அத்தியாயம் - 9
‘யாரிவன்? ராஜேஷ் அறையில்…!’ என்று நினைத்தபடி அவள் திகைப்புடன் நிற்க, அவளைக் கண்டவனோ கண்கள் மின்ன அவளைப் பார்த்தான்.
தன்னிலையை அடைந்த வைஷ்ணவி, அரைகுறை உடையில் தன்னெதிரில் நின்றிருப்பவனை உணர்ந்தவளாக, “சாரி! நான் ராஜேஷ்ன்னு…” எனச் சொல்லியபடி கதவை நோக்கி நடந்தவள்,
ஏதோ நினைவு வந்தவளாகத் திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவனும் குறுகுறு பார்வையுடன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ..ங்க… நா..ன்.. நா..ம..” என்று வாயில் வந்ததை உளறிக் கொட்டினாள்.
சிரிப்பை அடக்கிக் கொண்டு, “என்ன?” என்றான் தீவிர பாவத்துடன்.
“அது…” என்று ஆரம்பித்தவள் அப்போதுதான் அவனது கோலத்தை மீண்டும் உணர்ந்தவளாக, “ஒண்ணுமில்லை” என்றபடி சட்டென அங்கிருந்து திரும்பி நடந்தாள்.
அவள் கதவருகில் செல்லும் வரை மௌனமாக இருந்தவன், “ராஜேஷ் குளிச்சிட்டு இருக்கான்” என்றான்.
நின்றவள் திரும்பிப் பார்க்காமலேயே, “தேங்க்ஸ்” என்றாள்.
“ஒரு நிமிஷம்” என்றான்.
அவள் லேசாகத் திரும்பிப் பார்க்க, “நீ..ங்க… நா..ன்.. நா..ம..ன்னு ஏதோ ஆரம்பிச்சீங்க. அப்புறம் எதுவுமே சொல்லாம கிளம்பறீங்களே” என்றான்.
அப்போது தான் நினைவு வந்தவளாக, “உங்களை எங்கேயோ பார்த்தது... நாம மீட் பண்ணியிருக்கோமா?” எனக் கேட்டாள்.
“அப்படியா! எனக்கு அப்படி எதுவும் நினைவில்லையே. ஒரு வேளை இதே போல எப்போதாவது இங்கேயே நாம சந்திச்சிருக்கலாம்” என்று தோள்களைக் குலுக்கினான்.
அவனை ஆழ்ந்து நோக்கியவள், “ம்ஹும்… எனக்கென்னவோ… பார்த்திருக்கோம்ன்னு….” என்று இழுத்தாள்.
கைகளைக் கட்டிக்கொண்டு சற்று சாய்ந்து நின்றவன், “எதுக்குச் சுத்தி வளைக்கிறீங்க? என்கிட்டப் பேசணும்ன்னா நேரடியாகவே பேசலாம். நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். என் பேர்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, அவள் அவனை முறைத்தாள்.
“ஆளைப் பாரு ஆளை. ஊர்ல இல்லாத மன்மதன். இவரைப் பார்த்ததும் அப்படியே மயங்கி பேச வந்துட்டாங்க” என்று கோபத்துடன் சொன்னாள்.
கண்கள் பளபளக்க, “பின்னே இல்லையா? ராஜேஷ்னு நினைச்சி என்னை அடிச்சீங்க. இல்லன்னு தெரிஞ்சதும் கிளம்பியிருக்கணும். அதை விட்டுட்டு, என்கிட்டச் சரிக்குச் சமமா பேசிட்டு இருக்கீங்க. இதிலிருந்தே தெரியலையா! கேட்டா மன்மதனான்னு என்னையே கேட்கறீங்க” என்றான் கிண்டலாக.
கண்களை உருட்டியவள், “உன் மூஞ்சி. ராஜேஷோட ஃப்ரெண்ட் அவனை மாதிரியே டீசன்டா இருப்பேன்னு நினைச்சேன். இப்போல்ல தெரியும். நீ மன்மதன் தான்னு” என்றாள் கடுப்புடன்.
“ஆக மொத்தத்தில், மனசுலயிருந்தது வெளிவந்துடுச்சி” என்று சிரித்தவனை, முறைத்துவிட்டு, அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.
