அன்பென்ற மழையிலே!- கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் - 6

மணமக்கள் கிளம்பிச் சென்ற பிறகு, சொந்தங்களும் ஒவ்வொருவராக விடைபெற்றனர். “மதி! ராஜேஷுக்கும் சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சிடு. அதான், பொண்ணு ரெடியா இருக்கே” என்று வைஷ்ணவியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொல்ல, அவள் சிரிக்கவும் முடியாமல், முறைக்கவும் முடியாமல் மௌனமாகப் பார்த்தாள். “சின்னவளுக்கும் முடிச்சிட்டுத் தான் பையனுக்குச் செய்யணும் அக்கா” என்றபடி அவரை வழியனுப்பினார் வளர்மதி.

வைஷ்ணவியால் நிலையாக ஓரிடத்தில் அமரவும் முடியவில்லை. இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தாள். அர்ச்சனைத் தட்டுடன் அங்கே வந்த வளர்மதி, “வைஷு! கோவில்ல பூஜைக்குச் சொல்லியிருந்தேன். மாமாவும், நானும் கிளம்பறோம். நீயும் வர்றியா?” என்று கேட்டார்.

“இல்லத்தை நீங்க போய்ட்டு வாங்க. நான் வீட்லயே இருக்கேன்” என்றாள்.

“சரிம்மா பத்திரம். ஜனனி ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போகப் போறேன்னு சொன்னா. போய்ட்டு ரெண்டு மணி நேரத்தில் வந்திடுவா. நாங்க வர லேட் ஆனாலும் ஆகும். இட்லி ஊத்தி வச்சிருக்கேன். நேரத்தோடு சாப்டுடுங்க” என்றவர் கிளம்பிச் சென்றார்.

அவர் சென்ற பத்து நிமிடங்களில் வெளியே சென்றிருந்த ராஜேஷின் பைக் சப்தம் கேட்க, “அண்ணா!” என்றபடியே வாசலுக்கு ஓடினாள் ஜனனி.

“அண்ணா! என்னை வர்ஷினி வீட்ல கொஞ்சம் டிராப் பண்ணிடுங்களேன்” என்றதும் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

‘இது தான் சரியான சந்தர்ப்பம். அவன் வந்ததும் நேரடியாக தனது முடிவை அவனிடமே சொல்லி, வீட்டில் பேசும் பொறுப்பை அவனிடம் விட்டுவிட வேண்டியது தான்’ என எண்ணிக்கொண்டாள் வைஷ்ணவி.

அவளது பொறுமையைச் சோதிக்காமல் அடுத்த இருபது நிமிடங்களில் வீட்டினுள் நுழைந்தான். அவன் கைகால்களைக் கழுவிக்கொண்டு முகத்தைத் துடைத்தபடி வந்தவனிடம் சுடச்சுட காஃபியை நீட்டினாள் வைஷ்ணவி.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
வியப்புடன் அவளைப் பார்த்தவன், “அம்மா, அப்பா எங்கே?” என்று கேட்டான்.


இவனுக்குத் தெரியாதோ!’ என்று எண்ணியவள், அவனது அன்னை சொன்ன அனைத்தையும் அவனிடம் ஒப்பித்தாள்.


காஃபியை உறிஞ்சியவன், “நைஸ் காஃபி!” என்று சிலாகித்தவன், “அப்போ நீயும், நானும் மட்டும் தான் வீட்ல இருக்கோமா?” என்று ரகசியக் குரலில் கேட்க, வைஷ்ணவியின் முதுகுத் தண்டு சில்லிட்டது.


இத்தனை ஆண்டுகளில் அவனுடன் எத்தனையோ சந்தர்ப்பங்களில் தனியாக வீட்டில் இருக்க நேரிட்டிருக்கிறது. அவனுடன் பைக்கில், பயணித்திருக்கிறாள். ஆனால், இப்படியொரு பார்வையையும், பேச்சையும் அவன் மறந்தும் அவளிடம் பேசியதில்லை.


‘கடவுளே! இவனது மனத்திலும் தன் மீது ஏதும் அபிப்பிராயம் இருக்குமோ!’ என்ற எண்ணம் தோன்ற அவளுக்கு வியர்த்து வழிந்தது.


உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், “என்னாச்சு? இப்படி வியர்க்குது உனக்கு? உள்ளே ஏசில உட்காரலாமா?” என்று கேட்டான்.


அவன் சொன்னது தான் தாமதம், “வேணாம் வேணாம். இங்கே முற்றத்திலேயே உட்காரலாம்” என்று அவசரமாக அவனெதிரில் அமர்ந்தாள். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தயக்கமாக இருந்தது.


‘அடேங்கப்பா! எவ்வளவு பயம் இவளுக்கு!’ என்று எண்ணியவன், இன்னும் சற்று நேரம் அவளிடம் வம்பிழுக்கும் ஆர்வத்துடன், “நம்ம வீட்டுப் பெரியவங்களுக்கும், இப்படி ஒரு எண்ணம் இருக்கும்ன்னு எனக்குத் தெரியாம போச்சு. லைன் க்ளியர்” என்றான் புன்னகையுடன்.


அவனது பேச்சைக் கேட்டவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.


‘பெரியவங்களுக்கும் என்றால்… இவனுக்கும் அப்படியொரு எண்ணம் இருக்கிறதோ!’ என்று எண்ணியதும் செய்வதறியாமல் தவிப்பாக இருந்தது.


“ரா..ஜே..ஷ்…” என்று அவனது பெயரைச் சொல்வதற்குள் மலையைப் புரட்டிப் போடுவதைப் போன்ற அயர்வு தோன்றியது.


