தை தொடங்கினான்.

அந்த சப்தம் அனைவரின் செவியையும் குடைந்து தலையை சுழல வைத்தது. குழந்தைகள் எல்லாம் கதற ஆரம்பித்தன.

அதைக் கண்டு சடையர் குழந்தைகளையும் பெண்களையும் செவிடாக மாற்றினார்.

அத்தியாயம் – 3

கார்கோடகன் வனத்திற்கு வந்து இருபது நாட்களை கடந்திருந்தது. செங்கோடனின் குடிமக்கள் மாயக்கட்டைத் தாண்டி வெளியே வராமல் அங்கேயே அடைந்து கிடந்தார்கள்.

மிதுனமாலினியை அவர்கள் கொண்டு வந்து கொடுக்கவில்லை என்பதால் தனது தவத்தின் தீவிரத்தை அதிகரிக்க ஆரம்பித்தான்.

வனமெங்கும் தட்பவெட்ப நிலையில் மாற்றம் எழ ஆரம்பித்தது. மிருகங்கள் எல்லாம் தறிகெட்டு நடந்து கொள்ள ஆரம்பித்தது. ஒருகட்டத்திற்கு மேல் இருந்த இடத்திலேயே விழுந்து உயிரிழக்க ஆரம்பித்தன. பறவைகள் எல்லாம் பறந்து கொண்டிருக்கும் போதே உயிரிழந்து கீழே விழந்தது.
காட்டின் வெப்பம் காரணமாக அவனது உடலிலிருந்து விழுந்த வியர்வை துளிகளில் இருந்து புதுவிதமான உருவங்கள் தோன்றி மாயக்கட்டின் அருகே சுற்றி வர ஆரம்பித்தன.

அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த செங்கோடனுக்கு வெகுநாட்களுக்கு இதை எல்லாம் தாக்குப்பிடிக்க முடியாது என்று தோன்றியது.

சடையருக்கும் அதே எண்ணம் தான். அவர்கள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஆண்களின் குடிலில் இருந்து ஒருவன் தலைதெறிக்க மாயக்கட்டை விட்டு வெளியே ஓடினான்.

வெளியில் சுற்றிக் கொண்டிருந்த உருவங்கள் அவன் வரவும் நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு அவனை கிழித்து நான்கு திசைகளிலும் வீசின. குடிலை விட்டு வெளியே வந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் இதயமும் ‘டம் டம்மென்று’ அடித்துக் கொண்டது.

பெண்கள் எல்லாம் மரண பயத்தில் ஓலமிட ஆரம்பித்தனர். ஆண்கள் அனைவரும் செங்கோடனை சூழ்ந்து கொண்டனர்.

“இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கொடுமையை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் செங்கோடா?”

அவன் திரும்பி சடையரைப் பார்க்க, அவரிடம் பதிலில்லை. அதே சமயம் பெண்களின் அழுகை ஒலி அவரை சிந்திக்க வைத்தது.

செங்கோடன் அங்கிருந்த அனைவரையும் பார்த்து “என் குடிகளை காப்பது எம் கடமை. அதனால் என் மகளின் இருப்பிடத்தை அவனுக்கு சொல்லிவிடப் போகிறேன்” என்றான்.

“மந்திர வேரையும் கொடுத்து விடப் போகிறாயா செங்கோடா?”

“வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் சடையரே? இந்த வனமும் எம் மக்களும் அழிவதைப் பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடியவில்லை”.

“அந்த வேர் கார்கோடகனின் கையில் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை அறிவாயா? இதை விட பல இன்னல்களை உலகம் சந்திக்க வேண்டி இருக்கும்”.

“எனக்கு அதைப் பற்றி கவலையில்லை சடையரே. என் மக்கள் நலமாயிருக்க என் மகளை பலி கொடுக்க முடிவு செய்து விட்டேன்”.

“உன் மகளையும் மந்திர வேரையும் கொடுத்து விட்டால் இந்த வனம் பழைய மாதிரி மாறி விடும் என்று தவறாக எண்ணுகிறாய். என்று அவனது பார்வையில் நீங்கள் விழுந்தீர்களோ அன்றே உங்களின் முடிவுகள் எழுதப்பட்டு விட்டன”.

“விட்டு விடுங்கள் சடையரே! நான் கார்கோடகனுக்கு மகளின் இருப்பிடத்தைக் கை காட்டப் போகிறேன்”.

மற்றவர்களும் அதை ஒப்புக் கொள்ள சடையர் ஒதுங்கிப் போய் ஒரு குடிலின் உள்ளே நுழைந்து விட்டார்.