கடுகடுவென்ற முகத்துடன் கீழே வந்தவள், அங்கே அமர்ந்திருந்த பத்மஜா பாட்டியையும், ஜனார்த்தனன் தாத்தாவையும் பார்த்தாள்.
“வாம்மா வைஷு நல்லாயிருக்கியா?” என்று கேட்ட பாட்டியை எளிதாக அடையாளம் கண்டுகொண்டாள்.
“நல்லாயிருக்கேன் பாட்டி! நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?” என்று இருவரையும் விசாரித்தாள்.
பரஸ்பரம் நலவிசாரிப்புகள், மற்ற விஷயங்கள் என்று அவளிடம் பேசிக்கொண்டிருந்தாலும், பெரியவர்களின் கண்கள் மொழியற்ற பாஷைகளைச் சந்தோஷத்துடன் பரிமாறிக்கொண்டன.
அங்கே வந்த வளர்மதி, “வைஷு சீக்கிரம் ரெடியாகிடும்மா. நேரமாகுதே” என்றார்.
“இதோ அரைமணி நேரத்தில் வந்திடுறேன் அத்தை” என்றவள், பெரியவர்களிடம் சொல்லிக்கொண்டு தன் அறைக்கு ஓடினாள்.
பக்கத்து அறையிலிருந்து வெளியே வந்த ஹரிணி, “அண்ணனைப் பார்த்துப் பேசினியா?” எனக் கேட்டாள்.
“அம்பானி ரொம்ப பிஸியா இருந்தார். ஆனா, ஒரு அரை மெண்டலைப் பார்த்துப் பேசினேன்” என்று காட்டத்துடன் சொன்னாள்.
“யாரு? ஸ்ரீ அண்ணாவா?” என்று கேட்டாள்.
“மதன காமராஜன்னு பேர் வச்சிருக்கணும். ஸ்ரீயாம் ஸ்ரீ” என்றவள் நடந்ததை அவளிடம் சொன்னாள்.
“ஹேய்! உனக்கு உண்மையிலேயே ஸ்ரீ அண்ணாவைத் தெரியலையா?” என்று கேட்டாள்.
“எனக்கெப்படித் தெரியும்…” என்று இழுத்தவள், “ஸ்ஸ்…” என்று நெற்றியில் கை வைத்தபடி, “மை காட்! பாட்டி, தாத்தாவை பார்த்தும் கூட எனக்கு நினைவு வரலைடி. நான் யாரோ ஸ்ரீயோட ஃப்ரெண்டுன்னு நினைச்சேன்” என்றாள் மெதுவாக.
”காலங்கார்த்தால அண்ணன் நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டாரா? சரி சரி விடு. அண்ணா அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க மாட்டார். நீ தயாராகி வா” என்று சொல்லிவிட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள்.
வைஷ்ணவிக்கு புகை படிந்த ஓவியம் போல அந்த நாள் நினைவில் வந்தது. தனது கல்லூரி முதல் வருடத்தை முடித்துவிட்டு, விடுமுறைக்காக அம்பாசமுத்திரம் வந்திருந்தாள். அப்போது ஸ்ரீநிவாஸும், தனது தாத்தா, பாட்டியுடன் அங்கே வந்திருந்தான்.
ஆனால், அவள் அங்கே வந்த அன்று மாலையே அவன் கிளம்பிச் சென்றதால், அவனது முகம் அவ்வளவாக அவளது மனத்தில் பதியாமல் போனது. தாத்தா, பாட்டி இருவரும் அங்கேயே ஒரு வாரம் இருந்ததில் அவர்களுடன் இவளும் ஒட்டிக்கொண்டு விட்டாள்.
இப்போது இதெல்லாம் நினைவுக்கு வர, தன்னையே நொந்துகொண்டு குளியளறைக்குள் நுழைந்தாள்.
‘சற்றுநேரமே பார்த்த தன்னை அவனுக்குத் தன்னை நினைவிருக்கிறதா என்ன?’ என்று யோசித்தவள், ‘இருந்தாலும், இவனை எங்கோ சந்தித்துப் பேசியிருக்கிறோம். இந்த முகம் பரிச்சயமானதாகத் தான் தெரிகிறது’ என்று அவளது உள்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.
அவள் குளித்துவிட்டு வெளியே வந்தபோது, கற்பகம் அறைக்குள் நுழைந்தார்.