கண்களை மூடி சற்று நிதானித்தவள், “எனக்கு உன் மேல எந்த அபிப்ராயமும் இல்ல. உன்னை என் அண்ணன் மாதிரி நினைச்சிட்டு இருக்கேன்னுலாம் சொல்லல. ஆனா, உன்னைக் கல்யாணம் செய்துக்கறதெல்லாம் முடியாத விஷயம்” என்று வேகமாகச் சொல்லி முடித்தாள்.


அவள் சொல்வதைக் கேட்டு அமைதியாகப் பார்த்தான்.


“நீ நினைக்கறதையே நானும் நினைக்கணும்னு எந்த அவசியமும் இல்லயே!” என்று கிண்டலாகக் கேட்டான்.


“நான் அப்படிச் சொல்லல. அதேநேரம் நீ நினைக்கறதுக்கெல்லாம் நான் பொறுப்பெடுத்துக்க முடியாதில்லையா?” என்றாள் வெளிபடையாக.


கண்கள் இடுங்க அவளைப் பார்த்தவன், “அப்போ பெரியவங்களோட ஆசைக்கு நீ கொடுக்கற மதிப்பு இதானா?” என்றான்.


நெற்றியைத் தடவிக் கொண்டவள், “பெரியவங்களுக்கு ஆயிரம் ஆசைகள் இருக்கலாம். ஆனா, அவங்களோட விருப்பத்தைப் பார்த்தா, நம்ம வாழ்க்கைதான்…” என்றவள் சற்று நிறுத்தி, “சாரி என் வாழ்க்கை தான் நரகமா இருக்கும்” என்றாள்.


“அப்போ என் மனசுல இருக்கற காதலை நான் என்ன செய்றது?” என்று கேட்டான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
“அதுக்கு சாரின்னு ஒரு வார்த்தை மட்டும் தான் என்னால சொல்ல முடியும்” என்றாள் பிடிவாதமாக. அவன் மௌனமாக நிற்க, “சாரி ராஜேஷ் உன்னைக் காயப்படுத்தறது என் நோக்கம் இல்ல. இப்போ இது கஷ்டமா இருந்தாலும், இதுதான் உண்மை” என்றாள்.

“நீ ஏன் இவ்ளோ பிடிவாதமா இருக்க? நீ நினைக்கறது போல இல்லாம, நம்ம வாழ்க்கை சந்தோஷமாகவும் இருக்கலாம் இல்ல” என்றான்.

“ஓபனா சொல்லணும்னா, எனக்கு இந்தக் கல்யாண வாழ்க்கை மேல அவ்வளவு நம்பிக்கை இல்லன்னே சொல்லலாம்” என்றாள்.

அவளை மேலும் கீழுமாக அவன் பார்க்க, “சீச்சீ! நீ நினைக்கிறது போல லிவ் அண்ட் ரிலேஷன்ஷிப் மோகமெல்லாம் கிடையாது. என் மனசுல இருக்கறதை பெரியவங்ககிட்ட சொல்றதைவிட, உன்கிட்டச் சொன்னா புரிஞ்சிக்குவன்னு நினைச்சி சொன்னேன். உனக்கு வேற நல்ல பொண்ணா கிடைப்பா ராஜேஷ்” என்றவளை சிரிப்புடன் பார்த்தான். “ஆனாலும், உனக்கு ரொம்ப தன்னம்பிக்கை” என்றான்.

“என்ன?” என்றாள் புரியாமல். “பின்னே, உன்னை நினைச்சி உருகிட்டு இருக்கேன்னு நினைச்சி டயலாகெல்லாம் அடிக்கிற” என்று சொல்லிச் சிரித்தவனை, போலியாக முறைத்தாள்.

“எருமை! கொஞ்ச நேரத்துல என்னை மண்டை காய வச்சிட்ட” என்றாள் சற்று ஆறுதல் அடைந்தவளாக. “இதுகூட இல்லாம என்ன லைஃப்? காலைல அவங்ககிட்ட அம்மா சொல்லச் சொல்ல உன் முகம் போன போக்கைப் பார்த்ததும் தான் கொஞ்சம் உன்னை அழ வச்சிப் பார்க்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா, நீ யாரு? விட்டா என்னை அழ வச்சிருப்ப” என்றான் சிரிப்புடன்.


“எனக்கும் உள்ளுக்குள்ள டென்ஷன். ஆனா, புரிஞ்சிக்குவன்னு நம்பிக்கை” என்றாள்.


“ஆக மொத்தத்துல நான் சேஃப்” என்றவன் முதுகிலேயே ரெண்டு போட்டாள்.


“சரி சரி. இப்போதைக்கு நாம வீட்ல எதுவும் சொல்லிக்க வேணாம். ஜனனி கல்யாணம் நடுவில் இருக்கு. நீயும் உன் படிப்பை கண்டினியூ பண்ணு. நேரம் வரும்போது சொல்லிக்கலாம்” என்றான்.


“வீட்ல இருக்கவங்க பாவம் இல்ல. அவங்க எவ்வளவு ஏமாந்து போவாங்க…” என்று பெருமூச்சு விட்டவளை முறைத்தான்.


“ஏய்! இப்படியெல்லாம் சொல்லி என் மனசை மாத்தி கல்யாணம் செய்துக்கலாம்ன்னு நினைக்கதே. என் மனசு என் பொண்டாட்டிக்கு மட்டும் தான்” என்றவன் வீட்டை விட்டு வெளியே ஓடும் அளவிற்குத் துரத்தினாள் அவள்.


சிரிப்புடன் நடந்தவற்றை நினைத்துக் கொண்டே படுத்திருந்தவள் இனி, வரப்போகும் நிகழ்வுகளின் தாக்கத்தை உணராமல் உறங்கிப் போனாள்.