அனைவரையும் உள்ளே செல்ல சொன்னவன் “கார்கோடகா என் மகளின் இருப்பிடத்தை சொல்லி விடுகிறேன். எங்களை விட்டுவிடு” என்று கத்தினான்.

அவனது குரல் கார்கோடகனின் காதை எட்டவும் அடுத்த நிமிடம் செங்கோடனின் முன்னே வந்து நின்றான். அந்த உருவங்கள் எல்லாம் ஓடிவிட இருவரும் வெளியே அருகருகே நின்றனர்.

“சொல்! உனது மகள் எங்கிருக்கிறாள்? வேர் எங்கிருக்கிறது?”

“தங்கம்பட்டி ஜமீனில் வளர்கிறாள். வேரும் அங்கு தான் இருக்கிறது”.

“ம்ம்...நான் பார்த்துக் கொள்கிறேன். நீயும் உனது குடிமக்களும் எவ்வித தொந்திரவுமின்றி நலமாக இருங்கள்” என்று கூறி அங்கிருந்து சென்றான்.

சடையர் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் கேட்கும் திறனை கொடுத்து விட்டார்.

அவன் சென்றதும் அனைவரும் வெளியே வர, செங்கோடன் சோர்ந்து போய் அமர்ந்து விட்டான்.

செங்கோடனின் மனைவி கண்ணீருடன் சடையரிடம் “இதற்கு வேறு தீர்வே இல்லையா?” என்று கேட்டாள்.

“இல்லையம்மா! இது விதியின் கணக்கு. இப்போது இல்லை என்றாலும் இந்தப் பிறவியில் அவனது கரங்களால் அவள் மடிவது தான் எழுதப்பட்டிருக்கிறது”.

“ஐயோ! நான் என்ன செய்வேன்” என்று அவள் மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

அந்த இடமே அவளின் அழுகுரல் மட்டுமே கேட்டது.

கார்கோடகன் வனத்தை விட்டு தங்கம்பட்டி ஜமீன் நோக்கி மலையிலிருந்து இறங்க ஆரம்பித்திறான்.

ஜமீன் குடும்பத்தில் செல்வ சீமாட்டியாக மிதுனமாலினி வளர்ந்து கொண்டிருந்தாள்.

முருகபூபதியின் மனைவி அவளை பொறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். மாளிகையின் நடுவே தங்கத் தொட்டிலில் ஆடிக் கொண்டிருந்தவளின் இதழ்களில் புன்னகை நிறைந்திருந்தது.
காண்டீபனும் , மருதம்மாளும் குழந்தைக்கு காவலாக அங்கேயே தான் இருந்தார்கள்.

காண்டீபனிடம் இருந்த வேரானது அவனது குடிசையில் மண்ணில் புதைக்கப்பட்டு அதன் மீது ஐய்யனாரின் சிறு உருவ சிலை வைக்கப்படிருந்தது. கோணேஸ்வரன் தான் வேரை பாதுக்காக்க அப்படியொரு ஏற்ப்பாட்டை செய்திருந்தார்.

மலையிலிருந்து இறங்கிய கார்கோடகன் நேரே மாளிகையின் முன் வந்து நின்றான். அவனது பார்வை சுற்றுப்புறத்தை ஆராய்ந்து விட்டு ஒருவித திருப்தியுடன் உள்ளே காலை வைக்கும் நேரம் வீசி எறியப்பட்டான்.

மாளிகையின் எல்லைப்பகுதி முழவதும் நெருப்புச்சுவர் எழ ஆரம்பித்தது. வீசி எறியப்பட்டதில் அதிர்ந்து போனவன் ஆக்ரோஷத்துடன் மீண்டும் முயற்சித்தான். அப்போது குதிரையின் குளம்பொலி கேட்க ஆரம்பித்தது.

ஆத்திரத்தில் இருந்தவனுக்கு அதை கவனிக்கும் மனநிலை இல்லை. தன்னை மீறிய சக்தியா என்று எண்ணிக் கொண்டு கையிலிருந்த கமண்டலத்திலிருந்து நீரை எடுத்து நெருப்புச் சுவற்றின் மீது தெளித்தான்.

உள்ளே இருந்தவர்களுக்கு வெளியே ஏதேதோ சப்தம் கேட்க ஆரம்பித்தது. தொட்டிலில் இருந்தக் குழந்தையோ கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தாள். மருதம்மாள் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்து நிற்க, நெருப்புச் சுவர் அனலை வீச ஆரம்பித்திருந்தது.