“வைஷு! இந்தப் புடவையைக் கட்டிக்க, இந்த நகையைப் போட்டுக்க” என்று அவர் கொடுத்ததை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.
தனது ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் வார்த்தையை எதிர்பார்த்து வந்தவருக்கு, மகளின் மௌனமான செயல் வியப்பை அளித்தது. தான் சற்றுநேரத்தில் வருவதாகக் கூறி வெளியே சென்றவர், சிறிது நேரத்திற்குப் பின் வந்தார்.
மஞ்சள் வண்ண ஆர்ட் சில்க் புடவையில், வஞ்சிக் கொடியைப் போல நின்றிருந்த மகளை சில நொடிகள் இமைக்காமல் பார்த்தார்.
“என்னம்மா அதிசயமா பார்க்கறீங்க?” என்று புன்னகையுடன் கேட்டாள்.
“அதிசயமா இல்ல… ஆனா, ஆச்சரியமா இருக்கு. ஏதாவது விசேஷத்துக்குப் போகும்போது புடவை கட்டிக்கோன்னு சொன்னா, வானத்துக்கும் பூமிக்குமா குதிப்ப. இப்போ, எதுவுமே சொல்லாம நான் சொல்றதையெல்லாம் செய்றியே… உனக்கு ஏதாவது வேலையாகணுமா?” என்று கேட்டார்.
அவரைப் பார்த்து மென்நகை புரிந்தவள், “இங்கே இருக்கும்வரைக்கும் நீங்க சொல்றதை தட்டாம கேட்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள் இலகுவாக.
“உண்மையாகவா?” கற்பகத்தின் விஷமத்தனமான வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல், “ம்ம்” என்று தலையை மட்டும் அசைத்தாள்.
கற்பகத்திற்கு மனம் சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்தது.
“திரும்பு” என்றவர், அவளது ஈரக்கூந்தலை துவட்டி கூந்தலைத் தளர பின்னிவிட்டார். இடை வரை நீண்டிருந்த கருங்கூந்தலில் நெருங்கக் கட்டிய முல்லைப் பூவைச் சூட்டினார்.
மகளைத் திருப்தியாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டார். ஏனோ, அவரது விழிகளில் ஈரம் படர்ந்தது.
அதைக் கண்ட வைஷ்ணவி, “அம்மா!” என்று கனிவுடன் அவரை அணைத்துக் கொண்டாள். ஏனென்றே புரியாமல் அவளது விழிகளும் தளும்பின.
சமாளித்துக் கொண்ட கற்பகம், “சரி வா. எல்லோரும் சாப்பிட வந்திருப்பாங்க” என்று சொல்லிகொண்டே முந்தானையால் கண்களை ஒற்றிக்கொண்டு சென்றார்.
சில நொடிகள் அங்கேயே நின்றிருந்தவள், நீண்ட மூச்செடுத்துக்கொண்டு, அறையை மூடிக்கொண்டு ஹாலுக்குச் சென்றாள்.
அவள் வந்தபோது ராஜேஷும், ஸ்ரீநிவாஸும் வெளியே சென்றிருந்தனர்.
எல்லோருடனும் சாப்பிட அமர்ந்தவள், “ராஜேஷ் எங்கே?” என்று கேட்டாள்.
“அவன் முன்னாலேயே கிளம்பி ஹோட்டலுக்குப் போய்ட்டான்டா!” என்றார் வளர்மதி.
“என்னை வந்து பார்க்கவே இல்லயே” என்று கேட்டாள்.
“வந்து உன்னைக் கேட்டான். நீ தயாராகிட்டு இருக்கேன்னு சொன்னேன். அதான் கிளம்பிட்டான்” என்றார்.
“ஓஹ்!” என்றவளது பார்வை ஸ்ரீநிவாஸைத் தேடியது.
ஆனால், அவனும் அங்கே இல்லை. ‘இவன் எங்கே போனான்? ராஜேஷுடனேயே சென்றிருப்பானோ!’ என்று தன்னையே கேட்டுக்கொண்டவள், ‘அவன் எங்கே போனா உனக்கென்ன?’ என்று மீண்டும் தனக்கே சொல்லிக்கொண்டு தனது கவனத்தை திசைத் திருப்பினாள்.